சத்தியமூர்த்தியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்

பார்ப்பனரல்லாதார் கட்சியாரின் முக்கிய கொள்கையானது, இந்தியாவில் மக்கள் பல்வேறு மதக்காரர்களாய் மாத்திரமல்லாமல், பல்வேறு ஜாதிகளாய் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சமூக வாழ்வில் பிறவியின் காரணமாகவே உயர்வு தாழ்வு கற்பித்து அந்தப்படியே வெகு காலமாய் நடத்தப்பட்டு வந்ததால் மேல் நிலையில் இருப்பவன் எப்போதும் மேல் நிலையிலேயே இருக்கவும், கீழ்நிலையில் இருப்பவன் எப்போதும் கீழ் நிலையிலே இருக்கவுமான சமூக வாழ்க்கை அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது என்பதை அறிந்து, அவற்றை அடியோடு ஒழித்து சமூக வாழ்விலும் மற்றும் கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றிலும் சகல மக்களுக்கும் சமசந்தர்ப்பம் ஏற்படும்படியாகச் செய்ய வேண்டுமென்பதேயாகும்.

இக்கட்சியை இந்த முக்கிய கொள்கையோடு 1916ல் ஆரம்பித்து இன்று 1936ம் வருஷம்வரை சிறிதும் பின்னடையாமல் எவ்வளவோ எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் இடையில் கஷ்டப்பட்டு வேலை செய்து வந்ததின் பயனாய் கொள்கை ஒரு அளவு வெற்றி பெற்று இருக்கிறது என்றாலும் இன்னும் வெற்றி பெற வேண்டிய அளவு எவ்வளவோ இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் சமூக வாழ்வில் பிற்பட்டு கல்வியிலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் கீழ் நிலையில் வெகுகாலமாய் இருந்துவந்த மக்கள் போதிய பகுத்தறிவும், ஞானமும் பெற்றிருக்க முடியாது ஆதலால் அப்படிப் பட்டவர்களில் சிலர் தங்கள் தனிப்பட்ட அற்ப சுயநலத்தையே பிரதானமாய்க் கருதி தங்களது வகுப்பு சுயமரியாதை முயற்சியைப் பறிகொடுத்து விட்டு, இம்முயற்சிக்கு எதிரிகளாயிருந்து தொல்லை கொடுத்துவரும் பார்ப்பனர்களுக்கு தாசர்களாக இருந்துகொண்டு முட்டுக்கட்டை போட்டு வருவதில் அதிசயம் ஒன்றும் இருக்க முடியாது.

ஏனெனில் இந்நாட்டில் “மிகவும் முக்கியமானதும், சாஸ்வதமானதும் மனிதன் அடைந்து தீரவேண்டியதுமானது” என்று சொல்லப்பட்ட மோக்ஷ சாம்ராஜ்யமென்னும் “பரலோக சித்திக்கே” பார்ப்பனர்களைக் குருவாய்க் கொண்டு அவர்களுக்குத் தாசர்களாகி அவர்களது கால்களைக் கழுவிய தண்ணீரை தீர்த்தமாய் அருந்துவதை கொள்கையாய்க் கொண்டு பின்பற்றி வரும் மக்கள் “மாய்கையானதும், நிலையற்றதும், அற்பவாழ்வானதும், இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லாததும் ஆனது” என்று சொல்லும் படியான இந்த உலக வாழ்க்கைக்கு பார்ப்பனர்களை குருவாய்க் கொள்ளுவதோ, அவர்களுக்கு தாசர்களாய் இருப்பதோ எப்படி ஆச்சரியமானதாக இருக்க முடியும்?

ஆதலால் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு பார்ப்பனரல்லாதார் சிலர் தாங்கள் உள்பட சகலவகுப்புக்கும் சம சந்தர்ப்பம் கிடைப்பதை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை.

அப்படியெல்லாம் இருந்தும் பார்ப்பனரல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவை இந்த 10, 20 வருஷகாலமாய் செய்துவந்த வேலையின் பயனாய் அதன் முயற்சி சிறிது கைகூடி அமுலில் வந்திருக்கிறது என்பதோடு மட்டுமில்லாமல், பார்ப்பனர்களே இன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இந்தியாவுக்கு அவசியம்தான் என்று சொல்லும்படியாகவும் செய்து விட்டதுடன், சில வகுப்புகளுக்கு இருந்து வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபிப்பதில்லை என்றும் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

அதாவது எந்தெந்த வகுப்பில் பலமான கட்டுப்பாடு இருந்து ஒரே பிடிவாதமாக தங்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்கப்பட்டதோ அந்த வகுப்புகள் விஷயத்தில் பார்ப்பனர்கள் திருடனைத் தேள் கொட்டியதுபோல் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் ஒப்புக்கொண்டு விட்டார்கள். எந்தெந்த வகுப்பில் கட்டுப்பாடுகள் இல்லாமல் எதிரிக்கு அடிமைகளாகத்தக்க மக்கள் இருந்தார்களோ அந்த வகுப்புப் பிரதிநிதித் துவத்தைப் பற்றி மாத்திரம் தொல்லை கொடுத்து வந்தார்கள்; வருகிறார்கள்.

அப்படி இருந்தும்கூட பார்ப்பனத் தலைவர் காங்கிரஸ் தலைவர் சட்டப்படி இவ்விஷயங்களைப் பற்றிப் பேச உரிமை உள்ளவர் என்று சொல்லும்படியான தோழர் சத்தியமூர்த்தி அவர்களே இன்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அவசியம்தான் என்று சொல்லித்தீர வேண்டியதாய்விட்டது.

அதாவது அரசியல் உத்தியோகங்கள் முதலியவைகளை எல்லா வகுப்பாரும் அடையவேண்டியதுதான் என்றும், எல்லா வகுப்பாருக்கும் கிடைக்கும்படியாக செய்ய வேண்டியதுதான் என்றும் ஒப்புக்கொண்டு விட்டார். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் சம்மதித்து இருக்கிறார்.

ஆனால் அதற்கு சட்டம் மாத்திரம் கூடாது என்கிறார்கள்.

அதாவது எதுபோலென்றால் “தீண்டாமை ஒழிய வேண்டியது தான், தீண்டாதார் கோவில், குளம், தெருவு, பள்ளிக்கூடம் ஆகியவைகளில் அனுமதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்கு சட்டம் செய்யக் கூடாது” என்று எப்படி சத்தியமூர்த்தி, சீனிவாச சாஸ்திரி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் உள்பட வர்ணாச்சிரம பார்ப்பனர்களும், சீர்திருத்த பார்ப்பனர்களும் சொல்லுகிறார்களோ அதுபோலவே “எல்லா வகுப்பாரும் உத்தியோகம் பிரதிநிதித்துவம் ஆகியவை பெறவேண்டியது தான், ஆனால் அதற்கு எவ்வித விதியும் இருக்கக் கூடாது” என்கிறார்கள். அதோடு மாத்திரமல்லாமல் கீழ் உத்தியோகத்தில் மாத்திரம் தான் எல்லா வகுப்பாருக்கும் உத்தியோகம் கொடுக்கலாமே ஒழிய, மேல் உத்தியோகங்கள் கொடுக்கப்படும் போதும் எல்லா வகுப்பாரையும் மனதில் நினையாமல் திறமையை மாத்திரமே நினைக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்.

நாமும் திறமையும், யோக்கியதையும் இல்லாதவருக்கு எந்த உத்தியோகமும் கேட்கவில்லை.

ஆனால் தோழர் சத்தியமூர்த்தியார் திறமையை ஒரு வகுப்பாருக்கே சொந்தமென்று கருதுவாரானால் மாத்திரம் அவர் இந்தப்படி பேச அருகதையுடையவர்தான். அப்படிக்கில்லாமல் எல்லா வகுப்பாரிடையும் யோக்கியதை பெற்ற எல்லா உத்தியோகஸ்தர்களிடையும் மேல் வேலைக்குப் போகத்தகுந்த திறமையுடையவர்கள் விகிதாச்சாரம் இல்லாவிட்டாலும் அவசியமான அளவுக்குக்கூட கிடைக்கமாட்டார்கள் என்று சத்தியமூர்த்தியாரோ அவரது கோஷ்டியார்களோ கருதுவார்களேயானால் அதற்காக வேண்டியே அக் கோஷ்டியாரை அடியோடு அழித்தாக வேண்டியது அவசியம் என்போம்.

சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை பொது ஜனங்களில் மொத்த ஜனத்தொகை 45000000, 4லீ கோடி என்றால் அதில் இருந்து பார்ப்பனர் மொத்த ஜனத்தொகை 15 லக்ஷம் பேர் போய் விட்டால் மீதியில் பதினாயிரத்துக்கு ஒருவராவது சர்க்கார் வேலை பார்க்கத் திறமை யுடையவர்கள் இருந்தாலும் 4500 பேர்கள் திறமையுடையவர்கள் கிடைப்பார்களல்லவா?

அல்லது திறமைக்கு ஒரு அளவு கருவியாவது வைத்துத் திறமையாளர்களைப் பரிசோதித்து இன்னார் திறமையுள்ளவர்கள், இன்னார் திறமை இல்லாதவர்கள் என்றாவது, அல்லது இன்ன வகுப்பில் இத்தனை வீதாச்சாரம் திறமையுள்ளவர்கள், இன்ன வகுப்பில் இத்தனை வீதாச்சாரம் திறமையுள்ளவர்கள் என்று கண்டு பிடித்தாவது உத்தியோகத்துக்கு வேண்டிய வீதாச்சாரம் இன்னார் கிடைக்காவிட்டால் அதற்கடுத்த இன்னாரில் எடுத்துக் கொள்வது, அல்லது இன்ன இன்ன வகுப்பில் இருந்து விகிதாச்சாரம் எடுத்துக் கொள்வது என்று பார்த்தால் அப்போதாவது கிடைக்கிறதா இல்லையா என்று பார்த்து ஒரு திட்டம் ஏற்படுத்திக் கொள்ள சம்மதிக்கிறாரா என்று கேட்கின்றோம்.

இந்தியாவில் ஆட்சிபுரியாத மதமோ, வகுப்போ இன்று ஒன்றும் இல்லை. எல்லா வகுப்பாரும் இந்தியாவில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு காலத்தில் அரசர்களாய் இருந்து நாடு ஆண்டு இருக்கிறார்கள்.

ஆதலால் அப்படிப்பட்ட இந்தியாவில் கேவலம் சர்க்கார் உத்தியோகம் பார்க்கத்தகுந்த திறமையுடையவர்கள் அப்படிப்பட்ட வகுப்புகளில் கிடைக்கமாட்டார்கள் என்றால் இப்படிப்பட்ட ஜன சமூகம் உள்ள நாட்டுக்கு “சுயராஜ்ஜியம் கொடுங்கள் பூரண சுயேச்சை கொடுங்கள்” என்று கேட்பது “திறமையுள்ளவர்”களான சத்தியமூர்த்தியார் வகுப்பு மாத்திரம் ஆட்சி புரியவா என்று கருதவேண்டியிருக்கிறது. அப்படி ஆனால் சத்தியமூர்த்தி வகுப்பார்களைவிட பிரிட்டிஷ்காரர் எத்தனையோ விதத்தில் மேலானவர்கள், ஜாதி ஆணவமும் கெடுதல் புத்தியும் இல்லாதவர்கள் என்பதை யார் ஆக்ஷேபிக்க முடியும்?

ராஜகோபாலாச்சாரியாரும், பிரகாசமும் “ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனரல்லாதார் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்” என்று பேசினார்கள்.

ஆனால் பார்ப்பனரல்லாதார் ஆட்சியில் அந்தப்படி மக்களை இழிவு படுத்தும்படியான கொள்கை எதுவும் இல்லை. சத்தியமூர்த்தியார், ராஜ கோபாலாச்சாரியார், பிரகாசம் ஆகியவர்கள் ஆட்சியில் மற்றவர்களுக்கு இழிவுள்ள கொள்கை இல்லையென்று யார் சொல்லிவிட முடியும்?

அப்படி இல்லையானால் வகுப்பு பிரதிநிதித்துவம் மேல் உத்தியோகங் களுக்கு கூடாது என்று சொல்ல அவருக்கு தைரியம் வந்திருக்குமா என்று கேட்கின்றோம்.

இவை ஒருபுறம் நிற்க, தோழர் சத்தியமூர்த்தியார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு விதி வேண்டாம் என்று சொன்னவர் அது யோக்கியமாய் நடைபெற வேறு ஏதாவது ஒரு மார்க்கம் சொன்னாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. தீண்டாமை விலக்குக்கு 16 வருஷமாய் பல லக்ஷ ரூபாய் செலவுடன் வேலை செய்கிறார்கள். என்ன ஆயிற்று? பால்ய விவாகம் கூடாது என்று சட்டம் செய்திருக்கும்போதே “என் மகளுக்கு குழந்தையில் விவாகம் செய்து ஜெயிலுக்குப் போவேன்” என்று சத்தியமூர்த்தியாரே சொன்னார் என்றால் சட்டம் இல்லாமல் செய்வார் என்று இக்கூட்டத்தாரை யார் நம்புவார்கள்?

ஆகவே ஏதோ சமயம் போல் பேசி மக்களை ஏய்ப்பது என்பதில்லாமல் மற்றபடி நாணயமான காரியம் எதுவும் அக்கூட்டத்தாரிடம் இருப்பதாக நாம் கூற முடியாது.

ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் முதலில் எப்படியாவது பாடுபட்டு பிரதிநிதித்துவமும், உத்தியோக விகிதாச்சாரமும் பார்ப்பன பார்ப்பனரல்லாத இந்துக்கள், பார்ப்பனரல்லாதார் தாழ்த்தப்பட்ட மக்கள், கிறிஸ்தவர், மகமதியர் என்பவர்களுக்கு ஆகவாவது ஏதாவது விகிதாச்சாரம் கொடுப்பதாய் ஒப்புக் கொள்ளும்படி பார்ப்பனர்களை செய்துவிட்டால் பிறகு இந்தியாவை எவ்வித சுயராஜ்ஜிய ஆட்சியோ, சுதந்திர ஆட்சியோ, சமதர்ம ஆட்சியோ நடை பெறும்படி செய்வது இப்போதைய நிலையைவிட எவ்வளவோ பங்கு சுளுவான நிலையான காரியமாகிவிடும் என்று கூறுவோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 26.01.1936

You may also like...