மறுபடியும் திரு.ராஜகோபாலாச்சாரியார்
திரு.ராஜகோபாலாச்சாரியார் தேர்தலுக்காக கள்ளின் பேரால் வழக்கம்போல் அவருடைய சூழ்ச்சி விஷமப் பிரசாரத்தைத் துவக்கி விட்டார். சேலம், வடஆற்காடு ஜில்லாக்களில் இப்போது செய்து கொண்டும் வருகின்றார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழித்துப் பார்ப்பன ஆதிக் கத்தை நிலை நிறுத்த அவர் எந்த காரியம் வேண்டுமானாலும் செய்யலா மென்கின்ற முடிவு கொண்டவர். அவருடைய மனச்சாட்சி என்பது கொலை, கொள்ளை, புரட்டு, நம்பிக்கை துரோகம், சித்திரவதை முதலிய எவ்வளவு கடினமான காரியத்திற்கும், சற்றும் அசையாது; எந்த வேடம் போடுவதற்கும் சற்றும் பின்வாங்கார். இப்பேர்ப்பட்ட ஒரு மகா புருடருக்கு, மகாத்மா என்னும் உலகப் பிரசித்தியும், மதிப்பும், மரியாதையும் பெற்ற திரு.காந்தி தமது சிஷ்யக் கோடிகளுடன் கையாளாகவும் கிடைத்திருக்கின்றார். இவ்வளவும் போதாமல் மேற்கண்ட பெருமையுடைய திரு.காந்தியார் இந்திய மக்களிடமிருந்து கொள்ளை போல் வசூலிக்கப்பட்ட பத்து லட்சக்கணக்கான ரூபாய்கள் கொண்ட பொக்கிஷமும் அவர் வசமிருக்கின்றது. இவ்வளவும் போதாமல் ஈவு இரக்கமற்றதும் சூழ்ச்சியும், தந்திரமும், விஷமமும் பொருந்தியதுமான மனோ சக்தியும் ஏற்பட்டிருக்கின்றது. தம் காரியத்தை நடத்துவதற்கு இனி அவருக்கு என்னவேண்டும்? ஒன்றுமே வேண்டிய தில்லை. ஏதோ நான்கு கூலிகளும், காலிகளும் மாத்திரம் வேண்டும். அதுவும் எதற்கென்றால், கூட்டம் ஏற்பாடு செய்யவும், ஆள்களைச் சேர்க்கவும், மேடையில் நின்று பேசுவதற்கு வேண்டிய சௌகரியம் செய்து கொடுப்பதற்கும் மாத்திரமே யாகும். பிறகு தமது விஷப்புகையைக் கக்குவதன் மூலம் பாமர மக்களை ஏமாற்றிவிடலாம் என்கின்ற முரட்டுத் தைரியம் அவருக்கு உண்டு.
சாதாரணமாக, ஒத்துழையாமை ஆரம்பித்த காலத்தில் தீண்டாமையும், கதரும், மதுவிலக்கும் முக்கிய கொள்கையாக வைத்துக் கொண்டு வேலை செய்தது யாவருக்கும் தெரியும். அக்காலத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் இவைகளில் ஒரு காரியமும் காரியத்தில் செய்வதற்கில்லாமல் வெறும் ஆர்ப்பாட்டத்தால் மாத்திரம் இயக்கத்தைத் தளுக்காக நடத்திப் போகக் கருதிக் கொண்டிருந்தவர். ஆனாலும் அவருடைய சகாக்கள், அவரது இஷ்டம் போல் விடாமல் காரியத்தில் நடத்த ஏற்பாடு செய்துவிட்டதன் பலனாய் அவரும் கூடவே “கோவிந்தா”ப் போட வேண்டிவந்துவிட்டது. குறிப்பாகத் தீண்டாமை விலக்கிலும், மது விலக்கிலும் எவ்வளவு முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டுமோ, அவ்வளவு முட்டுக்கட்டையாய் இருந்தவர். உதாரணமாக, காங்கிரசில் தீண்டாமைக்காக ஒதுக்கிவைத்த பணங்கள் அவ்வளவையும் தம்பேரால் பிரித்து வைத்துக் கொண்டதோடு அவ்வியலில் செய்யவேண்டிய காரியப் பொறுப்பு முழுவதையும் தமக்கே வைத்துக் கொண்டு கடைசிவரையில் யாதொரு காரியமும் செய்யாமல் இருந்து கொண்டு சிலர் கண்டித்துக் கேட்டபின், பொறுப்பில் இருந்து மாத்திரம் விலகிக் கொண்டு முட்டுக்கட்டையில் மேலும் பலமாக இருந்து வந்தார். அதுபோலவே மதுவிலக்கிலும் ஆங்காங்கு நூற்றுக் கணக்கான தொண்டர்கள் சிறைக்குப் போய்க் கொண்டிருக்கும் போதும் மேலும் மாதம் நூற்றுக்கணக்காய் சிறைக்குப் போவதற்கு 2 – 3 மாதத்திற்குத் தொண்டர்கள் தயாராயிருந்தும் சர்க்காரும் இணங்கி வருவதற்கு யோசித்துக் கொண்டிருக் கும் பொழுதும், திடீரென்று மறியலை நிறுத்தும்படி செய்து மறுபடியும் தொண்டர்களுக்கு அது விஷயத்தில் உற்சாகமே ஏற்படுவதற்கில்லாத மாதிரியில் அதை அடியோடு அழித்துவிட்டார். முதன்முதலாக திரு.ஈ.வெ. ராமசாமியார், திரு.எஸ். ராமநாதன் முதலியவர்கள் திரு. ஆச்சாரியாரிடம் அபிப்பிராய பேதமும் அவநம்பிக்கையும் கொள்ள வேண்டி வந்ததற்கு முக்கிய காரணமே இந்தச் சம்பவமாகும். அதுமுதல் இதுவரை தீண்டாமைக் காவது மதுவிலக்குக்காவது காரியத்தில் பயனுண்டாகும்படி, ஒரு சிறு காரியத்தையும் செய்தவரல்லர். அதோடு ஒத்துழையாமை இயக்கம் அழிந்து பட்டதற்கும் முக்கிய கர்த்தாவாய் இருந்தவர் திரு. ஆச்சாரியாரே ஆவார். ஏனெனில், மற்றவர்கள் அதாவது, சுயராஜ்ய கட்சியார் தேசீயக்காரர்கள் என்பவர்கள் போட்ட கூச்சல்களால் ஒத்துழையாமை என்னும் கட்டிடத்தை அசைக்கவே முடியவில்லை; கட்டிடமும் ஒரு சிறிதும் பழுதாகவும் இல்லை. ஆனால் திரு. ஆச்சாரியார் காகினாடாவில் வைத்த டைனாமெட் (அதாவது பூமியின் கீழ் வைக்கும் வெடிகுண்டு) தான் அடியோடு அழித்து காங்கிரசைப் பழையபடி பார்ப்பனர்களிடமும் அவர்களுடைய கூலிகளிடமும் ஒப்படைக்கச் செய்தது. ஆனாலும், தாம் மாத்திரம் அதில் சேராதவர் போல் வேடம் போட்டுக் கொண்டே மக்களை ஏமாற்றிவந்தார். இந்நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் பார்ப்பனர்களுக்கும் அவர்களது நிபந்தனையில்லாத கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்கு மது விலக்கையும், தீண்டாமையையும் பேச்சளவில் உபயோகப்படுத்திக் கொண்டு வருவதில் அவர் தவறினதே இல்லை. சென்ற தேர்தலின் போது காங்கிரஸ்காரர்கள் கூட திரு. சீனிவாச ஐயங்கார், திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரி உட்பட ‘சட்டசபையின் மூலம் கள்ளை ஒழித்துவிட முடியாது’ என்று சொல்லியும் 10 வருஷத்தில் ஒழித்தாலே பெரிய காரியம் என்று சொல்லியும், திரு. ஆச்சாரியார் ஒரு வருஷத்தில் ஒழித்துவிடுகின்றேன் (திரு.காந்தி சுயராஜ்யத்திற்கு ஒரு வருஷ வாயிதாவே வைத்துக் கொண்டு வருவதுபோல்) ஆனால் பார்ப்பனர்களுக்கு ஓட்டுச் செய்ய வேண்டும் என்று பிரசாரம் செய்து ஓட்டுச் சேகரித்தார். அவர் பிரசாரத்தின் யோக்கியதையின் உண்மை தெரிய வேண்டுமானால், தென்னை மரத்தில் கள்ளுக்கு முட்டிகட்டி வருஷம் பல ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஓர் ஐயங்கார் பார்ப்பனருக்கு (திரு.சி.வி.வெங்கிட்டரமண ஐயங்கார்) அவர் தோட்டத்தில்-அவருடைய மரத்தில் கள்ளுமுட்டி தொங்குவதைப் பார்த்துக் கொண்டே அவருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கப் பிரசாரம் செய்தது ஒன்றே போது மானது. தவிர தேர்தலான பிறகு மறுதேர்தல் வரும்வரை கள்ளைப் பற்றி ஏதாவது ஒருபேச்சாவது பேசினாரா? என்பதும், தேர்தலுக்குப் பிறகு இவரால் ஓட்டு வாங்கிக் கொடுக்கப்பட்ட மெம்பரிடமாவது, இவரால் சிருடிக்கப்பட்ட மந்திரிகளிடமாவது மதுவைப் பற்றி ஏதாவது பேசினாரா? அல்லது செய்யும் படியாவது சொன்னாரா? என்பதும் அவர்கள் செய்ததைப் பற்றியோ, செய்யாததைப் பற்றியோ ஏதாவது இதுவரையில் வெளியிட்டாரா? என்பதும் யோசித்துப் பார்த்தால் ஆச்சாரியாரின் மதுவிலக்குக் கொள்கையின் யோக்கியதை விளங்காமற்போகாது. இந்தக் காலத்திலும் ஒரு பார்ப்பனர் இம்மாதிரி வேடம் போட்டுக் கொண்டு இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய பார்ப்பனரல்லாதாரை அழிக்க இவ்வளவு வெளிப்படையாய் – பித்தலாட்ட மாய் வேலை செய்கின்றார் என்றால் அது பாராட்டக்கூடிய செய்கையாகுமே யொழிய வேறில்லை. அதுபோலவே இதை நம்பி ஏமாறும் பார்ப்பனரல் லாதார் நிலையும் பரிகசிக்கத்தக்கதே ஒழிய வேறில்லை. திரு. ஆச்சாரி யாருக்கு மதுவிலக்கு விஷயமாய் ஏதாவது கொள்கையுண்டா? திட்டம் உண்டா? என்று பார்த்தால் அதுவும் இல்லை என்பதையும் அவரால் இது வரை வெளிப்படுத்தப்படவில்லை என்பதையும் பலர் ஒப்புக் கொள்ளத் தக்கதாய்க் காரியத்தில் வெற்றி பெறத்தக்கதாய் ஒன்றும் கொள்கை இல்லை என்பதையும் பொதுஜனங்களே அறிவார்கள். எனவே, வெறும் தேர்தலுக்காக மாத்திரம் திருவாளர் சீனிவாச ஐயங்கார் பூரண சுயேச்சை என்பது போலும், திரு.காந்தி ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் அல்லது ஒத்துழையாமை என்பது போலும், தேசம் பிரதானக் கட்சியும், உத்தியோகப் பிரதானக்காரரும் எல்லா உத்தியோகங்களையும் கைப்பற்ற வேண்டும் என்பது போலவும், ஆத்திகக் காரர் கடவுளையும், புராணங்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது போலவும், திரு. ஆச்சாரியார் மதுவிலக்கு என்று சொல்லுவதும், கோடு கட்டிய குறள்களுக்குப் பதிலாக எதுகை, மோனை கொண்ட வாக்கியங்களை எழுதுவதும் திருவாளர்கள் அண்ணாமலைப் பிள்ளை, ஆதிநாராயண செட்டியார் போன்றவர்களுடன் சென்று மதுவிலக்கு பிரசாரம் செய்வதுமா யிருக்கின்றதைத் தவிர, மற்றபடி இவற்றில் ஏதாவது நாணயமோ, உண்மை யோ, கவலையோ இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். சுமார் 25 அல்லது 30 லட்ச ரூபாயுடன் கதர் ஸ்தாபனத்தை ஒப்புக் கொண்டு மாதம் 100, 150, 200, 250 வீதம் பல பார்ப்பனர்களுக்குச் சம்பளங்களைக் கொடுத்துக் கொண்டு பழைய காலத்து மூட ராஜாக்களின் தர்ம சத்திரம் போல் கதர் இலாகா முழுவதும் 100-க்கு 100 பார்ப்பனர்களைச் சிஷ்யர்களாக அமர்த்திக் கொண்டு தம் இஷ்ட பிரகாரம் ஏகபோகமாய் சங்கராச்சாரி மகந்துக்கள் பண்டார சன்னதிகள் போல இரண்டு லட்சம், மூன்று லட்சம் செலவு செய்து நடத்தி வரும் கதர் மடத்தில் இதுவரை என்ன முற்போக்கான அல்லது பலன் கொடுக்கத்தக்கதான வேலையை இவர் செய்திருப்பதாகச் சொல்ல முடியும்? என்று கேட்கின்றோம். பொதுஜனங் களுக்கு கதர் விற்பனை காட்டுவதில் “திருப்பூரிலிருந்து பம்பாய்க் கதர் டிப்போக்களுக்கு அனுப்பிய கதர் 2 லட்ச ரூபாய், பம்பாய், கதர் டிப்போக்களில் விற்பனையான கதர் 2 லட்ச ரூபாய் ஆக இந்த இனத்தில் மொத்தம் 4 லட்ச ரூபாய்க்குக் கதர் விற்பனை ஆகி இருக்கின்றது” என்று இரட்டித்து உற்பத்திக்கு மேல் விற்பனையைக் காட்டுவதும், சீமை ஜவுளியும், உள்நாட்டு மில் ஜவுளியும் கஜம் 0-4-0, 0-5-0 அணாவுக்கு விற்றால் தேசாபிமானி என்று பேர்வாங்க விலை கொடுப்பதுபோல் கதருக்கு கஜம் ஒன்றுக்கு 10-அணா, 11-அணா, 12-அணா வீதம் ஒன்றுக்கு இரண்டு மூன்று பங்கு விலை கொடுத்து வாங்கச் செய்வதும் தவிர வேறு என்ன அனுகூலம் ஏற்பட்டிருக்கின்றது? இவர் ஆதிக்கத்தில் எவ்விதத்தில் கதர் முற்போக் கடைந்தது? அந்த ஸ்தாபனம் பார்ப்பன அக்கிரகாரமாகவும் தர்ம சத்திரமாகவுமானது தவிர மற்றப்படி விலையிலா? துணி நயத்திலா? ஜனங்களிடம் அதுபெறும் செல்வாக்கிலா? எதிலென்று சொல்ல முடியும்? என்று கேட்கின்றோம். இவ்வளவும் போதாமல், இப்பெரியார் மது விலக்குக்கும் நமக்கு ஞானம் போதிக்க வந்துவிட்டார். தேர்தலை உத்தேசித்து காங்கிரசிலிருந்து மதுவிலக்குப் பிரசாரத்திற்கு மாதம் 500 ரூபாய் திரு.ஆச்சாரியார் வசம் கொடுக்கப்படுவதினாலும், திரு. ஆச்சாரியார் அந்த பணத்தை வைத்துக் கொண்டு, முதலை பொன் காப்பைக் காட்டினதுபோல் காட்டுவதாலும், இதுசமயம் மதுவிலக்குப் பிரசாரம் மும்முரமாய் இருப்பதாக ஜனங்களுக்குத் தெரியக் கூடும். ஆனால் அதற்கு ஏதாவது நமது ஜனங்கள் ஏமாந்து கதரைப்போல் அதற்கும் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கி அதன் பேராலும் திரு.காந்தி பல லட்சம் நம்மவர்களிடமிருந்து வசூல் செய்து அவரிடம் ஒப்புவித்து விட்டால் பிறகு கதரைப்போலவே காரியத்தில் ஒன்றுக்கு மூன்றாய் கதர் கட்டுபவர்கள் நஷ்டப்படவும் அவற்றுள் 16ல் ஒரு பங்கு ஏதோ கிராமத்தில் உள்ளவர்கள் லாபமடைவதாய் காணப்படுவதும் மற்றபடி லட்சக்கணக்கான ரூபாய்கள் பார்ப்பனர்கள் வயிற்றில் போய் விழும்படியாக இலாக்கா முழுவதும் தரும சத்திரமாகவும் அக்கிரகாரமாகவும் ஆவதைத் தவிர வேறு ஒரு காரியமும் ஆகப் போவதில்லை என்பது நமது உறுதி. பார்ப்பனர்களின் கதர் தொண்டிற்கும் ஏழைகளிடம் உள்ள அன்பிற்கும் ஒரு சிறு உதாரணம் காட்டுவோம். அதாவது ஒரு மணிநேரம் ஒரு பெண்ணோ ஒரு ஆணோ நூல் நூற்றால் ஒரு சின்னக் காசுதான் கூலி கிடைக்கின்றது. இந்த மாதிரி தொழிலால் நமது நாட்டு மக்களுக்குள் கைத்தொழில் தரித்திரம் தீர்ந்து விடுமா? இதற்கு மேல் சம்பாதிக்கும்படியான நிலைமை தேடவேண்டாமா? என்றால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் என்னவென்று பார்த்தால் “அதாவது கிடைப்பதற்கு வேறு வேலை சொல்” என்பதுதான். இது யார் கேட்கின்றார்கள் என்று பார்த்தால் அதே கதர் தொண்டில் அதாவது ஒரு மணி நேர வேலைக்கு ஒரு சல்லி கிடைப்பதற்குத் தகுந்த வேலையில் மாதம் 200 ரூ. சம்பளமும் 100 ரூ. போல் படியும் வாங்குகின்ற ஒரு ‘தேசபக்தர்’ இந்த ஒரு மணிக்கு ஒரு சல்லி கூலியாவது எங்கிருந்து சம்பாதித்துக் கொடுத்தார்கள்? வேஷ்டி வாங்குபவனிடம் ஒன்றுக்கு மூன்றாய் அபராதம் வாங்கி ஒன்றுக்கு வீசமாய் கூலி கொடுத்து விட்டு மாதம் 200 ரூ. தாங்கள் சம்பளம் பெறுகின்றார்கள். ஆனால், கனம் மந்திரி முத்தையா முதலியாரவர்கள் மதுவிலக்கு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தால் அது மாத்திரம் இவர்களுக்கு புரட்டும் பித்தலாட்டமுமான காரியமாய் விடுகின்றதாம். அதன் காரணம் என்ன?
திரு.ராஜகோபாலாச்சாரியார் வாயால் அவர் கையில் கொடுக்கப்பட்ட பணத்தால் பிரசாரம் செய்தால் மாத்திரம் அது சரியான மதுவிலக்குப் பிரசாரமாவதும், மற்றவர்கள் செய்தால் அது புரட்டாவதுமானால், பார்ப்பனப் புரட்டுக்கு இது ஒன்றே சாட்சி போதாதா? என்று கேட்கின்றோம்.
திரு.ராஜகோபாலாச்சாரியாரால் சிருஷ்டிக்கப்பட்ட முன் இருந்த மந்திரிகள் மதுபானம் கெடுதியா? நல்லதா? என்பது கூடத் தெரியாதென்றும், அதை ஒழிக்க வேண்டியது அவசியமென்று ஜனங்கள் கருதுகின்றார்களா? இல்லையா? என்பது கூட இன்னும் தெரியவில்லை என்றும் சொன்ன மந்திரிகளை ஆதரித்துக் கொண்டு அப்போது எவ்விதப் பிரசாரமும் செய்யாமலிருந்த இந்த பார்ப்பனர்களுக்கு இப்போது மதுபானம் தப்பு என்றும் மதுவிலக்கு அவசியமென்றும் சொல்லி மதுவிலக்கு பிரசாரம் செய்ய பொதுஜனங்களை அனுமதித்ததோடு அதற்காக 4- லட்ச ரூபாயும் பொதுஜனங்களிடம் கொடுக்க முன் வந்த மந்திரியைப் பற்றி குறை கூறிக் கொண்டு திரிவதோடு அவர் மறுபடியும் சட்டசபை மெம்பராகக் கூடாது, மந்திரி ஆகக்கூடாது என்று பிரசாரம் செய்வார்களானால் இவர்களின் அயோக்கியத்தனத்திற்கும் சூழ்ச்சிக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம். அன்றியும் இதாவது இதுவரை யார் செய்தார்கள் என்றும் சர்க்காரை இவ்வளவு தூரம் யார் வசப்படுத்தினார்கள் என்றும் கேட்கின்றோம். இந்த மாதிரி பிரசாரம் ஒழுங்கானதல்ல என்பதையும் நாணயமானதல்ல என்பதையும் திரு.ராஜகோபாலாச்சாரியார் உண்மை யாகவே மனபூர்த்தியாகவே நம்பியிருப்பாரானால் கனம் மந்திரியை அந்தத் தொகையில் நாலில் ஒரு பாகமான ஒரு லட்ச ரூபாயை தமக்குக் கொடுக்கும் படி கேட்டிருப்பாரா? என்று கேட்கின்றோம். எனவே இப்போது அந்தப் பணம் முழுவதும் பார்ப்பனர் தொப்பைக்குப் போய்ச் சேர முடியாததினா லேயே அந்த மந்திரி கெட்டவரா? என்றும் அந்த பிரசாரம் சூழ்ச்சியா? என்றும் கேட்கின்றோம். உண்மையிலேயே திரு.ஆச்சாரியார் யோக்கியமான மதுவிலக்கு பிரசாரகராயிருந்தால் மந்திரியின் காரியத்தைப் புகழ்ந்து அவருக்கு குடியினால் கெட்டுப் போகிறவர்கள் சார்பாய் நன்றி பாராட்டி அதை ஒவ்வொரு இடத்திலும் புகழ்ந்து சொல்லிக் கொண்டும் சர்க்காரும் நம் வழிக்கு வந்துவிட்டார்கள், ஆதலால், மதுவிலக்குப் பிரசாரம் சர்க்காருக்கு விரோதமல்ல; ஆதலால் எல்லோரும் தைரியமாய் பிரசாரம் செய்யலாம்; இந்த வருஷம் பிரசாரம் செய்ய நமது மந்திரியின் சாமர்த்தியத் தால் இசைந்த சர்க்கார் அடுத்த வருஷம் இதைவிட பலமாக அதாவது ஒரு 10 கடைகளையாவது மூடத்தக்க அளவுக்கு முற்போக்கான காரியங்கள் செய்வார்கள் என்று சொல்லக் கடமைப்பட்டவராவார். அப்படிக்கு இல்லாமல் மந்திரி கெட்டவர் அவர்கூடாது, வேறு யாராவது ஒரு பார்ப்பனருக்கு ஓட்டுக் கொடுங்கள், இல்லாதவரை பார்ப்பனக்கூலிக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொன்னால் இவர்கள் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்து இதை முடிக்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 23.06.1929