பெரியார் என்ன பெருங்கேடரா….? – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….?

                                                   – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி
கடந்த மார்ச்சுத் திங்களில் சென்னையில் நிகழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு பாடல்தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன்.
அங்கு நிகழ்வரங்கின் நுழைவாயிலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நூல்களுள் நாம் வெளியிட்ட தூயதமிழ்ப்பெயர்கள் – நூலினையும் விற்பனைக்கு வைத்திருந்தோம்.  மேற்பார்வைக்கு எம்முடன் வந்த சிறுவன் ஒருவனை அமர்த்தியிருந்தேன்.  அந்தத் தூயதமிழ்ப் பெயர்கள் நூலின் முன்அட்டையில் திருவள்ளுவர் படமும் பின்அட்டையில் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு படங்களுடன் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் படமும் அச்சிட்டிருந்தோம்.  அந்த நூலைப் பார்த்த தோழர் ஒருவர், அதிலிருந்த பெரியாரின் படத்தைப் பார்த்து, “இவனைப் போட்டிருப்பதால் தான் இதை வாங்க யோசிக்கிறேன்…” என்றாராம்.  நிகழ்வின் இறுதியில் நாங்கள் புறப்படும்போதுதான் இதை அந்தச் சிறுவன் எங்களிடம் கூறினான்.
இப்படி அவன் இவன் என்று ஒருமையில் பேசுமளவுக்குப் பெரியார் இவர்களுக்கு என்ன இரண்டகம் செய்துவிட்டார் – என்ன இடையூறு செய்துவிட்டார் ?  இவர்களெல்லாம் எந்த அடிப்படையில், என்ன எண்ணத்தில் இப்படியயல்லாம் பிதற்றுகின்றனர் ?  எதிரியைக் கூட மதிக்கின்ற பண்புடையவன், நாகரிகமுடையவன் தமிழன் என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம் தமிழினத்தில் பிறந்த இவர்கள், இப்படிப் பேசும் இழிபண்பை எங்கிருந்து கற்றார்கள்…?
தாழ்த்தப்பட்டு, இழிந்து, நைந்த இம் மக்களின் விடிவுக்காக – வாழ்வுக்காக – முன்னேற்றத்திற்காகத் தம் தொண்ணூற்று நான்கு அகவை வரை பாடாற்றிய ஒரு மாபெரும் தலைவரை இப்படியெல்லாம் பேசுவதற்கு இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது ?  இதை இவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றார்கள் ?  பாவாணரை – பாவலரேறுவைப் போற்ற வந்ததாகச் சொல்லும் இவர்கள் பெரியாரை இப்படி இகழ்வது, பாவாணரையும் பாவலரேற்றையும் இகழ்வதற்கே ஒப்பாகாதா…?
பெரியார் நம்மிடைப் பிறந்திரா விட்டால்
நரியார் நாயகம் இங்கே நடந்திடும் !
திரியாத் தமிழ்க்கும் திகழ்நா டதற்கும்
உரியார் நாமெனும் உண்மை,  பொய்த் திருக்கும் !
என்னும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கூற்றை இவர்களெல்லாம் அறிந்திருக்கவில்லையா…?
நூல் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு சின்னப் பையன் முன்பு – ஓர் எதிர்காலத் தலைமுறை முன்பு இப்படி ஒரு தரங்கெட்ட சொல்லைச் சொல்லலாமா – ஒரு முரண்பட்ட கருத்தை அச் சிறுவன் மனத்தில் விதைக்கலாமா…? -என்னும் அடிப்படை அறிவு வேண்டாமா…?  இப்படி ஒரு கருத்தைக் கேட்ட அந்தச் சிறுவன் மனத்தில் இது பதிந்தால், அது எப்படிப்பட்ட இழிவான பதிவாக அமைந்திடும்…?  இந்தளவுக்கு இவர்களுக்கு என்ன கேட்டைச் செய்துவிட்டார் பெரியார் ?
இதுமட்டுமன்று.  மேலும், கடந்த 2012 செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்தநாள் சார்பாக, கோவையிலுள்ள பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை நிகழ்த்திய தந்தை பெரியாரின் 134ஆம் பிறந்த நாள் விழா – எழுச்சிப் பாவரங்கம் என்னும் நிகழ்வின் துண்டறிக்கை – அழைப்பிதழை இணையத்தில் மின்னஞ்சல்வழி ( 06.10.2012 ) நாம் அணுப்பியதற்கு, தமிழ்ச்சிந்தனையாளர் பேரவை என்னும் அமைப்பைச் சேர்ந்த தோழர் ஒருவர் எமக்கு ஒரு மின்னஞ்சல் அணுப்பினார்… என்ன தெரியுமா…? ( அவர் அணுப்பியதை அப்படியே எழுதுகிறேன்…)
08.10.2012 – பாவலரேறு அவர்களின் உண்மையான மாணவன் இப்படியெல்லாம் கூத்தடிக்க மாட்டான்.  அறிவுகெட்ட முண்டமே…!
அன்றே நாங்கள், “நீர்தான் அறிவுகெட்ட முண்டமே…உண்மையான நன்றியுள்ள தமிழன் உம்மைப்போல் இப்படியெல்லாம் கூத்தடிக்க மாட்டான்…” என்று விடைதந்தபோது,
09.10.2012 ‡  “செருப்படி… ஒரு சமூகம் மீண்டெழும்போது இரண்டகம் செய்யும் உம்மைப் போன்றோர் தண்டனைக்குறியவர்கள்.  நீர் என்ன ஒரு தெலுங்கனா ?  அறிவுகெட்ட முண்டமே !  தமிழகம் உம்மைப் போன்றோரை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டுள்ளது.” என்று ஒரு வரைமுறையின்றி, தகாத சொற்களால் திட்டி விடையணுப்பினார்.  தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை என வைத்துக்கொண்டு, இவரைப்போன்றோர் இப்படித்தான் சிந்தனை செய்துகொண்டுள்ளனரா…?
இப்படித் தகாத சொற்களால் விடை தந்தவருக்கு TamilChinthanaiyalar Peravai <tcpu…@gmail.com> என்னும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே இருந்தது.  இதைப்பற்றி விளக்கமாகப் பேச வேண்டுமென்றால் நேரில் வாருங்கள் அல்லது உங்கள் கைபேசி எண்ணைத் தாருங்கள்..!. என்று நாம் கேட்டதற்கு அத்தோழர் விடை தரவேயில்லை.
பாவலரேற்றின் மாணவன் என்றால் பெரியார் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடாமல் இருக்க வேண்டுமா…?  அல்லது, பாவலரேற்றின் மாணவன் என்பவன் இப்படியெல்லாம் தகாத சொற்களால் தம்மினத்தாரையோ பிறரையோ வசைபாடுபவனா….?
தமிழ்ச் சிந்தனையாளர் பேரவைத் தோழரே…!  நீங்கள் முதலில் பாவலரேறுவையும் ‡ பாவலரேறுவின் வரலாற்றையும் அவர்தம் சிந்தனைகளையும் படியுங்கள்…!
பெரியார் உரைகளும் பெறற்கருந் தொண்டும்
உரிய பொழுதில் உதவிட விலையெனில்
தமிழினம் விழித்திடும் தகைவுநேர்ந் திருக்குமா ?
தமிழ்மொழி பிழைத்துத் தலைமைபெற் றிருக்குமா ?
ஆரியச் சேற்றினுள் அழுந்தித் தமிழன்
வீரியம் குன்றி மூச்சு விளர்ந்து
புதைக்கப் பட்டுப் போயிருக் கானா ?
சிதைக்கப் பட்டிருக் காதா அவன் இனம் ?
என்று பாவலரேறு பெரியாரைப் போற்றியதைப் படித்துவிட்டு வாருங்கள்…  முதலில் மாந்தனை மாந்தன் மதித்துப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்…தோழர்களே !
மூடத்தனமும் சாதிக்குப்பையும் அடிமைத்தளையும் புரையோடிக் கிடந்த இத் தமிழ்க் குமுகத்தில் குமுக விழிப்புணர்வு ஏற்படுத்திடவே தன் வாழ்நாளெல்லாம் போராடிய பெருந்தலைவர் தந்தை பெரியார்.  தன் சீர்திருத்தங்களுக்கு நடுவே – தான் உள்ளார்ந்த பற்று வைத்துள்ள இத் தமிழக மக்கள் இப்படித் தன்மதிப்பையும் தன்மானத்தையும் இழந்து – ஆரியனுக்கு அடிமையாகி எல்லாவற்றிலும் தன்னுடைய தனிச்சிறப்பை – மாண்பை இழந்து கிடக்கின்றனரே என்ற ஆற்றாமையில் தமிழ் மொழியில் எழுதப்பெற்றுள்ள பெரும்பாலான இலக்கியங்களில் மூடக் குப்பைகளும் தமிழ்க்குமுகத்திற்கே கேடு விளைவிக்கும் ஏற்றத்தாழ்வு இழிவுகளும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு பொறுக்காமல் வெம்பிப்போய், ஒரு தாய் தன் பிள்ளையர் தவறு செய்துவிட்டால் எப்படி அந்த நேரத்தில் தன் சினத்தை வெளிப்படுத்தி அவர்களைத் திட்டுவாளோ அப்படிக் கடிந்து பேசினார்.  இந்த மானங்கெட்ட தமிழன் திருந்தட்டும் என்றுதான் உழைத்தார்.
தமிழையும் திருக்குறளையும் ஆய்ந்தறிந்த பேரறிஞராம் நம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா அவர்களே தந்தை பெரியாரின் செயற்பாடுகளை – குமுகத் தொண்டுகளைப் போற்றிப் பாராட்டியுள்ளார்.  இதனை ஏன் மேற்கண்ட தோழர்கள் புரிந்திடவில்லை…?
கருகிப்போய்க் கிடந்தஇந் நாட்டிடை வந்தே
உருகி உருகி உயிரைத் தேய்த்தே
ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால் –
ஊசிய கருத்தை உரைத்த புராணங்கள்,
வேத அழுக்குகள்,  பொய்ம்மை விளக்கங்கள் –
ஊதை உளுத்தைகள் நச்சிலா உரைகளா ?
 
சேற்றில் புழுக்களாய் – சிற்றுயிர் இனங்களாய் –
மாற்றிட இயலா மந்தை ஆடுகளாய் –
வழிவழிப் பார்ப்பனர் வந்து புகுத்திய
ஆரியக் கொடுநச் சரவம் கொத்திச்
சீரிய மொழியையும் சிறந்தநல் லறிவையும்
ஆயிரம் ஆயிரம் அறிவுநூல் தொகையையும்
ஏயுநல் லிலக்கிய இலக்கண இயல்பையும்
நாகரி கத்தையும் நல்லபண் பாட்டையும்
ஆகிய அரசையும் ஆட்சி நலத்தையும்,
 
ஒருங்கே அழித்துக் கொண்டஓர் இனத்தைப்
பெருங்கொள் கையினால் பிழைக்க வைத்த –
தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை,
மண்மானங் காத்த மாபெரும் மீட்பனை,
அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய
பெரியார் என்னும் பெரும்பே ரரசனை –
 
இழிப்புரை சொல்வதா ?  சொல்லியிங் கிருப்பதா ?
பழிப்புரை வந்துநம் செவிகளிற் பாய்வதா ?
 
நச்சு விதைகளா,  நயந்துஅவர் சொன்னவை ?
பச்சிலை மருந்தன்றோ,  எமக்கவர் பகர்ந்தவை ?
 
பார்ப்பனப் பதடிகள் எம்மைப் படுத்திய
ஆர்ப்பொலி அடங்கியது அவரினால் அன்றோ ?
 
ஆரியக் குறும்பர்கள் ஆக்கிய கொடுமையின்
வேரினைத் தீய்த்தது அவர்வினை யன்றோ ?
( தென்மொழி – இதழ் சுவடி:18, ஓலை:8, 1982. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய பெரியார்-எனும் நூலிலிருந்து… )
என்னும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கூற்று மெய்யன்றோ !
பாவலரேற்றின் மேற்கண்ட பாடலடிகளையெல்லாம் இவர்களைப் போன்ற தோழர்கள் படிக்கவில்லையா… அல்லது படித்தாலும் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் பெரியாரை எதிர்ப்பதையும் திட்டுவதையுமே இவர்கள்தம் குறிக்கோளாகக் கொண்டு திரிகின்றனரா..?
“பெரியார் ஒரு குமுகாயச் சீர்திருத்தக்காரர்; ஒரு பச்சை இறைமறுப்புக்காரர் என்பது எல்லாருக்கும் தெரியும்.  எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடனும் பொருள் முதல் தருக்கக் கொள்கையுடனும் அணுகும் அவரின் வேகமான உணர்வுகளுக்கிடையில், அவர் உள்ளத்தில் வளர்ந்திருந்த தூய்மையான நல்லுணர்வுகளும் மாந்தப் பண்பின் மீமிசை வளர்ச்சி நலன்களும் நம்மை வியப்படையச் செய்கின்றன.  அவர்போலும் கூர்மையான அறிவு வளர்ச்சி பெற்ற பேரறிஞர் பலர் பலவகையான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகி, உள்ளத்தின் செழுமையையே இழந்து விட்டிருக்கின்ற நிலைகளை நாம் வரலாறுகளில் பார்த்திருக்கின்றோம் ; படித்திருக்கின்றோம்.  ஆனால், பெரியாரிடைப் பூத்துக் குலுங்கிய மனவளமை அவரையொத்த வேறு மக்கள் தலைவர்களிடையிற் பார்ப்பது அரிதினும் அரிது.  அவரிடம் வலுவான கொள்கைப் பிடிப்பு இருந்ததைப் போலவே, பண்பும் ஒழுக்கமும் தூய்மையான அன்பும் தம்மினும் பல மடங்குத் தாழ்ந்தவர்களையும் மதித்துப் பாராட்டும் பெருந்தன்மையும் நிறைந்த சான்றாண்மையும் அவரிடம் சிறந்து விளங்கிக் காணப்பெற்றன.  அத்தகைய தனிச்சிறப்பியல்புகளால் அவர் எதிரிகளையும் கவர்ந்தார்.  பகைவர்களும் மதித்துப் போற்றும் உயர்ந்த நிலையை எய்தினார்.  அவரின் புறக்கொள்கைகளுக்கு மதிப்பளித்துப் போற்றிப் பின்பற்றும் நாம், அவரின் அக நலன்களையும் போற்றிப் பின்பற்றுதல் வேண்டும்.  குறிப்பாக அவரைக் கட்சியளவில் பின்பற்றும் கொள்கைப் பற்றாளர்களிடம் இத்தகைய அரும் பண்புகளும் வளர்தல் வேண்டும்.”  என்று தென்மொழி இதழில் ( சுவடி:5, ஓலை:4, 1978 ) எழுதியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
பாவலரேற்றின் மாணாக்கர் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எங்களுக்கு இருப்பதாலும் நன்றிமறவாத் தமிழராக நாங்கள் இருப்பதாலும்தாம் அவரால் மதிக்கப்பட்ட பகுத்தறிவுப் பேரறிஞரை நாங்களும் மதிக்கிறோம்.  இப் பேரறிஞரை இழிவுபடுத்துவோர்க்குத்தான் பாவலரேற்றின் மாணாக்கர் எனச் சொல்லிக்கொள்ளும் தகுதியில்லை.
இதை அத்தோழர்கள் மட்டுமன்று, இவர்களைப் போன்று பெரியாரை இன்று தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசும் அனைத்துத் தமிழர்க்கும் தான் இதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
பெரும்பணியைச் சுமந்த உடலென்றும்
பெரும்புகழைச் சுமந்த உயிரென்றும்
பெரியாரைப் போற்றியவர் நம்ஐயா –
பெருஞ்சித்திர னாரென்றால்  அதுபொய்யா ?
 
அருந்தமிழர் இனமீட்கத் தம்வாழ்வில்
ஒருநொடியும் ஓயாது உழைத்திறந்த
பெருமாந்தர் பெரியாரை இன்றுபலர்
புரியாமல் இகழ்கின்றார் இதுசரியா ?
 
குருடான ஒருபூனை விட்டத்திலே
மதியின்றித் தாவியதாம் ;  அதுபோலே
பொருந்தாப்பல குற்றங்களைப் பெரியார்மேல்
புறங்கூறிப் பிதற்றுகிறார் இதுமுறையா ?
 
பெருமையுடன் செய்யுள்பல படைத்தளித்துப் பேரளவில்  இலக்கணங்கள் வடித்தளித்துப்
பெருகியுள புலவர்பலர் தமிழ்நாட்டில்
பெயருக்கு வாழ்ந்தனரே  தம்பாட்டில் !
 
பெரும்பேயாய்ப் பீடையென தமிழினத்தைப்
பிடித்தாட்டிப் பிழைப்புற்ற பார்ப்பனியம்
நொறுங்குறவே செயலாற்றி உயிர்விட்ட
நுண்மாந்தர் பெரியார்தான்;  நினைவிலையா?
 
அருகிவந்த தமிழினத்தின் விடுதலைக்கே
அயராது தமைவருத்திப் பாடாற்றி –
குறுகுமன ஆரியரைக் குலுங்கவைத்த
கூர்மதியர் பெரியாரின் பணிதவறா ?
 
திருக்குறளைத் தமிழர்க்குப் புரிவிக்க,
இறைப்பற்றுத் தமிழர்தம் நலன்காக்க
சிறைப்பட்டார் பெரியாரும்;  அதுபிழையா ?
செய்ந்நன்றி மறந்திடுதல் தமிழ்மறையா ?
                                                          – கொழுமம் ஆதி.

 

You may also like...