ஸ்ரீ சு.மு. ஷண்முகம் செட்டியார் கவனிப்பாரா?
காங்கிரஸ் கிரீட் என்னும் முக்கிய கொள்கையில் ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பதையும் ஒரு கொள்கையாகத் திருத்த வேண்டு மென்று காங்கிரசுக்கு சிபார்சு செய்வதாக சேலம் மகாநாட்டில் தீர்மானித்த தீர்மானத்தை காங்கிரசில் பிரேரேபிப்பதாய் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் ஒப்புக் கொண்ட படி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் பிரேரேபணை கொண்டு வருவாரா? என்று கேட்கின்றோம்.
இப்பிரேரேபணை காங்கிரசில் நிறைவேறாது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும், நிறைவேறினாலும் அதனாலேயே பிரமாதமான பலன் ஏற்பட்டுவிடாது என்பது உறுதியானாலும் மக்களுக்குள் சமத்துவம் ஏற்பட வேண்டியது காங்கிரசின் நோக்கமல்ல என்பதையும், சுயராஜ்யம், சுயராஜ்யம் என்று சொல்லி படித்தவர்கள் உத்தியோகம் பெறவேண்டியதுதான் அதன் நோக்கம் என்பதையும் ருஜுவாக்க இதுவும் ஒரு சந்தர்ப்பமாகுமே என்கின்ற ஆசையால்தான் இதை ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கு ஞாபகமூட்டி கவனிக்கும்படி வேண்டுகின்றோம்.
குடி அரசு – வேண்டுகோள் – 25.12.1927