ஒரு சிறு குறிப்பு
சென்னையில் உள்ள முக்கிய வைத்தியர்களில் அனுபவம் பெற்ற இரண்டு கனவான்கள் நமது உடல் நிலையைப் பற்றி கவனித்து சரீரத்தில் ரத்த ஓட்ட வேகம் ( க்ஷடடிடின ஞசநளளரசந) அதிகமாயிருப்பதாகவும், சுமார் 150 டிக்கிரி பிரஷர் இருக்க வேண்டியது 200 டிக்கிரி போல் இருப்பதாகவும், இது போலவே கூடுதலாகிக் கொண்டு வருமாகில் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்த ஓட்டம் நின்று கால் கை அல்லது மூளை முதலியதுகள் ஸ்தம்பித்துப் போகுமென்றும் அபிப்பிராயம் சொல்லி, அதற்கு சிகிச்சையாக குறைந்தது இரண்டு தடவை மூன்று மூன்று நாள்கள் முழுப்பட்டினி இருக்க வேண்டும் என்றும், இராத்திரி சாப்பாட்டை குறைத்துவிட வேண்டுமென்றும், மாமிச ஆகாரத்தை அறவே நீக்கி விட வேண்டும் என்றும், கண்டிப்பான சிகிச்சை சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீலஸ்ரீ கைவல்ய சுவாமிகளுமிதற்கு முன்பே இதே அபிப்பிராயத்தை இரண்டு மூன்று தடவைகளில் சொல்லி இருக்கிறார். அன்றியும் நமக்கு சரீரத்தில் முன்னை விட எடை அதிகமாயிருந்தாலும், அதிகமான பலக்குறைவும் மூச்சு வாங்குதலும் அரை மணி நேரம் சேர்ந்தாப் போல எழுத முடியாதபடி அடிக்கடி சோம்பலும் கை வலியும் பேசப் பேச மறதியும் முதலிய குணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வைத்தியரிடம் பட்டினி இருப்பதாய் ஒப்புக் கொண்டு வந்திருந்தாலும், தற்சமயம் ஏற்பட்டிருக்கும் இரண்டொரு சம்பவங்களை முன்னிட்டு கொஞ்ச நாளைக்கு பட்டினி விரதமெடுத்துக் கொள்ள சௌகரியமில்லாமலிருப்பதால் வைத்தியருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமையிலிருக்கிறோம். ஆனாலும், ஆகார விஷயத்தில் வைத்தியர் கட்டளைப்படி நடக்க முடிவு செய்து கொண்டிருப்பதால் மாமிச ஆகாரம் சாப்பிடுவதை நிறுத்தியிருக் கிறோம். ஆகையால் வெளிகளில் நம்மைக் கூப்பிடும் கனவான்கள் தயவு செய்து இந்த விஷயங்களை மாத்திரம் கவனித்துக்கொள்ள வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறோம்.
குடி அரசு – வேண்டுகோள் – 24.04.1927