சோதிடத்தின் வண்டவாளம்

தோழர் லெய்லா என்னும் பெயருடையவரும், மேனாட்டுப் பிரபல சோதிட பண்டிதையுமான ஓர் அம்மையார் அவர்கள் சென்னைக்கு வந்து “தமிழ்நாடு” நிருபரிடம் பலவகையான எதிர்கால நிகழ்ச்சிகளைப்பற்றி தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறாரென்றும், அவர் சில நாளைக்குமுன் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகள் யாவும் தவறாது நடந்திருக்கின்றனவென்றும் தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அச்சோதிட பண்டிதை இப்பொழுது சென்னையிற் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகளில் ஜார்ஜ் மன்னர்பிரான் உடல் நிலையைப்பற்றியது ஒரு செய்தியாகும். அவர், ஜார்ஜ் மன்னர் நோய் நீங்கி உடல் நலம் பெறுவா ரென்றும், இன்னும் சில வருடங்கள் உயிர்வாழ்வாரென்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறி இரண்டு தினங்கள் ஆவதற்குள் மன்னர்பிரான் மரணமடைந்துவிட்டார். இதிலிருந்து சோதிடத்தின் உண்மையை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். “காக்கையேறப் பனம்பழம் விழுந்தது” என்னும் (காகதாளி) நியாயம்போல் ஒருவர் கூறினபடியே தற்செயலாய் ஏதோ சில சமயங்களில் வாய்ந்து விடுவதுண்டு. இதனைக்கொண்டே அவ்வாறு கூறியவர்களை தீர்க்கதரிசிகளெனவும், சோதிடவல்லவரெனவும் கூறிப் பெருமைப்படுத்துகின்ற நம்மக்களின் பேதமைத் தன்மையை என்னென்பது? இந்தச் சோதிட விஷயத்தை சில பத்திரிகைகள் மிகப் பிரமாதமாக விளம்பரப்படுத்தியதுடன், அம்மையாரின் படத்தையும் போட்டு விளம்பரப் படுத்தினார்கள். சோதிட எதிர்கால நிகழ்ச்சியின் தத்துவத்தை இவ்வரலாறு எல்லாருக்கும் மிக நன்றாக விளக்கிக் காட்டியிருக்கிறது. எனவே இனியாவது மக்களுக்குச் சோதிடப் பைத்தியம் விலகும் என்று நம்புகிறேன்.

குடி அரசு செய்தி விமர்சனம் 26.01.1936

You may also like...