பட்டுக்கோட்டை தாலூக்கா பேராவூரணியில் சுயமரியாதை மகாநாடு
நானும் எனது சகாக்களும் எதைச் சரி என்று உணர்ந்தோமோ, அதையே எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டுமென்ற கருத்துடனேயே இயன்ற தொண்டு செய்து வருகிறோம். எங்களுக்கு இத்தொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டதல்லவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வளர்ந்து வீரத்துடனும் கீர்த்தியுடனும் வாழ்ந்து வந்து இன்று அன்னியர்கள் ஏமாற்றத்தில் அகப்பட்டு சுயமரியாதை அற்று மிருகங்களைப் போல் நடத்தப்பட்டு வரும் கொடுமைகளைக் கண்டே அதை நிவர்த்திக்க உழைத்து வருகின்றோம். ஏனெனில் நமது மக்களில் 100-க்கு 90 பேர் இப்போது கிணற்றுத் தவளையாகவே இருந்து வருகின்றனர். உலகத்தின் இதர தேசங்களையும் அத்தேசத்தாரின் நிலைமையையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் மற்ற காரியங்களையும் நம்மில் அநேகர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இது விஷயங்களையறிந்து நமது நிலைமையையும் கவனித்து எங்கள் புத்திக்குச் சரியென்று பட்டதைச் சொல்லவே முன் வந்திருக்கின்றோம். அதை நீங்கள் செம்மையாய் கவனித்து யோசனை செய்து பார்த்து உங்கள் புத்திக்குச் சரியென்று பட்டால் அதைச் செய்ய வேண்டுமென்றே உங்களை நான் கேட்டுக்கொள்ளுகிறேன். நீங்கள் இப்போது எங்களை வரவேற்ற முழக்கத்தையும் பாராட்டுதலையும் ஊக்கங் களையும் ஆவேசங்களையும் பார்க்கும் போது எங்கள் ஊழியத்தை தாங்கள் ஆதரித்து வருகின்றீர்களென்று தெரிவதுடன் அதனால் எங்களுக்கும் நாங்கள் மேற்கொண்டுள்ள காரியத்தில் ஊக்கத்தை அளிக்கின்றது. முக்கிய மாய் நம்மவர்கள் என்று சொல்லி நம்மை ஏமாற்றும் பார்ப்பனீயக் கொடுமை யிலிருந்து விடுபட்டு சுயமரியாதையடையவே நாம் இம்முயற்சியிலீடு படுகின்றோம். பார்ப்பனரல்லாதார் என்று நாம் நம்மை கூறுவதால் நாம் பிராமணர்களை விலக்கி வைத்திருக்கின்றதாக நீங்கள் நினைக்கக் கூடும். நம்மைத்தான் அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கின்றார்களே தவிர, நாம் அவர்களை விலக்கவில்லை. உதாரணமாக சாப்பாட்டுக் கடைகளிலும், காபி ஓட்டல்களிலும், குளங்களிலும், குட்டைகளிலும், ஆலயங்களிலும், பள்ளிக் கூடங்களிலும், வேத சாஸ்திரங்கள் என்பவைகளை படிப்பதிலும் வெகு காலமாகவே நம்மை பார்ப்பனர்கள் விலக்கி வைத்து தங்களுக்கு தனி இடமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர், மிலேச்சர் என்பதாக அநேக வகுப்புகளையுண்டு பண்ணி மக்களைப் பிரித்து வைத்து எல்லோருக்கும் தாங்கள் மேலென்றும் ஏனையோர் தாழ்வென்றும் திட்டப்படுத்தி அதற்கு ஆதாரமாக கடவுள் சொன்னார் கடவுள் செய்தார் என்று சாஸ்திரங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். வெள்ளைக்கார அரசாங்கத்தில் கூட இந்து லா என்று சொல்லப்பட்ட சட்டத்திலும், நீதி இலாகாத் தீர்மானங்களிலும் கூட பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் தனியாக சட்டமிருப்பதைக் காணலாம். இது கிரிமினல் சிவில் இருதரப்பிலும் இப்படி இருக்கிறது. பார்ப்பனத் தலைவராகிய ஸ்ரீ சீனிவாசய்யங்கார் கூட இதை ஒப்புக் கொண்டு இனி இந்த வித்தியாசம் இருக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நடத்தி வருகின்றார்களென்றால் இந்து மதம் என்ற பெயரால்தான். இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதானால் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நாம் அவர்களுக்கு அடிமையாகவிருந்து வருகின்றோம். இதைப் போக்கத்தான் நாம் இந்தக் கிளர்ச்சியை ஆரம்பித்தோம், பிராமணருக்கென்றும், மற்றவர் களுக்கென்றுமாக நீதிகளில்லாமல் வித்தியாசங்களில்லாமல் செய்யவே நாம் இப்போராட்டம் செய்கின்றோம். இதுவே தவிர அவர்களிடம் துவேஷம் கிடையாது. நமது நாட்டுக்கும் நமது மக்களுக்கும் விடுதலையும், நல்வாழ்வும் கிடைக்க வேண்டுமானால் ஒருவருக்கொருவர், வித்தியாசங்களை விட்டொழித்து பரஸ்பரம் நல்லெண்ணத்துடன் நடந்து கொண்டு ஒற்றுமை அடைய வேண்டும். இன்றேல் முடியாது. உயர்வு தாழ்வு என்ற தத்துவம் போனாலொழிய அது சாத்தியமில்லை. இத்தத்துவம் நமது மதத்தின் அஸ்திவாரத்திலேயே பதிந்து கிடக்கின்றது. நமது மத வேதங்களும், ஸ்மிரு திகளும், புராணங்களும்தான் இந்தப் பாழும் தத்துவத்திற்கு ஆதாரம். இம்மாதிரி வித்தியாசம் கற்பித்து மக்களை சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி நாய் பன்றிகளை விட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக் கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும். நான் இவ்வாறு சொல்வது உங்களில் சிலருக்கு வருத்தமாகத் தோன்றலாம். நான் சொல்வதை பார்ப்பனர்கள் சொல்வதுபோல் அப்படியே நம்ப வேண்டுமென்று உங்களை கட்டாயப்படுத்தவில்லை. நான் நம்புவதை எனக்குத் தோன்றியதை நான் கண்டதைச் சொல்லுகிறேன். உங்கள் பகுத்தறிவைக் கொண்டு பார்த்து நான் சொல்லுவது நியாயமாயிருந்தால் அதைக் கைக்கொள்ளுங்கள். குற்றமானால் தள்ளுங்கள். அல்லாமல் இம்மாதிரி குருட்டுத் தனமாக நம்பிக்கை கொண்டு இன்னமும் மிருகப் பிராயத்திலிருந்தால் நாம் முன்னுக்கு வர முடியாது. அநேகமாய் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உண்மைகளை கண்டுபிடித்து அவற்றை செய்கையில் நடத்தியதானால்தான் இதர நாட்டினர் கள் முன்னுக்கு வந்திருக்கின்றார்கள். நாம் வெகு புத்திசாலிகளாவும், ஞானிகளாவும், நாகரீகர்களாகவும் இருந்ததாகச் சொல்லப்பட்ட காலத்தில் மேல் நாட்டினர் காட்டுமிராண்டிகளாக இருந்தனர். இன்றைக்கு சுமார் 1000 வருஷங்களுக்கு முன் இவ்வாறிருந்ததாக மேல்நாட்டார்களே சரித்திரம் எழுதி வைத்திருக்கின்றனர். இப்பொழுது காலத்திற்கேற்றவாறு நாகரீக மடைந்து பகுத்தறிவின் மேன்மையினால் அக்குறைகளை நீக்கி தெய்வத் தன்மை என்பதை அடைந்து உலகில் பெரும்பாகத்தை ஆளும் ஸ்தானத் திலிருக்கிறார்கள். ஆனால் எவ்வளவோ மேன்மையாக இருந்ததாகக் கதைகள் எழுதி வைத்துக் கொண்டிருக்கும் நாமோ அவர்களுக்கு அடிமைப் பட்டு இழிவான நிலையிலிருந்து வருகின்றோம். குருட்டுக் கொள்கைகளை அவர்கள் விட்டொழித்ததாலேயே அவர்கள் நல்ல வாழ்வடைந்தார்கள். நாம் இன்னும் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடப்பதால் பார்ப்பான் நம்மை வேசிமகன், அடிமை, சண்டாளன், தீண்டாதவன் என்கின்றான். வெள்ளையன் நம்மை அஞ்ஞானி, கூலி, காட்டுமிராண்டி என்கின்றான். புரோகிதக் கொடுமையால் ஏற்பட்ட மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெரிந்ததாலேயே மேல் நாட்டினர் இன்று இந்நிலையிலிருக்கின்றார்கள். நம்நாட்டுப் புரோகிதக் கூட்டத்தைப் போலவே மேல் நாட்டிலும் 500 வருஷத்திற்கு முன் இருந்த புரோகித வகுப்பார் பாவமன்னிப்பு டிக்கட்டு என்று மக்களுக்கு விற்பனை செய்து பணங்களை கொள்ளையடித்து வந்ததாக சரித்திரம் இருக்கின்றது. அக்கொடுமையை அவர்களில் சில சீர்திருத்தக்காரர்கள் தோன்றியொழித் ததால்தான் அநேக அற்புதங்களைக் கண்டுபிடித்து ஆண்மையுடன் மேன்மையடைய முடிந்தது. பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கும் பயித்தியக் காரர்களாயிருந்தவர்கள் இன்று எவ்வளவோ தெய்வீகச் செயல்களைப் புரிகின்றார்கள். இது எதனால்? காலப் போக்கையறிந்து அறிவை உபயோ கித்து மூடவாழ்விலிருந்து விலகியதால்தான் என்று மறுபடியும் சொல்லு கின்றேன். நாமோ பழைய வழக்கமென்ற கயிற்றால் தலையெடுக்க விடாதபடி கட்டுப்பட்டுக் கிடக்கின்றோம். பழைய வழக்கம், பழைய வழக்கம் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டுமா அல்லது இந்நிலையிலிருந்து திருந்தக் கூடாதா. நம் முன்னோர்கள் செய்துவந்த எத்தனையோ நல்ல பழக்கங்களை நாம் கைவிட்டு விடவில்லையா? அதே போல காலத்திற்கேற்ற பழக்க வழக்கங்களையடைந்து சீர்திருத்தி மேம்பாடடையக் கூடாதா என்பதை யோசித்துப் பாருங்கள். முன்னாட்களில் நாம் ஏமாறுவதற்குத் தகுந்தபடியிருந்த வசதிகளில் அதாவது நாம் படிக்கவே கூடாது என்று பார்ப்பனர்கள் ஏற்படுத்திய கொடுமைகளால் குருட்டுப் பழக்கத்திலீடு பட்டிருந்து வந்திருந்தாலும், இக்கால உலக நிலையையுணர்ந்தாயினும் நாம் நம்மை சீர்திருத்திக் கொள்ள கூடாதாவென்றுதான் நான் கேட்கிறேன். எனவே, நாம் அடிமைப்பட்டிருப்பது முக்கியமாய் மதத்தின் பெயரால்தான். ஆகையால் அதைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும். மதம் என்பது மக்களின் வாழ்விற்கும் அன்புக்கும் பரோபகாரத்திற்கும் காலத்தின் நிலைமைக்கும் அறிவுக்கும் சீதோஷ்ண ஸ்திதிக்கும் தக்கதான கொள்கைகள். அக்கொள்கைகளைப் பற்றி வாழ்க்கையில் இன்பம் என்னும் முக்தியடைய ஏற்பட்டதேயல்லாமல் வேறல்ல. நமது மதம் என்பது அனுஷ்டானத்தில் இவ்வாறிருக்கின்றதா? இன்னும் முக்கியமாக உள்ள கிறிஸ்தவ மதம், முகமதிய மதம், புத்த மதம், இந்து மதம் ஆகிய நான்கில் இந்து மதம் என்பதைத் தவிர வேறெதுவும் கீழான நிலையில் இல்லை. நம்மைத் தவிர மற்ற மதஸ்தரெல்லாம் தங்கள் தேசத்தை ஆளுவதுடன் பிற தேசங்களையும் ஆண்டு வருகின்றார்கள். அப்படிக்கிருக்க நாமோ ஆயிரக்கணக்கான வருஷங்களாக அநேகருக்கு அடிமையாயிருக்கின்றோம் ஏன்? நமது மதமென்பது நம்மை அடிமையாக்க உதவி புரிகிறது காரணம், அது பொய்யாகவும், புரட்டாகவும், அர்த்தமற்றதாகவும் இருக்கிறது. நமது மதத்திற்கு பெயராக உள்ள இந்து என்ற வார்த்தை நமது தேச பாஷைகள் எதிலும் இல்லவே இல்லை. ஆராய்ச்சிக்காரர்கள் இந்து என்ற வார்த்தை பாரசீக பாஷையில் திருடர்கள் என்று பொருள்படுவதாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் சிந்து என்ற பதம் இந்து என்பதாக மாறிற்று என்றும், அது நாட்டைக் குறித்து என்றும் மதத்தைக் குறித்ததல்ல வென்றும் கூறுகின்றார்கள். அதுவேதான் நம்நாட்டுக்கு இந்தியா என்ற பெயரைக் கொடுத்தது. இந்து என்பது ஒரு இடத்தைக் குறிப்பதேயல்லாமல் கொள்கை கள் கொண்ட எந்த மதத்தையும் குறிக்காது. இது சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் முடிவாகும். தவிரவும் இலக்கண இலக்கிய சாத்திரங்கள் முதலானவைகளிலும் இந்து என்கின்ற வார்த்தை காணப்படவே இல்லை. பின் இது என்னவென்று பார்த்தால் ஆதாரமற்றதாகவே காணப்படுகிறது. தவிர எந்த இந்துவும் தன் மதம் என்று காட்டப்படும் இந்து மதத்தின் காலம், தலைவர், கொள்கை ஆகிய எதுவும் கூற முடியவே முடியாது. சமீப காலத்தில் ஏற்பட்டதான கிறிஸ்துவ மதம், மகமதிய மதம், புத்தமதம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் மதத்தைப் பற்றிய சகல விபரங்களையும் தாராளமாக சொல்லக்கூடிய நிலைமையிலிருக்கின்றார்கள். நமது மதம் கோடிக்கணக்கான வருஷங் களுக்கு மேம்பட்டதாகக் கூறுகின்றோம். ஆனால் விவரம் ஒன்றும் தெரியாது. நமக்கு எவ்வளவோ பின்பு ஏற்பட்டதாக நம்மால் கூறப்படும் எல்லா மதத்தினரும் கல்வி, ஆராய்ச்சி, பொருளாதார நிலைமை முதலிய பலவற்றிலும் முற்போக்குடன் உன்னத நிலையில் இருக்கிறார்கள். நமது மதத்தில் 100 -க்கு 5 க்கு மேல் படித்தவர்களில்லை. பிற மதங்களில் 100 -க்கு 90 பேர் இருக்கின்றார்கள். மதத்திற்காக இதர மதஸ்தார்கள் தங்கள் தங்கள் மதப்பிரசாரம் செய்யும் பொழுது நம் மதத் தலைவர்கள் நம் பணங்களைக் கோடிக்கணக்காய் வாங்கி தின்று கொண்டு எத்தகைய பிரசாரமும் இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதுடன் நமது மதத்தவர்களை கோடிக்கணக்காக இதர மதங்களில் சேர இடங்கொடுத்து வருகின்றார்கள். நம் மத நூல்களை நம் மதத்தை சேர்ந்தவர்கள் படிக்கக் கூடாதென்று கட்டுப்படுத்தி வைத் திருக்கின்றார்கள். இதர மதக்காரர்கள் தங்கள் மதச் சங்கதிகளை தாராளமாக அச்சிட்டு வழங்குகின்றார்கள். பிற மதஸ்தார்கள் ஏழைகளுக்கு உபகாரங் களைச் செய்யும் பொழுது, நாம் தீண்டாதார்களென்று கோடிக்கணக்கான ஏழை மக்களை ஒதுக்கி வைத்து கஷ்டப்படுத்துகின்றோம். மத வழிபாட்டிலும் நாம் வீணாக குருக்களுக்கும், புரோகிதர்களுக்கும் கொடுத்து வறுமைப் படுகின்றோம். பிற மதங்களில் அவ்வாறில்லை. மதத்தின் பெயரால் நாம் செய்யும் சகல செலவுகளும் ஒரு வகுப்பாருக்கு ஜீவாதாரமாக முடிவதல் லாமல் அதைக் கொண்டு அவர்கள் நம்மை இழிவாக நடத்தி வரவும் இடங் கொடுத்து வருகின்றது. இதர மதக்காரர்கள் சகல சுதந்திரங்களும் மக்களுக்கு கொடுக்கும் பொழுது நாம் ஒருவர் உயர்வு என்றும், மற்றவர்கள் தாழ்வு என்றும், ஒருவரைப் பார்க்கக் கூடாதென்றும், ஒருவரைத் தீண்டக் கூடாதென்றும் சொல்லுகிறோம். இதுதான் இந்து மதமாக இருக்கிறது. ஒரு வகுப்புக்கு உயர்வையும் மற்றவர்களுக்கு அடிமைத் தனத்தையும் கொடுப்பதுதான் நமது மதமாக வழங்கப்படுகின்றது. முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தர் போன்றவர்களைப் போல நமக்கு ஒற்றுமையிருக்கின்றதா? அத்தகைய ஒற்றுமை நமது மதம் கற்பிக்கின்றதா? ஒரு மதத்திற்குள்ளாகவே ஆயிரம் ஜாதி, பதினாயிரம் வகுப்பு, லட்சம் தெய்வம் என்பதாக மேலும் மேலும் பிரிவினையாகவே ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் நூல்களாகிய நமது சாத்திரங்களில் இந்த வித்தியாசங்களுக்கு ஏதேனும் ஆதாரமுண்டா? இடையில் புகுத்தப்பட்ட இந்த பேத வழக்கத்தை நாம் ஏன் அனுஷ்டிக்க வேண்டும்? பிராமணர் உயர்வு என்றும் மற்றவர் தாழ்வு என்றும் நாம் ஏன் கொள்ள வேண்டும்? சகல அக்கிரமங்களைச் செய்தாலும் ஒரு பிராமணன் உயர்வு என்றும் எவ்வளவு தூய வழக்கமும் அறிவுமுள்ளவனாக இருந்தாலும் ஏனையோர் தாழ்வு என்றும் கொள்வதுதானா நியாயம்? தீண்டாதவர்கள் என்று ஒதுக்கி வைத்துக் கட்டுப்பாடு செய்துவிட்டு அவர்கள் சுசீலமாக இல்லையென்று சொல்வதில் என்ன அர்த்தம்? அவர்கள் மாடுதின்கிறார்கள் என்று சொல்வதும் விந்தைதான்? மாடுதின்னும் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாய் இருக்கும் பொழுது நமது தேசத்தில் பிறந்த இவர்களை அதற்காக நாம் ஏன் இவ்வளவு கொடுமையாக நடத்த வேண்டும். இது நமது மதம் என்பதின் குற்றமல்லவா? இப்படி யெல்லாம் செய்வதால்தானே நமது மக்கள் எல்லோரும் இதர மதங்களில் சேர்ந்துகொண்டு வருகின்றார்கள். திருவாங்கூர் ராஜ்யத்தில் சுமார் 40 லட்சம் ஜனங்களென்று கணக்கிருக்கும் பொழுது இப்பொழுதுள்ள ஜனக்கணிதக் கணக்குப்படி 16 லட்சம் கிறிஸ்தவர்களும், சுமார் 4 லட்சம் முகமதியர்களுமாக சுமார் 20 லட்சம் ஜனங் கள் அன்னிய மதத்திலிறங்கி இருக்கின்றனர். பாக்கியுள்ள 20 லட்சத்திலும் சுமார் 12 லட்சம் ஜனங்கள் தீண்டாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு நிலைமையானதற்கு நம் மதக் கொடுமைதான் காரணம். ஆகவே, அவை களை அடியுடன் ஒழித்தால்தான் நாம் சுகப்படுவோம். பிராமணர்களைப் போல் மதக் கட்டுப்பாடுகளை வற்புறுத்தும் பெயர் வழிகளிலும், இதர ஜாதி களும் இல்லாமலில்லை. அவர்களையும் நாம் கண்டிக்க வேண்டியதுதான். ஆனால் பார்ப்பனர்கள்தான் இவைகளுக்கு காரணமாகையாலும் அவர்கள் நம் நாட்டுக்கு வந்த பின்புதான் இவ்வாறான மூடப்பழக்கங்களெல்லாம் அவர்களால் ஏற்பட்டதாகையாலும் அவர்களைத்தான் முதலில் குறை கூற வேண்டியிருக்கின்றது. இவர்கள் நிலைக்க வைத்த மதம் ஆசாரம் முதலிய வைகளை நாம் முதலில் ஒழித்தால்தான் நமக்கு சுயமரியாதையும் அதன் மூலம் சுயராஜ்யமும் கிடைக்கும். இன்னும் சடங்குகளின் பேரால் நாம் பிராமணருக்குக் கொடுப்பதுதான் மோட்சம் என்று நினைத்து ஏராளமான பணத்தைச் செலவிடுகிறோம். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை ஏழை கட்கும் அங்கஹீனர்களுக்கும் கஷ்டப்பட முடியாதவர்களுக்கும் உதவாமல் சோம்பேரிகளாகிய இவர்களுக்கா தர்மம் செய்வது. சற்று யோசித்து இதில் ஏதேனும் புண்ணியம் இருப்பதாகப் படுகின்றதா என்று பாருங்கள். இதெல் லாம் அறிவீனத்தையும் நமது சுயமரியாதை இன்மையையுமே காட்டுகின்றது தர்மம் செய்ய வேண்டியது அவசியம்தான். ஆனால் தகுதியை கருதி நாம் அதை நடத்த வேண்டும். அவ்வகையில் நாம் நடந்து வந்தால்தான் நமக்கு கதி மோட்சம் உண்டு. ஆகவே, சகோதரர்களே! இந்த மூட நம்பிக்கைகளை எல்லாம் உதறித்தள்ளி நீங்கள் சுயமரியாதைக்குப் பாடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு : 22.11.27 பேராவூரணியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடு – தலைமை உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 18.12.1927