ஸ்தல ஸ்தாபனங்கள் ஓட்டுரிமையும் கட்சிகளும்

இந்திய நாட்டிற்கு பிரிட்டிஷார் அளித்துள்ள ஓட்டுரிமையானது இயற்கைக்கு விரோதமானதும், இந்தியாவின் தகுதிக்கு எத்தனையோ பங்கு அதிகமானதுமான ஓட்டுரிமையாகும்.

ஆனால் இதை அவர்கள் நல்லெண்ணத்தோடு அளித்தார்களா அல்லது மற்ற எண்ணத்தோடு அளித்தார்களா என்பது வேறு விஷயம் என்றாலும் இந்த மாதிரியான ஓட்டுரிமையினால் நாட்டுக்கோ ஏழை மக்களுக்கோ ஏதாவது பயன் ஏற்பட்டதா என்று சொல்ல முடியாது. ஏனெனில் நமது நாட்டு மக்களில் 100க்கு 8 பேர்களே படித்தவர்கள் என்பதும், அந்த 8 பேர்களிலும் பார்ப்பன சமூகம் 100க்கு 100 பேராய் படித்திருப்பதும், மற்ற ஏழை மக்களில் 100க்கு 2 பேர் 3 பேர்களே படித்திருப்பதும், பெண்களில் முக்கியமாக பார்ப்பனரல்லாத பெண்களில் 100க்கு லீ பேர்களும் தாழ்த்தப்பட்ட மக்களில் 100க்கு லி பேர்களுமே படித்திருப்பதுமான நிலையில் இந்தக் கூட்டத்தார்களைக் கொண்ட இந்திய சமூகம் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஓட்டுரிமைகளை சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்று யார்தான் சொல்ல முடியும்.

ஆகவே மக்கள் சாதாரண அறிவு விஷயத்திலேயே இப்படி இருக்கும்போது இந்த ஜனங்களிடம் அரசியல் சூழ்ச்சிகளையும் அயோக்கியத் தனங்களையும் உபயோகித்து போதாக்குறைக்கு கள்ளையும், சாராயத்தையும், காசையும் உபயோகிக்கத் துணிந்து விட்டால் இப்படிப்பட்ட பிரதிநிதித்துவம் கழுத்தறுப்பாய் வந்து சேருமே அல்லாமல் கடுகளவாவது யோக்கியமான முறையில் பயன்படுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

உதாரணம் சொல்ல வேண்டுமானால் சென்னை மாகாணத்தில் தலைசிறந்து விளங்கும் சென்னை நகரமானது இந்தியாவிற்கே அறிவிற் சிறந்த நகரம் என்பதோடு மிகுதியும் நாகரீகம் பெற்ற நகரம் என்றும் சொல்லக் கூடியதாகும்.

அப்படிப்பட்ட நகரத்தில் ஒரு சாதாரண பார்ப்பனர், ஒழுக்கத்தில் எந்தத் துறையிலும் திருப்திகரமாய் இல்லாதவர், ஜீவனத்துக்கும் யோக்கியமான மார்க்கமில்லாதவர், நாணயத்திலும் அது போலவே கூறக்கூடியவர் தேர்தலுக்கு நின்றகாலத்தில் எதிர் அபேக்ஷகரின் சுயநடத்தை நாணயத்தைப் பற்றியோ கொள்கை நாணயத்தைப்பற்றியோ ஒரு குறையும் கூறக்கூடாத நிலையில் உள்ள ஒருவர் விஷயத்தில் எதிரிகள் சில காலிகளையும் சில கூலிப்பெண்களையும் விட்டு யாரோ ஒரு பெண்ணின் தாலி அறுத்து விட்டார் என்று வெங்காய ரசத்தை கண்ணில் தடவிக்கொண்டு அழச்செய்ததற்கு ஏமாந்து பின்னவருக்கு வோட்டுச் செய்யாமல் முன்னவருக்கு வோட்டுச்செய்துவிட்டார்கள் என்றால் மற்ற பட்டிக்காட்டுப் பாமரஜனங்கள் என்பவர்கள் ஏமாற்றப்படுவதில் ஏதாவது அதிசயமிருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

இதுதான் ஒரு சமயம் சாதாரண பாமரமக்கள் ஓட்டு உடையவரா யிருந்ததால் ஏற்பட்ட பிசகு என்று சொல்லப்படுமானாலும் வருஷத்தில் 10000 ரூ. முதல் லட்ச ரூபாய்க்கும் மேலாகக் கூட வருமானமுடைய மக்கள், வியாபாரிகள், பாங்கர்கள் ஆகிய கூட்டத்தார்களே ஓட்டர்களாய் உள்ள வியாபாரத் தொகுதியில் ஓட்டராயிருப்பதற்கே லாயக்கில்லாதவரும், தவறுதலாய் ஓட்டர் லிஸ்டில் தாக்கல் செய்யப்பட்டவரும், அரசியலிலும், பொருளியலிலும் கூட போதிய நாணயமில்லாதவருமான ஒருவர் அபேட்சகராய் இருந்த காலத்தில் எதிர் அபேட்சகர் விஷயத்தில் அந்த வியாபாரத் தொகுதிக்காரர்களால் எவ்வித குறைபாடும் குற்றமும் சொல்லக் கூடாதவராய் இருந்தும், பெரிய வியாபாரியும், வியாபார நிபுணராயும், உண்மையான செல்வந்தராயும், தகுந்த கீர்த்தியும் செல்வாக்கும் உடையவராயு மிருந்தவரைப் பற்றி ஜனங்களுக்கு அதாவது ஒரு ஓட்டருக்காவது புரியாத குறைகளைச் சொல்லி வேறு சிலரின் சுயநலங்களுக்காக துரோகம் செய்ய வசதியும் அவசியமும் அளித்து ஏமாற்றினார்கள் என்றால் பாமர மக்களுக்கு புத்தி இல்லை, ஓட்டுகளை தக்கபடி உபயோகிக்கத் தகுந்த அறிவில்லை என்பதோடு பெரிய பணக்கார வியாபாரிகளுக்கும்கூட பெரிதும் புத்தியில்லை, ஓட்டுகளைத் தகுந்தபடி உபயோகிக்கப் புத்தியில்லை என்று சொல்லுவதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.

அன்றியும் இந்த மேற்படி எலக்ஷன்கள் நடந்து ஒரு வருஷம் முடிவதற்குள்ளாக வெற்றிபெற்ற கனவான்கள் என்று சொல்லப்பட்டவர்கள் யோக்கியதை உலகம் அறியும்படி வெளியாகியும் அதாவது பாமரமக்களை ஏய்த்தவர் தான் ஓட்டர்களுக்கு வாக்குத்தத்தம் செய்தது போல் நடக்கவில்லை என்பதை உணர்ந்தும், மற்றொருவர் அதாவது பெரிய வியாபாரிகளையும் பாங்கர்களையும் பிரபுக்களையும் ஏய்த்தவர் உத்தியோகத் தோரணையில் கண்டிறாக்டு பெற்று ஸ்தல ஸ்தாபனத்தின் பணத்தை அனுபவிக்கிறார்கள் என்றும், ஏழைத் தொழிலாளி மக்களுக்கு மோசமும் துரோகமும் செய்து தான் சுயநலத்தை தேடிக்கொண்டார் என்றும், பட்டாங்கமாய் தெரிந்த பின்பும் பாமர மக்களுக்கோ, பணக்காரர்களுக்கோ புத்தி வரவில்லை என்றால் இந்த ஓட்டு உரிமைகள் சர்க்காரால் நமக்கு கொடுக்கப்பட்டது அறிவுடைமையா என்று கேட்கின்றோம்.

ஜில்லா போர்டு தேர்தல்களிலும் சாதாரணமாக 3 வருஷத்துக்கு முன்னால் ஒன்பது ஓட்டு பத்து ஓட்டுகளில் தெரிந்தெடுக்கும்படியாய் இருந்த ஒரு ஜில்லா போர்டு மெம்பர் ஸ்தானத்துக்கு இன்று ஒன்பது ஆயிரம் பத்து ஆயிரம் ஓட்டுகளால் தெரிந்தெடுக்கும்படியான ஓட்டுரிமை நமக்கு வந்ததில் பொய்யும் புளுகும் மாத்திரமல்லாமல் கள்ளும், சாராயமும் செலவழித்து ஓட்டுப் பெற வேண்டியதாயிற்றே ஒழிய மற்றப்படி பிரதிநிதித்துவத்துக்கு எவ்வித யோக்கியதையும் இல்லாமல் அசம்பளி வர்த்தகத் தொகுதிக்கு வெற்றி பெற்றவர் ஏழை மக்களை துரோகம் செய்துவிட்டு கண்றாக்டினால் பிழைக்கும்படியான சௌகரியம் பெற்றது போல் இந்த கள்ளு, சாராயம், பொய், பித்தலாட்டம் ஆகிய இழி காரியங்களால் வெற்றி பெற்றவரும் ஏழை மக்களை துரோகம் செய்துவிட்டு கண்டிறாக்டில் பிழைக்க வேண்டியவர்களாகிறார்கள்.

இதையும் நேரில் பார்த்துக் கொண்டிருந்தும்கூட மறுபடி மறுபடி அதேமாதிரி நடந்துவருகிறார்கள் என்றால், அரசாங்கத்தார் அளித்த ஓட்டுரிமை மக்களுக்கு எவ்வளவு ஆபத்தை உண்டாக்கக்கூடியதாய் இருக்கிறது என்பது வாசகர்கள் உணர ஆசைப்படுகிறோம்.

குறிப்பாக வட ஆற்காடு ஜில்லாவில் இது சமயம் ஜில்லா போர்டு தேர்தல்கள் நடைபெறுகின்றதை ஒரு நடுநிலைக்காரன் பார்த்தால் நமது ஜனங்கள் அடிமைகளாக கூலிகளாக இருக்கத்தான் யோக்கியதை உடையவர்களே தவிர சுதந்திரத்துக்கோ விடுதலைக்கோ சிறிதும் அருகதை இல்லை என்றே சொல்லுவான்.

அபேக்ஷகர்களைப் பற்றி சொல்லாமலும், அபேக்ஷகரை வெளியில் காட்டாமலும் கிராமங்களுக்குப் போய் காந்திக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்பதோடு எதிர் அபேக்ஷகர்களைப்பற்றி மிக்க இழிவான முறையில் பச்சையாக குறை கூறி ஏமாற்றப்படுகிறது.

இவைகள் எல்லாம் கையில் வலுத்தவன் காரியம்தான் என்று சொல்லுவதானாலும் கையில் வலுத்தவன் காரியமாவதற்கு அனுகூலமான சௌகரியங்களைச் செய்து கொடுத்துக் கொண்டு வருவது அக்கிரமம் என்றும், தலைப்பில் காட்டிய ஓட்டுரிமை என்பதும் இம்மாதிரி கையில் வலுத்தவன் காரியத்துக்கு அனுகூலமாயிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவே இதை எழுதுகிறோம்.

அன்றியும் இன்றைய ஸ்தல ஸ்தாபனங்களினுடைய யோக்கியதை களும் ஏதாவது ஒரு ஸ்தலஸ்தாபனத்தில் அங்கத்தினராகவோ தலைவராகவோ வெற்றி பெற்று விட்டால் அந்த வெற்றியானது வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு வியாபாரம் போலவும், சிலருக்கு புதையல் போலவும் லாபமடையத் தக்க மாதிரி பயனளிக்கக் கூடியதாய் இருப்பதால் வியாபாரத்தில் வக்கீல் தொழிலில் திருட்டுத் தொழில் செய்யப்படவேண்டிய புரட்டு, வஞ்சகம், துரோகம், கொலை பாதகத் தொழில் ஆகிய காரியங்களை சிறிதும் தங்குதடையில்லாமல் செய்யக் கூடியதாகவும் செய்யவேண்டியதாகவும் ஏற்பட்டுவிடுகிறது.

சாதாரணமாக எவ்வளவு சின்ன ஜில்லாபோர்டாக இருந்தாலும் இன்றைய நிலையில் ஜில்லாபோர்டு சட்டம் இருக்கிற நிலைக்கும், மந்திரி சபை இருக்கும் யோக்கியதைக்கும், அரசாங்கத்தின் தன்மைக்கும் பொருந்திப் பார்த்தால் ஒருவன் எப்படியாவது ஒரு ஜில்லாபோர்டு தலைவனாக ஆகி விட்டால் அவன் எவ்வளவு முட்டாளாகவும் யோக்கியனாகவும் இருந்தாலும் 3வருஷ காலாவதிக்குள் ஒரு லக்ஷ ரூபாய்க்கு குறையாமலும் சில ஜில்லாபோர்டுகளில் 3லக்ஷ ரூபாய் போலவும் சம்பாதித்துக்கொள்ளக்கூடிய சௌகரியம் இருப்பதை நேரிலும் அனுபவத்திலும் பார்த்து வருகின்றோம்.

அதுபோலவே முனிசிபாலிட்டியிலும் ஒரு காலாவதியில் 20000ரூ முதல் 100000ரூபாய் வரை சம்பாதித்துக் கொள்ளக் கூடியதாய் இருப்பதுடன் அங்கத்தினர்களுக்கு இதற்குத் தகுந்த விகிதாசாரம் அடையும்படியாகவே இருந்து வருகிறது என்பது மாத்திரமல்லாமல் இம்மாதிரியான காரியத்திற்கு சமூகத்தில் எவ்வித இழிவும் இல்லாமல் மிக்க செல்வாக்கும் பெற்று சர்வசாதாரணமாய் பழக்கத்தில் அனுபவத்தில் நடக்கும்படியாகவும் அப்படிப்பட்டவர்களுக்கே பட்டம், பரிவட்டம், கவுரவம் முதலியவை முதலில் கிடைக்கும்படியாகவும் ஆகிவிடுகிறது.

சில உத்தமர்கள் இருக்கலாம் இருக்கிறார்கள் என்றாலும் அப்படிப் பட்டவர்களுக்கு தனிமரியாதை இல்லாமலும் போய்விடுகின்றன.

இவற்றிற்கெல்லாம் காரணம் நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சிகள் ஏற்பட்டதும் சிறப்பாக காங்கிரசு என்றும் தேசாபிமானம் என்றும் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள் இதில் பிரவேசித்து இதன் மூலம் தங்கள் வாழ்வையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்து அதற்கு ஏற்ற சூழ்ச்சிகள் செய்து கட்சி, பிரதி கட்சி, உள் கலகம் முதலியவைகள் செய்ததே ஒழிய மற்றபடி தமிழ் மக்களிடத்தில் இவ்வித குணம் அருமையாகவே இருந்தது.

இப்பொழுதும் பொதுமக்களிடம் நாணயம் யோக்கியம் ஆகிய காரியங்கள் ஏற்பட வேண்டுமானால் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது இன்றைய நிலையில் இருக்கும் மாதிரி அடியோடு ஒழியவேண்டும். விளக்கமாக சொல்லவேண்டுமானால் காந்தி சகாப்தம் என்பது அழிந்து ஒழிந்து ஆயிரம் கஜ ஆழத்தில் புதைக்கப்பட்ட அன்றே மக்கள் யோக்கியதை காதாலாவது கேட்க முடியும் என்பதே நமது கருத்து. முனிசிபாலிட்டிகளும் ஜில்லாபோர்டுகளும் யோக்கியமாக நடைபெற வேண்டுமானால் மற்றொரு காரியம் நடைபெற்றாக வேண்டும்.

அதாவது இவைகளுக்கு போடும் கமிஷனர்கள் கூடுமானவரை சுயமரியாதையுடன் நடந்து கொள்ளக்கூடிய சௌகரியம் இருக்கும்படி சட்டங்களை திருத்தி தக்க கவுரவமுள்ள அதிகாரிகளைப் போடவேண்டும்.

இரண்டாவது ஸ்தல ஸ்தாபனங்களில் தலைமை வகிப்பவர்கள் சட்டசபையில் இருக்கவோ எட்டிப் பார்க்கவோ இடம் கொடுக்கக் கூடாது.

ஜில்லாப் போர்டிலும் முனிசிபாலிட்டியிலும் பகல் கொள்ளை அடிக்கிறவன் சட்டசபையில் ஸ்தல ஸ்தாபன மந்திரி கூட சரி சமமாய் உட்கார இடம் கொடுத்தால் எவனுக்கு தான் திருட மனம் வராது என்று கேட்கின்றோம்.

ஸ்தல ஸ்தாபனங்கள் கொள்ளைக்காரர்கள் கூட்டத்தாருக்கு சரணாகதிபோல் கை வசப்பட்டதற்குக் காரணமும், ஸ்தல ஸ்தாபனங்களுக்குச் சென்ற யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்கள் ஆனதற்குக் காரணமும் ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் சட்டசபை மெம்பர்களானதுதான் என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

இன்று அரசாங்கம் இந்தியாவுக்குச் செய்த ஒரு பெருங்கேடு என்று ஏதாவது ஒன்றைச் சொல்லவேண்டுமனால் ஸ்தல ஸ்தாபனங்களை காலிகளும், கன்னெஞ்சக் கூட்டத்தார்களும் கொள்ளையடிக்கும்படி திறந்துவிட்டார்களே என்பதைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

அதுவும் இந்தியர்களுக்குக் கொடுத்த சுய ஆட்சி என்கின்ற பெயரால் கொடுக்கப்பட்டது? என்பதை நினைக்கும்போது இதில் அவர்களுடைய எண்ணத்தைக்கூட சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.

ஆகவே எப்படியாவது அரசாங்கத்தார் பொதுஜனங்களுக்கும், ஏழை மக்களுக்கும் நேரடியான சம்மந்தமும் அவசியமும் இருக்கிற இந்த முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவைகளை தங்கள் முழு சுவாதீனம் செய்துகொண்டு தங்களது நேரடியான ஆதிக்கத்தில் இருந்து நிர்வாகம் நடக்கும்படி செய்யவேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம்.

காந்தீயம் ஒழிந்த பிறகு வேண்டுமானால் மறுபடியும் பொதுஜனங்கள் வசம் ஒப்புவிக்கலாமா என்பதுபற்றி யோசிக்கலாம்.

இப்போது ஸ்தல ஸ்தாபனங்களின் பணம் நாசமாவதையும் கொள்ளை போவதையும் பார்த்தும் உலகிலுள்ள அயோக்கியத்தனங் களுக்கெல்லாம் ஸ்தல ஸ்தாபனங்கள் தாயகமாய் இருப்பதைப் பார்த்தும் வயிறு எரிந்துதான் இதை எழுதுகிறோமே ஒழிய அவற்றில் உள்ள எந்த தலைவர்களையோ அங்கத்தினர்களையோ மனதில் வைத்து நாம் எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

குடி அரசு தலையங்கம் 15.03.1936

You may also like...