ராயல் கமீஷன் ஒரு கூட்டுக் கொள்ளை I
இந்தியாவுக்கு இன்னமும் ஒருமுறை சீர்திருத்தமளிப்பதற்காக, நாட்டின் நிலையை விசாரிக்க என்பதாக, ஒரு கமீஷனை சர்க்காரார் நியமிக்கப் போகிறார்களாம். இந்தக் கமீஷனில் பலர், தாங்கள் தாங்கள் அங்கத்தினர் களாக வேண்டுமென்கின்ற ஆசையின் பேரில் “அரண்மனை நெல்லுக்கு பெருச்சாளிகள் சண்டை போட்டுக்கொள்வதுபோல்” தலைவர்கள் ஆளுக் காள் முந்துகின்றார்கள். சர்க்காரும், யாரை நியமிப்பது யாரை விட்டு விடுவது என்கிற கவலையில் மிகுதியும் ஆழ்ந்திருக்கின்றார்கள். ஏனெனில் யாராவது செல்வாக்குள்ள மனிதர் பெயர் அதில் விடுபடுமானால் அவர் மற்றவர்களை சேர்த்துக் கொண்டு கமீஷனை பஹிஷ்கரிப்பதாகவோ சீர்திருத்தத்தை பஹிஷ்கரிப்பதாகவோ கலகம் செய்தால் என்ன செய்வது என்கின்ற பயம் ஒரு புறமும், ஜனங்களிடம் செல்வாக்கில்லாதவரை நியமிக்க நேரிட்டு விட்டால் கமிட்டிக்கு மரியாதை இல்லாமல் போகுமே என்கின்ற பயம் மற்றொரு பக்கமாகவும் இருந்து கொண்டு ஊஞ்சலாடுகிறார்கள். இந்த நிலை யில் தலைவர்களும், தேசீயச் சங்கங்கள் என்கின்றவர்களும் கமீஷனைப் பற்றி முடிவாக யாதொரு அபிப்பிராயமும் சொல்வதற்கில்லாமல் சுவற்றுமேல் பூனை போலிருக்கிறார்கள்.
ஆகவே, இந்தக் கமீஷன் என்பது தலைவர்கள் என்போர்களுக்கும், சர்க்காருக்கும் ஒரு சூதாட்டம்போல் நடைபெறுவதாயிருக்கின்றதே தவிர மற்றபடி நாட்டிற்கோ மக்களுக்கோ எவ்வித நன்மையான பலனும் அளிக்கப் போவதில்லை என்பதோடு அநேக கெடுதிகளையும் உண்டாக்கப் போகின்றது என்பது மாத்திரம் உறுதி.
என்னவென்றால் ³ கமீஷன்படி மற்றொரு புதிய சீர்திருத்தம் என்ப தாகச் சொல்லிக் கொண்டு நமது அரசாங்க அமைப்பு என்பது சிறிது மாறுதல் அடையக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. அந்த மாறுதல் என்னமா யிருக்குமென்று யோசிப்போமானால் இன்னம் கொஞ்சம் சட்டசபை அங்கத்தி னர்கள் அதிகமாவார்கள். அதாவது நமது மாகாணத்திற்கு இப்போது இருக்கும் 125 சட்டசபை மெம்பர்கள் குறைந்தது 250 மெம்பர்களாகவாவது பெருகுவார்கள். இப்போது இருக்கும் 3 மந்திரிமார்கள் 5 அல்லது 6 மந்திரி யாகவாவது பெருகுவார்கள். அல்லது இப்போது ஒரு மாகாணமாயிருக்கும் சென்னையும் அதிலுள்ள ஒரு கவர்னரும் குறைந்தது 2 மாகாணமாகவாகிலும் ஆக்கப்பட்டு இரண்டு கவர்னர்களுக்கு குறையாமல் ஏற்படுவார்கள். மற்ற மாறுதலும் இது போலவே இருக்கும். ஆனால், சம்பளங்கள் மாத்திரம் சுலபத்தில் குறையாது. அல்லாமலும் வெள்ளைக்காரர்கள் அநுபவிக்கும் உத்தியோக எண்ணிக்கையிலும், சம்பள அளவிலும் ஒரு சிறிதும் குறையாது என்பதோடு சீர்திருத்தத்தின் பலனாய் அவர்களுக்கு இன்னமும் பல உத்தியோகங்கள் ஏற்படும். தவிர, ஒன்று இரண்டு பங்காய் பெருகி சட்டசபை மெம்பர்கள் மந்திரிகளை நியமிக்க ஓட்டர்களாயிருப்பதும், அந்த ஓட்டு கொடுத்த பிறகு அதற்கு விலையாகத் தங்கள் சுயநலம் தேடிக் கொள்வதல் லாமல் வேறு என்ன தேசத்துக்கோ மக்களுக்கோ இவர்களால் செய்ய முடிகின்றது. எனவே, இதைத்தான் சீர்திருத்தத்தின் முடிவு என்று இப்போதே ஒருவாறு சொல்லி விடலாம்.
மற்றபடி நமக்கு இன்னும் சில அதிகாரங்கள் கொடுப்ப தென்பது ஒரு முக்கியமாக மக்களுக்குத் தோன்றலாம். நம்முடைய யோக்கியதையை அறிந்த சர்க்கார் நமக்கு எவ்வளவு அதிகாரத்தை வேண்டுமானாலும் நமக்குக் கொடுக்கக் கூடும். அதினால் ஒன்றும் சர்க்காருக்கு கஷ்டம் ஏற்பட்டுவிடாது. நமக்கும் அதனால் யாதொரு லாபமும் இருக்கும் என்று ஒப்புக்கொள்ளவும் முடியாது. ஏனெனில் கொடுத்துள்ள அதிகாரத்தைப் பொறுத்த வரையில் நமது நிலை என்ன? அது சர்க்காருக்கு என்ன நஷ்டத்தை உண்டாக்கிற்று? நமக்கு எப்படி அது உபயோகப்பட்டிருக்கின்றது? என்று பார்த்தால் இனி வரக் கூடிய அதிகாரத்தின் யோக்கியதை நன்றாய் விளங்கும்.
மந்திரிகளின் அதிகாரங்களை முதலில் எடுத்துக்கொள்வோம். ஸ்தல ஸ்தாபன அதிகாரங்கள், மந்திரிகளுக்கு அதாவது ஜனப்பிரதிநிதிகளுக்கு கொடுத்ததால் ஏற்பட்ட லாபம் என்ன என்று பார்த்தால் மாகாணத்தில் உள்ள முனிசிபாலிட்டிகள், ஜில்லா போர்டுகள், தாலூகா போர்டுகள் எல்லாம் அவ் வவைகளுக்கு வரும், வர முயலும் தலைவர்களை எல்லாம் அயோக்கியர் களாகவும், நாணயக் குறைவுள்ளவர்களாகவும் செய்ததல்லாமல் ஒரு மனிதனையாவது யோக்கியனாயிருக்கும்படி செய்ய முடிந்ததா என்று கேட்கிறோம். இதை மேல் பார்க்கும் மந்திரிகளின் யோக்கியதை என்ன என்று பார்த்தால் இந்த தலைவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தையும், நாணயக் குறைவுகளையும் அடக்கா விட்டாலும், அவர்கள் அடிக்கும் கொள்ளைகளில் பங்கு வாங்காமல் இருக்கிறார் என்றாவது ஜனங்கள் சந்தேகப்படுவதற் கில்லாமலிருந்தால் அதுவே போதுமானது என்று நினைக்கும் படியாகத்தான் நடந்து வருகிறது.
நியமன ஊழல்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. எங்கு பார்த்தாலும் அவன் மந்திரிக்கு பணம்கொடுத்து நியமனம் பெற்றான், இவன் மந்திரிக்கு கடன் கொடுத்து நியமனம் பெற்றான். அவன் மந்திரிக்கு வேண்டி யவனான இன்னொருவனுக்கு பணம் கொடுத்து நியமனம் பெற்றான், அவன் இன்ன பெண் தயவு பிடித்து நியமனம் சம்பாதித்தான் என்று கடைத்தெருவில் ரொட்டி, பிஸ்கோத்து விற்பதுபோல விஷயங்கள் அடிபடுகின்றதே அல்லா மல் கவுரவம் கொடுத்து யாராவது பேசுகின்றார்களா? அல்லது ரகசியமாயா வது பேசுகின்றார்களா? என்றாவது பார்ப்போமானால் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்றியும் இச்சீர்திருத்தத்தின் பலனாய் திருடுகிறவர்கள் எல்லோரும் அயோக்கியர்களெல்லோரும், ஜனங்களால் மதிக்கப்படுகின்றார்களேயல்லாமல் அவர்களைப் பழிப்பவர்கள் ஒருவர்கூட இல்லை. எங்காவது அத்தி பூத்தது போல் அந்த இலாக்காவில் ஒரு யோக்கியர் இருந்துவிட்டால் அவர் இந்த சர்க்காராலும், மந்திரியாலும் மிகுதியும் அவமானப்படுத்தப்படுகின்றாரேயல்லாமல் அவரை மதிப்பவர்களே இல்லை. இனியும் இதைப்பற்றி பொது ஜனங்களால் சொல்லிக்கொள்ளப்படும் அசிங்கியங்களை பாக்கி வைத்துக் கொண்டு மற்றதை கவனிப்போம். அடுத்த படியாக நமக்கு கல்வி சம்பந்தமாக கொடுத்திருக்கும் அதிகாரங்களிலும் யாதொரு பிரயோஜனமில்லை.
உதாரணமாக எந்தக் கல்வி படித்தாலும் படித்துவிட்டு எவன் காலை யாவது கட்டி மானம், மனச்சாட்சி, சத்தியம், தேசம் அவனது பெண்டு பிள்ளை, கற்பு ஆகிய எதையும் விற்கத் தயாராயிருந்தாவது வயிறு வளர்க்க வேண் டுமே, உத்தியோகம் சம்பாதிக்க வேண்டுமே, பதவி பெற வேண்டுமே, மேலே போக வேண்டுமே என்கின்ற கவலையோடு சதா சர்வகாலம் வாழத்தக்க தாயிருக்கின்றதே தவிர சுயமரியாதையுடன் யோக்கியமான வழியில் பிழைப் பதற்கு ஒரு கடுகளவாவது இக்கல்வி பிரயோஜனப்படும்படி மாறி இருக் கின்றதா, மாற்றப்பட முடிகின்றதா என்று பார்ப்பதானால் அதன் உண்மை யாருக்கும் விளங்காமல் போகாது.
இனி மது சம்மந்தமான அதிகாரம் நமக்கு கொடுத்திருக்கிறார்கள் என்கின்றோம். இதனால் என்ன மாறுதல் நமது நாட்டில் இதுவரை ஏற்பட்டி ருக்கின்றது என்று இந்த அதிகாரம் நமது கைக்கு வருமுன் குடித்துக் கொண் டிருந்த ஜனங்களைவிட ஒரு குழந்தை கூட குடிப்பவர்கள் எண்ணிக்கையில் குறையவே இல்லை. பின்னும் அதிகமாயிருப்பதாகக் கூட சொல்லலாம். அது வருமானத்தைப் பார்த்தாலே தெரியவரும். கடைகளின் எண்ணிக்கையும் பெருகி சந்து பொந்து முதலிய இடங்களிலெல்லாம் லைசென்சு இல்லாமலே விற்கப்படுகிறது. கள்ளுக்கு மரங்களும் கட்டப்படுகிறது. அந்த இலாக்கா மந்திரிகளாவது குடிக்காமலிருக்கிறார்களா? குடிப்பது தப்பு என்று எண்ணு கிறார்களா என்பதே சந்தேகப்பட வேண்டியதாயிருக்கின்றது. ஏனென்றால் மதுவைப் பற்றி அந்த மந்திரிகள் பேசுவதைப் பார்த்து அந்த மாதிரி சந்தேகப் பட வேண்டியிருக்கிறது.
மற்றபடி நமது நாட்டுக்கு மிகுதியும் முக்கியமானதாகியது கைத் தொழில் விஷயம். அந்த இலாகாவும் நமது கைக்கு வந்திருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள். இதனால் என்ன லாபம் ஏற்பட்டிருக்கின்றது? என்ன விதமான கைத்தொழில் நமது நாட்டில் வளர்ந்திருக்கின்றது? முன் இருந்ததை விட இப்போது குறைந்து வந்திருக்கின்றதேயல்லாமல் கடுகளவாவது விர்த்தியாகி இருக்கின்றதா? அந்த இலாகா மந்திரியாவது கைத்தொழில் என்றால் எதை நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதே ஜனங்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. யந்திரங்கள் வளர்ந்து கொண்டேதான் போய்க் கொண்டிருக்கின்றது. வாரம் லட்சம் கூலிகளுக்கு மேல் நம் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். இதை அறிந்த நமது பிரதிநிதிகள் என்பவர்களும் யந்திரங்களையே ஆதரிக்கின்றார்கள்.
அடுத்தபடி மதவிஷயம். அதுவும் நமது கைக்கு வந்திருக்கின்றது என் கின்றார்கள். இதில் என்ன மாறுதல் நடந்திருக்கின்றது. அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மதக் கோயில்களில் போய் கடவுளைத் தரிசிக்க உரிமை இல்லை. தெருவில் நடப்பதற்கு உரிமை இல்லை. இன்னும் மதத்தின் பெய ரால் நடக்கும் விபசாரம் முதலிய கொடுமைகளைக் கூட நீக்க யோக்கியதை இல்லை. அதைப் பற்றி பேசக்கூட அந்த இலாகா மந்திரி என்பவருக்குத் தைரியமில்லை.
மற்றபடி, சீர்திருத்தங்களின்படி இந்தியர்களுக்கு நிர்வாக சபையில் உத்தியோகம் கிடைத்த பலன் என்ன என்று பார்ப்போம்.
சட்ட சம்மந்தமான அதிகாரம் இந்திய நிர்வாக சபை மெம்பருக்கு கிடைத்ததின் பலன் சட்ட சம்மந்தமான இடத்திலெல்லாம் மற்றும் அவர் ஆதிக்கத்தில் உள்ள இடத்திலெல்லாம் பார்ப்பனர்களை கொண்டுபோய் நிரப்புவதும், பார்ப்பனர்களுக்கு வேலை புதிதாக உண்டாக்கிக் கொடுப்பதும், அவ்வேலையின் கருத்தாக முடிந்ததேயல்லாமல் வேறு என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் பார்ப்பனரல்லாத மக்களை இழிவு படுத்தவும் கொடுமைப்படுத்தவும், எவ்வளவு தூரம் சர்க்காருக்கு இந்த நாட்டைக் காட்டிக்கொடுத்து இந்த நாட்டின் செல்வத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி ஒற்றறாக இருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் இருக்கத் துணிவது என்பதைத் தவிர வேறு ஏதாவது உணர்ச்சி அந்த உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உண்டாகின்றது என்று யாராவது சொல்லக்கூடுமா? அல்லது சட்ட உத்தியோகம் இந்தியர்களுக்கு கிடைத்ததின் பலனாய் மக்கள் நாணயமான முறையில் நீதி அடைய முடிகின்றதா? ஒரு வாழைக்காய் பாக்கி வரவேண்டுமென்று பிராது போட்டால் இரண்டு கத்திரிக்காய் லஞ்சம் கொடுக்கத் தயாராயிருந்தாலொழிய நியாயம் கிடைக்க மார்க்கமில்லை.
அன்றியும் இந்திய நிர்வாகசபை மெம்பர்களுக்கு இந்தியப் பண விஷயத்தில் எவ்வளவு அக்கரை உண்டு என்று யோசிப்போமானால், தன்னுடைய அதிகாரம் இன்னும் கொஞ்ச நாளைக்கு நீடிக்கவும் தான் செய்கின்ற அயோக்கியத்தனமான காரியங்கள் செல்லு படியாகவும் வேண்டி வெள்ளைக்காரர்களுக்கு மேலும் மேலும் நல்லப் பிள்ளையாக வேண்டு மென்கின்ற கருத்துக் கொண்டே நமது பணம் நம்ம தொழிலாளிகளுக்கும், கூலிக்காரர்களுக்கும், நமது நாட்டு சாமான்களுக்கும், உபயோகப்பட முடியாமல் செய்து கோடிக்கணக்கான ரூபாய்களை ஏழைகள் மனம் பதறப் பதற வெளிநாட்டிற்கு அதுவும் வெள்ளைக்காரருக்கே போய்ச் சேரும்படி செய்யத் துணிவு கொண்டு, உள்நாட்டுச் சுண்ணாம்புக்கு பதிலாக வெளிநாட்டு சுண்ணாம்பும் கூலிக்காரர்கள் கையால் வேலை செய்யச் செய்து அவர்கள் ஜீவனத்திற்கு கூலி உதவுவதைவிட யந்திரங்களை தருவித்து அதன் மூலம் வெள்ளைக்காரருக்கு அளவில்லாத லாபம் கொடுத்து, கூலிகள் வயிற்றில் மண்ணைப் போடுவதும் தவிர வேறு என்ன செய்ய முடிகின்றது. வாரம் ஒன்றுக்கு லட்சக்கணக்கான கூலி ஆட்கள் நம் நாட்டை விட்டு வேலையில் லாமல் வெளிநாட்டிற்குப் போவது இவர்களுக்குத் தெரியாததென்று சொல்ல முடியுமா? அன்றியும் இதன் மூலம் அவ்வதிகாரிகளுக்கு ஏற்படும் எந்த பழிப்புக்காவது இழிவுக்காவது பயப்பட இடம் கொடுக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இனி மற்றவைகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
சீர்திருத்தத்தால் ஏற்பட்ட இவ்வளவு கெடுதிகளும் அல்லாமல் மக்களுக்கு பொதுவில் ஏதாவது பலன் உண்டா என்று பார்த்தால், சீர்திருத்தம் பெருக பெருக வரியும், வழக்கும், ஒழுக்கக் குறைவும், ஒற்றுமைக் கேடும், பஞ்சமும், நாட்டின் மீது அதிகமான கடனும் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டு வருகிறதேயல்லாமல் வேறு ஏதாவது நன்மை செய்ய முடிகிறதா என்றால் ஒன்றுமே இல்லை. சர்க்காருக்கு இதனால் ஏற்படும் அனுகூலம் இன்னது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. எனவே, இந்த சீர்திருத் தங்களின் பலன் இன்ன குறிப்பிட்ட மனிதரின் சொந்த குறிப்பிட்ட குணங் களால் தான் இந்த ஸ்திதிக்கு வந்தது என்று சொல்லுவதற்கில்லாமல், யார் இச்சீர்திருத்தத்தை ஏற்று நடத்துவதாயிருந்தாலும் ஒவ்வொருவரும் அப்படித் தான் செய்ய முடியும், செய்யத்தூண்டும் என்கிற மாதிரியிலிருக்கின்றது என்பதற்காகவே இவற்றை விளக்கினோமேயல்லாமல் தனிப்பட்ட மனித னின் குற்றம் என்பதை விளக்கவல்லது என்பதையும் ஒவ்வொருவரும் ஞாபகத் தில் வைத்துக்கொண்டு சீர்திருத்தத்தின் யோக்கியத்தைப் பற்றி நினைக்க வேண்டும்.
எனவே, வெள்ளைக்காரருடைய எந்த அதிகாரம் பதவி நமது கைக்கு வந்தாலும் அதனால் சர்க்காருக்கும், வெள்ளைக்கார அரசாங்கத்திற்கும் ஒரு வெள்ளைக்கார உத்தியோகஸ்த்தர் அந்த பதவியில் இருந்தால் ஏற்படும் நன்மையைவிட, அதிகமான நன்மை ஏற்படுவதோடு மக்களிடத்திலும் வெள்ளைக்காரர்கள் நடந்துகொள்ளும் நாணயக் குறைவைவிட அதிக மாகவே நடக்க ஏற்பட வேண்டிய நிலைமைகள்தான் சீர்திருத்தங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முடிவாக சீர்திருத்தம் என்பதே குடிகளையும் பாமர மக்களையும் ஏமாற்ற சர்க்காரும் ஜனத் தலைவர்கள் என்பவர்களும் வேண்டுமென்றே அயோக்கியத்தனமான எண்ணத்துடன் செய்யும் சூழ்ச்சியும் கூட்டுக் கொள்ளையுமே தவிர வேறில்லை என்று கோபுரத்தின் மீது இருந்தும் கூவு வோம். இதைப்பற்றி இனியும் பின்னால் விபரம் எழுதுவோம்.
குடி அரசு – தலையங்கம் – 06.11.1927