பாண்டியன், இராமசாமி அறிக்கை

 

சென்ற வாரம் குடி அரசில் வெளியிடப்பட்ட “பாண்டியன், ராமசாமி” அறிக்கையைப்பற்றி இதுவரை சுமார் 100 தோழர்களிடம் இருந்து ஆதரவுக் கடிதங்கள் வந்திருக்கின்றன.

இன்னமும் பல இடங்களில் இருந்து ஆமோதித்து ஆதரவளிப்பதாகக் கடிதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஆகவே பிப்ரவரி மத்தியில் அல்லது பிற்பகுதி வாரங்களில் ஒரு நாள் குறிப்பிட்டு திருச்சியிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்.

பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர்களில் மிகுந்த தியாக புத்தியுடன் உழைத்து வரும் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இவ்வியக்கத்துக்கு ஆக தனது சம்பளம் 4500 ரூ. தவிர மேல்கொண்டு 1க்கு 4000, 5000 ரூபாய் வீதம் செலவு செய்கிறார் என்பதையும், சிற்சில சமயங்களில் அவர் சென்னையில் இருந்துகொண்டே இரண்டு நாள் மூன்று நாள் கூட தனது மனைவியாரையும், குழந்தைகளையும் பார்க்கக்கூட சௌகரியமில்லாமல் இயக்கத்துக்கு ஆக வேலை செய்கிறார்கள் என்பதையும் நேரிலேயே அறிவோம்.

இவை இயக்கத்தில் அவருக்குள்ள ஊக்கத்தைக் காட்டுகின்றன என்று மாத்திரம் சொல்லலாமே தவிர இவற்றால் இயக்கத்துக்கு தமிழ் நாட்டைப் பொறுத்தவரையிலும் ஏதாவது ஒரு பயனாவது ஏற்பட்டதாகச் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறோம். இதற்கு மற்ற யார் காரணஸ்தர் களாக இருந்தாலும் தமிழ் நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு வரவர மதிப்பு குறைகின்றது என்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.

நாம் இதற்கு முன் பல தடவை எழுதி இருப்பது போல் நம் எதிரிகளாகிய பார்ப்பனர்கள் தங்கள் சமூக நலன் என்பது ஒன்றில் மாத்திரம் எந்தக் காலத்திலும் அலட்சியமில்லாமலும் நாணையக் குறைவில்லாமலும், இருந்தாலும் மற்ற எல்லாக் காரியங்களிலும் சிறிதுகூட நாணைய மில்லாமலும் எவ்வித கொள்கை இல்லாமலும் சூழ்ச்சிமேல் சூழ்ச்சி செய்த வண்ணமாய் நடந்துகொண்டு இருந்தும் அவர்களது முயற்சியானது சுமார் 7,8 தினசரி பத்திரிகைகளும் 20, 30 வார பத்திரிகைகளிலும் தங்கள் ஆதீனத்தில் வைத்துக்கொண்டு ஜில்லாக்கள் தோறும் வெறும் காலித்தன முள்ளவர்களாகப் பார்த்து 20 பேர் 30 பேர் வீதம் பிரசாரகர்களாகவும், தொண்டர்களாகவும் வைத்துக் கொண்டிருப்பதோடுஆண்டு1க்கு எப்படியாவது லட்ச ரூபாய்க்கு குறையாமல் பாமர ஜனங்களிடமிருந்து பல வழிகளிலும் பொருள் பறித்து வேலையில்லாத தங்கள் இன வாலிபர்களுக்கும், இந்த பத்திரிகைக்காரர்களுக்கும், தொண்டர்களுக்கும் உதவி வருவதுடன் பொதுஜனங்களின் அபிப்பிராயம் என்பதை ஒரு ஆளே உற்பத்தி செய்து அதைத் தன் இஷ்டப்படி நடத்தத் தகுந்த செல்வாக்கையும் பெற்று வருகிறார்கள்.

நமது தலைவர்களுக்கோ, மக்களுக்கோ இவ்வித கவலையோ, சக்தியோ ஏதாவது இருக்கின்றதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பதைத் தவிர வேறு என்ன பதில் கிடைக்கும் என்று கேட்கின்றோம்.

ஜஸ்டிஸ், திராவிடன் என்ற பேப்பர்கள் அவை ஆரம்பமான காலம் முதல் கொண்டு இதுவரை சுமார் 5, 6 லட்ச ரூபாய் சாப்பிட்டிருக்கும் என்று சொன்னால் எவரும் தைரியமாய் மறுக்க முடியாது. மற்றும்

எழவுக்கு போனவள் தாலி அறுத்தாள் என்கின்ற பழமொழிப்படி திராவிடனை ஆதரிக்கப் போன பாவத்துக்கு ஆக கையிலிருந்து 10000, 20000 என்பதாக ரூபாய்கள் இழந்து மானங்கெட்டு வெளியில் வந்தவர்களும் உண்டு. இப்படியெல்லாம் இருந்தும் இன்று கட்சிக்கு என்று சொல்லும் படியான அளவிலாவது வெளியாகும் தமிழ் தினசரி பத்திரிக்கை இல்லை என்பது மாத்திரமல்லாமல் தலைவர்கள் பேரில் வெறுப்பில்லாமல் பிரசாரம் செய்யும் ஒரு தொண்டராவது பிரசாரகராவது தமிழ் நாடெங்கிலும் கிடையாது என்றும் சொல்லவேண்டி இருக்கிறதற்கு வருந்துகிறோம்.

ஆனால் அக்கட்சியின்பேரால் 3 மந்திரிகள் 13500 ரூபாயும் 3 செக்கரட்டரிகள் 1500 ரூபாயும் பிரசிடெண்ட் டிப்டி பிரசிடெண்டுகள் 3000 ரூபாயும் பெறுகின்றார்கள். பொப்பிலி ராஜா ஒருவர் தவிர மற்றவர்கள் வாங்கும் பணத்துக்கு கணக்கு கேட்க எவருக்கும் உரிமை இல்லை. அவர்கள் கட்சிக்காக செய்யும் காரியம் என்ன என்பதையும் தெரிவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என்பதோடு அல்லாமல் தெரியும்படியாகவும் இல்லை.

இதைத்தவிர கட்சி செல்வாக்கால் கவர்னர் வேலை சட்டமெம்பர் வேலை ஹோம் மெம்பர் வேலை ஆகிய 10000 ரூ. 5000 ரூ. சம்பளமுள்ள வேலைகள் பெற்றவர்கள் தாங்கள் ஆகாயத்தில் பறக்கிறோமா பூமியில் நடக்கிறோமா என்பது கூட உணரமுடியாத உச்ச நிலையில் இருக்கிறார்கள். மற்றபடி கட்சியின் பேரால் பதவி, பட்டம், பெரு உத்தியோகம் பெற்றவர் களிலும் 100க்கு 90 பேர்கள் ஜஸ்டிஸ், விடுதலை ஆகிய பத்திரிகைகளுக்கு 1 சந்தாவாவது செலுத்தி இருப்பார்களா? அல்லது படித்தாவது வருகிறார்களா? என்பதும் தைரியமாய்ச் சொல்ல முடியாததாய் இருக்கிறது.

ஆகவே இப்படிப்பட்ட நிலைகள்தான் நமது கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லலாமே தவிர எதிரிகள் பலத்தாலோ, நமது கொள்கைகளின் மேன்மை இல்லை என்றோ, இன்று நாம் பழி கூறப்படுகின்றோம் என்றோ, தேர்தல்களில் வெற்றி பெறாமல் போகின்றோம் என்றோ சிறிதும் கூறமுடியாது.

இப்படிப்பட்ட தலைவர்களையும், கட்சி பிரமுகர்களையும், பிரதிநிதிகளையும் கொண்ட ஜனங்களும், சமூகமோ ஒரு வகுப்போ கஷ்டப்பட வேண்டியதுதான் என்பதில் எவருக்கும் ஆட்சேபணைபட செய்ய இட மில்லை என்பதோடு இப்படிப்பட்ட கட்சி ஒரு தடவை அழிந்து புனருத்தாரணம் ஆகவேண்டும் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய இதை ரிப்பேர் செய்ய முடியும் என்பது மிக கஷ்டமான காரியமாய் இருக்கிறது.

ஏனெனில் அசெம்பிளி எலக்ஷனில் எதிரிகளின் சூழ்ச்சிகளையும், அவர்கள் பணம் சம்பாதித்த முறைகளையும் பிரசாரத் தன்மைகளையும், நமக்குள்ளாகவே நடந்த மோசங்களையும் பத்திரிக்கைகளின் வேகங்களையும் விஷமங்களையும் நேரில் பார்த்தும் அதன் பயனாய் நமது பிரமுகர்கள் தோழர்கள் சர். ஷண்முகம், ஏ. ராமசாமி முதலியார், பி. வரத ராஜுலு நாயுடு முதலியவர்களே வெற்றிபெற முடியாமல் போனதையும் பார்த்த பிறகும் கூட நமக்கு சிறிதும் சொரணை ஏற்படாமலும், புதிதாக எவ்வித முயற்சியும் செய்யாமலும் இருந்தால் நம் தலைவர்களுக்கோ பிரமுகர்களுக்கோ, கட்சியின் பேரால் பலன்கள் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கிற மக்களுக்கோ, கவலையோ உண்மையான முயற்சியோ இருப்பதாக எப்படி சொல்லக்கூடும்?

5000, 6000 செலவு செய்து நடத்தும் பத்திரிகையாகிய ஜஸ்டிஸ்க்கு சென்னை மாகாண 4லீ கோடி மக்களில் ஒரு 1000 பேர்கள் கூட கவலையுடன் படிப்பவர்கள் இல்லை என்றால், எதிரிகள் கையில் 5, 6 தமிழ் தினசரி இருக்கும்போது நமக்கு ஒரு தமிழ் தினசரி கூட இல்லை என்றால், அதுவும் தமிழ்நாட்டு மக்கள் கெஞ்சி கெஞ்சி தீர்மானங்கள் ரூபமாகக் கேட்டும் மதிக்கப்படவில்லை என்றால், எப்படித்தான் இந்தத் தலைவர்கள் நிர்வாகத் திறமை உடையவர்கள் என்றோ உண்மையான கவலை உடையவர்கள் என்றோ சொல்லிக் கொள்ள முடியும் என்று கேட்கின்றோம்.

இவை எல்லாம் மிக சாதாரண காரணங்களாகும். இனி முக்கியமான காரணங்கள் எவ்வளவு உண்டு என்பது சென்னை தலைவர்களோ, மந்திரிமார்களோ, அவர்களது காரியதரிசிகளோ தங்களுக்குத் தாங்களே அறியாததல்ல.

பிரசாரத்தில் லட்சியமில்லாத தலைவர்களின் ஊக்கத்தின் நாணையத்தைப் பற்றி சந்தேகிக்காமல் இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

நாம் எந்தத் தனிப்பட்ட மனிதனுடைய பெருமையைப் பிரசாரம் செய்ய ஆசைப்படவில்லை. நம் கட்சிக்கொள்கை இன்னது, அது செய்தது இன்னது, செய்ய வேண்டியது இன்னது, நமது எதிரிகளின் யோக்கியதை சூழ்ச்சிகள் இன்னது, அவர்கள் செய்தது இன்னது, அவர்கள் செய்யப் போவது இன்னது என்பனவாகிய இந்தக் காரியங்களைப் பிரசாரம் செய்ய நமக்கு இஷ்டமில்லையானால், அல்லது நம்மால் செய்ய முடியவில்லை யானால் நமது கட்சி வேறு எதற்காக தான் உயிர் வாழவேண்டும்? அல்லது வேறு என்னதான் சாதித்துவிட முடியும்? என்பவைகளைப்பற்றி நம் போன்றவர்களுக்கு அதுவும் பார்ப்பனரல்லாதார் மக்களுக்காகவே உழைத்து பல கஷ்டம் நஷ்டம் ஆகியவைகளையே அடைந்து கொண்டும் இக் கட்சியின் பயனாய் சொந்தத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி பெறும்படியான பயனும் அடையாமல் தங்களது சொந்த செல்வாக்கையும் இழந்து வருபவர்களுக்கு உரிமை இல்லையா? என்று கேட்கின்றோம்.

ஆகையால் எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும், நம் பாமர மக்களை விடுவித்து அவர்களை சுதந்திரமுடையவர்களாகவும், சுயமரியாதையுடையவர்களாகவும் ஆக்க வேண்டுமானால் இந்த மந்திரி களையும், ஆங்காங்கு உள்ள இப்போதிய தலைவர்களையும் நம்பிக்கொண்டு இருந்தால் வெற்றிபெற முடியுமா என்கின்ற சந்தேகம் நமக்கு நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது. இப்படித் தோன்றுவது ஒரு சமயம் நம்முடைய பலக்குறைவாய் இருந்தாலும் இருக்கலாம். என்றாலும் நமக்குத் தோன்றுகிற உண்மையை கூறுகிறோம் என்ற விஷயத்தில் யாரும் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

கட்சியின் தலைவர் என்கிற முறையில் முதல் மந்திரி பொப்பிலி ராஜா அவர்கள் மீது குற்றமோ, குறையோ கூறுவதாக யாரும் கருதிவிட வேண்டியதில்லை.

ஏனெனில் அவரைப் பொறுத்தவரையிலும் தாராளமாக பணம் செலவு செய்கிறார்.

கட்சிக்குத் தலைவர் என்கின்ற முறையில் கட்சி நன்மைக்கு சட்டப்படி ஒருவர் எவ்வளவு செய்யக்கூடுமோ அவ்வளவும் செய்து வருகிறார் என்றும் சொல்லலாம்.

ஆனால் தமிழ் நாடு, கேரள நாடு, கர்நாடக நாடு ஆகியவற்றின் உண்மை நிலையை தெரிந்து கொள்ளவோ ஆங்காங்குள்ள யோக்கியர் யார், அயோக்கியர் யார் என்பதையும், கட்சிக்கொள்கைக்கு பாடுபடுபவர்கள் யார் தங்கள் சுயநலத்துக்காகப் பாடுபடுபவர்கள் யார் என்பதையும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதோடு தெரிந்து கொள்ளத்தகுந்த சரியான சாதனமும் அவரிடம் ஏதும் இல்லை என்பதோடு, தமிழ் நாட்டில் ஆங்காங்குள்ள உண்மையான பிரமுகர்களை சரியானபடி அனுசரிக்க வில்லை என்பதும் நமது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

தவிரவும், சர்க்கார் நம் கட்சி விஷயமாய் நடந்துகொண்ட சில சந்தர்ப்பங்களையும் சம்பவங்களையும் உத்தேசித்து கொஞ்சநாளைக்கு முன்பு பொப்பிலி ராஜா அவர்கள் ராஜிநாமா கொடுத்து இருக்கவேண்டும் என்பதும் நமது தாழ்மையான அபிப்பிராயம்.

இதைப்பற்றி ஏன் இவ்வளவு சொல்லுகிறோம் என்றால் இன்றைய நிலையில் பார்ப்பனரல்லாத சமூக மக்களுக்கு இப்படிப்பட்ட தாராள மனப்பாண்மையுடையவரும் தன்நலத்தையே பிரதானமாய்க் கருதாத வருமான தலைவர் கிடைப்பது அருமை என்கின்ற காரணத்தாலேயே அல்லாமல் மற்றொன்றும் அல்ல.

ஆதலால் இப்போதைய நிலைமையில் தோழர்கள் பாண்டியன், ராமசாமி ஆகியவர்களால் அனுப்பப்பட்ட சுற்று அறிக்கை விண்ணப்பமும் அதை ஆதரித்து சுமார் 100 தோழர்கள் எழுதிய கடிதங்களும், அவற்றில் காணும் பெரும்பான்மை யோசனைகளும் தமிழ் நாட்டின் சார்பாய் மனப்பூர்வமாக வரவேற்கிறோம் என்பதோடு அவற்றில் கண்டபடி இம் மாதத்திலேயே ஒரு கூட்டம் கூடி நிர்தாக்ஷண்யமாய் அவரவர்கள் அபிப்பி ராயங்களைக் கூசாது மனம் விட்டுப் பேசி ஏதாவதொரு முடிவுக்கு வந்து தக்கது செய்ய வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமுமான காரியமாகும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு தலையங்கம் 02.02.1936

 

You may also like...