ராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை II
சென்ற வாரம் மேல்கண்ட தலைப்புடன் ஒன்று இலக்கமிட்டு ஒரு தலையங்கம் எழுதி இருந்தோம். இவ்வாரம் அதே தலைப்புடன் இரண் டாவது வியாசம் எழுதுகின்றோம்.
சென்ற வாரம் ராயல் கமீஷன் என்பது சர்க்காரும் அரசியலின் பேரால் வாழும் சில தலைவர்கள் என்னும் படித்தக் கூட்டத்தாரும் சேர்ந்து இந்திய ஏழை மக்களை வஞ்சித்து கொடுமைக்குள்ளாக்கி வாழச் செய்யும் சூழ்ச்சி என்கின்ற கருத்துக்கொண்டே அதைக் கூட்டுக் கொள்ளை என்று சொன் னோம். அந்தப்படி சொல்லியவைகளையெல்லாம் இவ்வாரத்திய சம்ப வங்கள் உறுதிப்படுத்தியதோடு இந்தியத் தலைவர்கள் என்று சொல்லப்படும் கூட்டம் எவ்வளவு தூரம் உண்மையும் யோக்கிய பொறுப்பும் அற்றவர்க ளென்பதும் எவ்வளவு தூரம் நாணயக் குறைவுகளுமுடையவர்கள் என்ப தையும் விளக்கி விட்டது.
காங்கிரஸ் என்பதும் மற்றும் அதுபோன்ற அரசியல் இயக்கங்கள் என்பதும் அடியோடு ஏழை மக்களை சில அறிவாளிகள் ஏமாற்றவும் கொடுமைப்படுத்தவும் ஏற்பட்டன என்றும் அவைகளின் பலன் அவைகள் ஏற்பட்ட நாள் தொட்டு இந்திய நாட்டையே அடியோடு பல வழிகளிலும் பாழ்படுத்தி மீளாத அடிமைத்தனத்தில் ஆழ்த்தி வருகின்றதென்றும் பன்முறை எழுதியும் பேசியும் வந்திருக்கின்றோம். பொது வாழ்வு என்ப தானது யோக்கியன் என்பவன் எவனும் பொது நன்மைக்கு உழைக்க முடியாத அளவு நாட்டை பாழ்படுத்தி விட்டது என்றும் சொல்லி வந்திருக்கின்றோம். ஆனாலும் பாமர மக்கள் சுலபத்தில் இவ்வேமாற்றத்திலிருந்தும், கொடுமை களிலிருந்தும் தப்புவதாகக் காணப்படவில்லை. ஆதலால் அவர்களுக்கு உண்மை உணர்ச்சி ஏற்படும் வரையில் நாடு முழுவதும் கஷ்டமும் நஷ்டமும் அடைந்து வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இவ்விஷயங்களை ஸ்ரீமான் காந்தி அவர்களிடமும் தெரிவித்த போது அவர் அதை அப்படியே ஒப்புக்கொண்டு “பொதுவாக எல்லாமக்களுக்கும் புத்தி வருகின்றவரை புத்திசாதுர்யமுள்ள ஒரு கூட்டத்தார்தான். ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்க முடியும்; ஆதலால் அது ஜனங்களின் அறிவீன மேயொழிய மற்றவர்கள் தப்பிதமல்ல” என்று சொல்லி மழுப்பிவிட்டார். மற்றும் அநேக பெரியாரும் இம்மாதிரியேதான் சொல்லிக் கொண்டே ஏமாற் றும் கூட்டத்திலே சேர்ந்துகொண்டு மக்கள் ஏமாற்றப்படுவதற்கு அனுகூல மாகவே இருக்கிறார்கள்.
ஆங்கிலேய அரசாக்ஷியானது இந்திய நாட்டிற்கு அனேக காரியங் களில் பார்ப்பன ஆக்ஷியை விட அதிகமான கொடுமைகளை உண்டாக்கி விடவில்லை என்பது ஒருபுறம் ஒப்புக் கொள்ளக்கூடியதானாலும் இந்திய பொருளாதார விஷயத்தில் இந்தியாவை சுரண்டிக் கொண்டு போகும் காரியத் தில் இதுவரை எந்த ஆக்ஷியும் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டதாக யாரும் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம். ஆனாலும், இவ்வாங்கி லேயருக்கு இவ்விஷயத்தில் பெரிதும் உதவியாயிருந்து வருவது நம்நாட்டு அரசியல் இயக்கங்கள்தான் என்பதையும் அரசியல் தலைவர்கள்தான் என்பதையும் தைரியமாய்ச் சொல்லுவோம். ஏனெனில் அரசியல் இயக்கம் என்பதாக ஒரு மாய்கையை ஏற்படுத்தி மக்களை அதிலேயே மயங்கச் செய்து விட்டு அதன் மூலமாய் ஆங்கிலேயரிடம் உத்தியோகம் பெறுவதற்காகப் பலர் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றிபெற போட்டி போட்டுக்கொண்டு வெள்ளையரின் கொள்ளைக்கு உள் உளவாகவும் உடந்தையாகவும் இருக்க வேண்டியதாகி விட்டதுதான் என்போம். இதன் மூலமாய் வெள்ளையர்களுக் கும் தங்கள் கொள்ளைகளை தாராளமாய் நடத்த சவுகரியம் ஏற்பட்டதுடன் ஏன் என்று கேழ்பதற்கும் ஆள் இல்லாமல் போய்விட்டது. இன்றைய தினமும் எந்த ஒரு அரசியல் தலைவர் என்பவருக்காவது ஒரு அரசியல் இயக்கம் என்பதிற்காவது இக்கொள்ளையைப் பற்றிய கவலை ஒரு சிறிதாவது இருக்கின்றதா என்று பார்த்தால் இவ்வுண்மை விளங்காமல் போகாது.
கமிஷன்
தற்போது சர்க்காரார் ராயல் கமீஷன் என்பதாக ஒரு கமிட்டி நியமித் திருப்பதைப் பற்றி அரசியல் தலைவர்கள் என்போர்கள் எல்லோரும் ஒரே மூச்சாக கூப்பாடு போடுகின்றார்கள். தேசீயப் பத்திரிகைகள் என்பவைகளும் மற்றும் சமூகப் பத்திரிகைகளும் ஒரு வண்ணானின் கழுதை செத்துப் போன தற்காக ஊரெல்லாம் சேர்ந்து “கங்காதரா மாண்டாயோ, கங்காதரா மாண் டாயோ” என்று அழுத கதைபோல் கொஞ்சமும் யோசனை இல்லாமல் “கமிட்டியை பகிஷ்காரம் செய்ய வேண்டும், பகிஷ்காரம் செய்ய வேண்டும்” என்று ஓலமிடுகின்றன. இதனால் இந்திய தேசீயம் என்ன என்பதும் தேசீயவாதிகள் யோக்கியதையும் தேசீயப் பத்திரிகைகளின் யோக்கியதையும் என்ன என்பதும் விளங்குகின்றது.
இந்தியா சுயராஜ்யமடைய கமீஷனே வேண்டியதில்லை என்றாவது கமீஷன் வைத்து பரிiக்ஷ பார்த்து பிச்சை கொடுப் பதுபோல சுயராஜ்யம் வெள்ளையர் கொடுக்க இந்தியர் வாங்குவது என்கின்ற தத்துவம் கூடாது என்பதாகவாவது வாதாடுவதாயிருந்தால் அது ஆண்மையும் சுயமரியாதை யுமான காரியமாயிருக்கும்.
அப்படிக்கு ஒரு சிறிதும் இல்லாமல் கெஞ்சிக் கெஞ்சி பிச்சை கேழ்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் இந்தியர்களுக்கு பிச்சை போடும் நிலை யில் இருப்பதாக நினைத்து இருக்கும் வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் அதிகமான சீர்திருத்தத்திற்கு அருகர்களா இல்லையா என்று பார்ப்பதற் காகவும் கொடுத்த சீர்திருத்தங்களை ஒழுங்காய் நடத்தி இருக்கின்றார்களா இல்லையா என்று பார்ப்பதற்காகவும், இதற்கு முன்னால் வழங்கப்பட்டிருக் கும் சீர்திருத்தங்களில் ஏதாவது நடைபெற முடியாத குற்றங்கள் இருக்கின்றதா என்பதற்காகவும் சீர்திருத்தம் வழங்க அதிகாரமுள்ளவர்கள் என்று இந்தியா தேசீயவாதிகளென்போர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட பிரிட்டிஷ் பார்லிமெண்டார் என்கின்றவர்கள் ஒரு கமிட்டி நியமித்தால் அதில் அங்கம் பெற இந்தியர்களுக்கு உரிமை எப்படி உண்டாகும்?
இந்தியர் அருகர்களா இல்லையா என்கின்ற கமிட்டிக்கு இந்தியர் அங்கம் பெறுவது என்பது தனது யோக்கியதையைப் பரீக்ஷிக்க தானே நீதிபதி யாய் இருக்கின்றது என்கின்றது போலவா அல்லவா என்று கேட்கின்றோம். இந்தியர்கள் சீர்திருத்தம் அடைய யோக்கியதையுடையவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ள ஆசை இருந்தால் அந்தக் கமிட்டியின் கேள்விகளுக் கெல்லாம் பதில் சொல்லும் நிலையிலிருந்து தங்களது பெருமையையும் சாமர்த்தியத்தையும் காட்டுவதுதான் யோக்கியமும் நியாயமுமானதாகும்.
மிண்டோ மார்லி சீர்திருத்தத்தில் எத்தனை இந்தியர்கள் நியமிக்கப் பட்டார்கள் என்றாவது, மாண்டேகு செம்ஸ் போர்ட் சீர்திருத்தத்தில் எத்தனை இந்தியர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்றாவது யாராவது சொல்லக் கூடுமா. அப்படி இருக்க இப்பொழுது மாத்திரம் இந்தியர்களும் இம்மாதிரி கமிட்டி யில் உட்காரும்படியான யோக்கியதை என்ன வந்து விட்டது. திடீரென்று முன் சீர்திருத்தங்களின் போது இந்தியர்களுக்கும் ஒற்றுமைக் குறைவும் வகுப்புப் பிரிவினையும் இருந்து இப்போது எல்லோரும் ஒன்றாகிவிட்டார்களா? முன் கேட்கப்படாத ஒரு புது உரிமையை இப்போது கேட்பதற்கு ஒரு புதிய யோக்கியதை இருக்க வேண்டும் அல்லது முன்னையைவிட இப்போது நல்ல புத்தி வந்திருக்க வேண்டும். இரண்டில் இப்போது எதைச் சொல்ல முடியும்.
இது ஒருபுறம் நிற்க கமிஷனில் இந்தியர்களில் யாரை நியமிப்பது என்றாவது, யாரை நியமித்தால் யார் ஒப்புக்கொள்ளத் தயாராயிருக்கின்றார்கள் என்றாவது யாராவது சொல்ல முடியுமா? ரௌலட் கமிட்டியில் ஸ்ரீமான் குமாரசாமி சாஸ்திரிகளை இந்தியர் என்கிற முறையில் நியமித்து அவரும் விசாரணை செய்து திருப்தியடைந்து கையெழுத்துப் போட்டதின் பலனாய் அவர் குடும்பம் பூராவும் ஜில்லா ஜட்ஜ், ஹைகோர்ட் ஜட்ஜ் ஆக முடிந்த தல்லாமல் கமிட்டியின் ரிப்போர்ட்படி ஏற்பட்ட சட்டம் இந்தியர்கள் ஒப்புக் கொள்ள முடிந்ததா என்று கேட்கின்றோம்.
சர். சிவசாமி அய்யரும், மகாகனம் சீனிவாச சாஸ்திரியும் மற்றும் பண்டிதர்கள் நேரு, மாளவியா போன்ற அநேக இந்தியர்களும் பல பல கமிட்டிகளில் இருந்து விசாரணை செய்து தயாரித்த ரிப்போர்ட்டுகளை எல்லாம் இந்தியர்கள் ஒப்புக்கொள்ளக் கூடியதாயிருந்ததா என்று கேட்கின் றோம். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையரான இந்தியரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஏதாவது ஒரு இந்தியர் இதுசமயம் நமது நாட்டில் இருக் கின்றார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
ஒத்துழையாமையை ஒழிக்க வென்றே நினைத்து இந்திய தேசீய காங்கிரஸ் என்கின்ற ஸ்தாபனம் சட்ட மறுப்புக் கமிட்டி என்பதாக தேசீயத் தலைவர்கள் என்பவர்களையே ஒரு கமிட்டியாக நியமித்து அநேக ஆயிரம் ரூபாய்களை செலவு செய்தது யாருக்கும் தெரிந்த விஷயம்தானே. அந்தக் கமிட்டி மெம்பர்கள் யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்பதாகவாவது அல்லது அவர்கள் செய்த ரிப்போர்ட்டு யோக்கியமானதென்றாவது இந்திய மக்கள் ஒப்புக் கொண்டார்களா? அக்கமிட்டி விசாரணையில் இந்திய பிரமுகர்கள் எல்லாம் கலந்துகொண்டார்களா? என்றும் கேட்கின்றோம்.
கமிட்டி என்று சொல்லுவதே பித்தலாட்டம் என்றுதானே இந்தத் தலைவர்கள் எல்லாம் ஒருகாலத்தில் கத்திக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு இப்போது எப்படி திடீரென்று கமிட்டியில் அதுவும் வெள்ளைக்காரரையே அதிகமாகக் கொண்ட கமிட்டியில் நம்பிக்கை வந்து விட்டது என்று கேட்கின்றோம்.
வெள்ளைக்காரர்கள் இந்தியர்களை இந்தக் கமிட்டியில் நியமிப்பதா னால் யோக்கியமாய் நடு நிலைமையில் இருந்து பார்த்தால் குறைந்த பக்ஷம் தேசீய சபை என்னும் காங்கிரசுக்காக ஒருவரையும் மிதவாதிகள் என்பதற்காக ஒருவரையும், ஜஸ்டிஸ் கக்ஷி என்பதற்காக ஒருவரையும், மகமதியர்களுக்காக ஒருவரையும், ஒடுக்கப்பட்ட வகுப்பார்கள் என்பதற்காக ஒருவரையுமாவது நியமித்து ஆகவேண்டும்.
வெள்ளையர்கள் இதை ஒப்புக் கொள்ளுவார்களா அல்லது இந்தியர் களாவது இதை ஒப்புக் கொள்ளுவார்களா? நாட்டில் ஒவ்வொன்றும் யோக்கி யமாகவோ அயோக்கியமாகவோ கோடிக்கணக்கான ஜனங்களைக் கொண்ட தென்று சொல்லிக்கொண்டு பல்வேறு ராஜீய அபிப்பிராயம் பலவேறு மதம், உயர்ந்தது, தாழ்ந்தது, தீண்டத்தகாதது என்பன போன்ற பலவேறு வகுப்புகள் ஆகியவைகளாய் இருப்பதோடு ஒன்றுக்கொன்று கெட்ட எண்ணமும் நம்பிக்கையின்மையும் துவேஷமும் கொண்டிருக்கின்றபோது இந்தியர்களை கமிட்டியில் நியமிப்பது என்கின்ற வார்த்தைக்கு அர்த்தமென்ன என்று கேழ்க்கின்றோம். பொதுவாக இந்த கமிட்டியைப் பற்றி அடியோடு நமக்கு இஷ்டமில்லை என்பதும் கமிட்டி நியமித்ததுவே பித்தலாட்ட மெனவும் இந்தியர்கள் அதில் அங்கத்தினர்களாக வேண்டும் என்றுகேட்பது அதை விடப் பித்தலாட்டமெனவும் இருவரும் அதாவது சர்க்காரும் இந்தியத் தலைவர்கள் என்போர்களும் கூடிக்கொண்டு குடியானவர்களையும் தொழிலா ளர்களையும் மொட்டை அடிப்பதற்கு ஏற்பாடு செய்த சூழ்ச்சியே இது என்பதும் நமது வெகுநாளைய அபிப்பிராயம் என்பது யாவருக்குமே தெரிந்திருக்குமென்றே நம்புகின்றோம்.
பொதுவாக இந்த கமீஷனைப் பற்றி இந்து மதத் தலைவர்கள் என்ப வர்கள் பல அபிப்பிராயம் கொடுத்திருந்தாலும் அவை இரண்டு தத்துவங் களுக்குள்ளாகதான் வரும்.
அதாவது, இந்திய மக்கள் எல்லோருக்கும் பணக்காரன், ஏழை, தொழிலாளி, முதலாளி, ஆங்கிலம் படித்தவர்கள், ஆங்கிலம் படிக்காதவர்கள், உயர்ந்த ஜாதியார் என்பவன், தாழ்ந்த ஜாதியார் என்பவன் என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் அரசியல் முறையில் வேறு கூட்டத்தார் தயவு இல்லாமல் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் உண்டாகும்படி செய்வதா அல்லது கையில் வலுத்தவனுக்கு ஏகபோக உரிமையாக இப்போதையதைப் போலவே இருப்பதா என்பதுதான் முக்கியத் தத்துவங்களாகுமேயல்லாமல் பிரிட்டிஷாருக்கும் இந்தியர்களுக்கும் அதிகாரம், பதவி, தொழில், விவசாயம், வியாபாரம் முதலியவைகளில் அனுகூலம் முதலியவைகள் செய்யும் விஷயங்களில் தகராறுகள் அதிகமாயிருக்கும் என்று யாரும் சொல்ல முடியாது என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் அதைப் பற்றி எந்த இந்தியத் தலைவருக்கும் கவலையே இல்லை. சுருக்கமாய் சொல்ல வேண்டு மானால் புதிய சீர்திருத்தத்தில் இப்போது இருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் என்பதை எடுத்து விடுவதா அல்லது இன்னம் கொஞ்சம் விரிவுபடுத் துவதா என்பதே முக்கியமானதாகும். அதென்னவெனில் மகமதியர்களுக்கு விரோதமான சில வடநாட்டு இந்துக்கள் என்போர்களும் பார்ப்பனரல்லா தாருக்கு விரோதமான பல தென்னாட்டுப் பார்ப்பனர்களும் செய்து வரும் பிரசாரமும் தேசசேவையும் என்பதெல்லாம் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதி தத்துவத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்கின்ற கருத்துக் கொண்டே அல்லாமல் வேறு அல்ல. ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரவர்கள் வடக்குக்கும், தெற்குக்கும் ஓடி ஓடிப் பிரசாரம் செய்த இந்து முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற புரட்டெல்லாம் மகமதியர்களின் வகுப்புவாரிப் பிரதிநிதிதத்துவத்தில் மண்ணைப் போடவே அல்லாமல் வேறல்ல.
தென்னாட்டிலும் காங்கிரசுக்குள் சுவாதீனப் புத்தியுள்ள பார்ப்ப னரல்லாதார்களை அண்டவிடாமல் மேல் விசாரணைக் கமிட்டி என்பதாக ஒன்றை நியமித்துத்தடுத்ததுடன் இரண்டுக்குமாக பதினாயிரக்கணக்கான ரூபாய்களை வாரி லஞ்சமாகவும் கூலியாகவும் கொடுத்து “கோடாலிக் காம்பு களாவும்”, “வயிற்றுச் சோற்று கூலிகளாகவும்” உள்ள பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் வைத்துக்கொண்டு காங்கிரஸ் நடத்துவதின் அவசியமே இதற் காகத்தான்.
இவைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க காங்கிரசை விட்டு ஓட வேண்டும் என்றே விரட்டி அடித்த பெசண்டம்மையை இப்போது மறு படியும் காங்கிரசுக்கு கூப்பிடுவதும் அவருக்கு காங்கிரஸ் தலைவர் பட்டம் கட்ட ஸ்ரீமான்கள் மித்திரன் ரங்கசாமி அய்யங்காரும், சத்தியமூர்த்தி அய் யரும் மற்றும் அவர்களது வால்களும் மேல் விழுந்து ஆத்திரப்படுவதும் அதற்காகத் தான். ஏனெனில் சென்னைப் பார்ப்பனர்களின் யோக்கியதையால் காங்கிரசின் யோக்கியதை ஜனங்களுக்கு நன்றாய் வெளியாய்விட்டதுடன் இந்நாட்டில் பார்ப்பனர்களுக்கு பாமர மக்களிடம் சுத்த சுத்தமாய் யோக்கிய தையும் போய் விட்டது. ஆதலால் இவர்களுக்கு ஏதாவது ஒருஉதவி வேண்டி யிருப்பதாலும், அம்மையாரும் இந்த பார்ப்பனர்களின் தயவால் மறுபடியும் தலைவியாகி விடலாம் என்கிற ஆசை கொண்டே இப்பார்ப்பனர்களுக்கு மிகுதியும் கவலையுள்ளதாகிய வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவ விஷயத்தில் அதற்கு விரோதமாய் இருப்பதாக உறுதி கொடுத்துவிட்டதாலும் இனி அம்மைக்குப் பட்டம் கட்டப்படுவது நிச்சயம். பார்ப்பனரல்லாதாரிலும் நிற்க நிலையில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சில மாஜி தலைவர்களும் தங்களுக்கும் மறுபடியும் தலைவர்களாக ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதற்கு அனுகூலமாய் எவ்வளவு தூரம் அம்மையாரை பின்பற்றலாமோ அவ்வளவு தூரமும் பின்பற்றி இந்த பட்டாபிஷேகத்திற்கு அனுகூலமாகவும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் நம்மைப் பொறுத்த வரையில் ராயல் கமீஷன் வந்தாலும் வரா விட்டாலும் அதில் சில இந்தியர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கமீஷன் பேரால் அதிக சுதந்திரம் என்பதாக சில உரிமைகள் கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால் அவற்றுள் மறுபடியும் நமக்குள் கலகத்திற்கு வழியில்லாமல் மேற் சொன்ன மாதிரி எல்லா வகுப்பும் சமமாய் அனுபவிக்கத்தகுந்த சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்கின்றதா இல்லையா என்பது தான் முக்கிய கவலை. இந்தத் தத்துவம் மாத்திரம் சரியாக நடக்க இடம் ஏற்பட்டு விட்டால் சுயராஜ்யம் என்பதாக யாரையும் பிச்சை கேட்க வேண்டிய அவசியமே நேராதென்றே சொல்லு வோம்.
குடி அரசு – தலையங்கம் – 13.11.1927