திராவிடர் கழகம் கோவிற்பட்டி 18 – வது ஆண்டு நிறைவு விழா
தலைமை முன்னுரை
அன்பர்களே!
நமது நண்பரும் அரசியல் தலைவருமான திருவாளர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் என்னைப்பற்றி சொல்லியவைகள் யாவும் என்னிடம் உள்ள அன்பினால் அல்லாது அவ்வளவு உண்மை யென்று தாங்கள் நம்பிவிடக்கூடாதென்று தங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். என்னை அவர் தலைவர் என்று சொன்னதற்கு ஆக நான் மிகுதியும் வெட்கப்படு கிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய பெரும் கிளர்ச்சி யின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றாரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன். அன்றியும் நான் சிவஞான யோகிகள் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திர வாக்கியங்களுக்கும் நான் ஒரு சிறிதும் பொருத்த முடையவன் அல்லன். ஆகிலும் அப்பத்திரத்தில் எனது கொள்கைகளை புகழ்ந் திருக்கும் விஷயங்களைப் பொருத்தவரை அக்கொள்கைக்கு அதை ஒரு நற்சாக்ஷிப் பத்திரமாக எடுத்துக் கொண்டு அதற்காக எனது நன்றியை செலுத்துகின்றேன்.
இத்திராவிட சங்கம் 18-வது ஆண்டுவிழா என்று சொல்லப் படுவதால் இதற்கு 18 ஆண்டு முடிந்திருக்கிறது. நமது நாட்டில் திராவிடர் முன்னேற்ற சம்பந்தமாய் ஏதாவது இயக்கங்களின் மூலம் பேசுவதாயிருந்தால் நமது எதிரிகள் உத்தியோகத்திற்கு ஆசைப்பட்ட யாரோ சில பார்ப்பனரல்லாதாரால் சமீபத்தில் திராவிடர்கள் பெயரை சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சுயநல இயக்கமென்று சொல்லி வருவது உங்களுக்குத் தெரியும். ஆனால் இக்கழகம் அப்பேர்ப்பட்டவர்களால் ஆக்கப்பட்டதா என்பதும் சுவாமி சிவஞான யோகிகள் ஏதாவது உத்தியோகம் ஆக்கப்பட்டு கிடைக்காமல் போனதற்காக ஆரம்பித்தாரா என்பதையும் அவருக்கு ஏதாவது உத்தியோகம் வேண்டியிருக்கிறதா என்பதையும் திருவள்ளுவருக்கு உத்தியோகம் வேண்டியிருந்ததா, புத்தருக்கு உத்தியோகம் வேண்டியிருந் ததா, கபிலருக்கு உத்தியோகம் வேண்டியிருந்ததா, அவ்வைக்கு உத்தியோகம் வேண்டியிருந்ததா என்பதையும் யோசித்துப் பாருங்கள். அன்றியும் சுவாமி சிவஞ்ஞான யோகிகள் காலத்தில் மாத்திரம், இம்மாதிரி முயற்சிகள் தோன்றிற்று என்பதாக நினைக்கிறீர்களா? என்று இந்த நாட்டில் ஆரியர்கள் கால் வைத்தார்களோ அன்று முதலே ஆரியர், திராவிடர் என்கிற வேற்றுமையும் ஆரியர் சங்கம், திராவிடர் சங்கம் என்கிற இயக்கங்களும் சுயமரியாதைக் கிளர்ச்சி களும் நாட்டில் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதுகளை எவ்வளவோ பாடுபட்டு நமது எதிரிகள் மறைக்க முயன்றாலும் இயற்கைத் தத்துவம் மறைக்க முடியாமல் செய்து வருகிறது. எதுவரையில் ஆரியர் வேதம் என்பது நமது நாட்டில் இருக்குமோ எதுவரை ஆரியர் ஆதிக்கம், ஆரிய தர்ம பிரசாரச் சபை, வருணாஸ்ரம தர்ம பிரசார சபை நமது நாட்டில் இருக்குமோ அதுவரை நமது இயக்கம் அதாவது திராவிடர் முன்னேற்ற இயக்கம், சுயமரியாதை இயக்கம், சமரச இயக்கம் இருந்து தீர வேண்டியது தான். சமீப காலத்தில் ஆரியர்கள் தஞ்சை ஜில்லா தூவார் என்கிற கிராமத்தில் கூட்டப்பட்ட “பிராமண சம்மேளனம்” என்னும் கூட்டத்தையும் அதன் நடவடிக்கைகளையும் பார்த்தவர்களுக்கு இம்மாதிரி இருக்கப்பட்ட சங்கங் கள் அவசியமா இல்லையா என்பது யாவருக்கும் தெரிந்திருக்கும். மேலும் நமது நாட்டில் மத மடங்கிய வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் முதலியவைகளின் பேரால் ஆரியப் பிரசாரம் செய்து வரும் வரையில் நாம் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபட்டு இருந்து தீர வேண்டியது தான். எனவே இம்முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென்று பிரார்த்திப்பதுடன் எனது முகவுரையை நிறுத்திவிட்டு மற்றும் நான் ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏற்பட்டால் அவற்றை எனது முடிவுரையில் சொல்லிக் கொள்கிறேன்.
நிறைவுரை :
சகோதரர்களே!
தேசத்தின் பேரால் முன் தொண்டு செய்ய வந்த நான் இப்போது சமயத்தின் பேராலும், சடங்குகள் பேராலும் தொண்டு செய்ய வந்ததைப் பார்க்க உங்களில் சிலருக்கு ஆச்சரியம் வரலாம். ஆனால் உண்மையில் இது ஆச்சர்யப்படத்தக்கதல்ல. முன்னமேயுள்ள என் கொள்கைகளும் இப்போ துள்ள என் கொள்கைகளும் ஒன்றே தான். இரண்டும் நம் மக்களை அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்க வேண்டிய விடுதலை தான். நம் மக்களுடைய சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் இடையூறாயிருப்பது சர்க் கார் மாத்திரமல்லாமல் நம் சமயமும் சடங்குகளுமாம். தேசத்திற்கு ஒத்தில் லாத ராஜியத்தில் கஷ்டப்பட்டு இவ்வளவு காலம் அடிமையாயிருந்த நாடு நம் நாட்டைப் போல் வேறெந்த நாடும் இல்லை. காரணம் குருட்டு நம்பிக்கை, மூட பக்தி, சுயமரியாதையற்ற நிலைமை இவைகளால் நிறைந்து நம் சமயம் போல் அடிமைப்படுத்தி இருக்கும் சமயமும் வேறு எதுவுமில்லை. முன் ஒரு காலத்தில் கிறிஸ்து மதமும் இந்த அடிமைத்தனத்தில் அகப்பட்டிருந்தது. குருக்கள் பாவமன்னிப்பு சீட்டுக்கள் விற்று ஜனசமூகத்தை அடிமைகளாக்கி வந்தனர். ஆனால் சீக்கிரம் சீர்திருத்தக்காரர்கள் ஏற்பட்டு தங்களுக்குச் செய்த கொடுமைகட்கும் பயப்படாமல் இம்மூடக்கொள்கைகளை உடைத்தனர். ஜனசமூகம் விடுதலை அடைந்தது, நாடு மேம்பட்டது. அது பற்றி இப் போதுள்ள கிறிஸ்துவ நாடுகளின் பெருமை இந்த சீர்திருத்தக்காரர்களுக்கே சேரும்.
இனி நம்முடைய சமயத்தில் எடுத்துக் கொள்வோம். மற்ற சமயங் களின் ஆதாரமான குரான், பைபிள் முதலிய புஸ்தகங்களை எல்லோரும் படிக்கலாம். நம்முடைய சமய ஆதாரமான வேதங்களையோ ஒரு வகுப்பார் தவிர மற்றவர் படிக்கக்கூடாது, கேட்கக் கூடாது. படித்தால் நாக்கை அறுக்க வேண்டும். கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். ஏன் அய்யா இப்படிச் செய்யலாமா என்று கேட்டால் அது மதத் துவேஷம், ஜாதித் துவேஷம் ஆகி விடுகிறது.
கடவுள் வழிபாடோ, தரகர் இல்லாமல் செய்ய முடியாது. நம் சாமிக்குப் பக்கத்தில் நாம் போனால் சாமி செத்துப்போவார். சில வகுப்பார் 10 முழத்தில் சில வகுப்பார் 100 முழத்தில் நிற்க வேண்டும். சில வகுப்பார் கண்களுக்கே தென்படக்கூடாது சில வகுப்பார் மதிலைக் கூட பார்க்கக் கூடாது. இல்லா விட்டால் அவருக்குத் துன்பம். நம் பாஷை சாமிக்குத் தெரியாது. தரகர் இல்லாமல் காரியம் நடக்காது. தரகர் பாஷைதான் அவருக்குத் தெரியும். சர்க்கார் செய்கைகளுக்கோ நல்லதாயினும் கெட்டதாயினும் ஒரு சட்டம் உண்டு. சர்க்கார் வரிகள் எல்லாவற்றிற்கும் ஒரு சட்டம் உண்டு. ஆனால் நம் மதத்தின் பேரால் ஏற்படுத்தி வசூல் செய்யும் வரிக்குச் சட்டம் இல்லை.
சர்க்கார் வசூலிக்கும் வரிக்குக் கணக்கு உண்டு. மதத்தின் பேரால் வசூலிக்கும் வரிக்கு கணக்கு இல்லை. ஒவ்வொரு கோவில்களிலும் செலுத்தப்படும் வரி லட்சக்கணக்காய் முடிகிறது. பலன் ஒன்றுமில்லை. மகம்மதியர் கிறிஸ்தவர் கோவிலில் மதப் பிரசாரம் உண்டு. நம் கோவில் களில் வரி கொடுப்பவருக்கு மதப் பிரசாரமேனும் கிடையாது.
இனி மடாதிபதிகளோ கேட்க வேண்டியதில்லை. அவர்களுக்கு முன் விடப்பட்ட சொத்துக்கள் மதப் பிரசாரத்திற்காக. இப்போது அவற்றின் வரும் படி போவதோ கூடா ஒழுக்கங்கட்கும் ஒரு வகுப்பைச் சேர்ந்த வாயாடி வக்கீல்கட்கும். அவர்கள்தான் போகட்டும். சமய ஆச்சாரியார்களோ, லோக குருக்களோ அவர்கள் ஊர் ஊராய்த் திரிந்து ‘அந்தப் பதி’ ‘இந்தப் பதி’ என்று பட்டங்கள் விற்று நூறு, ஆயிரக்கணக்காய் பணம் தட்டி ஒரு வகுப்பாருக்கே சமராதனை செய்ய வேண்டியது. அவர்கள் தான் போகட்டும். குலகுருக் களோ அவர்களுடைய ஜோலி தட்சனை வசூல் ஒன்றுதான்.
நம்முடைய சமயம் இவ்வளவு சீர் கேட்டில் இருக்க இவைகள் ஒன்றையும் பற்றிக் கேட்கவில்லை. வரவிற்கு கணக்கு மாத்திரம் கொடு என்று கேட்க ஒரு இந்துமத தேவஸ்தான சட்டத்தை ஏற்படுத்தினால் அது பொல்லாப்பு. “ஜஸ்டிஸ் கட்சியார் நம் மதத்தையே கெடுத்து விட்டார்கள்” என்று ஊரெல்லாம் தூற்றுகிறது. ஜன சமூகத்தில் அவர்கள் மேல் வெறுப்பை உண்டாக்குகிறது. ஒரு ஆற்று வெள்ளத்தில் பட்டு போன நரி ஐயோ உலகமே போய்விட்டது உலகமே போய்விட்டது என்றதாம். ஒருவன் இது என்ன ஆச்சர்யம் என்று எண்ணி அதை எடுத்துக் கரையில் விட்டு என்ன உலகமே போய்விட்டது என்கிறாய்? என நரி “ஆம் நீ என்னை வெள்ளத்திலிருந்து விடுவிக்காவிட்டால் எனக்கு உலகமே போய்விட்டதல்லவா?” என்று சொல்லி ஓடிப் போயிற்றாம். அது போல் ஒரு வகுப்பாருக்கு வரும்படி குறைந்து விடுமானால் ஆம் அவருக்கு மதம் கெட்டுப் போய்விட்டதுதான்.
சமயம் இம்மட்டில் இனி சடங்குகளை எடுத்துக் கொள்வோம். அவைகளினுடைய பலன் ஒரு கூட்டத்தார் வயிர் வளர்க்க மற்றவர்கள் எல்லாம் உயிர் போகும்படி உழைக்க வேண்டியதுதான்.
நாம் பிறந்தது முதல் ஒவ்வொரு சுபகாரியத்திற்கும், ஒவ்வொரு அசுப காரியத்திற்கும் ஒரு கூட்டத்தாரைக் கூப்பிட்டு, அவர்களுக்கு வரி கொடுத்து அவரை வணங்க வேண்டும். அவர்களுக்கு அப்படி செய்யாவிட்டால் நமக்கு கடவுள் நன்மை கிடையாது. அவர்கள் மாத்திரம் இல்லாமல் ஒன்றும் நடக்காது. கல்யாண வீட்டில் அவர் சாவு மந்திரத்தைச் சொன்னாலும் அது நமக்கு அக்கரையல்ல. அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை நாம் அவர்களுக்குக் கொடுத்தே தீரவேண்டுமாம். நம் காசால் அவர்கள் வயிறு வளர்த்து படித்து, வேலைக்கு வந்து, நம்மை மிதிக்க வேண்டும். இதுதான் சடங்காம்.
தானங் கொடுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் வறியவர்க்குக் கொடுக்க வேண்டும். யோக்கியர்க்குக் கொடுக்க வேண்டும். “அப்படிக்கில்லாமல் ஒரு கூட்டத்தாருக்கே கொடுக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு அயோக்கியர்களாக இருந்தாலும் சரி” என்பது மூடத்தனம். நாம் அவர்களுக்கு கொடுக்காவிட்டாலும் அவர்கள் பட்டினி இருந்து கெட்டுப் போய் விடமாட்டார்கள். நமக்குப் பாவம் ஒன்றும் வந்து விடாது. அப்படிச் செய்தால் அவர்களும் சீக்கிரம் சீர்திருந்தி சோம்பலை விடுத்து தேகத்தை உழைத்துச் சம்பாதிக்கப் பழகிக் கொள்வார்கள். கிழிந்த பஞ்சாங்கத்தையும் காய்ந்த தெர்ப்பைப் புல்லையும் ஜெயிக்க முடியாத நமக்கு எப்போது விடுதலை! இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து நாம் நம் மக்களை விடுவிக்க வேண்டும். ராஜரீய முயற்சிகளால் சிறுபாலோருக்கும் உத்தியோகம் கிடைக்குமானால் பெரும்பாலோரான ஜன சமூகத்திற்கு வரிகள் அதிகமாகும். இது நாம் கண்டறிந்த விஷயம். காங்கிரஸ் சபை வரு முன் இரண்டு மெம்பர் களால் நடந்த ராஜரீய காரியங்களையே இப்போது நான்கு மெம்பர்களும் மூன்று மந்திரிகளும் நிர்வாகித்து வருகிறார்கள். அதனால் செலவு மாத்திரம் அதிகம், வரி அதிகம். காங்கிரஸ் முயற்சியால் வரும் நன்மை, உத்தி யோகங்கள் அந்த நன்மை சிலருக்கே அதனால் பலருக்கும் கிடைப்பது வரி அதிகம் என்பது தான். ஆதலால் “சமயச் சடங்குகள்” இவைகளிலுள்ள மூட விசுவாசங்களிலிருந்தும், குருட்டு நம்பிக்கைகளிலிருந்தும், கட்டுப்பாடு களிலிருந்தும், ஜன சமூகத்தை விடுவித்து நம் மக்களை சுதந்தரத்திற்கும் சுயமரியாதைக்கும் அருகராக்குவதே உண்மையில் மேன்மையான முயற்சி யாகும். அதுவே சுய ஆட்சியைக் கொடுப்பதும் ஆகும்.
குறிப்பு : கோவில்பட்டி போர்டு ஹைஸ்கூல் கட்டிடத்தில் 19. 6. 27 அன்று நடை பெற்ற திராவிடர் கழக 18 – வது ஆண்டு நிறைவு விழா சொற்பொழிவு.
குடி அரசு – சொற்பொழிவு – 26.06.1927