ரயில் பிரயாணமும் மோட்டார் பிரயாணமும்

மோட்டார் பஸ்கள் எங்கும் தாராளமாய் ஏற்பட்டுவிட்டதின் பயனாக ரயிலில் பிரயாணம் செய்யும் மக்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தென்னிந்திய ரயில்வேக் கம்பெனியாருக்கு வரும்படி நாளுக்கு நாள் குறைந்தும் போகிறது.

இதற்காக வேண்டி மோட்டார் பஸ் நடத்துகிறவர்களுக்கு எவ்வளவு தொல்லையும், நஷ்டமும் ஏற்படுத்தலாமோ, அவ்வளவு தொல்லையும், நஷ்டமும் பலவித தந்திரங்களினாலும் யார் யாரோ செய்து பார்த்தும் மோட்டார் பஸ் பெருக்கத்தை தடைப்படுத்த முடியவில்லை.

பஸ்காரர் போலீஸ் இலாக்காவினால் அடையும் தொல்லைகளை அளவிடவே முடியாது. ஜில்லா போர்டார் தொல்லையோ சொல்ல வேண்டியதில்லை. சர்க்கார் சட்டப்படி ஜில்லா போர்டுக்கும், கவர்ன்மெண்டுக்கும் செலுத்தும் வரிக்கு சமமான அளவு போலீஸ் அதிகாரிகளுக்கும், பிரசிடெண்டுகளுக்கும், கான்ஸ்டேபிள்களுக்கும் பலவழிகளிலும் செலுத்த வேண்டியிருக்கிறது.

இது தவிர போலீஸ் அதிகாரிகளையும், கான்ஸ்டேபிள்களையும் இவர்களது சொந்தக்காரர்களையும் வாடகை இல்லாமல் பிரயாணம் செய்ய அனுமதிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு கஷ்ட நஷ்டம் அனுபவித்தாலும் கூட சில சமயங்களில் அடிக்கடி போலீசாரால் சார்ஜ் செய்யப்பட்டு அபராதம் வகையரா தண்டனை அடையவேண்டி இருக்கிறது.

இந்தமாதிரி தொல்லைகள் எதுவும் ரயில்வே கம்பெனியாருக்குக் கிடையாது. இப்படி எல்லாம் இருந்தும் மோட்டார் பஸ்சில் பிரயாணம் செய்கின்ற ஜனங்கள் அதிகமாகிக்கொண்டும் ரயிலில் பிரயாணம் செய்கின்ற பிரயாணிகள் குறைந்துகொண்டும் வருவது மிகுதியும் கவனிக்கத்தக்கதாகும்.

ரயில் பிரயாணத்தில் மக்களுக்கு இருக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய முயற்சிக்காமல் கம்பெனியார் வெறும் பிரசாரகர்களை நியமித்து விடுவதாலேயே பிரயாணிகள் அதிகப்பட்டு விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் கனவாகத்தான் முடியும்.

ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்டில் ஏற்றும் பிரயாணிகளுக்குக் கணக்குக் கிடையாது. ரயில்வே சட்ட புத்தகத்தில் ஒரு அறைக்கு 8 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது என்று கணக்கு இருந்தாலும், இத்தனை பிரயாணிகள் ஏறலாம் என்று பலகையில் எழுதி இருந்தாலும், 16 பேர் ஏற்றப்படுவதையோ, ஏறுவதையோ தடுப்பதற்கு எவ்வித சாதனமும் கிடையாது. எந்த ரயில்வே அதிகாரியும் அதைக் கவனிப்பதும் கிடையாது.

ரயிலில் பிரயாணிகள் ஒருவருக்கொருவர் செய்யும் இடைஞ்சலைப் பற்றிக் கேட்பதற்கும் திக்கில்லை. போக்கிரியாகவோ, சுயநலக்காரனாகவோ இருக்கும் ஒருவன் எவ்வளவு இடம் அபகரித்துக் கொண்டாலும், மற்றவர்களுக்கு எவ்வளவு அசௌகரியம் செய்தாலும் பரிகாரத்துக்கு மார்க்கமே கிடைப்பதில்லை.

வண்டியில் சுருட்டுக் குடிப்பது, வண்டிகளை அசிங்கம் செய்வது, கலகம் செய்துகொண்டு அடிதடி நிகழ்வது, துர்ப்பாஷைப் பிரயோகம் செய்வது முதலிய காரியங்கள் வெகு சகஜமாக நடைபெற்று வருகின்றன.

பிரயாணிகள் பாலங்களின் மேல் ஏறி இறங்கவேண்டி இருக்கிறது.

போர்ட்டர்களுடைய தொல்லைகளோ சகிக்க முடியாததாகும். வண்டிகளில் பிச்சைக்காரர்களுடைய தொல்லையும், சாமான் விற்பவர்கள் தொல்லையும் சகிக்கக்கூடியதென்று சொல்லிவிட முடியாது.

இந்த லக்ஷணத்தில் கொஞ்சம் ஏமாந்தால் மூட்டைகள் திருட்டுப் போய் விடுகின்றன.

ரயில்வே சிப்பந்திகள், டிராவலிங் டிக்கெட் கலக்டர்கள் மக்களை வெகு இழிவாய்க் கருதி ஆடு மாடுகள் போல் நடத்துவதைச் சிறிது சுயமரியாதை உள்ளவர்களும் சகிக்கக்கூடியதல்ல.

~subhead

சார்ஜ் சத்தம்

~shend

இந்தப் பிரகாரமாக மக்கள் நடத்தப்படுவது ஒருபுறமிருக்க, இனி ரயில் பிரயாணத்தால் மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் கவனிப்போம்.

ரயில் பிரயாணத்தில் சார்ஜ்ஜு சத்தம் பஸ் சத்தத்திற்கு ஒன்றுக்கு ஒன்றரையாக இருக்கிறது. உதாரணமாக ஈரோட்டிற்கும் கோயமுத்தூருக்கும் 60 மைல் இருக்கின்றன. ஒருவன் மெயில் வண்டியில் பிரயாணம் செய்ய வேண்டுமானால் ரூ.156 அணா சார்ஜ் கொடுத்து டிக்கட்டு வாங்க வேண்டும். ஈரோட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்குப்போக இரண்டணா வாவது கொடுக்க வேண்டும். இறங்கும் ஊராகிய கோயமுத்தூர் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குப் போக 3 அணா அல்லது 2 அணாவாவது கொடுக்க வேண்டும். இரண்டிடத்திலும் பாசஞ்சர் வண்டிகளானால் போத்தனூர் உள்பட மூன்று இடத்திலும் போட்டருக்குப் பணம் கொடுக்க வேண்டும். மூட்டைகளைத் தொட்டு பார்த்து எக்சஸ் செய்வதாக மிரட்டும் சிப்பந்திகளுக்கு ஏதாவது தொலைக்க வேண்டும். ஊருக்கும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் 1 மைல் சில இடங்களில் 2 மைலுக்கு மேலும் உண்டு.

இந்தத் தொல்லைகள் மோட்டார் பஸ்ஸில் செல்லும் பிரயாணிகளுக்கு இருக்க நியாயமில்லை.

ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் பஸ் சார்ஜ் 12 அணாத்தான். போட்டர் தொல்லை அடியோடு இல்லை. வீட்டுக்குப் போக வண்டித் தொல்லையும் இல்லை. இருந்தாலும் பகுதிச் செலவுடன் முடிந்து விடுகின்றது. சிப்பந்திகள் தொல்லையும், புக்கிங் ஆபீசில் நெருக்கமடையும் தொல்லையும், அவசரத்தில் சில்லறை நழுவும் தொல்லையும், புக்கிங் ஆபீசர் சில்லறை கொடுக்க நேரம் செய்தால் வண்டி போய் விடுமே என்று பயந்து பாக்கிக் காசுகளை விட்டுவிட்டு ஓடும் தொல்லையும் அடியோடு கிடையவே கிடையாது.

ஆகவே செலவில் சரிபகுதி மீதி ஆகின்றதா இல்லையா? என்பதோடு எவ்வளவு கஷ்டங்கள் மீதியாகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்.

~subhead

பிரிவினைகள்

~shend

இவை தவிர மற்றும் ரயிலில் பிரயாணம் செய்வதால் ஏற்படும் அதிகச் செலவைக் கவனித்துப் பாருங்கள்.

ஊருக்குள் நல்ல காப்பி ஒரு டம்ளர் ஒரு அணா என்றால், ரயில்வே பிளாட்பாரத்தில் கழிநீர் தண்ணீர் போன்ற காப்பி 013 அணா. அதுவும் முக்கால் டம்ளர். இட்லி பெரிய இட்லி ஊருக்குள் 003 பை என்றால் ரயிலில் சின்ன இட்லி அதில் பகுதியில் பாதி 003 பை. இன்னும் வெற்றிலை பாக்கு புகையிலை முதலியவை ஊர் விலைக்கு மூன்று பங்கு அதிகமாகிறது. பழ வர்க்கங்கள், பதார்த்தங்கள் ஊருக்குள் விற்காத மோசமானவைகளை ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக விலை சொல்லி விற்கிறார்கள்.

குழந்தைகள் வண்டியில் இருப்பதைப் பார்த்தால் விளையாட்டு சாமான் விற்கிறவன் அங்கேயே இருந்து கூப்பாடுபோட்டு வாங்கச் செய்துவிடுகிறான். விலையோ பி.ஆர். அன் சன்ஸ் கம்பனி விலையை மிக மிக சரசமாக்கி விடுகின்றது. இவற்றையெல்லாம் விற்கிறவர்கள் இந்த லாபங்களை அடைகிறார்களா என்று பார்த்தால் இல்லவே இல்லை. எல்லா லாபமும் ரயில்வே கம்பனிக்கே போய் சேர்ந்து விடுகின்றது. மீதி இருந்தால் ரயில்வே சிப்பந்திகளுக்கே போய் சேர்ந்து விடுகின்றது.

எப்படி என்றால் ஒவ்வொன்றையும் கண்றாக்டில் விட்டுவிடுகிறார்கள். 300 ரூ. 400 ரூ. வாடகை வாங்கிவிடுகிறார்கள். க்கு தட்டத்துக்கு இவ்வளவு ரூபாய் என்று வாங்கிவிடுகிறார்கள். சிப்பந்திகளும் இந்த கண்ட்றாக்டர்களை பிய்த்து பிடுங்கி சாப்பிட்டு விடுகிறார்கள். இவை யெல்லாம் பிரயாணிகள் தலையில் டிக்கட் பணம் தவிர அதிகச் செலவாக ஏற்பட்டு விடுகின்றது.

இந்த லக்ஷணத்தில் மக்களை நடத்துவதும் வெகு இழிவாகவே நடத்துகிறார்கள்.

அதென்னவென்றால் ரயில்வேக்களில் உள்ள ஓட்டல்களில் பிராமணர்களுக்கு வேறு ஒரு தனி இடம், பஞ்சமர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்து பார்ப்பனரல்லாதார்கள் என்பவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு தனி இடமுமாக இரண்டு பிரிவாக பிரித்திருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் பார்ப்பனர்கள் இறங்கினால், அவர்கள் எவ்வளவு கேவலமானவர்களாக இருந்தாலும் எல்லோரும் சமையலறைக்குள் சென்று நன்றாக புதிதாகச் சூடுடன் உடனே சாப்பிட்டு விட்டு சீக்கிரம் வண்டிக்கு வந்துவிடுகிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் நிலைமையோ எவ்வளவு மேன்மையாக இருந்தாலும் அவன் வெளி மண்டபத்தில் பலகாரத் தட்டத்துக்கு எதிரில் கூட்டமாக நின்றுகொண்டு சாமி! சாமி!! என்று காட்டுமிராண்டி ஜனங்கள் திருவிழாக் காலங்களில் கோவிலில் விபூதிக்கு அலைவதுபோல், ஆளுக்காள் நெருக்கிக்கொண்டு அவதிப்பட்டு ஆறிப்போன கழிபட்ட பதார்த்தங்களை அரைகுறையாய் வாங்கி அவசர அவசரமாய்த் தின்றது பாதி தின்னாதது பாதியுமாய் விட்டுவிட்டு ஓட வேண்டியதாய் இருக்கிறது. ரயில்வே ஓட்டல்களில் சாப்பாடு போடுவதும் நீட்டிக்கொண்டே இருந்து விட்டு வண்டி புறப்படும் சமயம் இலை போடுவதும் சாப்பிட வரும் ஆட்கள் அவதி அவதியாய் அரை வயிறு கூட நிறைய சாப்பிட முடியாமல் பணம் கொடுத்து விட்டு ஓடுவதுமாய் இருக்கிறது. ஊருக்குள் 3 அணா ஆனால் ரயிலில் 4 அணா வீதம் கொடுக்கவேண்டி இருக்கிறது.

இதைப்பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சிறிதும் செவி சாய்க்கவே இல்லை.

ரயில்வே கம்பனியாருக்கு ஒரு அகம்பாவம் இருந்துவருகிறது.

அதென்னவெனில் நம்மைத் தவிர இவர்களுக்கு (பிரயாணிகளுக்கு) வேறு கதி என்ன? என்கின்ற ஆணவம் ஒன்று.

பத்திரிக்கைக்காரர்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்கின்ற எலும்புகளைப் போட்டுவிட்டால், அதன் பேரால் அவர்களுக்கு கப்பம் கட்டிவிட்டால் நாம் எப்படி நடந்தாலும் வெளிக்கு வராது என்கின்ற தைரியம் இரண்டு.

மற்றும் அரசாங்கம் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இரண்டும் ஒரே ஜாதி என்பது மாத்திரமல்லாமல் பார்லிமெண்டு மெம்பர்கள் முதல் ரயில்வே கம்பெனிக்கு பங்குக்காரர்கள் தானே என்கின்ற சலுகை முதலிய காரியங்களோடு ஒரு தனிப்பட்ட பிரயாணி தனது கஷ்டத்துக்கு எப்படி சமாதானம் தேடிக் கொள்ள முடியும் என்கின்ற கவலையற்ற தன்மை, ஆகியவைகள் சேர்ந்து ரயில்வே கம்பெனியாரை இக்கஷ்டங்களைக் கவனிக்கச் செய்யாமல் செய்து வருகிறது.

மற்றொரு நாடகம் என்னவென்றால் ரயில்வே பிரயாணிகள் சங்கம் என்று ஒரு போலிச் சங்கம்; அதற்கொரு தலைவர்; அவருக்கொரு கவுரவ உத்தியோகம்; அவர்கள் சொந்தக்காரர்களுக்கு ரயிலில் சம்பள உத்தியோகம்; வேறுபல சலுகை. இவை எல்லாம் சேர்ந்து கம்பெனியாருக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம்.

இவ்வளவையும் சகித்துக்கொண்டு ரயில் பிரயாணம் செய்து ரயிலுக்கு பணம் கொடுப்பவர்கள் பார்ப்பனரல்லாதார். ஆனால் ரயிலில் 50, 100, 200 ரூ. சம்பளமுள்ள பெரிய உத்தியோகங்கள் கொடுப்பது 100க்கு 99 பார்ப்பனர்களுக்கே. 20ரூ. 30ரூ. உத்தியோகங்கள் கூட எல்லோரையும் விட 100க்கு 90 பார்ப்பனர்களுக்குத்தான் கொடுக்கப்படுகின்றன.

எனவே இப்படி எல்லாம் ஆகிவிட்டால் ரயில்வே பிரயாணத்தில் மக்களுக்கு எவ்வளவு ஆசையும் சவுக்கியமும் இருக்க முடியும்? என்று யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. மற்றும் வெளியில் எடுத்துச் சொல்லுவதற்கு சட்டம் இடம் கொடுக்க முடியாத அனேக விஷயங்கள் உண்டு என்பதோடு அப்படிப்பட்ட அனேக காரியங்கள் இன்று பிரத்தியட்ச அனுபவத்தில் நடந்தும் வருவதை ரயில்வேகாரர்களே மறுக்க முடியாது.

ஆதலால் பொதுமக்களின் நல்ல காலமாக பஸ் ஒன்று ஏற்பட்டு மக்களுக்கு ரயில் பிரயாணத்தில் இருந்துவரும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும், இழிவும் ஒரு அளவுக்காவது ஒழியத்தக்க சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் காலத்தில் மறுபடியும் பொது மக்களை ஏமாற்றவும், தொல்லைப்படுத்தவும், ரயில்வே பிரயாண பிரசாரம் என்பதாக சில உத்தியோகங்களை ஏற்படுத்தி அவ்வுத்தியோகங்களை பார்ப்பனர்களுக்கே கொடுத்து ரயிலுக்கு ஆள்பிடிப்பது ஒரு வேடிக்கை என்றே சொல்லுவோம்.

ரயில் வண்டியில் மக்கள் பிரயாணம் செய்யவேண்டுமானால் மேல்கண்ட நஷ்டமும், தொல்லையும், இழிவும் மக்களுக்கு இல்லாமல் இருக்கும்படி செய்தால்தான் முடியுமே ஒழிய, மற்றபடி இந்த மந்திரத்தில் மாங்காய் விழாது என்று ரயில்வே கம்பெனியாருக்கு யோசனை கூறுகிறோம்.

மற்றும் ரயில்வே கம்பெனியார்கள் தாங்கள் லாபம் சம்பாதிக்க வேண்டி புராண ஆபாசக் கதைகளை விளம்பரம் செய்து உற்சவம் முதலியவைகளைப்பற்றியும், மூர்த்தி, தலம், தீர்த்தம், மோக்ஷம், புண்ணியம், சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவைகளைப் பற்றியும் விளம்பரம் செய்து மக்களை மூட நம்பிக்கை உடையவர்களாகவும், முட்டாள்களாகவும் செய்து, அவர்களது பணத்தையும், நேரத்தையும் பாழாக்கும் விஷயங்களைப் பற்றி புள்ளி விவரங்களோடு மற்றொரு சமயம் எழுதுவோம்.

குடி அரசு துணைத் தலையங்கம் 02.02.1936

You may also like...