அரசாங்கத்தை காங்கிரசுக்காரர்கள் ஏமாற்றி விட்டார்களாம்

அரசாங்கத்தார் காங்கிரசுக்காரர்கள் திலகர் நிதி விஷயமாகவும், பீகார் பூகம்ப நிதி விஷயமாகவும் நடந்து கொண்ட நாணயத்தைப்பற்றி ரகசிய விசாரணை செய்து சம்பாதித்து வைத்து இருக்கும் புள்ளி விவரங்களை அசம்பிளி கூட்டத்தில் ஏதாவது சந்தர்ப்பம் பார்த்து காங்கிரஸ்காரர்கள் பேச்சுக்கு பதில் சொல்லு முறையில் வெளியாக்கி விடுவதாக ஏற்பாடு செய்து வைத்து இருந்தார்கள். இதைக்கண்டு நடுங்கிப்போய் “காங்கிரஸ் காரர்களாகிய நாங்கள் உங்களுக்கு அந்த மாதிரி சந்தர்ப்பம் கொடுத்தால் தானே அரசாங்கத்தாராகிய நீங்கள் எங்கள் வண்டவாளங்களை வெளியிடுவீர்கள்” என்று சொல்லி அரசாங்கம் கோபித்து பதில் சொல்லும் படியான சந்தர்ப்பமே இல்லாமல் செய்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று சொல்லி அந்தப்படி தாங்கள் கொண்டுவர இருந்த தீர்மானங்களையும், பேச இருந்த பேச்சுக்களையும் நிறுத்திக்கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றி விட்டார்கள்.

இதற்குப் பெயர் தான், நிலைமையை சமாளித்துக் கொள்ளப்பட்டதாம். காங்கிரசின் நாணயமும் அரசாங்கத்தின் நாணயமும் எப்படி இருந்த போதிலும் திலகர் சுயராஜ்ஜிய நிதி மோசடியும், பீகார் பூகம்ப நிதி வண்டவாளமும் மறைபட்டுப் போய்விட்டதாக யாரும் கருதிவிட முடியாது.

காங்கிரஸ்காரர்கள் நாணயத்தையும், அவர்களது யோக்கியதையையும், பொறுப்பற்ற தன்மையும் 10, 15 வருஷ காலமாக சர்க்கார் அறிந்திருந்தும் பொது ஜனங்களிடமிருந்து காங்கிரஸ்காரர்கள் பணம் வசூலிக்க அனுமதித்து வந்ததானது அரசாங்கத்தாரின் மீது சுமத்தித் தீர வேண்டிய குற்றமாகும்.

திலகர் நிதி மோசத்துக்கு காங்கிரஸ்காரர்கள் தண்டிக்கப்படும்படியான ஒரு நீதியான ஆட்சி இருக்குமானால், அந்த ஆட்சியில் முதலில் இதை அனுமதித்துக் கொண்டு இருந்த அரசியல் நிர்வாகஸ்தர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.

கடவுள், மோட்சம் என்பவற்றின் பேரால் பார்ப்பனர்களும், தாசர்களும், ஆண்டிகளும் மூடமக்களை மோசம் செய்து கொள்ளை அடித்து எப்படி ஒழுக்க ஈனமாக வாழ்ந்து வருகிறார்களோ அது போலவே காங்கிரஸ், தேசம், சுயராஜ்ஜியம் என்பவற்றின் பேரால் தேசாபிமானி, தேச பக்தர்கள், தேசீயவாதி என்ற பெயர்களை வைத்துக்கொண்டு பார்ப்பனர்களும், சூழ்ச்சிக்காரர்களும், காலிகளும் பொதுஜனங்களை ஏமாற்றி பணம் வசூலித்து நாட்டைப் பாழாக்குகிறார்கள்.

குடி அரசு துணைத் தலையங்கம் 09.02.1936

You may also like...