முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர்.

முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை கழகப் பொருளாளர் திருப்பூர் துரை சாமி, பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர்கள் மாவட்டந்தோறும் தோழர்களைச் சந்தித்தனர்.

மதுரை :

முதலாவதாக 18.11.2021 வியாழக்கிழமை அன்று காலை 11 மணியளவில் மதுரை மாவட்டத் தோழர்களை தளபதி இல்லத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டியன், மாவட்டச் செயலாளர் மணி அமுதன், நகர செயலாளர் செந்தில், தளபதி, செந்தில் ஆகியோர் பங்கேற்றனர். தோழர்களுடன் பயணக் குழுவினர் கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பது, கடந்த கால செயல்பாடுகள் எதிர்வரும் காலங்களில் கழக செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. இந்த சந்திப்பு மதியம் ஒரு மணி வரை நடந்தது. மதிய உணவுக்குப் பிறகு சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றனர்.

காரைக்குடியில் :

மாலை 5 மணியளவில் காரைக்குடி நேஷனல் பள்ளியில் தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் முத்து, மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் உள்பட தோழர்கள் பலர் பங்கேற்றனர் 3 புதிய தோழர்களும் பங்கேற்றனர். 7 மணிவரை கலந்துரையாடல் நடைபெற்றது. பயணக் குழுவினருக்கு இரவு தங்குவதற்கு மற்றும் இரவு காலை உணவுகளுக்கு முத்து ஏற்பாடு செய்தார்.

பேராவூரணியில் :

19.11.2021 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையம் எதிரில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட கட்டிடத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம், மாவட்ட அமைப்பாளர் பாரி, மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர் கலையரசன், ஆசிரியர் உதயகுமார் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து தோழர்கள் பலரும் பங்கேற்றனர். மதியம் ஒரு மணி வரை கூட்டம் நடைபெற்றது மதிய உணவு திருவேங்கடம் ஏற்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் நாகூரில் மாலை 4 மணி அளவில் கழகத்திற்கு தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வரும் பெரியார் அம்பேத்கர் தோழமை வட்டம் தோழர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் 20 தோழர்கள் பங்கேற்றனர் பயணத்தின் நோக்கம் குறித்தும் கடந்த காலங்களில் கழகம் எடுத்த முக்கிய போராட்டங்கள் குறித்தும் இல்லம் தேடி கல்வி, திராவிடர் தமிழர், ஜெய் பீம் குறித்துக் கழகத்தினர் நிலைப்பாடு என்று கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பிரபாகரன் தலைமைக் குழு உறுப்பினர்கள் மயிலாடுதுறை இளைய ராஜா, விழுப்புரம் அய்யனார், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் மகேஷ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்துரையை பகிர்ந்து கொண்ட தோழர்கள் புரட்சிப் பெரியார் முழக்கம் சேர்த்து தருவதாக உறுதி யளித்தனர். இந்நிகழ்வை தலைமைக்குழு உறுப்பினர் இளையராஜா மாவட்டச் செயலாளர் மகேஷ், செந்தில் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

மயிலாடுதுறையில் :

இதையடுத்து இரவு 7 மணி மயிலாடுதுறை தோழர் விஜியின் புத்தக சோலை மேல் தளத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்டச் செயலாளர் மகேஷ், மாவட்ட பொருளாளர் விஜயகுமார், நகர மன்ற அமைப்பாளர் செந்தில், தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், சோலை மாரியப்பன் உள்பட 30 பேர் பங்கேற்றனர். கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல் கழக செயல்பாடுகள் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பேசப்பட்டது. இரவு கூட்டம் நிறைவு பெற்றது. பயணக் குழுவினர் இரவு தங்குவதற்கு தோழர்கள் இரவு உணவு மற்றும் காலை உணவு மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சியில் :

தொடர்ந்து 20.11.2021 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தம் திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தோழர்களிடம் பயணத்தின் நோக்கத்தைக் குறித்து உரையாற்றியப் பின் மாவட்டக் கழக பொறுப்பாளர்களை, கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி அறிவித்தார். மாவட்டத் தலைவர் சிதம்பரம் அ.மதன்குமார், மாவட்டச் செயலாளர் கடலூர் இரா. சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் அ. ஆசிய ஜோதி, மாவட்டத் துணை தலைவர் எல் பிரகாஷ், மாவட்டத் துணைச்செயலாளர் கருவேப்பிலங்குறிச்சி சே. சூர்யா, மாவட்ட அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் பா. அறிவழகன், மங்கனூர் ஒன்றிய அமைப்பாளர் பார்த்திபன் ஆகியோருக்குப் பொறுப்புகள் அறிவிக்கப் பட்டது. இக்கூட்டத்தில் 25 தோழர்கள் பங்கேற்றனர். வேலை மற்றும் கல்லூரியின் காரணமாக பல தோழர்களால் பங்கேற்க முடியவில்லை. மதியம் ஒரு மணிவரை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் :

இதனை அடுத்து பிற்பகல் 3 மணியளவில் பெரம்பலூர் மாவட்டக் கழக பொறுப் பாளர்கள் மாவட்ட அமைப்பாளர் துரை தாமோதரன், சுதாகர் ஆகியோரை சந்தித்து பயணத்தின் நோக்கத்தை விளக்கினர். மதிய உணவு துரை தாமோதரன் ஏற்பாடு செய்தார்.

திருச்சி :

அடுத்து மாலை 5 மணி அளவில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சகிலா விடுதியில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, மாவட்டச் செயலாளர் மனோகரன், பொறுப்பாளர்கள் டார்வின் தாசன், அசோக் குமரேசன், ஆறுமுகம், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர். இரவு 7 மணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது (முதல் கட்ட பயணம் நிறைவு)

பயணத்தில் :

2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தலைமை கழக பொறுப்பாளர்கள் மாவட்டக் கழகத் தோழர்களை சந்தித்ததால் மிகவும் உற்சாகமாக இருந்தனர். அனைத்து மாவட்டத்திலும் புதிய தோழர்கள் சிலர் வந்திருப்பதால் கூடுதல் மகிழ்ச்சி.

கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் திற்கு சந்தா சேர்த்து நீண்ட இடைவெளி ஆகி விட்டதால் இந்த ஆண்டு கூடுதல் சந்தா சேர்த்து தருவதாக தோழர்கள் உறுதி யளித்தனர்.

பயணம் சென்ற அனைத்து மாவட்டங் களிலும் இந்த ஆண்டு ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு நகல்களை போர்க்குணமிக்க பெரியாரின் கருஞ்சட்டைப் படை எரித்து சென்ற நவம்பர் 26 வெகு சிறப்பாக மக்களிடத்தில் போராட் டத்தின் நோக்கத்தை விளக்க துண்டறிக்கை கொடுப்பதாக அறிவித்துள்ளனர். கிராமப்புற பிரச்சாரங்களை முன்னெடுப்போம் என்றும் பிரசாரங்களுக்காக பெரியாரின் போராட்டம் குறித்து சிறிய வெளியீடுகள் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர். இல்லம் தேடி கல்வி கழகத்தின் பார்வை ஜெய் பீம் படம் குறித்து விமர்சனங்களுக்கு கழகத் தலைவரின் மிக அழுத்தமான பதிலைக் தோழர்கள் வரவேற்றனர்.

 

பெரியார் முழக்கம் 25112021 இதழ்

You may also like...