இந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள்
இந்திய சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையை உத்தே சித்து சட்ட சம்மந்தமாக பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.
குறிப்பாக இந்து லாவில் பிராமணன் சூத்திரன் என்கிற பாகுபாடு களும் அதற்கு தக்கபடி பிராமணன் என்பவனுக்கு ஒரு விதமாகவும் சூத்திரன் என்பவனுக்கு ஒரு விதமாகவும் சட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அவை களை சட்டத்தில் வைத்துக் கொண்டிருப்பது நியாயமா என்று கேட்கின்றோம்.
ஒரு பார்ப்பன இந்திய சட்டசபை மெம்பர்கூட இம்மாதிரி பிராமணன் சூத்திரன் என்கின்ற வித்தியாசம் சட்டத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லி ஒப்புக்கொண்டாலும் கூட பார்ப்பனரல்லாத மெம்பருக்கு உணர்ச்சி வரவேண் டாமா என்று கேட்கின்றோம். ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார் அவர்களுக்கு உபயோக மற்றதும் வேஷமானதுமான ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தில் இருக்கும் சுறுசுறுப்பில் ஏதாவது ஒரு பகுதியாவது இந்த சூத்திர பட்டமும் பாரபக்ஷமும் ஒழிவதில் கவலை இருக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். இனி உள்ள நாள்களையும் இது போல் வீணே கழிக்காமல் காரிய வழியில் கழிக்கும்படியாய் மிகவும் வணக்கமாய் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – வேண்டுகோள் – 04.12.1927