தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் இலங்கை மந்திரிக்கு உபசாரம்

 

மந்திரி பதில்

தலைவர் அவர்களே! கொழும்பு மந்திரியார் கனம் தோழர் பெரி சுந்திரம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இலங்கை நமக்கு ஒரு நல்ல படிப்பினையான நாடாகும்.

நாம் இன்று எதற்கு ஆகப் பாடுபடுகின்றோமோ அதே காரியத்துக்கு ஆக பழங் காலத்திலிருந்தே பெரியதொரு முயற்சி நடத்திருப்பதாக இலங்கை சம்மந்தமான புராணம் (ராமாயணம்) கூறுகிறது.

அப் புராணம் எவ்வளவுதான் கற்பனையாக இருந்தாலும் பார்ப்பனர் தொல்லையையும் அதோடு தமிழ் மக்கள் போர் செய்ததையும், அதில் பார்ப்பனர்கள் கையாண்ட சூக்ஷியையும் நன்றாய் விளக்குகிறது.

இலங்கை ” சரித்திரம்” தமிழ் மக்களின் பெருமைக்கும் சிறுமைக்கும் உதாரணமாகத் திகழும் கதையென்றே சொல்லவேண்டும்.

தமிழ் மக்களில் இராவணன் போன்ற சுத்த சுயமரியாதை வீரர்கள் இருந்தார்கள் என்பதையும், விபீஷணன் போன்ற துரோகிகள் இருந்து சகோதரத் துரோகம் செய்து பயனடைந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

இக்கதையை நாம் வெறுத்துவிட முடியாது. ஏனெனில் நம் தமிழ் மக்கள் இன்றும் அதுபோலவேதான் பல வீரர்களையும், சில விபூஷணர் களையும் கொண்ட சமூகமாய் இருக்கிறது.

மற்றும் ராமாயணத்தில் தமிழ் மக்களை வானரங்களாகக் கற்பிக்கப் பட்டியிருக்கிறது ஒருபுறமிருந்தாலும் இன்றும் தமிழ் மக்களில் அனேகர் புராண வானரங்கள் போலவே எதிரிக்கு மூட்டை சுமக்கும் ஈன தன்மையிலும் இழி தன்மையிலும் ஈடுபட்டிருக்கிறதை பார்க்கிறோம்.

அதில் ஆரியர் வெற்றிக்கு அவர்கள் செய்த சூக்ஷிகளும், விஷமங் களும், அக்கிரமங்களும் இன்றும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே இருந்து வருகிறது. அம்முறையையேதான் பார்ப்பனர்கள் இன்றும் கையாளுகிறார்கள். தமிழ் மக்களின் நிலையும் ராமாயணக் கதைபோல் தான் இருந்து வருகின்றது.

இன்றும் நம் தமிழ் மக்களில் பார்ப்பனர்களின் சூஷிகளையும், தொல்லைகளையும் அறிந்து அதிலிருந்து விடுபட பாடுபடும் மக்களிலேயே அனேகம்பேர் ராமாயணக் கதையை புண்ணிய காலக்ஷேபமாகவும், மோக்ஷ சாம்ராஜ்யத்துக்கு வழிகாட்டியாகவும் கருதி மதிக்கிறவர்களும், பூஜிக்கிறவர்களும் உண்டு.

நம் தமிழ்மக்கள் உத்தியோகம் பெறுவதற்கு ஆக மாத்திரம் பார்ப்பனர்களை வெறுப்பார்கள்; இழிவாய் கருதி வைவார்கள்.

ஆனால் மோக்ஷம் பெறுவதற்கு என்றாலோ பார்ப்பனர்களை குல குருவாய், பூதேவர்களாய் மதித்து அவர்கள் காலலம்பின தண்ணீரை புண்ணியத் தீர்த்தமாய் அருந்துவார்கள். இப்படிப்பட்ட சமூகத்தை பார்ப்பனர்கள் வஞ்சிப்பதிலோ ஆதிக்கம் செலுத்துவதிலோ அதிசயம் இருக்க முடியுமா?

ஆகவே நமக்கும் நம்மெதிரிகளுக்கும் பயன்படதக்க நல்ல ஒரு படிப்பினைக்கு இலங்கை நகரம் மிகவும் பயன்படத்தக்கது என்பதே எனதபிப்பிராயம்.

மற்றபடி தோழர் பெரி சுந்திரம் அவர்களை சுமார் 15, 16 வருஷமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். 1919ம் வருஷத்தில் சென்னை மாகாண சங்க மகாநாட்டில் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களும், தோழர் விஜயராகவ ஆச்சாரியார் அவர்களும், நானும் இந்திய தொழிலாளர் நிலைமையை அறிந்து அவர்களுக்கு வேண்டியது செய்வதற்கு ஆக என்று நியமிக்கப் பட்டபோதும் கனம் பெரி சுந்திரம் அவர்களுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினதும், அவர் லங்கைக்கு வந்தால் வேண்டிய உதவி செய்வதாக தெரிவித்திருந்ததும் எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆனால் அவருக்கு ஞாபக மிருக்குமோ என்பது சந்தேகம். (பெரி சுந்திரம் நன்றாய் ஞாபகமிருக்கிறது என்றார்) மற்றும் நான் ரஷியாவில் இருந்து திரும்புகையில் கொளும்பில் வந்தவுடன் கொழும்பு பிரமுகர்கள் நடத்திய பாராட்டு விருந்தொன்றுக்கு மந்திரி பெரி சுந்திரம் அவர்கள் தலைமை வகித்து நமது கொள்கைகள் முழுவதையும் ஆதரித்துப் பேசி கவுரவித்திருக்கிறார். மற்றும் இந்தியாவில் இருந்து கொளும்புக்குச் செல்லும் பிரமுகர்களுக்கு அங்கு வேண்டிய உதவி செய்து வருவதோடு சிறப்பாக இந்திய தொழிலாளிகள் விஷயத்தில் வெகுகாலமாகவே பாடுபட்டு வருகிறார்.

தொழிலாளர் சார்பாகவே லங்கை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிலோன் அரசாங்கத்தில் தொழிலாளர்கள் மந்திரியாக வீற்றிருக்கிறார்.

தோழர் பெரி சுந்திரம் அவர்கள் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு மந்திரியாகி தொழிலாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உழைக்கும்படியான சந்தர்ப்பம் ஏற்பட வேண்டும் என்றும், அவர் முழு ஆயுளும் சுகஜீவியாய் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.

குறிப்பு: 26.12.1935 ஆம் நாள் கொழும்பு அமைச்சர் தோழர் பெரி சுந்திரம் அவர்களுக்கு சென்னை தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தாரால் நடத்தப்பெற்ற வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.

குடி அரசு சொற்பொழிவு 05.01.1936

You may also like...