கடவுள் திருவிளையாடல் ஒரு கொலைக்கு ஒன்பது கொலை
மத்திய ஆசியாவில் உள்ள ஆஸ்பெக் என்னும் ஊரில் ஒரு புஸ்தக ஆசிரியர் நாஸ்திக பிரசாரம் செய்ததற்காக அவரைச் சில மதக் குருக்கள்கள் கொன்று விட்டதற்காக நியாயஸ்தலத்தில் ஒன்பது குருக்களுக்கு தூக்கு தண்ட னையும், ஏழு பேர்களுக்குக் காவல் தண்டனையும், 19 பேர்களுக்குத் தேசப் பிரஷ்டத் தண்டனையும், கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே கடவுள் இல்லையென்று சொன்னவனைக் கொன்று கடவுளைக் காப்பாற்றி புண்ணிய கைங்கரியத்திற்காக 9 பேர் கொல்லப்படுவதென்றால் கடவுளுக்கு ஏதாவது நன்றி விசுவாசம் இருக்கின்றதா? மேலும் கடவுள் கட்டளை இல்லாமலும், கடவுள் சம்மதமில்லாமலும் அந்தப் பாதிரிகள் நாஸ்திகனான கடவுள் விரோதி யைக் கொன்றிருக்க முடியுமா? அதுபோலவே அவ்வரசாங்கத்தாரும் நீதிபதி யும் கடவுள் சித்தமில்லாமல் கடவுள் பக்தர்களைக் கொலை செய்ய தீர்ப்புக் கூறி இருக்க முடியுமா? கடவுள் இல்லை என்பதற்காக ஒருவன் சாவதும், உண்டு என்பதற்காக ஒன்பது பேர் தூக்கிலிடப்படுவதும் என்றால் கடவுள் திருவிளையாடலின் பெருமைதான் என்னே? என்னே.?
குடி அரசு – செய்தி விமர்சனம் – 30.06.1929