“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் -II
மேல்கண்ட தலையங்கமிட்டு சென்ற வாரம் நான் எழுதிய விஷயங் களுக்கு மறுபடியும் 6-6-27 தேதி “தமிழ்நாடு” பத்திரிகையில் பதில் எழுதுமுகத்தான் சில விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்பதிலின் தன்மையைப் பற்றி விவகரிக்கு முன்பாக அப்பத்திரிகை ஏதாவது ஒரு சமாதானம் எழுத முன்வந்ததற்காக அதைப் பாராட்டுவதுடன் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இதுவரை ஒரு பத்திரிகையாவது காங்கி ரசைப் பற்றி இவ்வளவு நாளாக நான் எழுதிக்கொண்டு வந்த விஷயங் களுக்கு பதில் என்பதாக ஒரு வரி கூட எழுத முன்வராமல் வழக்கம் போல் தங்கள் தங்கள் “தேசாபிமானப் பிரசாரத்தை” நடத்திக்கொண்டும் பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தை வைது கொண்டுமே வந்திருக்கின்றன. ஆனால் காரைக்குடி “ஊழியன்” பத்திரிகை கூட ஒரு சமயத்தில் நம்மைப்பற்றி “சுயமரியாதைப் பிரசாரம் செய்வது தேசத்திற்கு ஆபத்து” என்று மாத்திரம் எழுதிற்றே அல்லாமல் காங்கிரசைப் பற்றி நாம் எழுதியதற்கு பதில் ஒன்றும் எழுதவில்லை. “தமிழ்நாடு” துணிந்து எழுத முன் வந்து விட்டதால் இனி ஒரு சமயம் எல்லாப் பத்திரிகைகளும் எழுத முன்வந்தாலும் வரலாம். ஆனாலும் இம்மாதிரி யாராவது சமாதானம் சொல்ல வருவதன் மூலமாகத் தான் அவ்விஷயங்களை இன்னமும் பாமர மக்கள் நன்றாய் அறியும்படி செய்ய சவுகரியங்கள் ஏற்படும். இல்லாவிட்டால் ஒருதலைபக்ஷமாக நான் எழுதுவதாய் பிறர் நினைக்க ஏது உண்டாகலாம். அதனால் தான் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டேன்.
பதில் எழுத முன் வந்த “தமிழ்நாடு” பத்திரிகையானது நான் எழுதிய சமாதானங்களை தனது பத்திரிகையில் எடுத்துப் போட்டு முறையே நான் எழுதி வருவது போல் எழுதியிருந்தால் அது இன்னமும் கொஞ்சம் பாராட்டத் தக்கதாக இருந்திருக்கும் என்பதுடன் எனது சமாதானத்திற்கும் நியாயம் செய்ததாகும். அப்படிக்கில்லாமல் “குடிஅரசு சமாதானத்தைப் பார்த்து எந்த தேசீயவாதியும் வருந்தாமலிருக்க முடியாது” என்றும் “இம்மாதிரி ஒரு தேசத்திற்குரிய பெரிய தேசீய ஸ்தாபனத்தை முறை தவறிப் பழித்து விட விரும்பினால் இதை யார்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்” என்றும் வீர கர்ஜனை செய்து எழுதியிருக்கிறது. “சாப்பாட்டுக்கு பந்தியிலே உட்காரக் கூடாது என்று தடைப்படுத்தப்பட்ட ஒருவன் இலை ஓட்டை யாயிருக்கிறது” என்று சொல்லுவதில் என்ன பிரயோஜனம். அது போலவே “தேசீயம்” என்பதும் “தேசீய ஸ்தாபனம்” என்பதும் அஸ்திவாரத்திலிருந்தே புரட்டு என்றும் சிலர் வயிற்றுப் பிழைப்புக்கும் உத்தியோகத்திற்குமென்றே ஏற்பட்டதென்றும் நமது நாட்டு பெரும்பான்மை மக்களான அதாவது 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட ஜன சமூகத்திற்கு கொஞ்சமும் நன்மை தரத்தக்கதல்லாததோடு பெருங் கெடுதி தரத்தக்கதென்றும் நான் கணக்குப் புள்ளிகளுடன் விளக்கி எழுதி வரும் போது அவைகளுக்கு முதலில் கொஞ்சமாவது விபரமாகச் சமாதானம் சொல்லாமல், எவ்விதம் பார்ப்பனர்கள் அவர்களின் புரட்டுகளை எடுத்துச் சொன்னால் “மதம் போச்சுது,” “மத ஸ்தாபனம் போச்சுது,” “நாஸ்திகத்தனம் ஆச்சுது” என்று சொல்லுகி றார்களோ அதுபோல் படித்த கூட்டத்தார், பணக்காரக் கூட்டத்தார் ஆகிய வர்களின் புரட்டுகளை எடுத்துச் சொன்னால் “தேசம் போச்சுது”, “தேசீய ஸ்தாபனம் போச்சுது”, “தேசத் துரோகம் ஆச்சுது” என்று சொல்லுவதால் அதற்குப் பயந்து கொண்டு உண்மையை வெளிப்படுத்தாமல் இருக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டுகிறேன்.
“சமூக சமத்துவத்தையும், சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் காங்கிரசின் மூலம் அடையாதபடி தென்னாட்டுப் பார்ப்பனர் செய்கிற கொடுமையை சகிக்க முடியாமல் நாயக்கர் இம்மாதிரி எழுதுகிறாரே அன்றி தாமே முன்னின்று பிரசாரம் செய்து சிறைச் சென்று கவுரவப்படுத்திய காங்கிரஸ் மகாசபையை வேண்டுமென்று தூஷிப்பதாக நாம் நினைக்க வில்லை” என்று “தமிழ்நாடு” பத்திரிகை எழுதி இருக்கிறது.
இந்த இடத்தில்தான் பொதுஜனங்கள் கொஞ்சம் நன்றாய் கவனம் செலுத்திப் பார்க்க வேண்டும். என்னவென்றால் நான் இப்போது காங்கிரசைக் கைப்பற்றியிருக்கும் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் செய்கையை மாத்திரம் கண்டிக்கவில்லை. மற்றும் காங்கிரசின் நடைமுறைகளை மாத்திரம் நான் கண்டிக்கவில்லை. நான் கண்டிப்பது காங்கிரசின் அஸ்திவாரத்தையே – அதன் அடிப்படை தத்துவத்தையே கண்டிக்கிறேன். காங்கிரசை உண்டாக் கினவர்களே அவர்கள் யாராயிருந்தாலும் வெள்ளைக்காரர்கள் உள்பட உத்தியோகமும் அதிகாரமும் சம்பாதனையும் பெறவேண்டிய கூட்டத்தார்கள் என்றும், பெரிதும் அதே நோக்கத்தோடு ஏற்படுத்தி அது ஏற்பட்ட நாள் தொட்டு நாளதுவரையும் அவர்கள் அதே காரியத்தில் வெற்றி பெற்றும் வந்திருக்கிறார்களே ஒழிய தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மாத்திரம் இந்த காரியத்திற்கு முழுப் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும் யாவரும் உணர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறேன். இந்த 40 வருஷங்களாக காங்கிரஸ் பிரதிநிதிகள் யார் என்பதைக் கணக்குப் போட்டு பாருங்கள். அதன் தலைவர்கள் யார் என்பதைக் குறிப்பிட்டுப் பாருங்கள். அதன் நிர்வாகி யாராயிருந்து வந்திருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். இவர்களில் யாராவது இந்திய நாட்டின் 100 – க்கு 95 வீதம் உள்ள மக்கள் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்டவர்களா? என்று யோசித்துப் பாருங்கள். இது மாத்திரமல்ல இதுவரை காங்கிரசில் செய்து வந்த தீர்மானங்களையும் அத் தீர்மானங்களின் பலனாய் ஏற்பட்ட சீர்திருத்தங்களையும் அதன் அனுபவங் களையும் ஒவ்வொன்றாய் உங்கள் சொந்தப் பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பாருங்கள். தேசத்தைக் காட்டிக் கொடுத்து வாழவேண்டியதான ஆங்கிலக் கல்வி கற்றவர்களும், தேசத்தைப் பாழாக்கி வாழ வேண்டியவர் களான வக்கீல்களும், கூலிக்காரர்களையும், தொழிலாளிகளையும், குடியான வர்களையும், விவசாயிகளையும் வதைத்து வாழவேண்டியவர்களான முதலாளிகளும், நிலச்சுவான்தாரர்களுமே பிரதிநிதிகளாயுள்ள ஒரு கூட்டம் அல்லது அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனம் 100-க்கு 90 பேர்களா யுள்ள அவர்களல்லாத மேல்கண்ட மக்களுக்கு எவ்விதத்தில் பிரதிநிதி சபையாகும்? பிரதிநிதி ஸ்தாபனமாகும்? என்று கேழ்க்கிறேன். இப்போது “இந்துக்கள்” எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லப்படும் வர்ணா ஸ்ரம தர்மபரிபாலன சபை, எனக்கும் ஸ்ரீ வரதராஜுலுவுக்கும் ஸ்ரீ கல்யாண சுந்திர முதலியாருக்கும் பிரதிநிதி சபையாகுமா? அதைக் கூட்டி நடத்தும் ஒரு சிலர்கள் அந்த ஸ்தாபனத்தை இந்தியாவில் உள்ள 24 கோடி “இந்துக் களுக்கு” பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டும் இந்து வேதம், சாஸ்திரம், புராணம் என்பதுகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டும் நடத்துவதாக வேதான் சொல்லிக் கொள்ளுகிறார்கள். வழக்கமும் சட்டமும் கூட அதை ஒப்புக் கொள்ளுகிறது. ஸ்ரீமான்கள் ஜயவேலு, முத்துரங்க முதலியார், ஆதி நாராயண செட்டியார், ஓ. கந்தசாமி செட்டியார் போன்ற சில கனவான்கள் அதை இந்துக்களின் பிரதிநிதி சபை என்றும் ஒப்புக்கொள்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதனாலேயே ஸ்ரீமான்கள் வரதராஜுலு, வீரய்யன், எம். சி. ராஜா, நான் முதலியவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதுதானா? ஒரு சபையின் பெயர் பிரதானமா? அல்லது கொள்கையும், நடவடிக்கையும், நடத்தும் ஆசாமிகளும் பிரதானமா? என்பதை நன்றாய் யோசித்துப் பார்க்க வேண்டும். நமது மாகாணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் எனக்குத் தெரிந்த வரையில் 4 கனவான்கள் பெயர் ஞாபகத்திற்கு வருகிறது. ஸ்ரீமான்கள் சங்கர் நாயர், மணி அய்யர், விஜயராகவாச்சாரியார், சீனிவாசய்யங்கார். இவர்களின் யோக்கியதை என்ன? நான்கு பேர்களும் எந்த விதத்தில் தேச மக்களுக்கு பிரதிநிதியானவர்கள். இவர்களின் தொழில் என்ன? இவர்களின் காலnக்ஷபம் என்ன? ஏழை மக்களை வஞ்சித்து பாமர மக்களை ஏமாற்றி தாங்கள் மாதம் 1000, 5000, 10000, 20000 என்பதாகக் கொள்ளையடித்து எந்த சர்க்காரைக் கண்டிப்பது போலும், வைவது போலும், ஒழிப்பது போலும் வேஷம் போட்டு நம்மை ஏமாற்றுகிறார்களோ அந்த சர்க்காருக்கு அபிமான புத்திரர்களாக இருந்து நம்மைக் காட்டிக் கொடுத்து வாழ்ந்தவர்கள் – வாழ்பவர்கள் தானே அல்லாமல் வேறுண்டா? இவர்கள் பிள்ளைகுட்டி, மறுமக்கள், அண்ணன் தம்பி, மாமன் மைத்துனன் முதலியவர்களையும் சர்க்கார் தெய்வத்துக்கு ஒப்படைத்து அவர்களைக் கொண்டு நம்மைக் காட்டிக்கொடுத்து அச்சர்க் காரை வாழவைக்கும் முறையில் வயிறு வளர்க்கச் செய்திருக்கிறார்களே தவிர வேறு ஏதாவது நன்மையுண்டா? ஸ்ரீமான்கள் மணி அய்யர் தலைவரானார். அய்யர் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார். சங்கர நாயர் தலைவரானார். மலையாளிகளுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார். விஜயராகவாச்சாரியார் சீனிவாசய்யங்கார் தலைவர்களானார்கள். அனேக அய்யங்கார் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார்கள். சர். சி. பி. ராமசாமி அய்யர் காங்கிரஸ் காரியதரிசி ஆனார். இன்று அவரும் 5500 ரூ. சம்பளம் வாங்கிக் கொண்டு சமையல்காரப் பார்ப்பனர் மக்கள், பஞ்சாங்கப் பார்ப்பான் மக்கள், தூதுவப் பார்ப்பனர் மக்கள் வரையில் ஐகோர்ட் ஜட்ஜி, ஜில்லா ஜட்ஜி, சப் ஜட்ஜி, சூப்பிரென்டெண்ட் முதலிய பணம் கொழிக்கும் உத்தியோகங்கள் கொடுத்தார். ஸ்ரீ ரங்கசாமி அய்யங்கார் காங்கிரஸ் காரியதரிசி ஆனார். அவர் தம்பி µ 2000 ரூபாய் வாங்குகிறார். அவர் சுற்றத்தார்கள் அதுபோலவே வாழ்கிறார்கள். ஸ்ரீமான் ராஜ கோபாலாச்சாரியார் காரியதரிசியானார். இப்போது அவர் பேரால் அவர் சிபார் சால் எந்தெந்த உருப்படிகளோ அரசாங்கத்தில் உத்தியோகம் பெறுவதும், கதர் இலாகாவில் வயிறு வளர்ப்பதுமாய் நடைபெற்று வருகிறது. இனியும் ஸ்ரீ நாயுடுவும், ஸ்ரீ கல்யாணசுந்திர முதலியாரும் பார்ப்பனரல்லாதாரைக் காங்கிரசில் சேர்த்து காங்கிரஸ் தலைமைப் பதவி பெற்று காங்கிரசை நடத்தினால் இதைவிட வேறு என்ன செய்துவிட முடியும்? எல்லாவற்றையும் விட ஒன்று கேழ்க்கிறேன். மகாத்மா காந்தி காங்கிரசில் சேர்ந்து நானும் என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான பைத்தியக்காரர்களும் அவருக்கு சிஷ்யர்களாக இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்தும் சிறை சென்றும் அதற்குத் தகுந்த என்ன காரியத்தைச் சாதிக்க முடிந்தது? இதற்கு பதில் யாராவது சொல்லட்டும். பல கெடுதிகள் ஏற்பட்ட தென்று சொல்லக் கூடியவர்களை தடுக்கக்கூட நமக்கு யோக்யதை இல்லை. மேலும் அப் பத்திரிகை “நாயக்கரே காங்கிரசில் சேர்ந்து உழைத்து பிரசாரம் செய்து ஜெயிலுக்கும் போய் வந்துவிட்டு அதே காங்கிரசை தூஷிக்கிறார்” என்று எழுதுகிறது. இது வாஸ்தவம். காங்கிரசைப் பற்றிய எனது பரீiக்ஷ முடிந்து விட்டது. மக்கள் தனது நாட்டிற்கு ஆக என்னென்ன செய்ய வேண்டுமென்று மகாத்மா சொன்னாரோ அவற்றை என்னால் கூடியவரை செய்து காட்டினேன். மகாத்மாவும் செய்து பார்த்து விட்டார். எங்களது கொள்கைக்கு காங்கிரசை உபயோகப்படுத்திப் பார்த்தோம். கண்ணியமாகவும் அதை நடத்தினோம். அதைக்கொண்டு நம் நாட்டை விடுதலை செய்விக்க முடியாது. அது விடுதலைக்கான ஸ்தாபனமல்ல. அடிமைத்தன்மைக்கு ஆன ஸ்தாபனம்தான் என்பதாக தீர்மானித்தாய் விட்டது. ஆதலால் அதை ஒழிக்க வேண்டியது நாட்டின் விடுதலையை எதிர்பார்ப்பவன் கடமை என்கிற முடிவுக்கு வந்து விட்டேன். காங்கிரஸ் ஒழிந்த மறுதினமே மகாத்மாவை சத்யாக்கிரக உலகத்தில் காணலாம், தியாக உலகத்தில் காணலாம், விடுதலை உலகத்தில் காணலாம். இது உறுதி என்று சொல்லுவேன். மகாத்மா காங்கிரசை விட்டு விலகும் போது என்ன சொன்னார்? என்பதைக் கவனியுங்கள். எனது நாட்டின் விடுதலைக்கு ஏற்ற கொள்கைகளைப் படித்த வகுப்பாரை ஒப்புக் கொள்ளும்படிச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலை கடவுள் எனக்குக் கொடுக்க வில்லை. ஆதலால் எனது கொள்கைகளை காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக் கொள்ளுகிறேன். என்னாலானதை நான் வெளியில் செய்து பார்க்கிறேன் என்று சொன்னதை ஸ்ரீமான்கள் நாயுடுவும் முதலியாரும் ஒப்புக்கொள்ளுகிறார்களா? ஆnக்ஷபிக்கிறார்களா? என்று கேழ்க்கிறேன்.
மகாத்மாவினால் திருப்தி செய்விக்க முடியாத படித்தவர்களது ஸ்தாபனமான பணம் சம்பாதிக்கும் காங்கிரசை ஸ்ரீமான்கள் நாயுடுகாரும், முதலியாரும் கைப்பற்றி மகாத்மா கொள்கைகளை அப்படிப் படித்தவர் களுக்குள் புகுத்தி காங்கிரசின் மூலம் விடுதலை சம்பாதித்துக் கொடுக்கப் போகிறார்களா? என்று கேழ்க்கிறேன். ஒருக்கால் ஸ்ரீமான் நாயுடுவும் முதலி யாரும் ஒப்புக்கொள்வதானாலும் வாசகர்களே! நீங்கள் முடியும் என்று நம்பு கிறீர்களா? என்று கேழ்க்கிறேன். தவிரவும் அப்பத்திரிகை எழுதுவதாவது சரித்திர ஆராய்ச்சியும் பிரதேச சுதந்திரக் கிளர்ச்சியின் அனுபோகமும் எனக்கு இல்லாததால் நான் இப்படி சொல்லுவதாய் மிகவும் தாக்ஷண்ணி யமான பாஷையில் எழுதியிருக்கிறது. பாஷையில் தாக்ஷண்ணியம் காட்டியதைப் பொருத்தவரை நான் நன்றியறிதலுள்ளவனாக இருக்கிறேன்.
கருத்தைப் பொருத்தவரையிலும் மாறுபடுவதற்கு மன்னிக்க வேண்டு கிறேன். இதற்கு ஆக ஒரு சிறுகதை சொல்லுகிறேன். ஒரு ஊரில் ஒருவன் வீட்டில் அவனது தாயார் இறந்துவிட்டாள். அதற்குத் துக்கம் விசாரிக்கப் போனவர்கள் அச்சிறுவனைப் பார்த்து “உன் தாயார் இறந்து போனதைப்பற்றி எங்களுக்கு மிகவும் துக்கமாக இருக்கிறது. அந்தம்மாள் உனக்கு மாத்திரம் தாயல்ல. எனக்கும் தாயாராயிருந்தாள். இந்த வீதிக்கே மற்றும் இந்த ஊருக்கே தாயாராயிருந்தாள். அப்பேர்பட்ட புண்ணியவதி போய் விட்டாளே என்று மிகவும் வருத்தப்படுகிறோம்” என்று ஆறுதல் சொன்னார்கள். அடுத்த வாரத்தில் பக்கத்து வீட்டிலுள்ள ஒருவரின் மனைவி இறந்து விட்டாள். இந்த வாலிபன் அந்நண்பர் வீட்டிற்கு துக்கத்தை விசாரிப்பதற்குச் சென்றவன், துக்கம் விசாரிக்கும் முறை இப்படித் தானாக்கும் என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்காரரைப் பார்த்து “அய்யோ உன் மனைவி இறந்து விட்டதைப் பற்றி நான் மிகவும் துக்கப் படுகிறேன். அப்புண்ணியவதி உனக்கு மாத்திரமா மனைவி என்று இருக்கிறாயா? எனக்கும் மனைவியாய் இருந்தாள், இந்த வீதியிலுள்ள எல்லாருக்கும் மனைவியாயிருந்தாள், இந்த ஊராரிலும் யாருக்கு வேண்டுமானாலும் மனைவியாயிருந்தாள். அப்பேர்பட்ட தர்மவதி இறந்து போனதற்கு நான் மாத்திரமல்ல இந்த ஊரார் எல்லோரும் துக்கப்படு கிறார்கள்” என்று சொன்னானாம். அது போல இருக்கிறது உலகத்தில் உள்ள மற்ற தேசக் கிளர்ச்சியை நமது இந்திய நாட்டுக்கு ஒப்பிட்டு அச்சரித்திரங்க ளின் படிப்பும், கிளர்ச்சிகளின் படிப்பும் இந் நாட்டில் நடத்த எத்தனிப்பது. உலகத்திலுள்ள மற்ற தேசமெல்லாம் வேறு, இந்தியா வேறு. அதனாலேதான் “தமிழ்நாடு” பத்திரிகை சொல்வது போன்ற அயல்நாட்டு சரித்திரங்களையும் கிளர்ச்சியையும் மற்றவர்கள் யாருக்கும் பின்வாங்காத அளவுக்கு படித்தறிந்த மகாத்மா காந்தி இந்நாட்டு விடுதலைக்கு அவைகள் எதையும் உபயோகித்துக் கொள்ளாமல் தன் சொந்த முறையில் ஒரு தத்துவத்தைப் புகுத்தினார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் அயல்நாட்டு விடுதலை சரித்திரமும் கிளர்ச்சி மாதிரியும் நமது நாட்டுக்கு உதவாது என்பதையும் அறிவித்துக் கொள்ளுகிறேன்.
மேலும் அப்பத்திரிகை எழுதி இருப்பதாவது “நாயக்கர், வரி உயர்ந்ததும், பார்ப்பனரல்லாதார் நன்மை கெட்டு பார்ப்பனர் ஆதிக்கம் வலுத்ததும், தொழிலாளர் நிலைமை கேவலப்பட்டதும், இன்னும் பல குறை களுக்கும் காங்கிரசே காரணம் என்று சொல்லுகிறார். இது சரியல்ல. மற்ற தேசங்கள் காங்கிரஸ் என்கிற ஸ்தாபனத்தின் மூலம் தான் வெற்றிபெற்று இருக்கிறது. காலத்திற்கு ஏற்றபடியும் தேவைக்குத் தக்கபடியும் எல்லா தேசத்திலும்தான் உயர்ந்திருக்கிறது. ஆதலால் இவற்றிற்கு காங்கிரஸ் காரணமல்ல” என்று எழுதி இருக்கிறது. இதற்கும் முன் சொன்ன துக்கம் விசாரிப்புக் கதையையே சமாதானமாகச் சொல்லவேண்டி இருப்பதற்கு வருந்துவதுடன் மேலும் இரண்டொரு சமாதானம் சொல்லுகிறேன்.
நமது அரசாங்கத்தார் உயர்த்தியிருக்கும் வரி கால தேச வர்த்தமான அதிகச் செலவை உத்தேசித்தா? அல்லது காங்கிரசுக்கு அழுக வேண்டிய சில உத்தியோகங்களை உத்தேசித்தா? என்பதையும் நமது நாட்டு அரசாட்சிக்கு இவ்வளவு உத்தியோகம் வேண்டுமா? என்பதையும் மற்ற தேச உத்தியோகங் களுக்கு இவ்வளவு சம்பளமிருக்கிறதா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
ஒரு கவர்னரும், இரண்டு நிர்வாக சபை மெம்பர்களும், இரண்டு காரியதரிசியும் அரசாட்சி புரிந்த சென்னை அரசாங்கத்திற்கு ஒரு கவர்னரும், 7 நிர்வாக அங்கத்தினர்களும், 7 காரியதரிசிகளும் எதற்காக? இது கால தேச வர்த்தமானத்தை உத்தேசித்தா? காங்கிரசின் தேசத் துரோகத்தை உத்தே சித்தா? என்பதை கண்ணியமாய் சொல்லட்டும். 5 ஐகோர்ட்டு ஜட்ஜிகள் இருந்து நியாயம் விளங்கின சென்னை உயர்தர நீதிமன்றத்திற்கு 15 ஐகோர்ட் ஜட்ஜிகள் இருப்பது கால தேச வர்த்தமானத்தை உத்தேசித்தா? காங்கிரசின் தேசத்துரோகத்தை உத்தேசித்தா?
ஸ்ரீமான்கள் சர். சி. பி. ராமசாமிக்கும் சர். சிவஞானத்திற்கும் டாக்டர் சுப்பராயனுக்கும் மற்றும் இவர்கள் போன்றாருக்கும் மாதம் 5500 ரூ. கொடுப்பதும் காரியதரிசிகளுக்கும் ஜட்ஜுகளுக்கும் 2500, 3000 கொடுப்பதும் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்தா? காங்கிரசின் தேசத் துரோகத்தை உத்தேசித்தா? இதுபோன்ற ஆயிரக்கணக்கான உத்தியோகங்கள் அதிகமான தும் அதுகளுக்கு சம்பளங்கள் கொடுக்க வேண்டியதும் நாட்டின் உண்மை யின் அவசியத்தை முன்னிட்டா? காங்கிரசின் தேசத் துரோகத்தை முன்னிட் டா? இவர்களுக்கும் இவர்களைப் போலவே வெள்ளைக்காரருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியதற்காகவே 40 கோடி ரூ. வரி செலுத்தி வந்த நமது நாட்டு குடியானவர்கள், வியாபாரிகள், தொழிலாளிகள், கள்ளு சாராயம் குடிக்க வேண்டியவர்களை அதிகப்படுத்த அவசியங்கள் ஆகிய வரிகள் கார்ட், கவர், ரயில் சார்ஜ், உப்பு வரி, வருமான வரி, சாமான்கள் மீது வரி முதலியதுகளை அதிகமாக்க ஏற்பட்டதா? அல்லது தேசத்தின் காலதேச வர்த்தமானத்தை உத்தேசித்து ஏற்பட்டதா? என்று கேழ்க்கின்றேன்.
தூங்குபவர்களைத் தட்டி எழுப்பலாம் “தமிழ்நாடு” போன்று எல்லா விபரமும் தெரிந்து வேண்டுமென்றே கண்ணைக் கெட்டியாய் மூடிப் படுத்துக் கொண்டிருப்பவர்களை எப்படி எழுப்புவது? மற்றும் அப்பத்திரிகை எழுது வதாவது “காங்கிரஸ் தோன்றிய பிறகுதான் மக்களுக்கு தேசாபிமானம் இன்னது என்று தெரிந்தது. சீர்திருத்தங்களைப் படிப்படியாய் அடைய முடிந்தது. அடைந்ததை ஆள முடிந்தது. தேச சமூக சமய வேத புராண புரோகித விடுதலைகளில் உணர்ச்சி ஏற்பட்டது” என்று எழுதுகிறது.
இதில் மருந்துக்குக் கூட உண்மை இல்லை. காங்கிரஸ் ஏற்பட்ட பிறகுதான் மக்களுக்குத் தேசத் துரோகம் செய்யும் ஆசை கற்பிக்கப்பட்டது. தேசத் துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே மக்களுக்கு ஏற்பட்டது. காங்கிரசுக்கு முன் உத்தியோகஸ்தர்கள் மாத்திரம் அதுவும் மிகுதியாக பார்ப்பன உத்தியோகஸ்தர் மாத்திரம் செய்ய முடிந்தது. இப்போது மக்கள் ஒவ்வொரு வரும் வாழ வேண்டுமானாலும் சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும் உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. சமய சமூகவாரிகள் விடுதலைக்கு நமது நாடு ஆயிரக் கணக்கான வருஷங்களாய் போராடுகிறது. அது வெற்றி பெறும் நாளையில் காங்கிரசின் பலனாய் பார்ப்பன ஆதிக்கம் வளர்ந்து அவ்விடுதலைகளுக்கு இடையூறாய் நிற்கிறது. இன்றும் இவ்விடுதலைக்கு காங்கிரசின் பேரால் உழைக்க இடமிருக்கிறதா? என்று கேழ்க்கிறேன். காங்கிரசால் வந்த சீர்திருத் தத்தைதானே நம்ம நாட்டுக்கு ஆபத்து என்று சொல்லுகிறேன். அது வந்த தால் கெடுதிதானே ஆயிற்று. சீர்திருத்தத்தை நடத்திக்காட்ட முடிந்தது என்கிறது. எதை நடத்திக் காட்டியதாக அப்பத்திரிகை சொல்லுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. மந்திரிப் பதவிகளில் டாக்டர் சுப்பராயன், பனகால் ராஜா முதலியவர்கள் நடத்திக் காட்டியதையா? தேர்தல்களில் சீனிவாசய் யங்கார் நடத்திக் காட்டியதையா? இந்தியருக்கு உயர் பதவி கொடுத்ததில் சர். சி.பி. நடத்திக் காட்டியதையா? ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்ரீமான் ஈரோடு டி. ஸ்ரீனிவாச முதலியார் நடத்திக் காட்டியதா? கூட்டுத்தொகுதியில் இந்திய சட்ட சபைக்கு தென்னாட்டில் அய்யங்கார்களே போக முடிந்ததையா? எதைச் சொல்லுகிறது? என்று கேட்கிறேன். இது போலவே அதன் மற்ற வரிகளும் இருக்கின்றன. மற்றவைகளுக்குப் பதில் விரும்பினால் வரிவரியாய்ப் பிரித்து எழுதத் தயாராய் இருக்கிறேன்.
ஒற்றுமையை உத்தேசித்து கொள்கைகளை விட்டுக் கொடுத்த பலன்தான் மகாத்மா முக்காடிட்டு சங்கராச்சாரி போல் மூலையில் உட்கார நேர்ந்ததும் அவரது நடவடிக்கைகள் இப்போது ஒரு மடாதிபதிகள் சம்பிரதாயம் போல் ஆனதும் மடங்களில் பலர் ஆஷாடப் பூதித்தனம் செய்து பெருமை அடைவது போல் காந்தி மடத்திலும் பல “சாஸ்திரிகள்” போய் அமர்ந்து முகஸ்துதி செய்து பெருமை பெற்று வாழ்வதுமான காரியங்கள் நடந்தது. காந்தி கொள்கைக்கு இருந்த மதிப்புகள் அடியோடு போய் காந்தி மடமேற் பட்டுவிட்டதற்கு காரணமே கொள்கையை விட்டுக்கொடுத்து ஒற்றுமையை நாடின பயித்தியக்காரத்தனம் தான். மகான்கள் செயலில் பயித்தியக்காரத்தனமும் ஒன்றாதலால் மகாத்மா காந்திக்கு அது தகும். ஒரு சமயம் அதை மாற்றிக்கொள்ள அவருக்கு நம்பிக்கை பிறந்தாலும் பிறக்கும். நமக்கு அது தகாது. நமக்கு அந்நம்பிக்கை இல்லை. கொள்கை விட்டு ராஜியான ஒரு ஸ்தாபனமும், ஒரு மனிதனும், ஒருநாடும் உருப்படியாகாது என்பது எனது புத்திக்கு எட்டிய உறுதியான முடிவு.
ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கும் “காங்கிரஸ்” பயித்தியம் இருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்ரீ முதலியாருக்கு அரசியல் விளம்பரம் தேவை இல்லை. ஆங்கிலம் படித்த பயனாக தேசத் துரோகத்தன்மை தோன்றவும் இடமில்லை. வேறு விதத்தில் அவர் ஒரு பெரிய ராஜதந்திரியாக வேண்டியதவசியமும் இல்லை. ஆதலால் அவருக்கு “காங்கிரஸ்” பைத்தியம் ஏனோ தெரியவில்லை. எப்படியானாலும் “காங்கி ரஸ்” தேசத்துரோக ஸ்தாபனமென்பதையும், ஏழைகளை வதைக்கும் ஸ்தா பன மென்பதையும் நாம் கோபுரத்தின் மேலிருந்து கூவுவோம். ஆனால் கடசி யாக ஒரு வார்த்தை அதாவது யாவறொருவர் “காங்கிரசைப்” பற்றி என்னைப் போல் நினைக்கிறார்களோ, என்னைப் போன்ற முடிவை உறுதியாகக் கொண் டிருக்கிறார்களோ அவர்கள் மாத்திரம் “காங்கிரசி”ல் சேர வேண்டியதில்லை. ஸ்ரீமான் நாயுடுவைப் போலவும், முதலியாரைப் போலவும், மற்றும் ‘ஜஸ்டிஸ்’ கட்சியில் உள்ள சிலர்கள் போலவும் ‘காங் கிரஸ்’ ஒரு தேசீய சபை, அதனால் தேசத்திற்கு நன்மை செய்யலாம் என்று யாராவது நினைப்பார்களேயானால், அவர்கள் அவசியம் தங்கள் மன சாட்சிப்படியே நடக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஆனால் மனதில் உண்மை தெரிந்து சுயநலத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ போய் சேர்ந்து தேசத்தையும், ஏழை மக்களையும் கெடுக்காதீர்கள் என்று பிரார்த் திக்கிறேன்.
குடி அரசு – தலையங்கம் – 12.06.1927