திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை சங்க மகாநாடு வைபவம் ஊர்வலமும் கூட்டத்தில் குதூகலமும்
இவ்வாண்டுவிழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவெண்டுமென்று எண்ணினேனோ அதை மறக்கச் செய்தது. அவர்களுக்கு என்னிடமும் எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன்மையும், அளவுக்கு மீறி என்னை புகழச் செய்தது. அப் புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல. ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும். இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன்.
இயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப்பதாகவும் எண்ண இடமில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும் இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்துவருவதை கண்டு மிக தைரியங்கொண்டு அந்த ஆசையின் மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டிருக்கிறேன். ‘குடி அரசை’ப் பற்றி மிக அதிகமாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்றமெல்லாம் எனக்குத் தெரியும் அதில் உள்ள மெல்லின வல்லினம் போன்ற பல இலக்கணப் பிழைகளும் மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக்கணம் கற்கப் போவதில்லை. இவ்வாண்டுவிழாவுக்கு எனக்கு கடிதம் அனுப்பாவிட்டாலும் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவேன். இந்த நிலையில் உள்ள என்னையே தலைமை வகிக்க வேண்டுமென்று கூறியது எனது பாக்கியமேயாகும். சிறந்த கல்வியாளர்களும் பெரியார்களும் நிறைந்த இந்த ஜில்லாவாசிகளான நீங்கள் இவ்வியக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு காட்டி வருவதைக் கண்டு நான் பெருமை அடைவது மட்டுமல்ல, மற்ற ஜில்லாவாசிகளும் உங்களுடன் போட்டியிட்டு தங்கள் சுயமரியாதையை நிலை நிறுத்துவதில் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டுமென்று மீண்டும் அறிவித்துக் கொள்ளுகிறேன்.
சுயமரியாதை இயக்கமென்றோரியக்கம் தோன்றிய காலத்தில் பலர் பல பல விதமாகப் பேசியதுண்டு. ஆனால் இப்பொழுதோவெனில் இவ் வியக்கம் பலரால் ஒப்புக் கொள்ளக்கூடியதாயும் மனிதனுடைய வாழ்விற்கும் உலக முற்போக்குக்கும் இன்றியமையாததென நம்மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். உணர்ந்தும் வருகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் சுயமரியாதைப் பேச்சாகத்தானிருக்கிறது. நம்நாடு வெளிநாடு தேசீய வாதிகளுங்கூட இச்சுயமரியாதையென்னும் வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஸ்ரீ காந்தியும் சுயமரியாதையைப் பற்றி பேசுகிறார். ஒத்துழையாமையே சுயமரியாதைக்காக ஆரம்பித்ததே ஒழிய சுயராஜ்யத் திற்காக அல்ல. இப்பொழுது கொஞ்ச காலமாய் நமது நாட்டில் நடந்து வரும் ராயல் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற கூச்சல் கூட சுயமரியாதைக்காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.
இச்சுயமரியாதைச் சங்கத்தின் கொள்கைகள் என்னவெனிலோ, பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்பதும், மேல் கீழ் இல்லையென்பதும் தானேயல்லாமல் எந்தத் தனி வகுப்பாரையும் இழிவுபடுத்த வில்லை யென்பதையும் உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன். ஆனால் நம்நாட்டுப் பார்ப்பனர் கள் தங்களை ஏதோ துவேஷிப்பதாகக் கூறி வருகின்ற னர். இது அக்கூட்டத் தாரின் யோசனையின்மையாலும் பேராசையாலுமே ஏற்படுகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற வர்களுக்கும் நமக்கும் சுயமரியாதை தத்துவம் எவ்வளவு பயன்படுகிறதோ அதைவிட அதிகமாக பார்ப்பனர்களுக்கும் பயனுண்டு.
பார்ப்பனரல்லாதாராகிய நாம் எவ்வளவு தூரம் இழிவுப் படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோமோ அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் சுகம் அனுபவித்து வருகிறார்கள். நாம் எவ்வளவுக் கெவ்வளவு கொடுமையுடன் நடத்தப்படுகின்றோமோ அவ்வளவுக் கவ்வளவு அவர்களுக்கு நன்மை யாகவே இருக்கிறது. இவ்வியக்கத்தின் பயனால் நாம் மாத்திரம் சுகப்படுவதல்லாமல் பார்ப்பனர்களும் இதன் மூலமாய் தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுகிறவர்களாகிறார்கள். உண்மையாக கடைசியாக இவ் வியக்கத்தால் யாருக்காவது கடுகளவாவது துன்பம் நேரிடுமா என்றால் இல்லவே இல்லை. ஆனால் அரசாங்கத்தாருக்கு மாத்திரம் கொஞ்ச காலத் திற்கு கஷ்டமாகத்தானிருக்கும். ஏனெனில் நாம் எவ்வளவு தூரம் சுய மரியாதையற்றிருக்கின்றோமோ அவ்வளவு தூரம் நம்மை இழிவுபடுத்தி நம்மிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்குங்கூட கொஞ்ச நாளைக்குள் புத்தி வந்துவிடும். எத்தனை நாளைக்குத்தான் தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதென்று சொல்லி விலகி விடுவார்கள். பின்னர் யாரும் சுதந்திரத்துடன் வாழலாம். ஆகையால், வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கும் சுயமரியாதையே அடிப்படை யானது. இதைப் பற்றி எத்தனையோ பெரியார்கள் கூறியிருக்கின்றனர். “கவரிமான் ஒரு மயிரிழப்பின் உயிர் வாழாது” என்பதுபோல் மனிதனும் மானமழிந்து வாழவிரும்பான். ஆகவே, நம் மானத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மனிதத் தன்மையோடிசைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்றால் சுயமரியாதைத்தான் வேண்டற் பாலது. இப்பொழுது மணி 12 ஆகிவிட்டது. மீண்டும் மாலையில் இம்மகாநாடு கூட வேண்டியிருப்பதால் இத்துடன் எனது பிரசங்கத்தை முடித்துக் கொள்வதுடன் எனக்கு அன்புடன் இவ்வக்கிராசனப் பதவியை அளித்த அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்திக் கொள்ளுகிறேன்.
குறிப்பு : 28.11.27 திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாடு- தலைமைஉரை.
குடி அரசு – சொற்பொழிவு – 04.12.1927