மித்திரன் நிரூபரின் அயோக்கியத்தனம்

நமது பத்திரிகாலயத்தில் ஒரு பார்ப்பனர் சூழ்ச்சியால் இரண்டு அச்சுக் கோர்ப்போர்கள் திடீரென்று சொல்லாமல் நின்று விட்டதற்குக் காரணமாக கோவையில் இருந்து மித்திரன் நிரூபர் ஒருவர் மிகவும் அயோக் கியத்தனமான ஒரு நிரூபத்தை மித்திரனுக்கு அனுப்பி இருக்கிறார். அதாவது ஒரு விஷயத்தை நாம் அச்சுக் கோர்க்கும்படி சொன்னதாகவும் அதை அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்து வேலை நிறுத்தம் செய்துவிட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இது மிகவும் அல்ப ஜாதித்தனம் என்றே சொல்லுவோம். எல்லா பத்திரிகை நிரூபர்களுக்கும் மானம், வெட்கம், சுத்த ரத்தோட்டம் முதலிய தன்மைகள் குறைந்தது கொஞ்சமாவது இருப்பதாகக் காண்கிறோம். நமது சுதேசமித்திரன் நிரூபர்களுக்கு மாத்திரம் பெரும்பாலும் இக்குணங்கள் காணப்படுவதே இல்லை. இதன் காரணமும் நமக்குத் தெரிவதில்லை. மித்திரனுக்காவது மனிதத் தன்மையும் யோக்கியப் பொறுப்பும் இருந்தால் அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்தது என்ன விஷயம் என்றாவது அல்லது வேறு சமாதானமாவது எழுதுவான் என்று நினைக்கிறோம்.

நமது பத்திரிகை பதிப்பகத்தில் உள்ள அச்சுக் கோர்ப்போரை கலைக்க சூழ்ச்சி செய்தது காரைக்குடியில் உள்ள ஒரு பத்திரிகை காரியாலயத்தில் இருக்கும் ஒரு பார்ப்பனர் என்று தெரிவிக்கிறோம். ஆனாலும் அதனால் பத்திரிகை வேலை குந்தகப்படாமல் நடந்தேற உதவிய நண்பருக்கு நமது வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 12.06.1927

You may also like...

Leave a Reply