காரைக்குடி பிரதிநிதிகளை ராஜகோபாலாச்சாரியார் ஏமாற்றினாராம்

காரைக்குடி மகாநாட்டுக்கு வழக்கத்துக்கு மாறாக சில பிரதிநிதிகள் அதிகமாகவே வந்தார்களாம். காரணம் என்னவென்றால் சத்தியமூர்த்தியார் சகாப்தத்தை ஒருவிதத்தில் ஒழித்துவிட வேண்டும் என்கின்ற உணர்ச்சி, காங்கிரசிலுள்ள சில சுயமரியாதை உணர்ச்சி உள்ள வாலிபர்களுக்கும், பார்ப்பனரல்லாதார் சூடு ரத்த ஓட்டமுள்ள சில வாலிபர்களுக்கும் இருந்த ஆசையேயாகும். அதனாலேயே அவர்கள் தோழர்கள் முத்துரங்கமவர் களையாவது அவினாசிலிங்கமவர்களையாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவராக ஆக்கிவிடலாம் என்கின்ற ஆசைமீது வந்தார்கள்.

இந்த ஜபம் ராஜகோபாலாச்சாரி அல்லது ராஜாஜி என்பவரிடம் நடக்குமா? முத்துரங்க முதலியார் தலைவராய் வந்துவிட்டால் அந்த தலைமை ஸ்தானம் (ஏடிண் Mச்ண்tஞுணூ ஙணிடிஞிஞு) ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் மாதிரி, சீனிவாசய்யங்கார் வாய்ஸாக மாறிவிடும். அப்புறம் அது ராஜகோபாலாச் சாரியாரைப் பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டு விடும்.

அவினாசிலிங்கனார் தலைவரானால் அவர் தோழர் டி.ஏ. ராமலிங்கம் செட்டியாருக்குத் தம்பியானதால் ஏதாவது பல்டி அடிக்க வேண்டி வந்தாலும் வந்து விடும். அதனாலே தான் உட்காரு என்றால் படுக்கிறமாதிரியான ஆட்களைப் பிடித்து தலைவர் ஸ்தானத்துக்கு வைத்து மந்திரி நியமனம் செய்யும் யோக்கியதை (வரப்போவதில்லை) வரும்போது, தான் முந்திரிக் கொட்டையாக இருந்து வேலை செய்யலாம் என்கின்ற யோசனை வந்து காரைக்குடிக்கு வந்து ஓட்டர்களை ஏமாற்றினார். என்ன சொல்லி ஏமாற்றினார் என்றால் ஓட்டர்களை காந்தி வேண்டுமா? முத்துரங்க முதலியார் வேண்டுமா? என்று கேட்டு ஏமாற்றினார். சத்தியமூர்த்தியையே தலைவராக்கும்படி காந்தியார் எழுதியிருப்பதாயும், சத்தியமூர்த்தியைத் தலைவராக்கா விட்டால் காந்தியார் விலகி விடுவார் என்றும், அப்புறம் காங்கிரசுக்கு மந்திரி பதவி வருவது குதிரைக் கொம்பு என்றும் சொன்னாராம்.

இந்த டோஸானது அனேக வாலிபர்கள் அதாவது மந்திரிகளுக்கு வாலாக இருக்கக்கூடிய பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று காத்திருந் தவர்களுக்கு மயக்க மருந்தாய்ப் போய் விட்டதாம். ஆகவே ஆச்சாரியார் வெற்றி பெற்றார்.

ஆச்சாரியார் கைவசம் இருக்கும் காந்தி டோஸானது இன்று சர்வரோக நிவாரணமாகிய மின்சார ரசம், அமிர்தாஞ்சனம் ஆகிய சஞ்சீவிகள் போல் விளங்குகிறது.

உண்மையிலேயே “சர்வ வல்லமை” உள்ள சக்கரவர்த்திகளே ஒழிந்து வருகிறார்கள் என்றால், கேவலம் இந்த பொக்கி டோசுக்குத்தானா ஒரு காலம் வருவது கஷ்டமாகிவிடும்? ஜனங்களுக்குப் புத்தி வந்தால் இவையெல்லாம் மாயமாய்ப் பறந்து விடும்.

குடி அரசு தலையங்கம் 09.02.1936

 

You may also like...