திரு. தண்டபாணியின் தொல்லை சென்னை, ஆக°டு, 2
‘திராவிடன்’ பத்திரிகைக்கு விளம்பரம் பிடித்துக்கொடுக்கும் ஏஜண்டாயிருந்த திரு.என். தண்டபாணிபிள்ளை திராவிடன் பத்திரிகைக்கு விளம்பரம் பிடித்துக்கொடுத்ததன் சம்பந்தமாக தமக்கு கமிஷனாகவும் தம் ஏஜண்ஸியை நிறுத்தித் தம்மை நீக்கியதன் சம்பந்தமாகத் தமக்கு மூன்று வருட நஷ்ட ஈடாகவும் மொத்தத்தில் பன்னீராயிரத்துச் சொச்சம் ரூபாய் சேர வேண்டுமென்று ஐகோர்ட்டில் திரு.ஈ.வெ.ராம சாமியார் மீது அசல் தரப்பில் கொண்டு வந்துள்ள வழக்கு சம்பந்தமாய் திரு. ராமசாமியார் திரு.ஸி.ஜெயராம் நாயுடுவுக்கு 13 ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டுமென்று பலவாறு புகார் சொல்லி அவ்வழக்கில் தீர்ப்பு சொல்லுமுன் திராவிடன் ஆபீ° சொத்துக்களை உடன் ஜப்தி செய்து வைக்க உத்தரவாக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் சொத்துக்களை பராதீனம் செய்து விட்டு ஊரைவிட்டு ஓடி விடுவாரென்றும் திரு. தண்டபாணி போட்டி ருந்த மனு நீதிபதி பண்டலே முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் சம்பந்தமாக செங்கல்பட்டு ஜில்லா போர்டு உபதலைவரான திரு.ஸி.ஜெயராம் நாயுடு அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண வாக்கு மூலமொன்றில், திரு. தண்டபாணி பிள்ளை தமது வழக்கில் தீர்ப்பு சொல்லப்படுமுன் ஜப்திக்கு உத்தரவாக வேண்டுமென்று கொடுத்திருந்த மனுவில் கண்ட விஷயங்கள் தமக்கு படித்துக்காட்டப்பட்டதாயும், அதில் தமக்கு திரு.ஈ.வெ. ராமசாமியார் 13ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டி யிருப்பதாய்த் திரு. தண்டபாணி குறிப்பிட்டிருப்பது சரியல்ல வென்றும் தமக்கும் திரு. ராமசாமியாருக்கும் திராவிடன் சம்பந்தமாய் எத்தகைய கொடுக்கல் வாங்கல்களும் கிடையாதென்றும், திரு. ராமசாமியார் தமக்குக் கடன் ஒன்றும் கொடுக்க வேண்டியதில்லை என்றும், திரு. தண்டபாணியின் புகார் பொய் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மற்றும் திரு. தண்டபாணி தமது ஜப்தி மனுவுக்கு ஆதரவாய் திரு.ராம சாமியார் திராவிடன் சொத்துக்களை சுயமரியாதைச் சங்கத்திற்கு மாற்றப் போவதாய் புகார் சொல்லியிருந்ததன் சம்பந்தமாய் “திராவிடன்” காரியா லயத்தையும் சொத்துக்களையும் திரு.ஈ.வெ. ராமசாமியிடம் ஒப்புவித்து, பத்திரிகையைச் சிறப்புடன் நடத்தும்படி விடுத்துள்ள தென் இந்திய மக்கள் சங்கத்துக் காரியதரிசி திவான்பகதூர் டி.வரதராஜுலு நாயுடு அவர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மற்றொரு பிரமாண பத்திரத்தில் மேற்படி சங்கத்து 8-7-27 ல் கூடிய டைரெக்டர்கள் கூட்டமொன்றில் நிறைவேற்றப் பட்ட தீர்மானப்படி திரு.ஈ.வெ. ராமசாமியிடம் சங்கத்தின் தமிழ் தினசரிப் பத்திரிகையான ‘திராவிடன்’ பத்திரிகையை அத்தீர்மானத்தில் கண்ட நிபந்தனைகளின்படி மூன்றாண்டுகளுக்கு நடத்தி வருவதற்காக அதன் காரியாலயச் சொத்துக்கள் இயந்திரங்கள் முதலியவற்றோடு ஒப்புவிக்கப் பட்டதாயும் திராவிடன் பத்திரிகை சம்பந்தமான இயந்திரங்கள், அச்சு, மரச் சாமான்கள் முதலிய சகல சொத்துக்களும் மேற்படி சங்கத்திற்குச் சொந்த மானவைதான் என்றும், அவற்றைக் கொண்டு பத்திரிகையைச் சிறப்பாய் நடத்தும் உரிமையைத் தவிர மற்றபடி திரு.ராமசாமியாருக்கு அவற்றின் மீது °வாதீன உரிமையொன்றும் கிடையாதென்றும் எடுத்துக் காட்டியிருந்தார்.
திரு.ராமசாமியாரின் எதிர்மனு
திரு.தண்டபாணி பிள்ளையின் மனுவில் என்னைக் குறித்தறிவிக்கப் பட்டுள்ள புகார்களனைத்தும் பொய்யாயும் ஆதாரமற்றதாயும் இருப்பதோடு அவை சமுதாய, ராஜீயத்துறைகளிலுள்ள எனது விரோதிகளின் தூண்டு தலால் பொது உழைப்பாளியாகிய என்மீது இக்கோர்ட்டாருக்கும், பொது ஜனங்களுக்கும் ஒருவித துர் அபிப்பிராய மேற்படச் செய்யும் கெட்ட நோக்கத்தோடு வேண்டுமென்றே விஷமத்தனமாய் சொல்லப்பட்டவை.
நான் 8-7-27-ல் தென்னிந்திய மக்கள் சங்கத்து டைரெக்டர்கள் கூட்டமொன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி திராவிடன் பத்திரிகையை மூன்று வருடங்களுக்கு நடத்தும் பொறுப்பேற்று நடத்து கின்றேன். அப்பத்திரிகை சம்பந்தமான இயந்திரம் முதலான சகல சொத்துக் களும் அச்சங்கத்தைச் சேர்ந்தவையாயினும் அத்தீர்மானப்படி பத்திரிகையை நடத்தும் சௌகரியத்தை முன்னிட்டு என்னிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனவேயன்றி அவற்றின் மீது எனக்கு எத்தகைய ஸ்வாதீன உரிமையுமில்லை.
மற்றபடி 5-4-28-ல் எனக்கும் தண்டபாணி பிள்ளைக்கும் ஏற்பட்டதாய்ச் சொல்லப்படும் ஒப்பந்தத்தின் சம்பந்தமாகவும், அவரை ஏஜென்ஸியிலிருந்து நீக்கியதன் சம்பந்தமாயும் அவர்கோரும் நஷ்ட ஈடு முதலிய விவகாரங்களைக் குறித்தமட்டில் சந்தர்ப்பம் ஏற்படும்போது நான் அதற்குச் சமாதானம் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆயினும் தற்போது அவர் தமக்குச் சேர வேண்டுமெனச் சொல்லும் தொகையைக் கொடுக்க நான் கடமைப்பட்டிருக்கவில்லை என்றும், அவர் ஏதோ ஆதாரமின்றி கண்டபடி கணக்குப்போட்டிருப்பதற்கு நான் உத்தரவாதமல்ல என்றும், அவருடைய புகார்கள் குறும்புத்தனமாக என்னை மற்றவர்கள் முன்னிலையில் கேவலப் படுத்திவிடலாம் என்கின்ற நோக்கத்தோடுதான் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நான் ஒரு சமயத்தில் ஈரோடு முன்சிபல் சேர்மனாயிருந்திருக்கிறேன். என் பேருக்கே சுமார் ஒரு லட்ச ரூபாய் பெறுமான சொத்துக்களிருப்பதோடு, கோயம்புத்தூரிலும், சேலம் ஜில்லாவிலும் என் தந்தைக்குச் சொந்தமான சுமார் 10 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்களிருக்கின்றன. நான் வருடவாரி சராசரியில் 2500 ரூபாய் வீட்டுவரியும், 700 ரூபாய் நிலவரியும், 300 ரூபாய் வருமான வரியும் செலுத்தி வருகின்றேன். நான் ராஜீய, சமுதாயத் துறையிலு ழைத்து வரும் பொது ஊழியன். அன்றியும் 9000 சந்தாதாரர்களையுடைய “குடி அரசு” என்னும் தமிழ் வாரப் பத்திரிகைக்கும், “ரிவோல்ட்” என்னும் மற்றொரு ஆங்கில வாரப் பத்திரிகைக்கும் ஆசிரியனாயுமிருந்து வருகின்றேன்.
திரு.தண்டபாணி பிள்ளை நான் கடனில் மூழ்கியிருப்பதாய்ச் சொல்லியிருப்பதைப் பலமாய்க் கண்டித்து மறுப்பதோடு ஸி.ஜெயராம் நாயுடு உட்பட நான் யாருக்கும் எத்தகைய கடனும் கொடுக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்க விரும்புகின்றேன். வாதி எனக்குக் கடன் கொடுத்ததாய்ச் சொல்லுவதற்குப் பதிலாக நான் வாதியின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்கும் அவருடைய கஷ்டகாலத்திலும் பலதடவைகளில் பண உதவி செய்திருக்கின்றேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
கடன் கொடுத்தவர்களை மோசம் செய்யும் கருத்துடன் நான் சென்னையிலுள்ள என் சொத்துக்களை எல்லாம் சுயமரியாதைச் சங்கத்திற்கு எழுதி வைக்கப் போவதாய் சொல்லப்பட்டிருப்பது முழு மோசமான பொய். அத்தகைய ஆலோசனை ஏதாவதிருந்ததாய் வைத்துக் கொண்டாலும், அது “திராவிடன்”, “குடி அரசு” பத்திரிகைகளின் செல்வாக்கை மிகுதிப்படுத்தி சிறப்புடன் நடத்திவைப்பதன் பொருட்டு செல்வாக்கும் செல்வமுமுள்ள சில கௌரவஸ்தர்களான டைரெக்டர்களடங்கிய கமிட்டியாரிடம் பத்திரிகளை நடத்தப்படுவதற்கு ஒப்புவிப்பதான கருத்தே ஒழிய என் சொத்துக்களின் உரிமையை மாற்றுவதாகவோ, அல்லது சாமான்களை அவர்களுக்குக் கொடுத்து விடுவதாகவோ எத்தகைய உத்தேசமுமிருந்ததில்லை.
வாதி தமது புகார்களெல்லாம் சுத்தப்பொய் என்பதை உணர்ந்திருந்தும் என் பொது ஊழியத்தைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதில் ஊக்கமுள்ள விரோதிகளால் தூண்டப்பட்டு என்மீது இத்தகைய ஆதாரமற்ற வழக்குக் கொண்டு வந்ததோடு, எனது சொத்துக்களை உடன் ஜப்தி செய்ய ஜப்தி மனுவும் தாக்கல் செய்யத் தூண்டப்பட்டிருக்கின்றார் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இத்தகைய பொய்யான சூழ்ச்சி காரணமான மனுப் போட்டிருப்பதனால் என்மீது பொது ஜனங்களிடத்திலுள்ள மதிப்பு பாதிக்கப்பட்டிருப்பதால், இதன் சம்பந்தமாக நான் பின்னால் தக்க பரிகாரத்தைத் தேடிக் கொள்ளுகிறேன்.
குறிப்பு : நீதிபதி பண்டலே முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு திரு. தண்டபாணி பிள்ளையின் மனுவை ஆதாரமற்றது எனக் குறிப்பிட்டு நீதிபதி செலவுத் தொகையுடன் தள்ளிவிட்டார்.
குடி அரசு – நீதிமன்ற மனு – 04.08.1929