ஜில்லா போர்டும் பொப்பிலியும் சென்னை அரசாங்கமும்

சில ஜில்லா போர்டுகளை ஸ்தல ஸ்தாபன மந்திரி இரண்டாகப் பிரித்ததாலும், மற்றும் சிலவற்றை இரண்டாகப் பிரிக்க ஏற்பாடு செய்து வருவதாலும் காங்கிரஸ்காரர்கள் 2, 3 ஜில்லா போர்டு தேர்தல்களில் தங்களுக்கு வெற்றி ஏற்பட்டது என்கின்ற பெருமை எங்கு வீணாய்ப் போய் விடுமோ என்கின்ற பயத்தால் பார்ப்பனர்கள் எல்லோரும் பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாமுமே பொப்பிலி ராஜா மீது வீண் பழி கூறி பெரியதொரு கூப்பாடுகள் போட்டு மாய அழுகை அழுதன.

ஜஸ்டிஸ் மந்திரிகள் மீது எவ்விதக்குற்றம் கண்டு பிடிக்கலாம் என்று காத்திருந்த வெள்ளைக்காரர்களும் அவர்களது மெயில் பத்திரிகையுங்கூட இக்கூப்பாடுகளுக்கும் அழுகைக்கும் ஒத்து ஊதினார்கள்.

பொது ஜனங்களும் இந்த விஷமப் பிரசாரத்தைக் கண்டு உண்மை உணரமுடியாமல் திண்டாட வேண்டியவர்களாகி விட்டார்கள்.

தாலூகா போர்டுகள் கலைக்கப்பட்ட காலத்திலேயே ஜில்லா போர்டுகள் பிரிக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதும், சென்ற வருஷத்திலேயே இரண்டொரு ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டதும் யாரும் அறியாததல்ல. அந்த அவசியத்தையும், முறையையும் கருதியே இனியும் சில ஜில்லா போர்டுகளை பிரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதில் பொப்பிலிராஜா மீது என்ன குற்றம் என்பது விளங்கவில்லை.

பார்ப்பனர்கள் சொல்லும் குற்றம் என்னவென்றால் தன் கட்சிக்கு அனுகூலமாக ஜில்லா போர்டுகளை மந்திரி பிரிக்கிறார் என்பதேயாகும். அப்படியே இருந்தாலும் தன் கட்சி என்பது என்ன? பொப்பிலி ராஜாவின் ஜமீனின் நன்மையைக் கொண்ட கட்சியா? அல்லது பொப்பிலியின் தனது சுயநலத்தைக் கொண்ட கட்சியா? என்பதை முதலில் அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொப்பிலி ராஜா ஒரு பொது ஜனக் கட்சித்தலைவர். அக்கட்சிக்கு பொதுஜன நன்மைக்கு அனுகூலமானவை என்று அக்கட்சியாரால் கருதப்பட்ட கொள்கைகள் சில உண்டு. அக்கொள்கைகளை நிறைவேற்றவும், பாதுகாக்கவும் வாக்குக் கொடுத்து ஓட்டுப்பெற்று அந்த இலாக்கா நிர்வாகத்தைக் கைப்பற்றி நிர்வாகம் செலுத்துகிறார். இந்நிலையில் அவர் அக்கட்சியின் நன்மையைக் கருதாமல் இருக்கவேண்டும் என்று எந்த மூடன்தான் மதிக்க முடியும்.

சர். சி.பி. ராமசாமி அய்யர் போலீஸ் மெம்பரானார், லா மெம்பரானார். அவர் கட்சிக்கொள்கை இல்லாத அதிகாரத்தில் இருந்தவர். போலீசில் 100க்கு 90க்கு மேல் பார்ப்பன ஆதிக்கமாக்கினார். சட்ட இலாக்காவில் 100க்கு 99க்கு மேல் அக்கிரகாரமாகவே ஆக்கினார். அதைப்பற்றி யாரும் பேசுவாரில்லை. கடைசியாக அவரது ஆதிக்கத்தை ஒழிக்கா விட்டால் ராஜீனாமா கொடுத்து விடுவேன் என்று பனகால் ராஜா சென்னை சர்க்காருக்கும், இந்திய சர்க்காருக்கும் இறுதிக் கடிதம் கொடுத்தார்.

சென்னை கவர்மெண்டு தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். பிறகு சென்னை அரசாங்கம் ஒரு அளவு வழிக்கு வந்தது. பார்ப்பனர்கள் கூப்பாடுகளை கொஞ்ச நாள் குப்பைத் தொட்டியில் போட்டு வந்தது.

இப்போதும் பொப்பிலி ராஜா அதுபோலவே துணிவாரானால் பார்ப்பனர் கூப்பாடுகளின் பயன்கள் குப்பைத்தொட்டிக்குப் போகும்படி செய்யலாம். அப்படிப்பட்ட தைரியம் நமக்கு இல்லை என்று தெரிந்தால் பார்ப்பனர் மாத்திரமல்ல சர்க்கார் மாத்திரமல்ல, தெருவில் பிச்சை யெடுக்கும் கண்ணற்ற கிழவி கூட நம்மை மிரட்டத்தான் செய்வாள்.

இந்தச் சிறிய கூப்பாட்டை சட்டை செய்து சென்னை அரசாங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டதானது ஜஸ்டிஸ் கட்சிக்கு அவமானகரமான காரியம் என்றே சொல்லுவோம். அதில் எவ்வளவு தான் நியாயமிருக்கிறதாகச் சொன்னாலும் பார்ப்பனர் கூப்பாட்டை மதித்து சர்க்கார் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவாவது அவ்வறிக்கையால் ஏற்பட்டுவிட்டது.

அரசாங்கத்தார் எதற்கு ஆக இவ் வறிக்கையை வெளியிட்டார்கள் என்பது ஒரு சூத்திரமாகத்தான் இருக்கிறது.

இதிலிருந்து ஜஸ்டிஸ் மந்திரிகள் ராஜினாமா செய்து காட்டவேண்டிய ஒரு நல்ல சந்தர்ப்பம் இழந்துவிடப்பட்டது என்றுதான் கருதுகிறோம்.

அரசாங்கத்தாரின் காற்று காங்கிரஸ் பக்கம் அடிக்க ஆரம்பித்துவிட்டது என்று தெரிந்தால் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் உடனே ராஜினாமா செய்துவிட வேண்டியதுதான் சுயமரியாதையாகும். ஏனெனில் அபிப்பிராய பேதங்களை நாம் மதிக்கத் தயாராய் இருக்கிறோம். எதிரிகளுக்கு இடம் கொடுக்கத்தக்க அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுவிட்டதென்றால் நமக்கு அங்கு என்ன வேலை? இதனால் மற்றவர்கள் நிலை எப்படி ஆனாலும் பொப்பிலி ராஜாவைப் பொருத்தவரை க்கு 5000 அல்லது 6000 ரூ மீதியாகும் என்பது நமது அபிப்பிராயம். ஜஸ்டிஸ் கட்சியானது எதிரிகளின் எவ்வளவு விஷமப் பிரசாரத்தைப் பொறுத்துக் கொண்டு பாமர மக்களின் முட்டாள் தனத்தால் ஏற்பட்ட எவ்வளவு தொல்லைகளை சகித்துக் கொண்டு இந்த சென்னை அரசாங்கத்துக்கு உதவி செய்து வந்திருக்கிறது என்பதை ஒருவன் யோசித்துப் பார்த்தால் அதற்கு ஆக என்றென்றும் மறவாத நன்றி காட்டித்தான் தீரவேண்டும் என்று யாரும் சொல்லுவார்கள்.

அப்படிக்கில்லாமல் குதிரை கீழே தள்ளினதோடு நில்லாமல் குழியையும் பறித்ததாம் என்று சொல்லும்படி நடந்து கொள்வது மிகவும் கஷ்டமான காரியம் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

இதற்கு முன்னும் ஒருதடவை அதாவது தோழர்கள் சுப்பராயன், முத்தையா முதலியார் ஆகியவர்கள் மந்திரிகளாய் இருந்த காலத்திலும் கடைசி காலத்தில் அரசாங்கம் அவர்களுக்கு அனுகூலமாயில்லாமல் இதுபோலவே காரியங்கள் செய்து பொது ஜனங்கள் அரசாங்கத்தில் மந்திரிகளுக்கு செல்வாக்கில்லை என்று நினைக்கும்படி செய்தது யாருக்கும் ஞாபகமிருக்கும். கடைசியாக டாக்டர் சுப்பராயன் அவர்களும் முத்தைய முதலியார் அவர்களும் அரசாங்கத்தை சிறிது மிரட்டியவுடன் அப்படி ஒன்றுமில்லை என்று ஒரு அறிக்கை விடா விட்டாலும் அரசாங்கத் தலைவர் கடித மூலமாக எழுதிக் கொடுத்து இதை யாருக்கு வேண்டுமானாலும் காட்டிக் கொள்ளலாம் என்று அனுமதித்தார். அதுபோலவே இப்போது எங்கு பார்த்தாலும் அரசாங்கம் காங்கிரசை ஆதரிக்கிறது ஜஸ்டிஸ் கட்சியை அலக்ஷியப் படுத்துகிறது என்ற பேச்சே பெரும் பேச்சாய் இருக்கிறது.

ஆதலால் மந்திரிகள் இதை கவனித்து இதற்கு தக்கது செய்து கொண்டு மறுவேலை பார்க்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 19.01.1936

You may also like...