வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
இந்தியாவில் தற்காலமிருக்கும் பல்வேறு மதங்கள், பல்வேறு ஜாதிகள் முதலியவைகளை உத்தேசித்து ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாக் கவும் ஒற்றுமை உண்டாக்கவும் என்பதாகக் கருதி சென்ற சீர்திருத்தத்தின் போது தகுந்தபடி விசாரணை செய்து சில வகுப்புகளுக்கு பிரதிநிதித்துவ ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்தும் சில வகுப்பார்களுக்கே தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவங்கள் ஏற்படுத்தியும் வைத்திருப்பது யாவரும் அறிந்த விஷயமே. இதிலிருந்து சமீபத்தில் வரப்போகும் சீர்திருத்த விசாரணைக் கமிஷன் போது முன்பு பொது தொகுதியில் ஒதுக்கி வைத்த வகுப்பாரும் இனித் தங்களுக்குத் தனித் தொகுதி மூலம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சியைப் பார்த்து சிறு தொகையினரான நம் நாட்டுப் பார்ப்பனர்கள் இம்முறை அமுலுக்கு வந்து விட்டால் தாங்கள் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிற ஏகபோக மிராசு போய் விடுமென்றும், தங்கள் சமூகத்துக்குத் தகுந்தபடி வீதாச்சாரம் கிடைப்பதாயிருந்தால் இப்பொழுது கிடைத்துக் கொண்டிருப்பதில் 10ல் ஒரு பாகங்கூட கிடைக்காமல் போய் விடுமே என்று பயந்து இக்கிளர்ச்சியை யொழிக்க பல வழிகளிலும் சூழ்ச்சி செய்து வருவது யாவரும் அறிந்த விஷயமே. இச்சூழ்ச்சிகளில் தலைமையான சூழ்ச்சியாக சில மகமதிய சகோதரர்களைப் பிடித்து தங்கள் சமூகத்துக்கு இனி தனித் தொகுதி வேண்டாமென்று சொன்னதாக ஏற்பாடு செய்து ஒரு பெரிய விளம்பரம் செய்து விட்டார்கள். இப்பொழுது அது “பிடிக்கப் பிடிக்க நமச்சிவாயம்” போல் வந்து முடிந்து விட்டது, அதாவது இந்து மகா சபையின் நடவடிக்கைகளிலிருந்தும், மகமதிய சமூகத்தார்களின் பிரமுகர்களிடமிருந்தும் தனித் தொகுதியே நிலைத்திருக்க வேண்டும் என்கிற மாதிரியாகவே விஷயங்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன. இதிலிருந்து தென்னாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சி பலிக்கவில்லை என்றே தெரிகிறது.
குடி அரசு – செய்திக் குறிப்பு – 24.04.1927