கோவை சேர்மென் ஊ.ளு.இரத்தினசபாபதி முதலியாரின் துணிபு
கோயமுத்தூர் டவுன் எக்சைஸ் லைசென்சிங் போர்டுக்கு சென்ற வாரத் தில் தலைவரை தெரிந்தெடுப்பதற்காக கோவை கலெக்டர் ஆபீசில் மேற்படி போர்டு மெம்பர்களால் ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டது. அம்மீட்டிங்குக்கு ஏழு மெம்பர்களே ஆஜரானார்கள்.
அவர்கள், ஸ்ரீமான்கள் கலெக்டர் காக்ஸ் துரை, சேர்மென் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எம்.எல்.சி., வைஸ்சேர்மென் அருணாசலம் செட்டியார்,தேவசகாயம், சால்ட் சர்க்கிள் இன்பெக்டர், போலீஸ்டிஸ்ட்ரிக்ட் சூப்ரண்டெண்ட், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகியவர்களே. இந்த எழு வரில் ஸ்ரீமான் கலெக்டர் காக்ஸ் துரை அவர்களை போலீஸ் சூப்பிரண்டு துரை அந்த போர்டுக்கு தலைவராக பிரேரேபிக்க சால்டு சர்க்கில் இன்ஸ் பெக்டர் ஆதரித்தார் . உடனே ஸ்ரீமான் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் எழுந்து உத்தியோகப்பற்றில்லாதவர் தலைவராக இருக்கவேண்டும் என் கின்ற கொள்கையின் பேரில் ஸ்ரீமான் தேவசகாயம் அவர்களை பிரேரேபிக்க ஸ்ரீமான் அருணாசலம் செட்டியார் ஆதரித்தார்.
ஓட்டுக்கு விட்டதில் ஸ்ரீமான்கள் காக்ஸ் துரையவர்களுக்கு மூன்று ஓட்டுகளும் தேவசகாயம் அவர்களுக்கு மூன்று ஓட்டுகளும் கிடைத்தன. இந்த சமயத்தில் ஸ்ரீமான் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் எழுந்து இம்மாதிரி போர்டுகளுக்கு உத்தியோகப் பற்றில்லாதவர்கள் தலைவர்களாயிருந்தால் ஜனங்களுக்கு போர்டிடம் நம்பிக்கையுண்டாகும் என்றும், போர்டு ஏற்படுத் தியதின் பலன் கொஞ்சமாவது ஏற்படக்கூடுமென்றும், இல்லாவிட்டால் போர்டு இருந்தும் சர்க்கார் அபிப்பிராயமே போர்டு அபிப்பிராயமாகிவிட நேருமென்றும், போர்டு ஏற்படுத்தியதின் கருத்து நிறைவேறாமல் போய் விடக்கூடும் என்றும் சொன்னார். உடனே கலெக்டர் துரை, ஸ்ரீமான் முதலியார் சொன்னதை அனுசரித்து, தான் அபேக்ஷக ஸ்தானத்தில் இருந்து விலகிக் கொள்வதாய் சொல்லி விலகிக் கொண்டார். எனவே, ஸ்ரீமான் தேவ சகாயம் அவர்கள் ஏகமனதாய் தெரிந்தெடுக்கப்பட்டார்.
இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால் ஆஜராகியிருந்த ஏழு மெம்பர்களில் ஸ்ரீமான்கள் முதலியாரும் செட்டியாரும் தவிர கலெக்டர் துரையும் ஓட்டு கொடுத்ததால்தான் ஸ்ரீமான் தேவசகாயத்திற்கு மூன்று ஓட்டுகள் கிடைத்தன. ஸ்ரீமான் தேவசகாயம் நடுநிலைமை வகித்திருந்தார், கலெக்டர் துரைக்கு சர்க்கார் உத்தியோகஸ்தர்களாகிய ஜில்லா சூப்பிரண்டு போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சால்ட் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகிய மூன்று பேரும் கலெக்டருக்கே ஓட்டு செய்தார்கள்.
ஆகவே கலெக்டர் அவர்கள் எதிர் அபேக்ஷகருக்கு ஓட்டுக் கொடுத்ததோடு தான் விலகிக்கொண்டதான இரண்டு வகையிலும் நடந்து கொண்டதானது மிக்க பெருந்தன்மை என்றே சொல்லவேண்டும். அதோடு ஸ்ரீமான் இரத்தினசபாபதி முதலியார் அவர்களும் உத்தியோகஸ்தர்கள் மெஜாரிட்டியாயிருந்தும் கலெக்டரே அபேக்ஷகராய் இருக்கிறார் என்று தெரிந்தும் தைரியமாய் வேறு அபேக்ஷகரை நிறுத்தியதுடன் கலெக்டர வர்களை பின்வாங்கிக்கொள்ளும்படி சொன்னதும் மிகவும் தீரச்செய்கை என்றே சொல்லவேண்டும்.
எக்சைஸ் லைசென்ஸ் போர்டு கமிட்டிகளுக்கு உத்தியோகப் பற்றில் லாத தலைவர் முதல் முதல் தெரிந்தெடுக்க ஏற்பாடு செய்த பெருமை ஸ்ரீமான் முதலியாருக்கே உரியதாகும். சென்னை சட்ட சபைக்கு ஒருபெண் உப பிரசிடெண்டாக இருக்க காரியம் ஆரம்பித்த பெருமையும் ஸ்ரீமான் முதலி யாருக்கே உரியது, இன்னமும் இது போன்ற பல நன்மையான விஷயங்கள் முதலியார் அவர்களால் செய்யப்பட்டிருக்கின்றது. ஸ்ரீமான் முதலியார் ஸ்தானத்தில் ஒரு பார்ப்பனர் இருந்திருந்தால் கலெக்டரையே பிரேரேபித்து தலைவராக்கி, கலெக்டரின் வெற்றியைப் பற்றி ஒரு கவியும் பாடி விட்டு, கலெக்டர் வீட்டுக்கும் போய் கூலியும் வாங்கிக் கொண்டிருப்பார். ஸ்ரீமான் முதலியார் தன்னைப் பற்றி விளம்பரம் செய்து கொள்ளும் குணமில்லாத வரானதினாலும், அவைகளில் அவர் மிகுதியும் அருவருப்பு உடையவரான தினாலும் அவர் செய்யும் அருமையான நற்காரியங்கள் மக்கள் அறியக் கூடுவதில்லை. ஆனால் முதலியாரின் எதிரிகளால் சில சமயங்களில் வெளி யாகிவிடுகின்றன. எவ்வளவோ எதிர்ப்புக்கும் முதலியாருடைய எதிரிகளின் எவ்வளவோ சூழ்ச்சிக்கும் இடையில் கோயமுத்தூர் ஜலசப்ளை வேலை மும்முரமாக நடந்து வருவதின் பெருமை முதலியாரையே சேர்ந்ததாகும். அதுபோலவே கோபி தாலூக்காவில் பவானி ஆற்றுக்கு இரண்டு பெரிய பாலங்கள் கட்டுவதற்கு பிரயத்தனப்பட்ட காரியத்திலும் எவ்வளவோ தடைக ளை நீக்கி வெற்றிபெற்று அப்பாலங்கள் சமீபத்தில் வேலை தொடங்கப்படும் நிலைக்கு வந்திருக்கும் பெருமையும் ஸ்ரீமான் முதலியாருக்கே சேர்ந்ததாகும். இவ்விரண்டு காரியங்களும் நிறைவேறியபின் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தனது பொதுநல சேவையை சற்று குறைத்துக் கொண்டு தன் சொந்தக் காரியத்தையும் சற்று கவனிப்பது அறிவுடைமையாகும். ஸ்ரீமான் முதலியார் ஸ்தானத்தில் வேறு பார்ப்பனர்கள் யாராவது இருந்திருந்தால் அவர்கள் சொந்த காரியங்கள் எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கும், அவர்கள் சொந்தக் காரர்களையும் வெகுபேரை பணக்காரராக்கியிருப்பார்கள். ஆனால் இவ்வளவு நன்மை செய்யும் முதலியாருக்கு நன்றி செலுத்த ஆளில்லா விட்டாலும் தரித்துக்கூறும் எதிரிகளுக்கு குறைவில்லை.
குடி அரசு – கட்டுரை – 20.11.1927