இப்போதாவது பாமர மக்களுக்குப் புத்தி வருமா?

பார்ப்பனர்கள் ஏழை மக்களுக்கு அதாவது ஏழை விவசாயிகளுக்கும், ஏழைத் தொழிலாளிகளுக்கும் ஜன்ம விரோதிகள் என்பதற்கு இன்னம் ஏதாவது ருஜுவேண்டுமா? என்று கேட்கின்றோம்.

ஏழைக் குடியானவர்கள் மசோதாவாகிய இனாம்தார் மசோதா என்பதை கொலை செய்தவர்கள் யார் தொழிலாளிகள் மசோதாவில் சம்பளப் பிடித்தத் திருத்தத்தை ஆதரித்து தொழிலாளர் உரிமையைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை ஆலோசித்துப் பார்த்து காங்கிரசும் பார்ப்பனீயமும் ஏழை மக்களுக்கு அனுகூலமானதா துரோகமானதா என்பதை உணர வேண்டுகிறோம்.

இனாம்தார் மசோதா என்பதின் தத்துவம் எவன் பூமியை நேரில் கஷ்டப்பட்டு உழுது பயிர் செய்கிறானோ அவனுக்கே பூமி சொந்தமாய் இருக்க வேண்டும் என்கின்ற தத்துவத்தைக் கொண்டது. இந்த மசோதா ஒரு வழியில் சமதர்ம ஆட்சிக்கு அடிப்படையென்று கூட சொல்லலாம். ஜஸ்டிஸ் கட்சியானது உண்மையிலேயே ஒரு சமதர்ம தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப் பட்டது என்று நாம் பலதடவை சொல்லி வந்திருக்கிறோம்.

அது முக்கியமாய் முதலாவதாக பிறவியிலேயே ஏழையாகவும் அடிமையாகவும் கற்பிக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கென்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது பார்ப்பனர்களின் கொடுமைக்கும், சூழ்ச்சிக்கும் தலை கொடுக்க வேண்டியிருந்தபடியால் அதற்குத் தகுந்த நபர்களைக் கொண்டு அக்கட்சி நடைபெற வேண்டியிருந்ததினிமித்தம் பார்ப்பனரல்லாத பணக்காரர்கள், ஜமீன்தாரர்கள் ஆகியவர்கள் உதவியை நாட வேண்டியதாயிற்று. இன்றும் நிலைமை அதுபோலவே இருப்பதால் பணக்காரர்கள், ஜமீன்தாரர்கள் உதவி இல்லாமல் அக்கட்சி நடைபெற முடியாததாய் இருக்கிறது.

என்றாலும், அக்கட்சியானது அது ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட கொள்கைக்கு விரோதமில்லாமல் இன்றும் நடந்து வருகிறது என்பதை அதன் எதிரிகளும் இன்றும் மறுக்க முடியாது. அக்கட்சி கொள்கைப்படி பொது மக்களுள் இருந்து வரும் ஜாதி இழிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவைகளை ஒழிப்பதற்கும் அரசியல் சமூக இயல் ஆகிய நிர்வாகங்களில் எல்லா மக்களுக்கும் அதாவது “பார்ப்பான் முதல் பறையன் வரை” சம பிரதிநிதித்துவமும், சம சந்தர்ப்பமும் இருக்கவும் பாடுபட்டு அதை ஒரு அளவுக்கு அமுலில் கொண்டு வந்து விட்டது. அதன் பிறகே மற்ற சமதர்மக் கொள்கைகளையும் அமுலுக்குக் கொண்டு வர முயற்சித்திருக்கிறது. இந்த முறையில் தான் சமூகச் சீர்திருத்தத் துறையிலும் தீண்டாமை ஒழிப்பு முதல் தேவதாசிகள் ஒழிப்பு மசோதா, விபசாரிகள் ஒழிப்பு மசோதா, தேவஸ்தானப் பணம் பொது நலமான காரியங்களுக்கு பயன்படுத்தும் மசோதா, லேவாதேவிக்காரர்கள் மசோதா, இனாம் குடிகள் மசோதா என்பவைகளான பலவற்றை அடுக்கடுக்காகக் கொண்டு வந்து சட்டங்களாக ஆக்கிக்கொண்டு வரப்படுகிறது.

இந்த மசோதாக்களில் எதையாவது ஒன்றை காங்கிரசோ, பார்ப்பனர் களோ ஆதரித்தார்கள் என்றாவது எதிர்க்காமலாவது இருந்தார்கள் என்றாவது இன்று யாராவது சொல்ல முடியுமா என்பதோடு அவைகள் எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்கும் தொல்லைகளுக்கும் இடையில் நிறைவேற்றி சட்டமாக்கிய பிறகாவது அதை உண்டாக்கியவர்களின் உத்தேசப்படி அமுல் நடத்தவாவது விட்டார்களா என்பதை யோசித்தால் பார்ப்பனர்கள் யோக்கியதையும், காங்கிரசின் யோக்கியதையும் மூடனுக்கும் நன்றாய் விளங்கிவிடும். ஜஸ்டிஸ் கட்சி ஆதிக்கத்தினாலேயே டாக்டர் சுப்பராயன் மந்திரி சபையானது ஸ்தல ஸ்தாபனங்களில் சர்க்கார் நாமினேஷன் என்பதை அடியோடு ஒழித்தது. அந்தப்படியான ஒரு ஜனநாயகத்திற்கு இந்தியா பூராவுக்குமே வழிகாட்டிய அவ்வளவு முற்போக்கான வேலையைச் செய்த மந்திரிகளை ஒழிக்க பார்ப்பனர்களும் காங்கிரசும் பட்டபாடு எவ்வளவு என்பது ஒரு புறமிருக்க அந்தத் தன்மையை காங்கிரசுக்காரர்கள் எவ்வளவு தூரம் துஷ்பிரயோகப்படுத்திக் கொண்டார்கள் என்பதை நோக்கும் போது இவர்கள் அரசியல் முற்போக்குக்கு சிறிதாவது அருகர்களா என்பதும் விளங்காமல் போகாது.

ஆகவே காங்கிரசும், பார்ப்பனீயமும் இந்திய மக்களின் உண்மையான சுக வாழ்வுக்கானாலும், உண்மையான சமதர்ம வாழ்வுக்கானாலும் பிறவி எதிரிகளாய் இருக்கின்றனவே ஒழிய சிறிதும் அனுகூலமானவர்கள் அல்ல என்பதோடு இவைகளின் காலத்தில் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்பட முடியாது என்றும் சொல்லிவிடலாம்.

இனாம்தார் மசோதா என்றால் என்ன? முற்கூறியதுபோல பூமியை எவன் கஷ்டப்பட்டு உழுகிறானோ அவனே அந்த விளைவின் பயனை அனுபவிக்க வேண்டும் என்கிற, அதாவது எல்லா மக்களும் உண்மையாக பாடுபட்டு எல்லோரும் பலனை விகிதாச்சாரம் அடைய வேண்டும் என்னும் தத்துவம் அதில் இருக்கிறது. இப்போதைய முறையானது பூமிக்கு சொந்தக்காரன் ஒருவனாகவும் பூமியை கஷ்டப்பட்டு உழுது பயிர் செய்கிறவன் ஒருவனாகவும், பாடுபட்டு உழுது பயிர் செய்பவன் அரைப் பட்டினியாய் கிடக்கவேண்டியது, பாடுபடாமல் நிமித்திய மாத்திரமாய் சொந்தக்காரராய் இருக்கும் சோம்பேறிகள் வெள்ளாமைகளையெல்லாம் கொண்டுபோய் தன் குதிருக்குள் கொட்டிக்கொண்டு தினம் 3வேளை குளித்து நாலு வேளை சாப்பிட்டு விட்டு தொப்பையைத் தடவிக்கொண்டு திண்ணையில் தூங்க வேண்டியது என்கின்ற முறையே இருந்து வருகிறது.

ஜஸ்டிஸ் கட்சியார்கள் இதை மாற்ற வேண்டும் என்கின்ற ஆசையின் மீதே முதல்படியாக எவன் எந்தக் குடியானவன் காலாகாலமாய் உழுது கொண்டு வருகிறானோ அவனே ஒரு குறிப்பிட்ட உரிமையுள்ள பூமிக்கு அதாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதற்கு என்று பொது மக்களால் குறிப்பிட்ட நபருக்கு மான்யம் விட்டு அந்த மான்யதாரன் அந்த பூமியை உழுது பயிர் செய்யாமல் வேறு குடியானவனுக்கு விட்டுவிட்டு அவனிடம் இருந்து பயன்பெற்று வருவதாய் இருந்தால் அந்தப் பயனைப் பற்றிய அளவுக்கு செய்யப்பட்ட ஒரு ஏற்பாடாகும்.

இந்தக்காரியத்தால் யாருக்கு என்ன நஷ்டம்? இப்படிப்பட்ட மான்ய பூமி அனேகம் ஏற்கனவே விற்றாய்விட்டது. அடமானம் போக்கியம் முதலியவை செய்தும் ஆகிவிட்டது. அனேகம் வேறு பல வழிகளில் கைமாறியும் விட்டது. இப்படிப்பட்ட நிலையில் யாருக்கும் உண்மையில் பெருவாரியான நஷ்டம் எதுவும் ஏற்பட்டுப் போய்விடுவதற்கு இடமில்லை. அப்படி இருந்தும் பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக காங்கிரஸ், தேசீயம், வருணாச்சிரமம் எல்லாமுமே கூப்பாடு போட்டு அச்சட்டத்தை கொலை செய்து விட்டார்கள்.

இதிலிருந்து ஏழை மக்களுக்கு ஏழைக்குடியானவர்களுக்கு நன்மை செய்கிறவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார்களா காங்கிரஸ் கட்சி பார்ப்பனர்களா என்பதை உணர வேண்டுகிறோம்.

இன்றுள்ள விவசாய குடியானவர்கள் நிலைமை உண்மையிலேயே சகிக்கக் கூடியதாயில்லை.

அனேக குடியானவர்கள் குத்தகைக்கும் கூலிக்கும் உழுகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

அவர்கள் அத்தனை பேரும் ஏறக்குறைய ஒருவேளைப் பட்டினிக் காரர்களாகவே இருப்பதுடன் அவர்களது பெண்டு பிள்ளைகளும் சேர்ந்து பாடுபட வேண்டி இருக்கிறதே ஒழிய அவர்களுக்கு படிப்போ, சுகாதாரமோ, வைத்தியமோ எல்லாம் பூஜ்ஜியமாகவே இருந்து வருகின்றன.

இதுவும் ஒரு வருணாச்சிரம தர்மம் போலவே மிராசுதார்கள் மக்கள் மிராசுதாரர்களாகவும், கூலி விவசாயி மகன் கூலி விவசாயியாகவும் பாரம்பரியமாய் இருந்து வரும்படியாக இருந்து வருகிறது. மிராசுதாரர்களின் கல் நெஞ்சமானது குடியானவனை அடுத்த தலைமுறைக்குக்கூட அவன் பிள்ளை குட்டிகள் இருக்க முடியாமல் பட்டினியினாலேயே சாகும்படி செய்து விடுவதில் சிறிதுகூட தயங்காது. ஆனாலும் மறுபடியும் அடுத்த வருஷத்துக்கு தங்கள் பூமியை உழ ஆள் வேண்டுமே என்கின்ற சுயநலத்துக் காகவே அரை கஞ்சிக்காவது கொடுத்து அவனை உயிருடன் வைத்திருக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகிவிட்டது.

இந்தக் காரியங்களுக்கு ஏதாவது யந்திரங்கள் வந்து அது தானாகவே உழுது பயிர்செய்து வெள்ளாமையை வீட்டிற்கு கொண்டுவந்து குதிரில் கொட்டிவிடுமேயானால் கண்டிப்பாய் இந்தக் குடியான ஜனங்கள் கோடிக் கணக்காய் பிளேக்கிலும் பேதியிலும் பூகம்பத்திலும் ஒரே நாளில் போய் விடுகிற மாதிரி ஒழிந்து போய்விட வேண்டியதுதான்.

இதை, இன்று எந்த மகாத்மாவும் கவனிப்பதில்லை. எந்த தேசாபி மானியும் கவனிப்பதில்லை. மகாத்மாக்களின் யோக்கியதை ஆட்டுப்பாலும், ஆரஞ்சிப்பழ ரசமும், பஞ்சணை மெத்தையும், உபசாரத்துக்கு பற்பல தாதிகளுடன் முடிந்து விடுகின்றது.

தேசப்பக்தர்கள் கடமையோ முனிசிபாலிட்டி, ஜில்லா போர்ட், சட்ட சபை ஆகியவைகளின் ஸ்தானங்களும் ஆதிக்கங்களும் மந்திரி பதவிகளும் பார்ப்பனீய ஆட்சிகளும் என்பவையோடு முடிந்து விடுகின்றன.

கொஞ்ச நஞ்சம் ஏதாவது நன்மை செய்யக்கூடிய ஜஸ்டிஸ் கட்சி போன்ற ஸ்தாபனங்களும், நபர்களும் பார்ப்பனக் கூலிகளால் தேசத் துரோகிகள் என்று கற்பிக்கப்பட்டு விடுகின்றன.

குடியானவர்கள் சம்பந்தமான யோக்கியதைகள் இந்த லக்ஷணம் என்றால் தொழிலாளர்கள் விஷயத்திலும் காங்கிரஸ்காரர்கள் இது போலவே துரோகம் செய்து வருகிறார்கள். அதுவும் வெகு துணிவாகவே இவ்விதத் துரோகங்கள் செய்து முதலாளிமார்களிடம் பரிசு பெற்று மெத்தை மேடை வீடுகள் கட்டிக் கொள்ளுகிறார்கள். இவற்றை கொஞ்சமும் பயமில்லாமலும் வெட்ட வெளிச்சமாகவே செய்கிறார்கள்.

என்றாலும் இதை நமது மூட மக்கள் உணருவதற்கில்லாமல் தேசியமும் தேசபத்தியும் செய்து வருகின்றன.

சாமிக்காக என்று சுவாமியின் பொண்டாட்டி ஆய்விட்டதாக பொட்டுக் கட்டிக்கொண்டு குச்சுக்காரத்தனம் செய்வதில் எப்படி வெட்கத்திற்கும் இழிவுக்கும் இடமில்லாமல் போய்விட்டதோ, அதுபோலவே தேசத்துக்காக என்று தேசபக்தன் என்கின்ற பெயரை வைத்துக்கொண்டு குச்சுக்காரத் தனத்தைவிட இழிவானதான சமூகத்துரோகம் செய்து வயிறு வளர்த்தாலும் அது இன்றைய சமூக முறையில் வெட்கத்திற்கும் இழிவுக்கும் இடமில்லாமல் போய்விட்டது.

சமுதாயம் இன்று உள்ள முறையில் இம்மாதிரி ஈன வயிறுவளர்க்கும் ஜனங்கள் இருப்பதும், இப்படி ஏழை மக்களைத் தொழிலாளி மக்களை ஒரு கூட்டம் ஏமாற்றி சுயநலமடைந்து சோம்பேறியாய் வாழ்வதும், இவற்றை யெல்லாம் அனுமதித்துக்கொண்டு ஒரு அரசாங்கம் இருப்பதும் சிறிதும் அதிசயமில்லை என்று சொல்ல வேண்டி இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இப்போதாவது பாமர மக்களுக்கு அதாவது காங்கிரஸ் காங்கிரஸ் என்று கூலிகளின் பேச்சைக் கேட்டு பார்ப்பனர்களுக்கு ஓட்டு போட்டு விட்டு தலையில் ஓட்டைக் கவிழ்த்துக்கொள்ளும் பாமர மக்களுக்கு புத்தி வந்து உண்மையாக மக்கள் கூட்டத்துக்கு பாடுபடுகிறவர்கள் யார் என்பதை உணர்ந்து தங்கள் ஓட்டுகளை யோக்கியமான வழியில் பயன்படுத்தப்பட மாட்டார்களா என்றுதான் எதிர்பார்க்கிறோம்.

குடி அரசு தலையங்கம் 01.03.1936

You may also like...