கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் ஜாதி அல்லது தாயின் ஜாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு ஜாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் கூட அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற உத்தரவுகள் நாடு முழுவதும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் கலப்புத் திருமணம் புரிந்தோர் தங்கள் வாரிசுகளுக்கு ஏதேனும் ஒரு ஜாதி சான்றிதழ் பெற்று வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு செல்லும் இடங்களில் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பின் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.

உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சார்ந்த அஞ்சன் குமார் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, அவருடைய சான்றிதழ் சரிபார்ப்பில் அவருடைய தாயாரின் ஜாதி அடிப்படையில் எஸ்டி ஜான்றிதழ் பெற்றிருந்தபோதும், அவருடைய தந்தை பிற்படுத்தப்பட்டவர் என்பதால் இந்த ஜான்றிதழ் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் இதையே உறுதி செய்தது. இதனால் அவருக்கான இட ஒதுக்கீடு உரிமை கிடைக்காமல் போனது.

கலப்பு திருமணம் புரிந்தோருக்கு இது போன்ற பல்வேறு சிக்கல்கள், குழப்பங்கள் இருப்பதை அறிந்த இந்திய கலப்புத் திருமண தம்பிதகள் சங்கத் தலைவர் அழகேசன் என்பவர், மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு, இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு விண்ணப்பம் செய்திருந்தார். அதில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் யார் என 1975 ஆம் ஆண்டு மத்திய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு கோட்பாடுகள் யாரால், எப்போது, எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாகவும், இது தொடர்பான நகல்கள்களையும் கேட்டிருந்தார். உள்துறை அமைச்சகத்தில் இருந்து, சமூகநீதி மற்றும் ஆற்றல் மேம்பாட்டு துறைக்கு பதில் அளிக்குமாறு அனுப்பட்டுள்ளது. அங்கு இது தொடர்பான கோப்புகள் எதுவும் இல்லை எனவும், பழங்குடியினர் துறைக்கு அனுப்பப்பட்டது. அங்கும் கோப்புகள் இல்லை என தகவல் அனுப்பட்டதால் அழகேசன், மத்திய தகவல் ஆணையரிடம் மேல் முறையீடு செய்திருந்தார்.

தொடர் முறையீட்டின் விளைவாக, இது தொடர்பான விசாரணை, வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வீடியோ காண்ப்ரன்ஸ் அறையில் இருந்து இந்திய கலப்புத் திருமண தம்பதிகள் சங்கத் தலைவர் அழகேசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் கலப்புத் திருமண தம்பதிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டெல்லியில் இருந்து தேசிய தகவல் ஆணையர் வனஜா என் சர்னா, உள் துறை அமைச்சகம், சமூக நீதி மற்றும் ஆற்றல் மேம்பாட்டு துறை, பழங்குடியினர் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த தகவல் வழங்கும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த விசாரணையில், சமூக நீதி மற்றும் ஆற்றல் மேம்பாட்டு துறையை சார்ந்த அதிகாரி ஹிந்தியில் பதிலளித்தார்.

மத்திய தகவல் ஆணையர் வனஜா என் சர்ணா, மனுதாரருக்கு எந்த உதவியும் செய்யமுடியாது என ஆங்கிலத்தில் பதில் அளித்து விசாரணையை முடித்துக் கொண்டார். இதனால் சேலத்தில் இருந்து பங்கேற்ற கலப்புத் திருமண தம்பதிகள் சங்கத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, ஜோதி என்ற உயர் ஜாதியை சார்ந்தவர் வெங்கடாஜலம் என்ற பட்டியல் வகுப்பைச் சார்ந்தவரை திருமணம் செய்து கொண்டு, தனித் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, 1967 வரை அமைச்சராகவும் இருந்துள்ளார். பின்னர் இந்த நடைமுறை 1975 இல் எப்படி மாற்றப்பட்டது என்று தெரியவில்லை. இது தொடர்பான குழப்பங்களை நீக்கி, தெளிவு பெறுவதற்காக, கேட்கப்பட்ட தகவல்கள் வழங்கப்படவில்லை. எந்த துறையிலும் அதற்கான கோப்புகள் இல்லை என்கிறார்கள் என்று தெரிவித்தார்.

நடைபெற்ற வீடியோ கான்ப்ரண்ஸ் விசாரணையிலும் உரிய பதில் கிடைக்காததால் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறத என்ற அவர், எனவே இது தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி உரிய தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அழகேசன் கூறும் போது, இது போன்ற சிக்கல்களால், கலப்புத் திருமணம் புரிந்தவர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும், பட்டியல் இனத்திற்கான இட ஒதுக்கீடு உரிமைகள் கிடைப்பதில்லை. எனவே இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் எனவும், கலப்பத்திருமண தம்பதிகளுக்கு ஜாதியற்றோர் என்ற தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

You may also like...