தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் முதல்வர்!

வரலாறு, தலைவர்களை உருவாக்கி வருகிறது; தமிழ்நாட்டு அரசியல் களம் பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் அறைகூவலுக்கு முகம் கொடுத்து, மக்களின் மனதை வென்ற தலைவர்களை தமிழ்நாட்டில் பட்டியலிட வேண்டும் என்றால் காமராசரிடமிருந்து தொடங்க வேண்டும். அடுத்து அண்ணா; அடுத்து கலைஞர்; அடுத்து எம்.ஜி.ஆர்., அடுத்து ஜெயலலிதா. தமிழ்நாட்டின் அரசியல் தலைமை, கலைஞர் எம்.ஜி.ஆர். என்ற நிலையிலிருந்து எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கலைஞர் – ஜெயலலிதா என்ற ஆளுமைகளிடம் வந்து சேர்ந்தது. இருவரும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்த ‘பெரியார்-அண்ணா கலைஞரின்’ திராவிட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வர சனாதன சக்திகள் திட்டமிட்டுக் காய் நகர்த்தின. அப்போது அவர்கள் ஒரு கருத்தைப் பரப்பினார்கள். “தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி விட்டது; அதை நிரப்பக் கூடிய தலைமை இல்லை” என்ற குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. அதற்குப் பின்னால் மாபெரும் ‘சனாதனச் சதி’ பதுங்கியிருந்தது என்பதுதான் உண்மை .

1975ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்திலேயே ‘மிசா’வின் கீழ் ஓராண்டு கைதாகி, அடக்குமுறைகளைச் சந்தித்து அரசியல் பயணத்தில் சட்டமன்ற உறுப்பினராக; மாநகராட்சி மேயராக; தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்த ஒருவர், நீண்ட அரசியல் அனுபவங்களோடு கலைஞர் மறைவுக்குப் பிறகு தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்துக்குத் தலைமை ஏற்றிருக்கிறார் என்ற வரலாறுகளை “இருட்டுக்குள்” புதைத்துவிட துடித்தனர்.

தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் சோதனைகளையும், எதிர்நீச்சல்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். கலைஞரின் உடலை அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய அன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அனுமதி மறுத்தது. அந்தக் கடுமையான சோதனையில் மு.க.ஸ்டாலின் வென்று காட்டாமல் போயிருந்தால், அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளையே முடக்கிப் போடக் கூடியநிலை உருவாகியிருக்கக் கூடும். ஆனால் மு.க.ஸ்டாலின் வென்று காட்டினார்.

கழகத்துக்குத் தலைமையேற்கும் பொறுப்பு வந்த நிலையில் ‘கட்சிக்குள் எதிர்ப்பு’ என்றார்கள்; தி.மு.க. இரண்டாக உடையப் போகிறது; பா.ஜ.க.வுடன் இரகசிய உடன்பாடு’ செய்துகொண்டு விட்டார் என்ற புரளிகளைக் கிளப்பினார்கள். போட்டித் தலைமைகளை உருவாக்கி, மோத விட்டுப் பார்த்தார்கள். அத்தனைத் தடைகளையும் தகர்த்து கழகத்தின் தலைவர் ஆனார். கழகத்தை தனது கட்டுப் பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வருவதே சனாதன சூழ்ச்சிக்காரர்களுக்கான பதில் என்ற தெளிவான புரிதலோடு ஒவ்வொரு அடியையும் நிதானத்தோடும் உறுதியோடும் எடுத்து வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த சோதனை. அந்தச் சோதனையை வென்று சாதனைக் கொடியைப் பறக்க விட்டார். உள்ளாட்சித் தேர்தல் அடுத்து வந்தது. அதிலும் தி.மு. கழகத்தைத் தலைநிமிர வைத்தார். இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். ‘கோவிட் 19’ என்ற தொற்று, மக்கள் உயிருடன் விளையாடியது. தமிழ்ச் சமூகத்தையே நிலைகுலைய வைத்தது. தானும் களமிறங்கி கழகத்தினரையும் களமிறக்கி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். எதிர்க்கட்சியாக கொரோனா காலங்களில் தி.மு.க. மேற்கொண்ட ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம், என்றென்றும் வரலாறுகளில் பதிந்து நிற்கும். உண்மையான மக்கள் சேவைகளால் மக்கள் உள்ளங்களில் அமர்ந்தார்.

அடுத்த சோதனை – சட்டமன்றத் தேர்தல். “ஸ்டாலின் ஜாதகப்படி அவர் முதலமைச்சராகவே முடியாது” என்று சனாதனவாதிகள் மக்களிடம் கற்பனைகளைப் பரப்பினர். ஏற்கனவே தங்கள் ‘கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் அ.தி.மு.க.’ எனும் பொம்மை ஆட்சியை உடைக்கலாமா? அல்லது சூப்பர் ஸ்டார்களை இறக்குமதி செய்யலாமா என்று எவ்வளவோ வியூகங்களை அதிகார மய்யங்கள் களமிறக்கிப் பார்த்தன. அத்தனையையும் தடுமாற்றம் இல்லாத, நேர்மையான, கொள்கை வழிநின்று எடுத்த சீரிய முடிவுகள் என்ற வலிமையான ஆயுதத்தால் முறியடித்துக் காட்டினார்.

கொரோனா இரண்டாம் அலை கடுமையாக இருந்த காலத்தில் தான் தி.மு.க. பதவி ஏற்றது. மிகப்பெரும் சவால்கள் எதிரே நின்றன. நிர்வாக எந்திரத்தையும் அமைச்சரவை சகாக்களையும் முடுக்கிவிட்டார், முதல்வர். ஆட்சி எந்திரத்தை இப்படியும் செயல்பட வைக்க முடியுமா என்று வியப்புடன் பார்த்தது, சமூகம். அவர் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் கூடுதலானது.

நிலைகுலைந்து நின்ற நிர்வாகம்; ஊழல் கொள்ளை; பெரும் கடன் சுமை; இவைகளிடையே முதல்வர் பதவிக்கு வந்தார். சீர்கேடுகளை சரி செய்வதோடு தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவதற்கான திட்டங்களை உருவாக்கும் இலட்சிய வெறியோடு களமிறங்கினார்.

தமிழக முதல்வர் தனது நீண்ட அரசியல் பயணத்திலிருந்து கற்ற பாடங்கள் தான் அவருக்குப் பெரும் வலிமையைச் சேர்த்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. ஒன்று – மக்களுடன் நேரடியான சந்திப்பு; அவர்கள் பிரச்சினைகளை நேருக்கு நேராக முகம் கொடுத்தல்; அதற்கான கடும் உழைப்பு; ‘லாவணி அரசியலில்’ சுழன்று கொண்டிருப்பதை விட மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அவர்களுக்கான சமூக நீதி, வாழ்வுரிமை மேம்பாடுகளுக்கான திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவதிலும் முனைந்து அர்ப்பணிப்போடு செயல்பட்டார். “சொல் அல்ல; செயல்” எனும் ஆழமான புரிதலே தமிழக முதல்வரை இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்று உறுதியாகக் கூற முடியும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஒருவர் மக்கள் தலைவராக உருவாவதற்குக் கிடைத்த எளிமையான வாய்ப்புகள் இப்போது இல்லை என்பதை சமூகவியல் நமக்கு உணர்த்துகிறது. இப்போது தலைவராகி மக்கள் உள்ளத்தில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிது அல்ல.

வரலாற்றுப் போக்கில் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், சமூகம் பெற்ற கல்வி மற்றும் விழிப்புணர்வு, சமூகத்தின் சிந்தனையைக் கூர்தீட்டி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறது.

உணர்ச்சிகரப் பேச்சுகளால், தலைவர்களின் புகழ் பாடுதலால், மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்துவிட முடியாது; சொல் – பேச்சு என்பதை விட ‘செயல்’ என்பதைக் கொண்டே மக்கள் தங்கள் தலைவர்களைத் தீர்மானிக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவராக மக்களை ஊர் ஊராகச் சென்று சந்தித்தார். அவர்களின் பிரச்சினைகளை மனுக்களாகப் பெற்றார். ஆட்சிக்கு வந்த நூறு நாட்களிலே அவை தீர்க்கப்படும் என்ற உறுதியை வழங்கினார். “நிறைவேற்ற முடியாத அறிவிப்பு; மக்களை ஏமாற்றுகிறார்; மனுக்கள் பெட்டியை அவர் திறக்கப் போவதே இல்லை” என்று எதிர்க் கட்சிகள் புலம்பின. அவரது வேகமான செயல்பாடுகள் எதிர்கட்சிகளைத் திணறடித்தன. பதவிக்கு வந்தவுடன் உறுதி மொழியை நிறைவேற்றிக் காட்டினார். நேர்மைத் திறன் மிகுந்த அதிகாரிகளை தனது ஆலோசகர்களாகவும் உயர் நிர்வாகத்திலும் அமர்த்தினார். மக்களுக்கான அரசியலை தமிழ்நாடு பார்க்கத் தொடங்கியது.

‘கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு’ என்ற ஒழுக்கம் சார்ந்த நெறி முறையை, ‘சமூகநீதி சுயமரியாதை-சமத்துவம்’ என்ற மக்கள் சார்ந்த இலட்சிய முழக்கங்களாக, காலத்தின் தேவைக்கேற்ப வளர்த்தெடுத்து செழுமைப் படுத்தினார்.

இப்போது தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்படும் திட்டங்களும் கொள்கைகளும் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கப் படுவதை உறுதி செய்யும் இலக்கு நோக்கி ஆட்சி நகருகிறது. மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், கடைமடை வரை சென்றடைவதற்கு உரிய மராமத்துப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதுபோல, அரசின் திட்டங்களை மக்களை நோக்கி நகர்த்தும் நிர்வாகக் கட்டமைப்பை தமிழ்நாடு உருவாக்கியிருக்கிறது. பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல் படத் தொடங்கியிருக்கிறார் தமிழக முதல்வர்.

இரண்டு உதாரணங்களை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ்நாடு ஒரு வழிகாட்டும் மாநிலமாக பெருமையுடன் நிமிர்ந்து நிற்பதற்கான முதன்மையான – வலிமையான அடித்தளம்; இந்த மண்ணின் சமூக நீதி சார்ந்த கல்விக் கொள்கை தான்; கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தமிழ்நாட்டின் கல்வி சீர்குலைந்தது. பள்ளி மாணவர்கள் கல்விக் கட்டமைப்பிலிருந்து ஏராளமாக வெளியேறினர். மீண்டும் பள்ளிகளுக்குள் அவர்களை மீட்டு வந்து இணைக்கும் திட்டம் தான் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம்.

‘ஆன்லைன்’ கல்வி முறை சமூகத்தின் அடித்தட்டு மக்களை கல்விக் கட்டமைப்பில் தனிமைப்படுத்தி விட்டது என்பதை முதலில் நேர்மையுடன் ஒப்புக் கொண்டது ஆட்சி. இதன் பாதிப்புகளை எப்படி சரி செய்வது? பாதிக்கப்பட்ட பிரிவினரான தாழ்த்தப்பட்ட, பழங்குடி மைனாரிட்டி சமூகத்தினரும், கிராமப்புற பெண் குழந்தைகளும், ஊனமுற்றவர்களும், வறுமையில் உழலும் பிரிவினரும் அடையாளம் காணப்பட்டனர். பிரச்சினை கல்வித்துறையோடு மட்டும் தொடர்புடையது அல்ல என்பதை அரசு உணர்ந்தது.

கொரோனா தொற்றுக் காலத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதும், குழந்தைத் தொழிலாளர்கள் உழைப்புச்சந்தையில் தொழிலாளர்களாக்கப் பட்டதையும் உணர்ந்து மருத்துவத் துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் துறை, கல்வித் துறையோடு ஒருங்கிணைக்கப் பட்டன. பல்வேறு மட்டங்களில் மனம் திறந்த விவாதங்கள் நடந்தன. கல்வி சார்ந்து வெவ்வேறு மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கல்வியாளர்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து அவர்கள் முன்வைத்த கருத்துகள் விருப்பு வெறுப்பின்றிப் பரிசீலிக்கப் பட்டன. கீழ் மட்டங்களிலிருந்து இந்த உரையாடல்கள் தொடங்கின. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாக இதில் தனிக் கவனம் செலுத்தினார். கல்வி அமைப்பிலிருந்து ஒரு குழந்தைகூட வெளியேறி விடக்கூடாது (No one left behind) என்ற இலக்கோடு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 450 கலைக் குழுக்களைச் சார்ந்த 5000 கலைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று மீண்டும் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வரும் சிந்தனையை கலை நிகழ்வு வழியாக மக்களிடம் விதைத் தனர். மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க மாற்று சான்றுகள் (டி.சி.) தேவையில்லை என முடிவெடுக்கப் பட்டது. ‘வயதுக்கேற்ற கல்வி’ என்ற கொள்கை உருவாக்கப் பட்டது. குழந்தையின் வயதைக் கணக்கிட்டு அந்த வயதில் எந்த வகுப்பு படிப்பார்களோ அந்த வகுப்பில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளின் குடும்பப் பின்னணி கவனத்தில் கொள்ளப்பட்டு, குடும்பத்தின் பிரச்சினைகளை தொடர்புடைய துறைகள் வழியாக தீர்த்து வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளிக்கு அனுப்பி வைக்கும் சூழல் பெற்றோருக்கு உருவாக்கித் தரப்பட்டது. இணையம் சார்ந்த செயலிகள் (app) உருவாக்கப்பட்டு பள்ளிக்கு வரும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினை, பள்ளிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் கண்டறியப் படுகின்றன. தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியானாலும் அதில் படிக்கும் குழந்தைகள் பள்ளிக் கட்டமைப்பு குறைபாடுகள், பள்ளிக்கு குழந்தை வரும் நாட்கள் அனைத்தையும் சென்னையிலிருந்தே கண்காணிக்கும் செயலி (app) இப்போது செயல்படுகிறது. ‘மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டிகளை பள்ளி தோறும் அமைத்து மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை அந்தப் பெட்டிகளில் எழுதிப் போடும் முறை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டிகளைத் திறந்து பார்க்கும் உரிமையுள்ள குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு பள்ளி நிர்வாகத்திலும் உள்ளூர் சமூகம் பங்கெடுக்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 75 சதவிகிதம் பெற்றோர்களே உறுப்பினர்கள். அதில் 50 சதவிகிதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் 25 சதவிகிதம் பேர் என வரையறுக்கப்பட்டு பன்முகத்தன்மையுடன் (Diversity) மேலாண்மைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 3 மாதத்துக்கு ஒரு முறை குழு கூடி விவாதிக்கிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு நிர்வாக நடைமுறை கிடையாது. கல்விக் கொள்கைகளை மிகச்சிறந்தவையாக சமூக நீதிப் பார்வையில் நாம் உருவாக்கினோம், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்தோம். அந்தக் கொள்கைகளின் பயன் இலக்கை எட்டியதா? இந்தக் கேள்விக்கு விடை காணும் சீரிய நிர்வாக அமைப்பை தமிழக முதல்வர் உருவாக்கி சாதனை படைத்து வருகிறார்.

இதன் காரணமாக பள்ளியை விட்டு கொரோனா காலத்தில் விலகிச் சென்ற 16 இலட்சம் குழந்தைகள் அரசுப் பள்ளிக்குத் திரும்பியிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் படித்த குழந்தைகளும் அரசுப் பள்ளிகளுக்கு வருகிறார்கள் என்பது இத்திட்டத்தின் கூடுதல் வெற்றி.

குழந்தைகளைத் தேடிச் சென்று பள்ளிக்குக் கொண்டு வரும் திட்டம் போலவே மக்களைத் தேடிச் செல்லும் மருத்துவச் சேவைத் திட்டமும் தமிழகத்தில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

சீனாவில் புரட்சிக்குப் பிறகு மாசேதுங், வீடு வீடாகச் சென்று மருத்துவச் சேவை வழங்கும் திட்டம் (Bare foot Doctors) மகத்தான புரட்சியாகப் பேசப்பட்டது. இப்போது தமிழ்நாடு அரசு அதே புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் இத்திட்டத்தால் இதுவரை 50 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மூத்த குடிமக்களின் இல்லம் தேடிச் சென்று டயாலிசஸ்’, ‘பிசியோதெரபி’ சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன. 255 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 7200 செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிருட்டிணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் ஆடம்பர விழாக்கள் ஏதுமின்றி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆலமரத்தடியில் முதல்வரால் தொடங்கப்பட்டது இத்திட்டம். ஒரு கோடி பேருக்கு இல்லம் தேடி மருந்துகளையும் மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குவதே இதன் இலக்கு.

அகில இந்திய கோட்டாவில் 4000 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சட்டப் போராட்டம் நடத்தி, மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டின் உரிமையை அனைத்து மாநிலங்களுக்கும் பெற்றுத் தந்த முதல்வர், தமிழ்மொழி வளர்ச்சி; தமிழ் அறிஞர்களை தேடிச் சென்று விருது வழங்குதல்; வரலாறுகளை மீட்டெடுத்தல்; மாநில உரிமைகளுக்கு அழுத்தமான குரல் கொடுத்தல் என்ற தொடர்ச்சியான செயல்பாடுகளால் தமிழகத்தை அனைத்து மாநிலங்களுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

உலகப் புகழ் வாய்ந்த பத்திரிகைகளும் பொருளியல் அறிஞர்களும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளை, நிர்வாகக் கட்டமைப்பைப் பாராட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழகச் சட்டமன்றம் ஜனநாயக மாண்புகளுடன் கடமை யாற்றி வருகிறது. செயல்படுத்தப் படும் திட்டங்களில் உள்ள குறைகள், முறைகேடுகளை நீக்கி; அவற்றின் பயன் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்ற ‘நிர்வாகப்பண்பு மாற்றம்’ நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அனைத்துக் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டங்கள் அவ்வப் போது அரசால் கூட்டப்படுகின்றன. தமிழ்நாடு சமூக நீதியில் ஒன்றுபட்டு நிற்கும் என்பதை (எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க மறுத்தாலும்) கொள்கை எதிரிகளுக்குக் காட்ட விரும்புகிறார், தமிழக முதல்வர்.

‘நீட்’ – மாநில உரிமைகள் குறித்து பா.ஜ.க. அல்லாத மாநில முதல்வர்களை ஒருங்கிணைப்பதில் தமிழக முதல்வர் எடுத்து வரும் முயற்சிகள் மாநில சுயாட்சிக்கான தேவைகளை பிற மாநிலத்தவர்களும் உணரச் செய்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இப்படி ஒரு சவாலை இப்போதுதான் சந்திக்கிறது. எனவே முதல்வரைக் கண்டு அஞ்சுகிறது.

தமிழை ஓர் இனத்தின் அடையாளம் என்பதோடு, அதை சமூக நீதிக்கான குறியீடாகவும் முதல்வர் மாற்றியிருக்கிறார். அரசுத் தேர்வாணையத்தின் வழியாக வேலை வாய்ப்புகளுக்கு தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு தமிழில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்கி வேலை வாய்ப்பு உரிமைகளை தமிழர்களுக்கு உறுதியாக்கியுள்ளார்.

இனி இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று முதல்வர் அழுத்தமாகக் கூறுகிறார். சமூக நீதித் தத்துவத்தில் இடஒதுக்கீடு மட்டுமல்ல; மாநில சுயாட்சி, பெண்ணுரிமை, பண்பாட்டு உரிமைகளும் அதில் அடங்கியிருப்பதைச் சுட்டிக் காட்டி சமூக நீதி உள்ளடக்கத்தை விரிவாக்கியிருக்கிறார்.

இந்தச் சாதனைகள் முதல்வருக் கான பெருமை மட்டுமல்ல; தமிழ் நாட்டின் பெருமையை உயர்த்தி நிற்கிறது. காலத்தின் அறைகூவலை தமிழ்நாடு – நேர் செய்யும். அதை தமிழக முதல்வர் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ சாதித்துக் காட்டுவார்.

விடுதலை இராசேந்திரன்

 

You may also like...