திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

*திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு தீர்மானங்கள் :*

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டம் 30.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் டீம் லிங்க் செயலி வழியாக நடைபெற்றது.

தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், அன்பு தனசேகர், சூலூர் பன்னீர்செல்வம், உமாபதி, மடத்துக்குளம் மோகன், அய்யனார், இளையராஜா, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைமைக் குழுக் கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கி மதியம் 2 30 மணி வரை நடைபெற்றது. கழக அமைப்பின் இணையதள செயல்பாடுகள், கருத்தரங்குகள், கொரோனா பேரிடர் காலத்தில் நடைபெற்றுள்ள சமூக மாற்றங்கள், தனிமனித வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், மத்திய மாநில அரசின் செயல்பாடுகள் இவை குறித்தும் கழகத்தின் சார்பில் தொடர்ந்து இணையதள பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தி பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நிறைவாக, தலைமைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

தீர்மானம் எண் : 1

இரங்கல் தீர்மானம்.

11.06.2020 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் செயல்வீரர் தோழர் கே தமிழரசு அவர்களின் மறைவிற்கு தலைமைக்குழு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டது.

தீர்மானம் எண் : 2

கொரோனா பேரிடர் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் மாற்றங்களும் குறித்து திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமைக்குழு நீண்ட ஒரு விவாதத்தை நடத்தி அதுகுறித்த பார்வையை முன்வைக்கிறது :

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி அது ஒரு பேரிடர் காலமாக அச்சமூட்டியுள்ள இந்த நெருக்கடியான காலகட்டத்தில்

அது தனிமனித வாழ்விலும், சமூக வாழ்விலும், பொருளாதார அமைப்பிலும்,
தொழில் வர்த்தக நிலையிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதை நாம் காண்கிறோம்.

அந்த வகையில் இப் பேரிடர் காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இனி வரக்கூடிய காலங்களில் இந்த மாற்றங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து காணலாம்.

தனிமனித வாழ்வில் :

கொரோனாவின் விளைவால், ஒவ்வொரு தனிநபரும் குடும்பமும் தங்களது அன்றாட பணிகளைத் தாங்களே செய்ய வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

வீட்டு வேலைகளைச் செய்ய பணியாளர்கள் இன்றி, அவரவர் பணிகளை அவரவர் செய்வது சாத்தியமே என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டே வாழ்க்கையை சிறப்பாக நடத்த முடியும் என்கிற உண்மையை இந்த காலம் உணர்த்தியுள்ளது. நுகர்வு கலாச்சாரத்தை இப்பேரிடர் காலம் அடித்து நொறுக்கி உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனை செய்யக்கூடிய ஆன்லைன் வர்த்தக இணையதளங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் மூடப்பட்டு இருந்தும் எந்த ஒரு நட்டமோ பாதிப்போ தனிநபருக்கு நேரவில்லை என்பதிலிருந்தே இவையெல்லாம் மனித வாழ்க்கைக்கு மிக அவசியமானவை இல்லை என்கிறாகிவிட்டது.

திருமணம் போன்ற நிகழ்வுகள் மிக மிக எளிமையாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வகையிலும் இந்த காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆ.டம்பரம் இன்றி நடைபெறும். பேரிடர் காலத் திருமண முறை என்பது பெரியார் இயக்கம் ஆரம்பம் முதலே எடுத்து விளக்கி நடைமுறைப்படுத்தி வரும் திருமண முறையாகும்.

தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிக்காமல் இருப்பது, ஆடம்பரங்களை தவிர்ப்பது, எளிமையான வாழ்க்கை முறை என்பவை பெரியாரிய வாழ்வியலின் ஒரு கூறு ஆகும். இது இக் கொரோனாகாலத்தில் நடைமுறைக்கு இயல்பாகவே வந்து விட்டது.

சுற்றுச்சூழல் அமைப்பின் மீது கொரானாவின் தாக்கம் :

சுற்றுச்சூழல் மாசு இப்பேரிடர் காலத்தில் மிகப் பெரும் அளவில் குறைந்துள்ளது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

சில தொலைதூர மாநிலங்களில் கூட இமயமலையின் உச்சிகள் தெரிகிறது என்றும், கங்கை நதி மிகப்பெருமளவில் தூய்மை பட்டிருக்கிறது என்றும் செய்திகள் வருகின்றன. இதன் மூலம் காற்று மாசு, நீர்நிலை மாசு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளதை அறிகிறோம். தொழிற்சாலைகள் வெளியிடும் கொடிய ரசாயனக் கழிவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இவற்றை கணக்கில் கொண்டு இந்தப் பேரிடர்க்கு பிந்தைய காலங்களில தொடர்ந்து காற்று, நீர்நிலைகள் மாசுபடாமல் இவ்வாறே தொடர்ந்து காப்பது குறித்து அரசும், மக்களும் பரிசீலிப்பது அவசியம் என்று கருதுகிறோம்.

கல்வித் துறையின் மீது கொரோனாவின் தாக்கம் :

இந்த பேரிடர் காலத்தில் நோய்த் தொற்றைத் தவிர்க்க கல்வி நிலையங்கள் முற்றிலும் மூடப்பட்டிருக்கின்றன. தற்பொழுது கல்வியைத் தொடர வேண்டும் என்று கூறி ஆன்லைன் வகுப்புகள் என்கிற பெயரில் சிறு குழந்தைகளுக்கு கூட ஆன்லைன் வகுப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளன தனியார் கல்வி நிறுவனங்கள்.

தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து,கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பது என்கிற அக்கறையை விட, வணிக நோக்கம் தான் இதில் முதன்மையாக இருக்கிறது.

கல்விக் கட்டணத்தை மாணவர்களிடம் வசூல் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்த ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளின் மீது திணிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

இது முற்றிலும் கைவிடப்பட வேண்டிய ஒன்று என்று கருதுகிறோம். .ஆன்லைன் வகுப்பிற்கான அலைபேசி, இணைய இணைப்பு என்பவை எத்தனை குழந்தைகளுக்கு இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இவை அனைவருக்கும் சாத்தியமா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

இந்த ஆன்லைன் கல்விமுறை ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை எட்டாக் கனியாக்கிவிடும். கல்வி கற்க இயலாத குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படுவதும், அது நேரடியாகவே குலத்தொழிலை நோக்கி தள்ளிவிடும் என்பதும் ஆபத்தான விளைவுகளாக இருக்கும்.

கல்வி ஆலோசகர்கள், மனநல மருத்துவர்கள் ஆகியோர் குழந்தைகளுக்கான இந்த ஆன்லைன் வகுப்புகள் ஆரோக்கியமானது அல்ல என்று அறிவித்திருந்திருக்கிற நிலையில் அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கொரானா பேரிடர் காலத்தில் மருத்துவ சேவையின் நிலை :

அரசு மருத்துவமனைகள் மட்டும்தான் கொரோனா நோய்க்கு முற்றிலும் இலவலசமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்கள், பெரும் வசதி படைத்தவர்களால் கூட கட்ட இயலாத அளவு உயர்வாக உள்ளது.

அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்கு மிகப்பெரிய சேவையாற்றி கொண்டு வருகிறார்கள்..அவர்கள் தங்களின் உரிமைகளுக்காக, சிறிய சில கோரிக்கைகளுக்காக போராடிய பொழுது இந்த அரசு அவர்களுக்குச் சிறிதும் மதிப்பளிக்காததோடு மட்டும் அல்லாமல், அவர்களைத் தொலை தூரத்திற்கு பணி இட மாறுதல் செய்து நடவடிக்கைகளை எடுத்தது என்பதை அறிவோம். ஆனால் இப்பொழுதும் அவர்கள்தான் மக்களுக்கான சேவையில் மிகப்பெரிய உயிர் ஆபத்து மிகுந்த சூழலிலும் அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தச் சமூகம் கவனித்து அரசு மருத்துவர்கள் செவிலியர்கள்,தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் பணிகளை, சேவைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஸ்பெயின் போன்ற நாடுகளில் தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் அரசு தன் வசம் கையகப்படுத்தும் திசையில் நகர்கின்றன. .தனியார்மயத்தை வலியுறுத்திய இந்த மேலை நாடுகளில் கூட தற்பொழுது மருத்துவத் துறையை முழுக்க அரசுடமை ஆக்கும் முயற்சி இந்த காலத்தில் விளைந்த ஒரு நல்ல பலன். இந்த முன்னுதாரணங்களைக் கொண்டு இங்குள்ள அரசுகளும் தனியார் மருத்துவமனைகளை முற்றிலும் அரசுடைமை ஆக்கும் அல்லது அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வாய்ப்பைப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சமூக அமைப்பில் கொரானாவின் தாக்கம் :

கொரோனா பேரிடர் இந்திய இந்துத்துவ சமூக அமைப்பு முறையில் ஜாதி ஏற்ற தாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்கிற ஒரு கசப்பான உண்மையை நாம் கண்கூடாக காண்கிறோம். ஜாதி எனும் சமூகப் பரவல் நோய் என்பது கொரோனா சமூக பரவல் நோயை விட மிகவும் வலிமையாகவும் மோசமான விளைவுகளைக் கொடுக்க கூடியதாகவும் இருக்கிறது. இந்தக் காலத்திலும் ஜாதி ஆணவப் படுகொலைகள், ஜாதி வெறி தாக்குதல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் இவை அனைத்தும் தொடர்ந்து முன்புபோலவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்பேரிடர் காலத்திலும் பார்ப்பன மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும், மாற்றங்களுக்குத் தங்களை உட்படுத்தாமல் இருக்கவுமே பார்ப்பனீய சக்திகள் முனைப்பு காட்டி வருகின்றன. உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்களை எல்லாம் புறம்தள்ளி அர்ச்சகர்கள் தங்கள் சுயநலத்திற்காக மருத்துவ அறிவுரைகள்,அரசு நிர்வாக உத்தரவுகளையெல்லாம் மதிக்காமல் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், கோயில் விழாவை நடத்த நீதிமன்றம் சென்று் கூட அனுமதி வாங்கக் கூடிய நிலையில் தான் இன்றும் இந்த சமூக அமைப்பு இருக்கிறது. ஆகவே இந்து பார்ப்பன சனாதன சாதி அமைப்பு முறையை இந்த கொரோனா பேரிடர் காலத்தால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.. ஜாதி, மதம் ,மொழி, இனம் எல்லைகளைக் கடந்து கொரோனா தொற்று பரவியுள்ள இந்த சூழ்நிலையிலாவது ஜாதி,மதம் போன்ற ஏற்றதாழ்வு, பிரிவினைகள் இல்லா சமத்துவ சமுதாயத்தின் அவசியம் குறித்து அரசும், பொதுச் சமூகமும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

மாநில அரசின் செயல்பாடுகள்:

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை தான் மட்டுமே செய்ய வேண்டும் என்பதும், அப்பெயர் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் எனும் கட்சி அரசியல் கண்ணோட்டத்தில் – நிவாரணப் பணிகளை செய்ய முன்வரும் தன்னார்வலர்கள், எதிர்க்கட்சியினர் ஆகியோரைப் புறக்கணித்து வருவது ஏற்புடையதல்ல. அனைத்துக் கட்சியையும் இணைத்துக் கொண்டு இந்தப் பேரிடரை எதிர் கொள்ளும் திட்டம் இந்த அரசுக்கு இல்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரும் ஒருங்கிணைந்து இந்த பேரிடரை எதிர்கொள்ளத் திட்டங்களை வகுக்கவும் இந்த அரசு தயாராக இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.

அரசின் கடமையான பேரிடர் காலப் பணிகளை எல்லாம் தேர்தல் நேர அரசியல் போல விளம்பர நோக்கில் சாதனைப் பட்டியல் வாசித்துக்கொண்டும், கட்சி பிரச்சாரம் போல செய்து கொண்டும் இருப்பது உலகில் எந்த நாட்டிலும் நடைபெறாத அவலம் ஆகும்.

மத்திய அரசின் செயல்பாடுகள் :

கொரோனா பேரிடர் காலத்தில் கூட மத்திய பாஜக அரசு இந்துத்துவ திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது . கொரோனா நிவாரணப் பணிகளை விட இந்துத்துவ திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னிலை கொடுக்கிறது. இ ராமர் கோயில் கட்டுவது, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமைகளை மறுப்பது, மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக பறிப்பது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து, கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என மத்திய அரசு இந்த கொரோனா காலத்திலும் மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது

தீர்மானம் : 3

பறிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு :
மருத்துவ உயர் படிப்பிற்கான பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை முற்றிலும் மறுத்துள்ள மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் போக்கு மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து பல்வேறு புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை மறுத்து உள்ள மத்திய அரசு அதேநேரம் உயர் ஜாதி ஏழைகள் எனும் பெயரில் 10 விழுக்காடு இடங்களுக்கு மேலாகவே பார்ப்பனர்களுக்கு வழங்கியுள்ள சமூக அநீதி நிகழ்ந்துள்ளது மாநில அரசு இதனை கவனத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் இக்கோரிக்கைக்காக நிலுவையில் உள்ள 2015 ம் ஆண்டின் சலோனி குமாரி வழக்கில், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமையை, மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மருத்துவ இடங்களுக்கு, மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின்படி ஒதுக்குவதுகுறித்த ஓர் அறிக்கையை தாக்கல்செய்வதன் வழியாக சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறது..
.
தீர்மானம் 4 :

உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கின் தீர்ப்பு :

நாடே அதிர்ச்சி அடைந்த உடுமலையில் பட்டப்பகலில்,மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் சங்கர் ஜாதி ஆணவக் கொடூரப் படுகொலை மேல்முறையீட்டுத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. குற்றத்தை சரிவர நிரூபிக்காத வகையில் தமிழக அரசு வழக்காடியதே இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டதாக நாம் கருதுகிறோம். கீழமை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டப் படுகொலைக்குக் காரணமான கௌசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டது வழக்கின் அடிப்படைத் தன்மைக்கே மாறானதாக உள்ளது.. கௌசல்யாவின் அம்மா, அப்பா, தாய்மாமன் ஆகியோர் விடுவிக்கப் பட்டுவிட்டதால் இப்படுகொலையை செய்யும் நோக்கம் மற்றவர் யாருக்கு.இருந்திருக்க முடியும்? தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை முக்கிய வழக்காகக் கருதி அக்கறையோடு வழக்காடி குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறோம்

தீர்மானம் 5 :
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் படுகொலை செய்யப்பட்ட பிரச்சினையில் 6 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இப்போது நடந்திருப்பது ஒரு வணிகர் சமூகத்தினர் மீது; குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மீது; அதுவும் கொடூரமான சித்திரவதை என்பது வெளிவந்த பிறகு மக்கள் மன்றம் கொதிப்படைந்து நீதிமன்றம் தலையிட்டது. அதன் காரணமாக இந்த அளவிற்கு இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதைவிட வேறு ஏதேனும் ஒரு பெரிய நிகழ்வு நாட்டில் நடந்துவிடும் பிறகு இது எல்லாம் மறைந்து போகும் என்று கற்பனைக் கனவுகளில் காவல்துறையும் ஆட்சி அதிகாரமும் மிதந்து கொண்டு இருக்கும் ஒரு நிலையை நாட்டில் உருவாக்கி விடக்கூடாது. எச்சரிக்கையாக இருந்து முதன்முறையாக போலீசாரைக் கைது செய்து உள்ளே தள்ளுகின்ற அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று சொன்னால் இதை விடாமல் கண்காணித்து மக்கள் மன்றத்தில் இதனுடைய கொதிநிலையை அடங்காமல் பார்த்து, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சித்திரவதைகள் நடக்காமல் இருப்பதற்கான ஒரு இயக்கத்தை தொடர்ச்சியாக நடத்துவதுதான் ஒவ்வொரு குடிமக்களும் ஒவ்வொரு இயக்கமும் செய்யக்கூடிய சமூக கடமையாக இருக்க முடியும் என்று கருதுகிறோம்.

தீர்மானம் 6:

இணையதள செயல்பாடுகள் :
பேரிடர் காலத்தில் மக்களைச் சந்திக்கவும் கருத்தரங்குகள் நடத்தவும் வாய்ப்பில்லாத சூழலில் இணையதளம் ஒன்றுதான் கருத்துக்களைப் பரப்பவும் மக்களை, தோழர்களை சந்திக்கவும் ஒரே வாய்ப்பாக இருக்கக்கூடிய நிலையில் அந்த வழியிலும் கழகம் முனைப்புடன் செயல்பட்டு 64 கருத்தரங்குகளை இதுவரை இணையத்தில் வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. பல்வேறு புதிய இளம் பேச்சாளர்களை இதன் மூலம் கண்டறிந்து அறிமுகப்படுத்தியிருக்கிறது தொடர்ந்து இணையதளத்தில் நேரலையில் முகநூல் வாயிலாகவும் யூடியூப் சேனல் வாயிலாகவும் கருத்தரங்குகள் நடத்துவதற்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதன் பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்பொழுது கழகத் தலைமைக் குழு டீம் லின்க் வாயிலாக நடைபெற்றுள்ளதைப் போலவே மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் இணையதளம் வாயிலாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி அவர்களை தொடர்பு கொண்டு
இணைய கருத்தரங்குகள் நடைபெறாத நாட்களில் தேதியை உறுதி செய்து மாவட்ட கலந்தாய்வுகள் இணையதளம் வாயிலாக நடத்தவும், அதில் தலைவர், பொதுச் செயலாளார், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகிகள் ஆவண செய்யும்படி இக்குழு கேட்டுக்கொள்கிறது

You may also like...