வேதாரண்யத்தில் தேசிய (பார்ப்பனர்) மகாநாடு திரு. பட்டேலின் யோக்கியதை
கடந்த மூன்று வருட காலமாக நமது பார்ப்பனர்கள் விடா முயற்சியுடன் பிரயத்தனப்பட்டு வந்த தமிழ் மாகாணத் தேசிய மகாநாடு சென்ற மாதம் 31-ந் தேதி வேதாரண்யம் என்னும் ஓர் கிராமத்தில் கூடிக் கலைந்ததாக பேர் செய்து விளம்பரமும் செய்தாய்விட்டது. ஆனாலும் அம்மகாநாடு நடைபெற்றதன் யோக்கியதைதான் என்ன என்று பார்ப்போமானால், சுருங்கக் கூறுமிடத்து பார்ப்பனரல்லாதார் பணத்தையே இரண்டு பார்ப்பனத் தலைவர்கள் செலவு செய்து, பார்ப்பன ரல்லாதாருக்கு விரோதமாய் இருவரும் படை திரட்டிக் கொண்டு போய் ஒருவருக்கொருவர் தங்கள் சாமர்த்தியத்தை வெளியாக்கிக் கொண்டதுதான் வேதாரண்ய மகாநாட்டின் தத்துவம் என்று சொல்ல வேண்டும். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.எஸ்.சீனிவாசய்யங்கார் அவர்கள் காங்கிரசின் பேரால் பொதுப் பணத்தை அள்ளிக் கொடுத்துச் சேர்த்து வைத்திருக்கும் படைகளான திருவாளர்கள் பழனியாண்டி பண்டாரம், சாமிநாத செட்டியார், அண்ணாமலை பிள்ளை, சத்தியமூர்த்தி, கிருஷ்ண சாமிப் பாவலர் முதலிய தேசீயத் தொண்டர்களாகிய திரு.அய்யங்கார் படைகள் ஒருபுறமும்; கதரின் பேரால் பார்ப்பனரல்லாதார் கொடுத்தப் பொதுப்பணத்...