ஸ்ரீ வரதராஜுலு ஐயங்கார்
ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மறுபடியும் மைலாப்பூர் பார்ப்பனர்கள் உபநயனம் என்னும் பூணூல் கல்யாணம் செய்து தங்கள் ஜாதியில் சேர்த்துக் கொண்டார்கள். ஆதலால் அவரை இனி வரதராஜலு அய்யங்கார் என்றுதான் அழைக்க வேண்டும். இந்த கோஷ்டியார் சுவீகரிக்கத்தக்க ஒரு சந்தர்ப்பம் வருவதற்கு ஸ்ரீமான் வரதராஜலு பட்ட பாடு இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. முன்பு ஸ்ரீ காந்தியையும், ஒத்துழையாமையையும்கூடத் தாக்கி, சுயராஜ்ஜியக் கக்ஷியுடன் கூடிக் குலாவி எவ்வளவோ கூத்தாடியும், அதைப்பற்றி தனது பத்திரிகையில் எவ்வளவோ பிரசாரம் செய்து பார்த்தும் அதற்கு செல்வாக்கு இருக்கின்றவரை கூடவே இருந்தும் பார்ப்பனர்களின் புகழ் விளம்பர சாகரத்தில் ஆழ்ந்திருந்துவிட்டு அக்கக்ஷிக்கு சாவு மணியடிக்கப் போகின்றதென்று தெரிந்தவுடன் தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி அதைவிட்டு ஒரே தாவாகத் தாவி வெளியில் வந்து விட்டதும், பிறகு அது அடியோடு செத்து குழியில் போட்டு புதைக்கப்படும்போது தானும் ஒருகை மண்ணை அள்ளிப் போட்டு விட்டு நல்ல பிள்ளை போல் இரவும் பகலும் அதை வைவதன் மூலம் அதற்கு கருமாதி செய்வதிலேயே தனது கிரியை ஆற்றி வந்தார். பிறகு இவர்களால் காங்கிரசுக்கும் ஆபத்து வந்துவிட்டதாக தெரிந்தவுடன் தனக்கு ஏதாவது ஒரு இடம் வேண்டுமே என்கின்ற எண்ணத்தின் பேரில் பார்ப்பனரல்லாதார் கக்ஷியாகிய ஜஸ்டிஸ் கக்ஷி என்கின்ற மரத்தின் கிளையையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டிருந்தார். இது தெரிந்த பார்ப்பனர்கள் இவரை அடியோடு காங்கிரசை விட்டு வெளியாக்க தீர்மானித்துவிட்டார்கள்.
ஆனாலும் பார்ப்பனரல்லாதார் கக்ஷியில் இவர் பேரில் உள்ள சந்தேகத்தினால் தனக்குள்ள ஆதரவற்ற தன்மையை அறிந்ததும் சென்ற தேர்தலின் பொழுது எக்கக்ஷி வலுக்கின்றதோ அக்கக்ஷியில் சேர்ந்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தில் பேரில், ஜஸ்டிஸ் கக்ஷிக்கும் ஓட்டு கொடுக்காதீர்கள், காங்கிரஸ் கக்ஷிக்கும் ஓட்டு கொடுக்காதீர்கள் என்று சொல்லி பிரசாரமும் செய்து பார்த்து கடைசியில் காங்கிரஸ் கக்ஷிக்கு ஜெயம் என்று தெரிந்த உடனே ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை தலைவராய் ஏற்று மந்திரி வேலை ஒப்புக்கொள்ளும்படி தந்தி கொடுத்து கேட்டுக் கொண்டும், அக்கூட்டத்தார் இவரை லக்ஷியம் செய்யாமல் போகவே, மறுபடியும் அவர்களை வைதுக் கொண்டு கோவை மகாநாடு மூலமாய் ஜஸ்டிஸ் கக்ஷியுடன் உறவாட முயற்சித்து மறுபடியும் அதை விட்டு காங்கிரஸ் சத்தம் போட்டு ஒன்றும் முடியாமல் போகவே கடைசியாக பார்ப்பனர்கள் தங்களை எவ்வளவு அவமானப்படுத்திய போதிலும் அதிலிருந்தால்தான் ரதம் ஓட்ட முடியும் என்று நினைத்து தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும் போது திடீரென்று கடவுள் அனுப்பியது என்பதுபோல் ராயல் கமிஷன் சாக்கு ஒன்று வந்தது. அதற்கேற்றாப் போல் அய்யங்காரின் ஒற்றுமை அறிக்கை ஒன்றும் வந்தது. மற்றெல்லோரும் அவ்வறிக்கையை தலையில் அடித்து அதை நசுக்கிக் கொண்டிருக்கும் போது அய்யங்காருக்கு நல்ல பிள்ளையாக எண்ணி இவர் அதை கட்டி முத்தமிட்டு வரவேற்று உபதலையங்கம் எழுதினார்.
இவர் எவ்வளவு வரவேற்றும் எவ்வளவு எழுதியும் அது தோன்றிய அன்றே செத்துவிட்டது. அல்லாமலும் காங்கிரஸ் மகாநாடுகள் நடத்தியாவது பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகலாமா என்று பார்த்தார். அந்தப்படியே மிக்க முயற்சியும் தக்க செலவும் செய்து சேலம் மகாநாட்டை நடத்தினார். அந்த மகாநாட்டையும் பார்ப்பனர்கள் அடியோடு பகிஷ்கரித்து அது வகுப்பு மகாநாடென்று மண்டையில் அடித்தார்கள். பிறகு தென்னாற்காடு மகாநாட்டைப் பிடித்தார். அதையும் பார்ப்பனர்கள் பகிஷ்கரித்து அதன் வரவேற்புக் கமிட்டியையே கலைக்க போலீஸ் பந்தோபஸ்தெல்லாம் கொண்டு வந்தார்கள். கடைசியாக ராஜியாயிற்று. எப்படி ராஜியாற்று என்று சொல்ல வேண்டுமானால் இன்னின்ன மாதிரி எழுதிப் படிக்கின்றேனென்றோ அல்லது எழுதிக்கொடுத்தபடி படிக்கின்றேன் என்றோ ஒப்புக் கொண்டிருந் தாலொழிய பார்ப்பனர்கள் சுலபத்தில் இந்த ராஜிக்கு வந்திருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஸ்ரீ அய்யங்கார், ஸ்ரீ ராமசாமி முதலியாருக்கு கார்ப்பரேஷன் தலைவர் வேலை கொடுப்பதற்காக இந்த நிபந்தனைதான் பனகால் ராஜாவை கேட்டார். ஆதலால் இந்த நிபந்தனை எதிர்பார்க்கக் கூடியதுதான். இப்படியெல்லாம் இருந்தும் பார்ப்பனர்கள் முழுதும் நம்மால் மகாநாட்டுக்கும் சரியாய் வராமல் குற்றஞ்சொல்லக் காத்திருந்தார்கள். கடைசியாக மற்ற கிளைகளையெல்லாம் அடியோடு விட்டு விட்டு பார்ப்பன அடி மரத்தையே பிடித்திருப்பதையும், அதைத் தவிர தமக்கு வேறு கதியே இல்லையென்றும் பரிசுத்தமாய்க் காட்டிக் கொண்ட பிறகுதான் கிடைத்தவரையில் லாபமென்று அபயம் கொடுத்து தென்னாற்காடு உபந்நியாசத்தைப் பற்றி தலையங்கங்கள் எழுதி புகழ ஆரம்பித்தார்கள். இவரும் ஆசையோடு அதை ஏற்று திருப்பித் திருப்பி தமது பத்திரிகையிலும் தமது தலையங்கத்திற்குப் பக்கத்தில் பிரசுரித்தார். பிறகு அவர்களோடு இரண்டறக் கலந்தார். பிறகுதான் அவர்கள் உபநயனம் செய்து விட்டார்கள். ஆகவே இவ்வளவுதான் அவர்கள் செய்யக் கூடும்.
இனி மற்றவர்கள்தான் அவருக்கு நாமகரணம் செய்ய வேண்டும். ஆதலால் வரதராஜுலு அய்யங்கார் என்ற நாமத்தை சாற்றுகின்றோம். இவ்வளவு பெருமைகள் ஒத்துழையா இயக்கம் ஆரம்பித்த காலம் தொட்டு ஸ்ரீ வரதராஜுலுக்கு கிடைத்திருக்காதென்றே சொல்லலாம். இது போலவே பெசண்டம்மையாருக்கும் அப்போதே ஒரு பார்ப்பனரல்லாத தலைவர் தேவையாயிருந்தது. ஸ்ரீ வரதராஜுலு இரண்டுக்கும் விண்ணப்பம் போட்டதில் இரண்டிடத்திலும் பிரைஸ் விழுந்துவிட்டதால் இப்போது எதை ஒப்புக் கொள்வது என்ற மயக்கம் வந்துவிட்டது. அம்மையார் சட்டத்திற்கு உட்பட்டு சத்தம் போட வேண்டும் என்கின்றார். அய்யங்கார் சட்டத்திற்கு மீறிச் சத்தம் போட வேண்டுமென்கின்றார். இரண்டு பேரும் எதிர்பார்க்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ எதிர்பிரசாரத்திற்கு இவர் தயாராயிருந்தாலும் எதைப் பின்பற்றுவ தென்பது தெரியாமல் ஸ்ரீ வரதராஜுலு விழிக்கின்றார். இரண்டு பேரையும் விட மனம் வரவில்லை போல் தெரிகின்றது. ஸ்ரீ வரத ராஜுலுவின் சொந்த நிலைமை இன்ன தென்பதை தென்னாற்காடு மகாநாடே அவருக்கு நன்றாய்க் காட்டி விட்டது. அதாவது இவர் தலைமை வகித்த மகாநாட்டுக்கு உள்ளுர் பார்ப்பனர்கள் யாவரும் வரவில்லையென்றும், வெளித்தாலூகாக்களிலிருந்து யாருமே வரவில்லை என்றும் ‘சுதேசமித்திரன்’ தெரிவிக்கிறது. மற்றபடி இந்தத் தலைவரைச் சுற்றி இருந்த பெரும்பான்மை யான கோஷ்டிகளும் இதை உறுதிப் படுத்துகிறது. எது எப்படியானாலும் நல்ல சமயத்தில் கிடைத்த ஆதாரத்தைப் பிடித்துக்கொண்டு இனி கரையேற வேண்டிய வேலையே அவருக்குச் சரியாய் போய்விட்டது. என்னவெனில் பகிஷ்காரப் பிரசாரந்தான். தவிர பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகை களும் கூட இவரைப் போலவும் இவரது பத்திரிகையைப் போலவும் அவ்வளவு அதிகமாய் பகிஷ்காரப் பிரசாரம் செய்வதில்லை. ஏனென்றால் புதிதாக ஒருவர் ஒரு மதத்தில் சேருவாரானால் அதே மதத்தில் பிறந்து வளர்ந்தவர்களைப் பார்க்கிலும் அதிகமான வேஷம் போடுவது சகஜம்.எதுபோல வென்றால் “புதிய சைவனுக்கு பூச்சும், ருத்திராட்சமும் அதிகமாயிருக்கும்” என்பது போல், அப்படிச் செய்தால்தான் மற்றவர்களும் நம்புவார்கள். ஆதலால் ஸ்ரீமான் வரதராஜுலுவும் அவரது பத்திரிகையும் பகிஷ்காரப் பிரசாரம் சரியாகவோ, தப்பாகவோ முழக்குவதில் நமக்கு அதிசயம் ஒன்றும் இல்லை. இதை நம்பிக் கெட்டுப் போக எத்தனைபேர் காத்திருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாவதற்கு ஸ்ரீ வரதராஜுலுவுடன் போட்டி போட்டு வரும் மற்றொரு பார்ப்பனரல்லாத தலைவர் ஒருவர் இருக் கின்றார். அவர் ஸ்ரீ வரதராஜுலு பார்ப்பனர் பக்கம் போய் விட்டாரானால் அரை நிமிஷம் கூட தனித்திருக்க சகிக்க மாட்டாதவர். எனவே அவர் இனி பகிஷ்காரம் என்னும் அரசியலின் பெயரால் வெளியில் வருவாரோ, அல்லது புராணம், மதம் என்னும் அழுக்கு மூட்டைகளுடன் வெளியாவாரோ தெரிய வில்லை. எப்படியானாலும் இவர் அய்யங்காராக வராவிட்டாலும், அய்யரா கவாவது வெளியாகித்தான் தீருவர். ஆதலால் அதையும் வரவேற்கக் காத்திருக்கிறோம்.
குடி அரசு – கட்டுரை – 11.12.1927