வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
நமது இந்திய நாடானது சுதந்திரமும் சுயமரியாதையும் பெற வேண்டுமானால் முதலாவது இந்திய மக்களுக்குள் ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என்பதும், அவ்வித ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்படுவதற்கு இடமில்லாமலிருக்கும்படியான அளவுக்கு இந்தியாவானது பல்வேறு மதங்களாகவும், தேசத்தார்களாகவும், ஜாதி களாகவும், அவற்றுள் அளவற்ற வகுப்புகளாகவும் பிரிந்திருக்கின்றது என்பதும் யாவருமே அறிந்த விஷயமாகும். இவ்வித்தியாசங்களை ஒழிப்ப தற்கென்று வெகு காலமாகவே அநேக பெரியார்கள் அரசியலில் பேராலும், சமூக இயலின் பேராலும் எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தும் சிறிதும் பயன்படாமல் நாளுக்குநாள் புதிது புதிதாக மதங்களும் ஜாதிகளும், வகுப்பு களும் வளர்ந்து கொண்டு போவதல்லாமல் குறைந்து வந்ததாகவோ, அல்லது குறைவதற்குள்ள குறிகள் காணப்படுவதாகவோ சொல்லுவதற்கில்லாமலும் இருந்து வருகின்றது. இவைகளை யாரும் மறைத்துப் பேச முடியாதென்பதே நமது அபிப்பிராயம். அதிலும் என்று முதல் அரசாங்கத்தாரிடம் இந்தியர்கள் அரசியல் சுதந்தரம் கேட்பதென்றும், அரசாங்கத்தார் நமக்குச் சிறிது சிறிதாய்ச் கொடுப்பதென்றும் ஏற்பட்டதோ, அன்று முதல் அப்படிக் கொடுப்ப தென்பதும் பெருத்த பணவருவாயுள்ள உத்தியோகங்களாகவும், பதவிகளா கவும் ஏற்பட்டதோடு அவைகள் தந்திரத்திலும் சூழ்ச்சியிலும் வலுத்தவ னுக்கு மாத்திரம் கிடைக்கக் கூடியதாய் போய்விட்டதால் இனி சுலபத்தில் நம்பிக்கையும் ஒற்றுமையும் ஏற்படுமென்று எதிர்பார்ப்பதற்கில்லாமலே போய்விட்டது. இவற்றை உணர்ந்தே உண்மையிலேயே நாட்டினிடம் பற்றுக் கொண்ட பல பெரியவர்களும் தொண்டர்களும் நாட்டின் முன்னேற்றத் திற்குப் பரஸ்பர நம்பிக்கையும் ஒற்றுமையுமே பிரதானமெனக் கருதி பரஸ்பர நம்பிக்கை ஏற்படுவதற்கு ஒவ்வொருவர் மனதிலுள்ள வேறுபாடான அபிப்பிராய பேதத்தை விலக்கச் சமூகத்துறையிலும் மூடநம்பிக்கைத் துறை யிலும் எல்லா வகுப்பாருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படுவதற்குக் கூடுமான வரை எல்லோருக்கும் சமசந்தர்ப்பமும் சம உரிமையும் கிடைக்கும் படியாக அரசியல் துறையிலும் பாடுபட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இதைப் பலர் தெரிந்தோ தெரியாமலோ அல்லது தங்கள் சுயநலம் காரண மாகவோ அல்லது எதிரிகளின் கூலிகளாகவோ பலவழிகளிலும் இம்முயற்சியை எதிர்த்து வந்திருக்கின்றார்கள் என்பதும் மறுக்கக் கூடியதல்ல. ஆனாலும் என்ன எதிர்த்தும் இப்போது அவ்வெதிர்ப்புகள் அடியோடு சிறிதுகூட இல்லாமல் பயனற்றுப் போனதுடன் ஓர் அளவுக்கு முன் சொல்லப்பட்ட அப்பெரியார்களின் முயற்சி இவ்வளவு எதிர்ப்புக்களையும் தாண்டி பலன் கொடுத்து வருகின்றதென்றே சொல்லலாம்.
உதாரணமாக, சமூக சீர்திருத்தங்களுக்குச் சட்டங்கள் செய்யக் கூடாதென்றும் சம உரிமைக்கும் சம சந்தர்ப்பத்திற்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவங்கள் கூடாதென்றும் பலர் சொல்லியும் எதிர்ப் பிரசாரமும் செய்து வந்ததும் யாவரும் அறிந்ததேயாகும்.
இப்போது சமூக சம்பந்தமான எல்லாச் சீர்திருத்தங்களுக்கும் சட்டங் கள் ஏற்படுத்த முயற்சி செய்துவருவதும் பல சட்டங்கள் ஏற்பட்டுவிட்டதும் பிரத்தியட்சத்தில் பார்த்து வருகின்றோம். அது மாத்திரமல்லாமல் சாஸ்திரி களும் வைதீகர்களும் வருணாசிரமக்காரரும் மகாநாடுகள் கூட்டி சமூகச் சீர்திருத்தத்திற்குச் சட்டங்கள் வேண்டுமென்று தீர்மானிப்பதுவும் பார்த்து வருகின்றோம். நிற்க வகுப்புவாரி உரிமை – பிரதிநிதித்துவம் ஆகிய விஷயங் களில் சட்டசபை முதலிய ஸ்தாபனங்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை தேர்தல்களிலும் சர்க்கார் நியமனங்களிலும் சட்டப்படி ஏற்படாகி வந்திருப்பதுடன் அவைகள் அனுபோகத்திலும் பயனளித்து மேலும் அதைப் பின்பற்ற உறுதி செய்தும் ஆகிவிட்டது. மற்றபடி சர்க்கார் உத்தியோகங்க ளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கை சர்க்காராலும் ஜனப்பிரதிநிதி கள் பெரும்பான்மையாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு அமுலுக்கு வரும் படியாக உத்தரவும் போடப்பட்டு இப்போது அவை அமுலிலும் வந்து விட்டன. இந்தத் திட்டம் சரியானதா? சரியில்லாததா? என்கின்ற ஆட்சே பனை சிலருக்கு இருந்தாலும் கொள்கைகள் நமது நாட்டில் ஒப்புக் கொள்ளப் பட்டு வரவேற்கப்பட்டுமாய் விட்டது.
உண்மையில் பொது நலத்திற்காக உழைத்து வந்தவர்கள் அரசாங்க உத்தியோகங்கள் விஷயத்தில் எம்மாதிரியான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்டு வந்தார்களோ அது போலவே சர்க்கார் ஒப்புக் கொண்டுவிட்டார்கள். அதாவது இப்போது நமது நாட்டைப் பொறுத்த மட்டில் வகுப்புகள் என்பதில் பெரும்பான்மையான வித்தியாசங்கள் அதாவது ஒருவருக்கொருவர் சமூக வாழ்வில் லட்சியத்தில் ஒற்றுமைப்படாத வகுப்பு கள் சாதாரணமாக 5 பிரிவினைகள் கொண்டதென்றே சொல்லலாம். என்ன வெனில், ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் என்கின்ற மூன்று மதப்பிரிவும், இந்துக்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்கின்ற மூன்று பிரிவும் பிரிக்கப்பட்டு இந்தியரல்லாதார் என்கின்ற மூன்று பிரிவுகளுமாக ஐந்து பிரிவுகளாகப் பிரித்து அவ்வைந்துக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டாய் விட்டது. விவரம் எப்படியெனில் மொத்தத்தில் சர்க்காருக்கு 12 உத்தியோகஸ்தர்கள் தேவையிருந்தால் அவற்றுள் பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களுக்கு 5-ம், பார்ப்பனர்களுக்கு 2-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 1-ம் முஸ்லிம்களுக்கு 2-ம், கிறிஸ்தவர்களுக்கு 2-ம் என்கின்ற வீதமாகவும், முறையில் முதலாவது பார்ப்பனரல்லாதார், இரண்டாவது முஸ்லீம், மூன்றாவது பார்ப்பனரல்லாதார், நான்காவது கிறிஸ்தவர், ஐந்தாவது பார்ப்பனர், ஆறாவது பார்ப்பனரல்லாதார், ஏழாவது தாழ்த்தப்பட்டவர், எட்டாவது பார்ப்பனரல்லாதார், ஒன்பதாவது முஸ்லீம், பத்தாவது பார்ப்பனரல்லாதார், பதினோராவது கிறிஸ்தவர். பன்னிரெண்டாவது பார்ப்பனர் என்கின்ற முறைப்படி உத்தியோகங்கள் கொடுத்து வருவதென்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு சமயம் தேர்தல் பிரதிநிதித்துவம் விஷயமாக பொது ஜனங்களிடம் பிரசாரம் செய்வதன் மூலம் பிரதிநிதித்துவம் உரிமை பெறலாம் என்று சொல்லுவ தானாலும் சர்க்கார் உத்தியோக விஷயத்தில் கண்டிப்பாக சர்க்கார் சட்டம் மூலமாக அன்றி வேறு விதமாகப் பெற்று விடக்கூடும் என்று சொல்லுவது சுலபமான காரியமல்ல. ஆகையால் அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய காரியத்தை பலவிதத் திலும் அதாவது சூழ்ச்சியிலும் விஷமப் பிரசாரத்திலும் கூலியிலுமாகப் பார்ப்பனர்கள் செய்து வந்த பலமான எதிர்ப்புகளைத் தகர்த்து இம்முடிவைப் பொது மக்கள் அடைந்ததற்கு முக்கிய காரணஸ்தராயுள்ளவர் நமது சுகாதார மந்திரியாகிய கனம் திரு.முத்தையா முதலியாரேயாவார். அவர் முதலில் தமது ஆட்சிக்குக் கட்டுப்பட்ட உத்தியோகங்களில் இம்மாதிரி முறையைக் கையாளச் சௌகரியம் செய்து கொண்டு பிறகு அதையே சர்க்கார் உத்தி யோகம் எல்லாவற்றிற்கும் என்று சட்டம் செய்தார். இதற்கு நமது முதல் மந்திரி கனம் சுப்பராயன் அவர்களும், முற்போக்கு மந்திரிகனம், சேது ரத்தினமய்யர் அவர்களும் மிகுதியும் பாராட்டக் கூடியவர்களேயாவார்கள். ஆனால், எல்லா வற்றையும் விட நமது மாகாண கவர்னர் மேன்மை தங்கிய கனம் மார்ஷ் பாங்ஸ் துரையும் நாம் பெரிதும் பாராட்டுவதற்கும், நன்றி செலுத்துவதற்கும் உரியவர் என்பதை நாம் மறக்க முடியாது. ஏனெனில், வெள்ளைக்காரர்கள் பெரும்பாலும் நமக்குள் ஒற்றுமையில்லாமல் இருப்பதற்கு ஆதாரமான காரியங்களைச் செய்வதிலேயே கருத்துள்ளவர்கள். ஏனெனில் நமது ஒற்றுமை ஈனத்தினாலேயேதான் அவர்கள் இங்கு வாழக்கூடுமே ஒழிய வேறு யோக்கியமான காரியங்களால் வாழ முடியாது என்று நினைக்கின்றவர்கள். அவர்களுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே இந்தியர்களைப் பிரித்து வைத்தால்தான் வெள்ளைக்காரர்கள் வாழ முடியும் என்கின்ற வார்த்தைகளைக் கரைத்துப் பாலுடன் சேர்த்து பால் பெட்டியில் ஊற்றி பால் கொடுத்து வளர்க்கப்படுகின்றார்கள். ஆனால் நமது மேன்மை தங்கிய மார்ஷ்பாங்ஸ் துரை முழுதும் அந்தப் பாலே குடித்தவர் அல்லர். அவர் என்னதான் ஐரோப்பி யரானாலும் இந்தியா விஷயத்தில் மற்ற பெரும்பான்மை வெள்ளைக் காரர்களைப்போல் அவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவரல்லர். ஆதலால் அவர் செய்த காரியத்திற்குத் தகுந்த அளவாவது நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கின்றோம். எனவே, நமது லட்சியம் ஒருவாறு வெற்றி பெற்று விட்டதால் இவற்றிற்கு விரோதமில்லாத அரசியலில் நாம் கலந்துழைக்கக் கடமைப்பட்டிருக்கின்றோமானாலும் உண்மையுடன் ஒத்துழைக்கவும், போலியுடன் போர் செய்யவும் கடமைப்பட்டிருப்பதை யும் தெரிவித்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. முடிவாக பொது ஜனங்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் உறுதியுடனும், பிடிவாதத்துடனும் ஒரே கொள்கையுடன் வேலை செய்தால் மத்தியில் இவ்வளவு இடையூறும் கஷ்டமும் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி பெறலாம் என்பதேயாகும்.
குடி அரசு – தலையங்கம் – 04.08.1929