சக்லத்வாலா சாய்ந்தார்

சக்லத்வாலா சாய்ந்தார் என்பதைக் கேட்ட ஏழைமக்கள் பரிதவிக்காம லிருக்க மாட்டார்கள். அவர் எப்படியும் ஒரு நாளைக்காவது செத்துச் சாய்ந்து தான் தீரவேண்டும். அதை தடுக்க யாராலும் முடியாது. அன்றியும் சக்லத்வாலா இந்திய மக்கள் சராசரி வாழ்வுக்கு ஒன்றுக்கு இரண்டு பங்கு காலம் வாழ்ந்து விட்டார் என்றாலும், அவரது தொண்டு ஏழை மக்களுக் கென்றே பாடுபட்டு உழைத்துப் பட்டினியால் வாடும் மக்களுக்கென்றே இருந்து வந்த படியால் அம்மக்களின் பரிதாபகரமான வாழ்வுக்கு முடிவு ஏற்படும் வரை சக்லத்வாலாவின் வாழ்க்கையை தங்கள் தங்கள் ஜீவவாழ்க்கையைவிடப் பெரிதாக மதித்திருப்பார்கள் என்பதைப்பற்றி நாம் குறிப்பிட வேண்டியதில்லை.

சக்லத்வாலா ஒரு சிம்மம் போன்றவர். அவர் பேச்சு எதிரிலிருக்கும் எவரையும் லட்சியம் செய்து பேசக்கூடியதாய் இருக்காது. அவர் கொண்ட கொள்கையொன்றையே லக்ஷியம் செய்ததாக இருக்கும்.

அவர் பேசும் கூட்டத்தில் அவரது கொள்கைக்கு எதிரிகள் வீற்றிருக் கிறார்கள் என்று கண்ட மாத்திரத்தில் அவருடைய உபன்யாசங்கள் கொள்கை களின் உருவங்களாகவே நிற்கும். அப்பொழுது தான் சக்லத்வாலாவின் உண்மையான சக்தி வெளியாகும். அவரது கூட்டங்களில் எப்படிப்பட்டவனாலும் விஷமங்கள் செய்ய முடியாது. விஷமங்கள் செய்யப்பட்ட கூட்டங்களே மிகவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட கூட்டங்களாக முடியும்.

60 வதுக்கு மேற்பட்ட வயதானாலும் சாதாரணமாக 2 மணி 3 மணி நேரம் பேசுவார்.

கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில் தான் அவரது தெளிவும், உறுதியும், உற்சாகமும் விளங்கும்.

அவருடைய உறுதியான கொள்கைகள் பொது உடமைக் கொள்கைகளே.

இந்தியர்கள் சிலரால் மகாத்மா என்று கூறப்படும் காந்தியாரிடத்தில் அவருக்கு மகா வெறுப்பு உண்டு. லண்டனில் அவர் பேசும் எந்தப் பொதுக் கூட்டங்களிலும் காந்தியாரை சின்னா பின்னமாகக் கிழித்துத் தள்ளிவிடுவார். காந்தியார் மனித சமூக விரோதி என்றும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு ஒற்றர் என்றும், பாடுபட்டு உழைக்கும் மக்களை மேல்ஜாதிக்காரருக்கும், பணக்காரர்களுக்கும் இரை ஆக்கிக் கொடுப்பவரென்றும் சிறிதும் கூசாது ஆதாரங்களோடு புள்ளி விவரங்களோடு எடுத்துக் கூறுவார்.

பாதிரிமார்களைக் கண்டால் அவருக்கு உடல் சிலுத்துக் கொள்ளும். தலை மயிர் உடல் மயிர் எல்லாம் நிமிர்ந்து கொள்ளும்.

இங்கிலாந்து தொழிற் கட்சியும், இந்திய காங்கிரசும் ஏழை மக்களை ஏமாற்றும் சாதனம் என்று அடிக்கடி ஒப்பிடுவார்.

இங்கிலாந்திலுள்ள சகல பிற்போக்கான கட்சிகளையும் விட தொழிற்கட்சி மோசமானதும் வேஷமானதுமான கட்சி என்பார்.

அவருடைய அபிப்பிராயங்களை எப்பேர்ப்பட்டவர்களாலும் மாற்றமுடியாது.

சக்லத்வாலா தானே தனித்த முறையில் ஒரு கட்சியாயிருப்பவர்.

அவர் அபிப்பிராயத்துக்கு இணங்கினவர்கள்தான் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் யாராயிருந்தாலும் வேறு கட்சி என்றுதான் சொல்லி விடுவாரே ஒழிய அபிப்பிராய பேதத்தோடு அவர் கட்சியில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளவே முடியாது. அவ்வளவு பிடிவாத முள்ளவர். அவரது குரல் 20000 ஆயிரம் ஜனங்களுக்கும் கேட்கும். தினம் 3 கூட்டங்களில் பேசினாலும் குரலில் மாறுபாடு உண்டாகாது.

இவர் 3 வது வகுப்பில் பிரயாணம் செய்வார். வெகு சாதாரண உணவையே உண்பார். தனக்கென்று ஒரு சௌகரியமும் செய்து கொள்ள மாட்டார். வெகு சாதாரண வாழ்க்கையே வாழ்வார்.

பிரசாரம் ஒன்றே தமது வாழ்வின் லட்சியமாய் இருக்கவேண்டு மென்ற ஆசையுள்ளவர்.

தன்னைப்பற்றி பிறர் என்ன சொல்லுவார்கள், என்ன நினைப்பார்கள் என்கின்ற இரண்டு விஷயங்களையும் சிறிதும் லட்சியம் செய்யமாட்டார்.

சிற்சில சமயங்களில் முதலாளிகளும் பாதிரிகளும்கூட அவரை அழைத்து அவர்களது கூட்டங்களில் பேச விரும்புவார்கள்.

இப்படிப்பட்ட குணங்கள் மிதந்துள்ள தோழர் சக்லத்வாலா அவர்கள் 1874 மார்ச்சு மாதம் 28ம் தேதி பிறந்தார்.

1936 ஜனவரி மாதம் 16ம் தேதி மாலை சாய்ந்தார். அவருக்குப் பதிலாகவோ, அவரைப் போலவோ சொல்லுவதற்கு மற்றொருவர் இனித்தான் பிறக்க வேண்டும்.

லண்டனில் ஏழை மக்கள், பாட்டாளிகள், தீவிர உணர்ச்சி வாலிபர்கள் ஆகியவர்கள் உள்ளத்தை அலங்கரித்துக்கொண்டிருந்த அப்பேர்ப்பட்ட பொதுவுடமைப் பெரியார் வாழ்வு முற்றுப் பெற்றதானது பரிகரிக்க முடியாத ஒரு பெரும் நட்டமேயாகும்.

குடி அரசு துணைத் தலையங்கம் 26.01.1936

You may also like...