குதிரை திருட்டுப் போன பின்பு லாயம் பூட்டப்பட்டது

 

குதிரை திருட்டுப் போன பின்பு லாயம் பூட்டப்பட்டது என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது குதிரை லாயத்தை, குதிரை உள்ளே இருக்கும்போது சரியானபடி பூட்டாமலும், கவனிக்காமலும் விட்டுவிட்டு, குதிரை திருட்டுப்போன பின்பு கவனித்து லாயத்தை பூட்டி வைப்பது பைத்தியகாரத்தனம் என்று சொல்லுவார்கள்.

அதுபோலவே நமது ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்பவர்கள் காலா காலத்தில் செய்யவேண்டிய காரியங்கள் எதையும் கவனிக்காமல் விட்டு விட்டு, அக்கட்சிக்கு ஏற்படவேண்டிய கெடுதியும், குறைவும் எவ்வளவு ஏற்படவேண்டுமோ, அவ்வளவும் ஏற்பட்டபிறகு இப்போது கவலை கொண்டவர்கள் போல் காட்டிக்கொண்டு தாங்கள் யோக்கியமாய் நடந்து கொண்டதாக அன்னியருக்கு மெய்ப்பிப்பதற்கு முயற்சிப்பதில் என்ன நன்மை ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை.

கட்சித் தலைவர் பொப்பிலிராஜா அவர்கள் தன்னால் கூடியதைத் துணிந்து செய்தார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவருக்கு எவ்வித ஒத்துழைப்பும் இல்லாமல் போனதாலும், மற்ற உபதலைவர்களுக்குள் பரஸ்பர நம்பிக்கையில்லாமல் போனதாலும் பல சந்தர்ப்பங்களில் அவரது நிலை அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதாலும் அவரது முயற்சி பலனற்றதாகப் போய் விடும்படி ஆகிவிட்டதுடன் அவரது மனமும் தளர்ந்துவிட்டது.

மற்ற பல தலைவர்கள் என்பவர்களில் இன்னார் தான் இன்ன வேலை எடுத்துக்கொண்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் போய்விட்டது.

அசம்பளி எலக்ஷன் நடந்து ஒரு வருஷகாலத்துக்கு மேலாகின்றது. அவற்றில் இரண்டொரு தேர்தல்கள் ஏமாற்றப்பட்டு விட்டது என்று சொல்லப்பட்டாலும் மற்ற தேர்தல் முடிவுகள் அநேகமாய் பாமர மக்களிடம் பிரசாரமில்லாமையாலும், ஆங்காங்குள்ள பிரபலஸ்தர்கள் தலைவர்கள் என்பவர்களின் கவலை ஈனத்தாலும் அபிப்பிராய பேதத்தாலும் ஏற்பட்டவை என்பது நன்றாய் விளங்கக்கூடிய காரியங்களாகும்.

இந்தக் காரியங்களால் அசம்பளி தேர்தல் மாத்திரமல்லாமல் மற்றும் அடுத்து வந்த இரண்டொரு தேர்தல்களும் நமக்கு விரோதமாகவே முடிந்தன. இந்த முடிவின் பயனாய் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் கடுகளவு படிப்பினை கூட ஏற்பட முடியாமல் போனதோடு பயமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டுபோய் எப்படியாவது தன் தன் காரியமே பிரதானம் என்று கருதி அதையே முக்கியமாய் கவனித்துக்கொள்ள வேண்டியதான உணர்ச்சியைக் கொடுத்ததே அல்லாமல் கட்சியின் பொது நன்மையைப் பற்றியோ, லட்சியத்தைப் பற்றியோ எல்லோரும் மறந்துவிட வேண்டியதாய் விட்டது.

காலாகாலத்தில் செய்யப்படாத சிகிச்சையினால் வியாதி எப்படி முற்றிவிடக்கூடுமோ அதுபோல் அலட்சியத்திற்குத் தகுந்த அளவு பரிகாரம் சிரமமாய் போய்விட்டதுடன் அடியோடு நம்பிக்கை இழக்கவேண்டிய அளவுக்கு கொண்டு வந்து விட்டுவிடும் போல் இருக்கிறது.

அசம்பளி தேர்தல் முடிவைக் கண்டவுடன் ஜஸ்டிஸ் தலைவர்கள் ஊர் ஜனங்களை திருப்திப்படுத்த ஒரு கூட்டத்தைக் கூட்டி ஜில்லாக்கள் தோறும் மகாநாடு நடத்துவதாகவும், கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்வதாகவும் திட்டங்கள் போட்டார்கள்.

ஆனால் ஜில்லாத் தலைவர்கள் சிலர் காங்கிரசுக்காரர்களுக்கு பயந்தும், சிலர் மகாநாடு கூட்டினால் வேறு யாருக்காவது செல்வாக்கு ஏற்பட்டுவிடுமோ என்றும், தங்களது வண்டவாளங்கள் வெளிப்பட்டுவிடுமோ என்றும் பயந்து தாங்களாக எவ்வித முயற்சியும் செய்யாமல் இருந்ததோடு செய்ய முயற்சித்த மற்றவர்களுடைய முயற்சிகளையும் அடக்கி ஒடுக்கி பாழ்படுத்தி விட்டார்கள். சிலர் காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர் களுக்கும் கைக்கூலி கொடுத்து காரியம் சாதித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.

பிரசாரம் என்றாலே ஜஸ்டிஸ் கக்ஷி தலைவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கின்றதே ஒழிய ஒருவருக்காவது அதில் நம்பிக்கை இருப்பதாகத் தெரியவே இல்லை. இதன் காரணம் பிரசாரத்தின் மூலம் வேறு யாராவது பெரிய மனிதர்களாகிவிட்டால் நம்ம கதி என்னாவது என்கின்ற குறுகிய நோக்கம் சிலருக்கு இருப்பதே ஒழிய வேறில்லை.

அன்றியும் ஜஸ்டிஸ் கக்ஷித் தலைவர்கள் என்பவர்களில் சென்னைத் தலைவர்கள் சிலருக்கும், வெளி ஜில்லாத் தலைவர்கள் பலருக்கும் எவ்வித பதவியும், எந்த தேர்தல் போட்டியும் தனக்கு ஆவதாய் இருந்தால் ஆகட்டும் இல்லாவிட்டால் வேறு யாருக்காவதானாலும் தனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை என்கின்ற மனப்பான்மையே பெரிதும் இருந்து வருகிறது என்பதோடு தனக்கு ஆவதில்லை என்பது உறுதி. ஆனால் எதிரிகளுக்கு உதவி செய்யும் இழி தொழிலையும் கடைப்பிடித்து விடுகிறார்கள். இந்தத் தலைவர்களுடைய ரத்தத்தை எல்லாம் எடுத்து விட்டு புதிய சுத்த ரத்தத்தை இவர்கள் சரீரத்தில் பாய்ச்சினால் ஒழிய இப்போதைய பிரமுகர்களாலும், தலைவர்களாலும் கக்ஷிக்கு பயன் உண்டாகும் என்று சொல்லுவதற்கு மிகவும் பயப்பட வேண்டியதாகவே இருக்கிறது. இவற்றை நாம் நமது அனுபவத்தில் இருந்து எழுதுகிறோமே ஒழிய மற்றபடி கோபத்தினாலோ, ஆத்திரத்தினாலோ எழுதவில்லை.

நிற்க, 15-3-36ந் தேதி ஜஸ்டிஸ் சட்டசபை கட்சி பிரமுகர்கள் ஒன்றுகூடி ஒரு புதிய பஞ்சாயத்துக் கமிட்டியும், பிரசாரக் கமிட்டியும், பிரசார ஆபீசும் ஏற்பாடு செய்திருப்பதாய்ப் பத்திரிகைகளில் பார்த்தோம். இந்தக் கமிட்டிகளுக்கு இனி வேலை இருக்கிறதா என்பதும், வேலை இருந்தாலும் இக்கமிட்டி ஏதாவது வேலை செய்யுமா என்பதும் மிக மிக சந்தேகப்படக் கூடியதாகவே இருக்கிறது.

ஏனெனில் இதற்கு முன் இந்த மாதிரி ஏற்பாடு செய்த கமிட்டிகள் எதுவும் சரியானபடி வேலை செய்ததாகத் தெரியவில்லை என்பதோடு இவ்விஷயங்களில் எந்த தலைவருக்கு அல்லது எந்த மெம்பருக்கு உண்மையான அக்கரை இருக்கிறது என்பதும் விளங்கவில்லை.

இக்கமிட்டிகள் போட்டதாக விளம்பரம் செய்வதெல்லாம் பொது ஜனங்களுக்கு “நாங்களும் எங்களால் கூடியதைச் செய்தோம்” என்று சமாதானம் சொல்ல ஒரு சாக்குக்காக செய்யப்பட்டதாக இருக்கிறதே ஒழிய உண்மையில் இந்தக் கமிட்டிகளால் காரியம் என்ன நடைபெறக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நாம் ஒன்று கேட்கின்றோம். ஆனால் நல்ல எண்ணத்தின் மீதும், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள எந்த அங்கத்தினர்களையும் விட அக்கட்சியின் நன்மையிலும், அச்சமூகத்தின் முற்போக்கிலும் சிறிதுகூட குறைந்தவரல்லாத நிலையிலும் இருந்துகொண்டே கேட்கின்றோம்.

1930-ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டு வரை இந்த ஆறு வருஷ காலமாய் ஜஸ்டிஸ் கட்சியின் பொருட்டு பாமரமக்களிடம் ஏதாவது பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறதா என்றும், இந்த மாகாணத்தில் ஆங்கிலம் தெரியாத 4 கோடி மக்களுக்கு அரசியல் விஷயமும், கட்சி விஷயமும் புரியும்படி ஏதாவது மகாநாடோ, பத்திரிக்கைகளோ நடத்தப்பட்டிருக்கின்றனவா என்றும் கேட்கின்றோம்.

அசம்பளி தேர்தலில் கட்சியின் பேரால் ஒரு ஸ்தானம் கூட வெற்றி பெற முடியாமல் போனபிறகும் கூட தேச பாக்ஷை தினசரி பத்திரிகை ஆரம்பிக்காமலும், மகாநாடுகள் கூட்டப்படாமலும் ஒழுங்கான பிரசாரங்களுக்கு ஏற்பாடு செய்யாமலும் இருந்தால் அக்கட்சி உயிர் வாழமுடியும் என்று யார் தான் எதிர்பார்க்க முடியும்.

சென்ற வருஷத்திலேயே ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி சர்க்கார் தங்களுடைய வருஷாந்திர ரிபோர்ட்டில் ஜஸ்டிஸ்கட்சி ஒரு கட்டுப்பாடில்லாத சீர்குலைந்து போன கட்சி என்று எழுதினது யாவரும் அறிந்ததேயாகும். அதற்கு பதில் சொல்லும் முறையிலாவது யாரும் எந்தவித முயற்சியும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

இப்பொழுது இந்த 3,4 மாத காலங்களில் திருநெல்வேலி, திருச்சினாப்பள்ளி, திருப்பாப்புலியூர் (கடலூர்) ஆகிய ஜில்லாபோர்டுகளில் பார்ப்பன ஆட்சியே வெற்றி பெற்று வருவதைப் பார்க்கிறோம்.

இனி திருவண்ணாமலை, வேலூர் ஆகிய ஜில்லாக்களின் கதி எவ்வாறாகும் என்பதுபற்றி சந்தேகப்பட வேண்டிய அவசியமிருப்பதாய் தெரியவில்லை.

இதுபோலவே இனியும் பிரிக்கப்படப் போகின்ற ஜில்லா போர்டு தேர்தல்கள் விஷயமும் எப்படி ஆகும் என்று யோசிக்கவேண்டிய அவசியமிருக்காது என்றே கருதுகிறோம்.

இதன் காரணங்கள் கக்ஷித் தலைவர்கள் சரியானபடி கவலை எடுத்து வேலை செய்யவில்லை என்பதல்லாமல் கக்ஷிக் கொள்கையினை குறையென்றோ, அவர்கள் தலைமை வைத்து நடத்தின நிர்வாகத்தில் ஏற்பட்ட குற்றத்தாலென்றோ யாராவது சொல்ல முடியுமா? ஒருக்காலும் முடியாது என்பதோடு சென்னை ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரிகளின் நிர்வாகமும், சென்னை ஜஸ்டிஸ் கக்ஷி சட்டசபை நிர்வாகமும் இந்தியாவிலேயே வேறெந்த மாகாணத்திலும் நடந்திராத, நடத்த முடியாத அளவு அவ்வளவு திறமையாயும், முற்போக்காயும் நடத்தப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் இந்த நிலை ஏற்பட்டதானது பாமர மக்கள் ஆதரவில்லை என்றால் பிரசாரக் குறைவும், பாமர மக்களை லக்ஷியம் செய்யாக் குறைவும் அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.

இப்பொழுது 15336ந் தேதியில் போட்ட பஞ்சாயத்துக் கமிட்டியும், பிரசாரக் கமிட்டியும் 15335ம் வருஷத்தில் போட்டு அதற்கு ஒரு 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி வைத்து 500 ரூ செலவில் ஒரு தமிழ் தினசரி ஆரம்பித்திருந்தால் இன்றைய நிலைமை நேர்மாறாக இருந்திருக்கும். அப்படிக்கு இல்லாமல் இப்போது கமிட்டி போட்டதில் தக்க பயன் இருக்குமென்று நம்புவதற்கில்லை.

பஞ்சாயத்து கமிட்டிக்கு இனிமேல் எந்த ஜில்லாவில் போய் என்ன பஞ்சாயத்தோ சமாதானமோ செய்ய வேலை இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.

திருநெல்வேலி ஜில்லா போட்டில் “காங்கிரஸ் சார்பாய்” தலைவர் வந்ததானது காங்கிரசின் கொள்கையாலா அல்லது ஜஸ்டிஸ் கக்ஷி தலைவர்கள் என்பவர்களுக்குள் இருந்த சண்டையாலா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது.

தோழர் தளவாய் முதலியார் அவர்கள் ராஜிக்குக் கட்டுப்பட்டார். அதாவது “எனக்கும் பிரசிடெண்ட் பதவி வேண்டாம். தோழர் ஈஸ்வரன் பிள்ளைக்கும் பிரசிடெண்ட் பதவி வேண்டாம். யாராவது மூன்றாதவர் ஒருவர் இருக்கட்டும்” என்றார்.

மற்ற கட்சியார் இதை ஒப்புக் கொள்ளவில்லை. “கிடைத்தால் ஈஸ்வரன் பிள்ளைக்கு கிடைக்கட்டும், இல்லாவிட்டால் எப்படியேனும் போகட்டும்” என்று சொல்லி பைசல் நடைபெறாமல் பாழக்கினார்கள். இதில் மந்திரிகள் ஆளுக்கொரு கட்சியை சார்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

இதுபோலவே திருச்சி விஷயமும். தோழர் தேவர் அவர்களுக்கும், தோழர் நாராயணசாமி பிள்ளை அவர்களுக்கும் இருந்த அபிப்பிராய பேதமும் இதில் மந்திரிகள் ஆளுக்கொரு கட்சியை ஆதரித்த காரணமும் ஜஸ்டிஸ் கட்சி சார்பாய் தலைவர் வரமுடியாமல் போய்விட்டது. இது போலவே திருவண்ணாமலை, திருப்பாப்புலியூர் முதலிய இடங்களிலும் ஏற்பட்டன. இந்நிலையில் இனி பஞ்சாயத்து போர்டாருக்கு என்ன வேலை இருக்கிறது என்பது விளங்கவில்லை.

பிரசார விஷயத்திலும் காங்கிரசுக்காரர்கள் லீ அணா வீதம் 3 தினசரியும், லி அணா வீதம் 2 தினசரியும் போட்டு வெளுக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சிக்கு பத்திரிகை எங்கே இருக்கிறது? பத்திரிகை இல்லாத வெறும் பிரசாரம் என்ன பலனை அளிக்கும் என்று யோசித்துப் பார்த்தால் நாம் வெற்றி பெறாததற்கு உள்ள காரணம் வெளியாகிவிடும்.

வட ஆற்காடு ஜில்லாவில் ஜஸ்டிஸ் கட்சி பிரசாரத்தைப் பற்றி எழுதிய செய்திகளை ஒரு தினசரி பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லையாம். அதற்கு மாறாக தப்பு செய்திகளை பிரசுரித்தனவாம். இதைப்பற்றி யார் கவனிக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் அறிந்தே ஒரு கால் அணா தினசரி பிரசுரிக்க நாம் எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு அரசாங்கத்தை டிக்ளரேஷன் கேட்ட காலத்தில் பெருவாரியான ஜாமீன் தொகை கட்ட வேண்டுமென்று உத்திரவு செய்துவிட்டார்கள்.

இதை கவனித்து ஒரு ஏற்பாடு செய்ய கட்சியில் நாதி இல்லாமல் போய்விட்டது. குடி அரசுக்கும் 2000 ரூ ஜாமீன் வாங்கி வைத்திருக் கிறார்கள். அதையும் திருப்பிக் கொடுக்க அரசாங்கத்தார் மறுத்து விட்டார்கள். இதைப்பற்றி கேட்பதற்கும் நாதி இல்லாமல் போய் விட்டது.

மாகாணத்தலைவர்கள் நிலை இப்படி என்றால் ஜில்லாத் தலைவர்கள் நிலை சொல்லவே வேண்டியதில்லாத நிலையில் இருக்கிறது.

எந்த ஜில்லா தலைவர்களும் தனக்கு ஏதாவது சொந்தத்தில் கிடைக்குமா என்று பார்க்கிறார்களே ஒழிய கட்சியின் பேரால் வெற்றி என்பதை வேப்பங்காய் போலவே கருதுகிறார்கள். “தனக்கில்லாவிட்டால் அது எப்படியேனும் போகட்டும் என்கிறார்கள்”. இம்மாதிரி கவலையுள்ள தலைவர்களைக் கொண்ட கட்சி வெற்றி பெறாதது அதிசயமாகுமா என்று கேட்கின்றோம்.

இந்த 3 வருஷகாலமாக நாம் சொந்த கைப்பொறுப்பு செலவுடனும் சிறைவாசம், அபராதம், பறிமுதல், ஜாமீன் கட்டுதல் முதலிய சர்க்கார் தொல்லைகளுடனும் செய்து வந்த பிரசாரத்தின் பலன்களும் கூட தலைவர்களின் இம்மாதிரி நடவடிக்கைகளால் சிறிது கூட பயன்படாமல் போய் விட்டதை நினைக்கும் போது ஆத்திரம் வராமல் இருக்க முடியவில்லை.

என்றாலும் இனியாவது எந்தத் தீர்மானமும் காகிதத் தீர்மானங்களாய் இல்லாமல் காரிய தீர்மானமாக இருக்கும்படி ஆங்காங்குள்ள முக்கியஸ்தர்களின் பிணக்குகளை சமாதானம் செய்தல், பிரசாரம் செய்தல், பத்திரிகைகள் நடத்துதல் ஆகிய மூன்றுக்கும் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்யவேண்டு மென்று கட்சித் தலைவர்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.

குடி அரசு தலையங்கம் 22.03.1936

 

You may also like...