நாகையில் வெறுக்கத்தக்க சேதி
நாகையில் நமது சகோதரர்களில் சிலர் அதாவது ஜனாப் அப்துல் அமீத்கான், ஜனாப் தங்க மீரான் சாயபு, ஸ்ரீமான் கிருபாநிதி முதலியவர்கள் பிரசாரம் செய்ய வந்த காலையில் கூட்டத்தில் சிலர் மிக இழி தன்மையாய் நடந்து கொண்டதாக பத்திரிகையில் காணப்படுகிறது. (அதாவது கூட்டத்தில் பாதரiக்ஷ எறியப்பட்டதாம்). அது வாஸ்தவமானால் நாகையில் உள்ள எனதன்பான தொழிலாளர் சகோதரர்களும், நாகையில் உள்ள பார்ப்பன ரல்லாத பிரமுகர்களுக்கும் கூட அவமானகரமான காரியமென்றே சொல்லுவோம். இவ்விழித் தகைமை ஆன காரியத்தினால் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு வந்த நன்மை என்ன? பொது வாழ்வில் யாவருடைய குற்றத் தையும் ஆண்மையுடன் கண்டிக்க யாவருக்கும் உரிமை உண்டு. இம் மாதிரியான காரியங்களினால் மிகவும் சமூகத்திற்கே அவமானத்தை விளைவிக்கத் தக்கதாகவும் நடந்து கொண்டதற்கும் அக்கூட்டத்தில் நமது பெயரும் நமது பத்திரிகையின் பெயரும் அடிபட்டுக் கொண்டு இம்மாதிரி நடந்ததற்கும் நாம் மிகுதியும் வெட்கமடைகிறோம். பார்ப்பன சூழ்ச்சியின் பயன் என்னவாய் முடிகிறது. பார்ப்பன வஞ்சக புரோசீஜர் கோட் ஆகிய ராமாயணமென்னும் புத்தகத்தில் என்ன சொல்லி யிருக்கிறது? எதிரியை ஜெயிக்க முடியாவிட்டால் எதிரியின் கூட்டத்தில் உள்ள ஒரு ஆசாமிக்கு ஆசை வார்த்தை சொல்லி லஞ்சம் கொடுத்து நமது சுவாதீனப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்குள்ளாக விவகாரம் இருந்தால் ஒரு கக்ஷியில் (பீசில்லாமல்) சேர்ந்து கொண்டு ஒருவனுக்கு கெடுதி செய்ய வேண்டும். அதாவது விபூஷணருக்குப் பட்டம் கட்டுவதாகச் சொல்லி அவன் தமையனுக்கு விரோதமாய் தன் கட்சியில் சேர்த்துக் கொண்டதும், வாலி சுக்ரீவன் சண்டையில் சுக்ரீவனுடன் சேர்ந்து கொண்டு வாலி மேல் சுக்ரீவ னைத் தூண்டிவிட்டு தான் உள்ளுக்குள் இருந்து கொண்டு திருட்டுத்தனமாய் வாலியைக் கெடுத்ததும் போலவும். கூட்டம் அதிகமாய் ஏற்பட்டு தங்களால் சமாளிக்க முடியாத காலத்தில் மூல பல சைன்னியங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று கொள்ளும்படியாக செய்வித்தது போலவுமாய் இப்போது பார்ப்பனர் செய்யும் சூழ்ச்சியை அறியாமல் நாம் நம்மவர்களை இம்மாதிரி நடத்துவது அறியாமையேயாகும். எந்தக் கூட்டத்திலாவது எந்தப் பார்ப்பனராவது இம்மாதிரி சபையில் மாட்டிக் கொள்ளுகிறானா என்பதை நன்றாய் யோசித்துப் பார்க்கும்படி வேண்டு கிறோம். பார்ப்பனரல்லாதார் மீது பழி சொல்ல ஒரு சமயம் இக்காரியம் ஒரு பார்ப்பனராலேயே ஏற்பட்டு இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் அதற்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பார்ப்பனரல்லாதார் கடமையென்று சொல்லுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 12.06.1927