புகையிலை வரி

அரசாங்கத்தார் இவ்வருஷத்தில் புகையிலைக்கு வரி போட வேண்டு மென்பதாக உத்தேசித்து அதற்காக ஒரு மசோதா தயாரித்து இருக்கிறார்கள்.
இவ்வரியானது புகையிலைக்காக வரி போடவேண்டுமென்பதாக இல்லாமல் 1936 வருஷத்து அரசியல் வரவு செலவு திட்டத்தைச் சரி செய்வதற்காகப் போட்டுத் தீரவேண்டியதாய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
காரணம் என்னவெனில் நிலவரியில் 100க்கு 12லீ விகிதம் குறைக்கப்பட்டதில் சர்க்காருக்குக் குறைந்து போன வரி வருவாய்க்கு வேறு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கவேண்டியதாக ஏற்பட்டு விட்டதாம்.
நில வரி குறைத்ததில் நிலம் உடையவர்களுக்கு லாபம். அதற்கு பதிலாக என்று புகையிலை வரி போடுவதில் விவசாயிகளுக்கும், சிறிய வியாபாரிகளுக்கும் புகையிலை உபயோகிக்கும் ஏழைமக்களுக்கும் நஷ்டம்.
ஆகையால் நிலவரியை பழையபடி உயர்த்தியாவது புகையிலைவரி போடாமல் விட்டுவிடுவதே நியாயம் என்றால் அது தவறாகாது. அரசாங்கத்தார் ஏதாவது ஒரு வரியைக் குறைத்தால் குறைத்தவுடன் அந்தக் கணக்குச் சரிக்கட்டும்படி செலவையும் குறைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டால் இரண்டு கிளர்ச்சிக்கு இடம் கொடுத்தவர்களாகிவிடுகிறார்கள்.
காங்கிரசுக்காரர்கள் செய்கின்ற சூட்சிகளாலும், அரசாங்க உத்தியோகத்தில் பெரிதும் பார்ப்பனர்களே இருப்பதாலும் பார்ப்பன உத்தியோகஸ்தர்கள் அரசாங்கத்துக்குத் துரோகம் செய்யாமல் இருக்கவேண்டுமே என்கின்ற பய பக்தியினால் சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் கொள்ளை சம்பளத்தில் கையை வைக்க பயப்படுகிறார்கள்.
முனிசிப்புகளுக்கும், ஜட்ஜிகளுக்கும் மற்றும் சர்க்கார் காரியாலயத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் கொடுக்கப்படும் சம்பளங்கள் ரூபாய்களை புளியங்கொட்டை மாதிரியே கருதி அள்ளிக் கொடுக்கப்படுகின்றன.
பார்ப்பனர்களுக்கு அரசாங்கத்தில் கொடுக்கப்படும் சம்பளத்துக்கு ஒரு உதாரணமும் யோக்கியதாம்சமும் வேண்டுமானால் ஒருசிறு உதாரணம் காட்டுகிறோம்.
ஒரு காலத்தில் இரண்டு பார்ப்பன வாலிபர்கள் மைசூர் சிவில் சர்வீஸ் பரீக்ஷைக்குப் போனார்கள். அதில் ஒருவர் பாசானார். ஒருவர் பெயிலானார். பாசானவர் மைசூர் அரசாங்கத்தில் ஆயிரத்துச் சில்லறை ரூபாய் வாங்குகிறார். (ஞூச்டிடூ) பெயிலானவர் மதராஸ் அரசாங்கத்தில் இன்று 3000த்துச் சில்வானம் ரூபாய் வாங்குகிறார்.
இதுபோலவே தான் பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டையும், பார்ப்பன ஆதிக்கமும் காங்கிரஸ் தொல்லையும் நம்நாட்டு மக்களின் வரிப்பணங்களை உரிஞ்சிவிடுகிறதோடு எப்படியாவது வருஷம் ஒரு புது வரி போட்டுத் தீரவேண்டிய நிலையிலேயே சர்க்காரைக் கொண்டு வந்து விட்டு விடுகிறது.
நம் நாட்டுக்கும் மக்களுக்கும் இவ்வளவு தொல்லையைக்கொடுத்த பார்ப்பனீயத்துக்கு காங்கிரசுக்கு பொன்விழாக் கொண்டாடப்படுகிறது.
நமது விபீஷணர்களும், மடையர்களும், மூடர்களும், அசடுகளும் அதற்குப் பணம் கொடுத்து பாரதமாதாவுக்கு ஜே போடுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஜனங்களுக்கு புகையிலை வரி மாத்திரமல்லாமல் முட்டாள்வரி என்பதாக ஒரு வரி கூட புதிதாய் திமிர் வரி போல் போட்டாலும் ஆக்ஷேபிக்க ஆள் இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது.
யாராவது ஆக்ஷேபிக்க தொடங்கினாலும் இவ்வளவு தொல்லைகளையும் விளைவித்த பார்ப்பனர்கள், பாமர மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியைக் காட்டிவிட்டு உசுப்படுத்திவிடவும் அவர்கள் உசுப்புக்கு மயங்கி வாலை ஆட்டிக்கொண்டு ஜஸ்டிஸ் கட்சியாரைப்பார்த்து குரைப்பதில் தான் முடிகிறது. மற்றப்படி உண்மையை கண்டுபிடிக்க மிராசுதாரர்களுக்கும் சக்தி இல்லை, விவசாயிகளுக்கும் சக்தி இல்லை, தொழிலாளிகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் சக்தி இல்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
இதை அறிந்த சர்க்கார் இப்போது புகையிலை வரி விஷயத்தில் எப்படி மக்களை ஏமாற்றலாம் என்று பல வழிகள் தேடிக்கொண்டு இருக்கிறதாகத் தெரிகிறது.
அவற்றுள் ஒன்று புகையிலை வரிக்குப் பதிலாக பழயபடி டோல் கேட்டு சுங்கத்தை ஏற்படுத்தலாமா என்று பார்க்கிறார்களாம்.
அல்லது ஜனங்கள் கண்டுபிடிக்க முடியாதபடி ஏதாவது வரிகள் கண்டுபிடிக்கலாமா என்றும் பார்க்கிறார்களாம்.
இதற்கு ஆக வேண்டி காங்கிரசுக்காரரை கைவசப்படுத்திக் கொண்டால் தான் எந்த வரி போட்டாலும் கிளர்ச்சி ஏற்படாது என்று உத்தியோகப் பார்ப்பனர்கள் சர்க்காருக்கு யோசனை சொல்லுகிறார்களாம்.
ஆதியில் தஞ்சை மிராசுதாரர்கள் நிலவரி குறைக்கவேண்டும் என்று கூப்பாடு போட்டபோதே நாம் “எதற்கு ஆக குறைக்கவேண்டும்? யார் தலையில் கையை வைக்க குறைக்கவேண்டும்” என்று கேட்டோம். அப்போது அனேக பார்ப்பனரல்லாத முண்டங்கள் நம்மை தேசத்துரோக லிஸ்டில் சேர்த்தன.
இப்போது புகையிலை வரி போடப்போகிறோம் என்று சர்க்கார் சொல்லும்போது இந்த மிராசுதாரர்கள் கூட்டம் எங்கே என்று பாருங்கள். ஏதாவது பேச்சு மூச்சு காட்டுகின்றனவா?
“வேறு யார் தலையிலாகிலும் கையை வைத்து எங்கள் (மிராசுதாரர்கள்) வரியைக் குறைத்தால் போதும்” என்றுதானே சொல்லுகின்றார்கள்.
வரி குறைக்கவேண்டும் என்று கேட்பவர்கள் சர்க்கார் நிர்வாக வரவு செலவை சரிக்கட்ட வகை இல்லாமலும் வரவு செலவு சரியாய் போகும்படி சர்க்காரை நிர்ப்பந்தப்படுத்தாமலும் வெறும் கூப்பாடு போடுவதன் மூலம் வரியை மாத்திரம் குறைத்துக்கொண்டால் அந்த குறைந்த வரி “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி” என்பதுபோல் ஏழை விவசாயிகள் தலையிலும் கூலிக்கார தொழிலாளிகள் தலையிலும் தான் எப்படியாவது விடிந்து தீரும்.
நமது “பொருளாதார நிபுணர்கள்” “தேசாபிமானச் சிங்கங்கள்” இந்த உண்மைகளை மறைத்து, ஏழைகளை ஏமாற்றி பணக்கார மிராசுதாரர்களுக்கு உதவி செய்துவிட்டு வரவு செலவை சரிக்கட்ட சர்க்காரார் புது வரி போட்டால் முட்டாள்களிடமும், கூலிகளிடமும் கொடியைக் கொடுத்து காந்திக்கு ஜே சொல்லச் சொல்லி ஜஸ்டிஸ் கட்சியை வையச் சொல்லுவதோடு பரிகாரம் செய்து விடுகிறார்கள்.
இந்தத் தந்திரம் பார்ப்பனர்களுக்கிருப்பதாலேயே வெள்ளைக்காரர் களும் சர்க்காரும் பயந்து பார்ப்பனர்களுக்கு சில சமயங்களில் உள் உளவாய் இருந்து வெளியில் மாத்திரம் காங்கிரசுக்கு விரோதிகள் போல் காட்டிக் கொண்டு நம் துடையில் கயிறு திரித்து விடுகிறார்கள்.
சமீப காலமாகப் பார்ப்பன அதிகாரிகள் ஜட்ஜி முனிசிப்பு முதல் டிப்டி கலைக்டர் தாசில் முதல் போலீசு சூபரண்டு எட் கான்ஸ்டேபில் வரை பலர் காங்கிரசை ஆதரித்தும் காங்கிரஸ் சடங்குகளுக்கு உதவி செய்தும்கூட புது வருஷப் பட்டங்களில் 100க்கு 90 பார்ப்பனர்களுக்கும் பிரமோஷன்களில் 100க்கு 95 பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதோடு மெயில் பத்திரிகை உள்பட பார்ப்பனரல்லாதாரின் இயக்கத்தையும் ஜஸ்டிஸ் கட்சி வேலை களையும் குறைகூறி பார்ப்பனர்களை தட்டிக்கொடுத்த வண்ணமாகவே இருந்து வருகின்றன.
சாதாரணமாக வரவு செலவுகளை சரிக்கட்ட வேண்டுமானால் ஆட்டுக்கு கழுத்தில் தொங்குகின்ற இரண்டு மாம்சத் துண்டு போல ஒரு பயனும் இல்லாமல் இருக்கும்படியான டிப்டி கலைக்டர், டிப்டி சூபரண்ட் போன்ற சில தபாலாபீஸ் மாதிரி காகிதங்களுக்கு முத்திரை போட்டு சுருக்குக் கையெழுத்திட்டு கட்டி அனுப்பும் வேலையைத் தவிர வேறு ஒரு பொறுப்புமில்லாத சில டிப்டி உத்தியோகங்களையும் ரிவினியூ போர்ட் முதலியவைகளையும் எடுத்துவிட்டால் அரசாங்கத்துக்கு எவ்வளவோ 10 லட்சக்கணக்கான ரூபாய் மிச்சப்பட்டு விடும்.
மற்றும் முனிசீப்பு முதலியவர்களுக்கு முன் போலவே 200ரூபாயில் இருந்து ஆரம்பிப்பதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலியவர்களுக்கு முன் போலவே 70 ரூபாயில் இருந்தும் சப் இன்ஸ்பெக்டர் முதலியவர்களுக்கு 35 ரூபாயிலிருந்தும் ஆரம்பிப்பதுமான காரியங்கள் செய்யப்படுமானால் நீதி நிர்வாகம் ஆகிய இந்த இரண்டு இலாக்காக்களில் மாத்திரம் மேலும் சர்க்காருக்கு எத்தனை 10லட்சம் ரூ. மீதியாக்கி மற்றும் எவ்வளவோ வரியை குறைக்கவும் கூடும் என்பதும் யோசித்தால் விளங்காமல் போகாது. இவ்வுத்தியோகங்களுக்கு தகுதி உள்ளவர்கள் கிடைக்கமாட்டார்கள் என்று சொல்லமுடியுமா என்று பார்த்தால், பி.எ., பி.எல். பாஸ் செய்தவர்கள் 40 ரூ. சம்பளத்துக்கு திண்டாடுகிறார்கள். பி.எ., எம்.எ. பாஸ் செய்தவர்கள் 20, 25ரூ. சம்பளத்துக்கு திண்டாடுகிறார்கள். இவர்களை எல்லாம் அயோக்கியர்களுக்கு பிறந்தவர்கள் என்றும், 400, 500, 1000, 2000 ரூ. சம்பளம் வாங்குகிறவர்கள்தான் யோக்கியர்களுக்கு பிறந்தவர்கள் என்றும் சொல்லிவிட முடியுமா?
தேசத்தில் வேலை இல்லாத சாதாரண ஜனங்கள் எவ்வளவு மதிப்புள்ள மானத்தையும் எவ்வளவு சின்ன விலைக்கும் விற்றுவிட்டு கொடியைப் பிடித்துக்கொண்டு காந்திக்கு ஜே, சத்தியமூர்த்திக்கு ஜே, ருக்மணி அம்மாளுக்கு ஜே, கோதை நாயகி அம்மாளுக்கு ஜே என்று தெருவில் மான ஈனமில்லாமல் திரிகிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் இந்த நாட்டின் ஈன நிலை நன்றாய் விளங்கும்.
எனவே பொது மக்கள் கோடிக்கணக்காய் இப்படி பரதவிக்க ஒரு சிலருக்கு 400, 500, 1000, 2000, 4000, 5000 என்று அள்ளிக்கொடுப்பது என்றால் இப்படிப்பட்ட காரியங்கள் பொது ஜன நன்மைக்கு என்று செய்வதா அல்லது வேறு காரியத்துக்கு ஆகச் செய்வதா என்பது பெரிய விடுகதையாக நிற்கிறது.
ஆகையால் சர்க்கார் பார்ப்பனத் தொல்லைக்கும் பாமர மக்கள் முட்டாள் தனத்துக்கும் பயப்படாமல் தங்களுக்கு உண்டான உறுதியுடன் நின்று பெரும் சம்பளங்களைக் குறைத்து வரவு செலவுகளை சரிக்கட்டுவதன் மூலம் புதிய வரி போடாமல் இருக்க வேண்டும் என்பதை சர்க்கார் நன்மைக்காகவே தெரிவித்துக் கொள்கிறோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 05.01.1936

You may also like...