ஈ.வெ.ரா. விளக்கம்
தோழர் ஈ.வெ.ரா. திருத்துறைப்பூண்டியில் தனது நிலைமையை விளக்கிக்காட்டச் செய்த உபன்யாசம் மற்றொரு புறம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வுபன்யாசம் சு.ம. தொண்டர்களில் சிலர் செய்துவரும் விஷமப் பிரசாரத்துக்கு தக்க சமாதானமாகுமென்று நம்புகிறோம். தோழர் ஈ.வெ.ரா. மீது சு.ம. தோழர்கள் சிலர் செய்து வரும் விஷமப் பிரசாரமெல்லாம் ஈ.வெ.ராமசாமி பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும், ஈ.வெ.ராமசாமி மந்திரிகளுடன் குலாவுவதுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்பதுமே யாகும். பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டதற்கு காரணம் முன்னமேயே கூறியிருக்கிறார். அதாவது அரசாங்கத்தார் பொதுவுடமைப் பிரசாரத்தை சட்ட விரோதமானதென்று தீர்மானித்துவிட்டதாலும், சு.ம. இயக்கம் தனது கொள்கைகளையும் திட்டங்களையும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு பிரசாரம் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக இருப்பதாலும் இப்போது சட்டத்தை மீறி பொதுவுடமைப் பிரசாரம் செய்வதற்கில்லை என்று வெளிப்படையாய்த் தெரிவித்து இருக்கிறார். அதோடு கூடவே சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம் இன்னது என்பதுபற்றி 10.3.35ந்தேதி குடிஅரசில் விளக்கியும் இருக்கிறார். இதையே திருச்சி ஜில்லா சு.ம. மகாநாட்டிலும் விளக்கமாக...
