தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!
வரலாறு, தலைவர்களை உருவாக்கி வருகிறது; தமிழ்நாட்டு அரசியல் களம் பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் அறைகூவலுக்கு முகம் கொடுத்து, மக்களின் மனதை வென்ற தலைவர்களை தமிழ்நாட்டில் பட்டியலிட வேண்டும் என்றால் காமராசரிடமிருந்து தொடங்க வேண்டும். அடுத்து அண்ணா; அடுத்து கலைஞர்; அடுத்து எம்.ஜி.ஆர்., அடுத்து ஜெயலலிதா. தமிழ்நாட்டின் அரசியல் தலைமை, கலைஞர் எம்.ஜி.ஆர். என்ற நிலையிலிருந்து எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கலைஞர் – ஜெயலலிதா என்ற ஆளுமைகளிடம் வந்து சேர்ந்தது. இருவரும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்த ‘பெரியார்-அண்ணா கலைஞரின்’ திராவிட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வர சனாதன சக்திகள் திட்டமிட்டுக் காய் நகர்த்தின. அப்போது அவர்கள் ஒரு கருத்தைப் பரப்பினார்கள். “தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி விட்டது; அதை நிரப்பக் கூடிய தலைமை இல்லை” என்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. அதற்குப் பின்னால் மாபெரும் ‘சனாதனச் சதி’ பதுங்கியிருந்தது...