மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி
சென்னை மாகாணத்தில் மதுவிலக்குப் பிரசாரம் செய்வற்குச் சென்னை அரசாங்கத்தாரைச் சம்மதிக்கும்படியான நிலைமைக்குக் கொண்டு வந்த பெருமை நமது கலால் மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்களுக்கே உரியதாகும். அதுபோலவே. அப்பிரசார திட்டத்திற்கு வேண்டுமென்றே துர் எண்ணம் கற்பித்து மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் மதுபானம் அதிகமாகுமென்று சொல்லி அதை நிறைவேறாமல் செய்ய முயற்சித்த “புண்ணிய கைங்கர்ய”த்தின் பெருமை காங்கிரஸ் சுயராஜ்ய கட்சிக்கும் தேசீயக் கட்சிக்குமே முழுவதும் போய்ச்சேர வேண்டியதாகும். அது போலவே இவ்விஷம முயற்சியை வெற்றிபெற வொட்டாது தலையிலடித்து ஒழித்து, மந்திரியின் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை ஜஸ்டிஸ் கட்சியாருக்கே உரித்தானதாகும்.
கலால் மந்திரி கனம் திரு.முத்தையா முதலியார் அவர்கள் மது விலக்குப் பிரசாரத்திற்காக நான்கு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து அப் பிரசாரத்திற்கென்று மத்திய கமிட்டியைத் தாமாகவே ஏற்படுத்தியிருந்தாலும் அக்கமிட்டி நியமனத்தில் மிக்க கவலையுடனும் பொறுப்புடனும் நடுநிலைமை வகித்து உண்மையான பொறுப்புள்ள கனவான்களாகவும், பொதுநலத்திற்குழைக்கும் சகல ஸ்தாபனங்களுக்கும் வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் உள்ளதாகவும், யாராலும் எவரை பற்றியும் ஆட்சேபனை சொல்ல முடியாததாகவும் பார்த்து நியமித்தவுடன் அவர்கள் வசத்திலேயே பூராப் பணத்தையும் சகல அதிகாரத்தையும் ஒப்புவித்துவிட்டார். மற்றும் கனம் மந்திரியின் நல்ல எண்ணத்திற்கும் மாகாண நிர்வாக கமிட்டியின் நேர்மைக்கும் உதாரணம் சொல்ல வேண்டுமானால் இக்கமிட்டியினால் நியமிக்கப்பட்ட ஜில்லா கமிட்டிகளில் இத்திட்டத்தை அடியோடு எதிர்த்தவர் களும் இத்திட்டத்திற்கு துர் எண்ணம் கற்பித்தவர்களுமான சுயராஜ்யக் கட்சிக்காரரும், சுயேச்சைக் கட்சிக்காரரும், சகல வித தேசீயக் கட்சிக்காரரும், ஒத்துழையாதாரும் அங்கம் பெற ஆசைப்பட்டதும், நியமனத்தை ஏற்று, கமிட்டியின் தத்துவத்தை நிறைவேற்ற வேலை செய்ய சம்மதித்திருப் பதுமான காரியம் ஒன்றே போதுமானதாகும். மாகாண மதுவிலக்கு பிரசார போர்டிலும் அதன் நிர்வாக சபையிலும் அங்கம் பெற்ற திவான்பகதூர் எம்.ராமச்சந்திரராவ் எம்.எல்.ஏ. அவர்கள் எல்லா இந்திய மதுவிலக்கு கமிட்டி காரியதரிசி ஆவார். அது மாத்திரமல்லாமல் எல்லா இந்திய காங்கிரஸ் மதுவிலக்கு கமிட்டியிலும் அங்கத்தினராவார். மற்றும் திருவாளர்கள் கே.ஆர். வெங்கிட்டராமய்யர் எம்.எல்.சி, சூரியநாராயண ராவ் மற்றும் இரண்டு மூன்று பார்ப்பனர்களும் அதாவது வருணாச்சிரம தர்மம், பார்ப்பன ஆதிக்கம், சீர்திருத்தம் ஆகிய சபைகளின் பிரதிநிதிகள் என்றே சொல்ல வேண்டும் என்றாலும், இப்படிப்பட்டவர்களாகவே கமிட்டியில் 100-க்கு 20 வீதத்திற்கு குறையாமல் பார்ப்பன பிரதிநிதித்துவம் கொடுத்தே கமிட்டி நியமிக்கப்பட்டிருப்பதையும், அதுவும் சரியான பார்ப்பன ஆதிக்கத்தில் கவலையுள்ளவர்களாகவே மிகுதியும் நியமிக்கப்பட்டிருப்பதும் காணலாம். மற்றபடி ஜில்லா பிரசாரக் கமிட்டி நியமன விஷயத்திலும் கனம் மந்திரி தாம் எவ்வித எதேச்சதிகாரமும் எடுத்துக் கொள்ளாமல் அதையும் ஒரு சப் கமிட்டிக்கு விட்டு அக்கமிட்டியிலும் திரு.எம். ராமசந்திரராவ் உள்பட பார்ப் பனர் இரண்டு பேரும், பார்ப்பனர்களுக்கு அநுகூலமான அதாவது பார்ப்பனீயத்தில் மிகுந்தப் பற்றும் பார்ப்பனர் அல்லாதார் கட்சிக்கு விபரீத மான மனப்பான்மையும் கொண்ட திரு.வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர் களையும் திரு.குழந்தைவேல் முதலியார் அவர்களையும் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக காங்கிரஸ்காரரான திரு.முனுசாமி நாயுடு அவர்களையும் சேர்த்து இவ்வைந்து கனவான்கள் வசமேவிட்டு அவர்களால் பொறுக்கி எடுத்து சிபார்சு செய்யப்பட்ட கனவான்களையே மிகச் சிறிய திருத்தத்துடன் நிய மனம் செய்யச் செய்திருக்கிறார்.
இந்நியமனங்களிலும் மிக்க ஜாக்கிரதையாய் கூடிய வரையில் ஒரு பார்ப்பனர், ஒரு கிறிஸ்தவர், ஒரு மகமதியர், ஒரு தாழ்த்தப்பட்டவர், ஒரு சர்க் கார் உத்தியோகஸ்தர் (இவர் பெரும்பாலும் பார்ப்பனரே) இருக்கிறார்களா? எனப் பார்த்துவிட்டு பிறகு தான் மீதி நான்கு பேர்களே பார்ப்பனர் அல்லாத வர்கள் என்னும் வகுப்பு பிரதிநிதித்துவமும் ஒவ்வொரு கமிட்டியிலும் கக்ஷி பிரதிநிதிதித்துவமும் முக்கியக் கொள்கையாய் வைத்துக் கவனித்தே போடப் பட்டு இருக்கிறதா? என்பதையும் கவனித்து இருக்கிறார். இந்தப்படி சிபார்சு செய்யப்பட்ட கனவான்களின் பெயர்கள் எல்லாம் ஓட்டு எடுக்காமல் ஏகமனதாய் தெரிந்து எடுக்கப்பட்டதேயொழிய மாகாணம் முழுமைக்கும் ஒட்டு மொத்தம் சுமார் 300 கனவான்கள் நியமிக்கப்பட்டதில் ஒன்று, இரண்டு கனவான்கள் பெயர்கூட ஓட்டுக்கு விட்டிருக்கப்பட்டிருக்காது என்று உறுதி கூறலாம். தவிர ஜில்லா கமிட்டிகளில் சுயராஜ்ய கட்சியார் பெயர்கள் நியமனம் செய்யப்பட்டதைப் பார்த்த கனவான் ஒருவர் அந்தப் பெயர்களை எடுத்து விட வேண்டும் என்றும், அவர்கள் இந்தத் திட்டத்திற்கு விரோதமான மனப் பான்மையைக் காட்டினவர்கள் என்றும், அவர்களை நியமித்தால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்றும், ஒப்புக் கொண்ட போதிலும் திட்டத்தின் தோல்விக்கு உதவியைக் கருதுவார்களே ஒழிய வெற்றிக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்றும் எடுத்துச் சொன்ன காலையில் சப்கமிட்டியில் இருந்த ஒரு முக்கியமான பார்ப்பன அங்கத்தினர் சுயராஜ்யக்காரர்கள் இக்கமிட்டி யில் இருக்க ஆசைப்பட்டதாகவும் தான் இரண்டொருவருடன் கலந்து பேசியதில் அவர்கள் இக்கமிட்டியுடன் ஒத்துழைத்து இத்திட்டத்தை நிறைவேற்றச் சம்மதித்ததாகவும் வாக்கு கொடுத்து அக்கனவான்களின் பெயர்களைக் கமிட்டியில் இருக்கச் செய்ததாக தெரிகின்றது. கடைசியாக ஒத்துழையாதார் என்பவரும் எல்லா இந்தியக் காங்கிரஸ் மது விலக்கு சங்கத்தின் தலைவருமான திரு.சி.ராஜகோபாலாச்சாரியாருடைய பெயரை ஜில்லா கமிட்டியில் பிரேரேபித்த போதும் விளம்பரக் கமிட்டியில் பிரேரே பித்தபோதும் இதேபோல் கேள்விகள் கேட்கப்பட்டதில் அவரும் சம்மதித்தி ருப்பதாகச் சொன்னதின் பேரிலேயே விளம்பரக் கமிட்டியில் அவர்களைப் போட கமிட்டி சம்மதித்திருப்பதாகத் தெரிகின்றது. ஆகவே, மது இலாக்கா மந்திரி மதுவிலக்கு விஷயத்தில் செய்திருக்கும் வேலையானது இந்தியாவில் இதுவரை எந்த சர்க்காரும் மந்திரியும் செய்யாத ஒரு பெரிய காரியத்தைச் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.
இவரது ஆட்சியில் சர்க்கார் உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித் துவ உத்திரவும் சர்க்காரின் மதுவிலக்கு பிரசாரத் திட்டமும் சென்னை மாகாண அரசியல் சரித்திரத்தில் ஒரு முக்கியமான பாகத்தைப் பெற வேண்டியவைகள் என்றே சொல்லுவோம்.
ஜில்லா கமிட்டிக்கு ஒரு விண்ணப்பம்
இத்திட்டத்தை ஏற்பாடு செய்த கனம் மந்திரி அவர்களும், இவர்களால் நியமிக்கப்பட்ட பொதுக் கமிட்டியும் கூடியவரையில் அவர்களது கடமையைச் செய்துவிட்டார்களென்றே சொல்லலாம். ஆனாலும் இத்திட்டத்தின் வெற்றியும், பலனும் இனி ஜில்லா பிரசாரக் கமிட்டியிடம்தான் அதிகமாய் இருக்கிறதென்று சொல்லுவோம். என்னவென்றால், இத்திட்டத்திற்கு ஒதுக்கி வைத்த பணம் பெரும்பாகம் ஜில்லா கமிட்டியாரிடம் ஒப்படைக்கப்படப் போகின்றது. ஆதலால் அவர்கள்தான் தக்கபடி அதைச் செலவு செய்து பிரசாரம் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். இதற்குக் கமிட்டியில் அங்கத்தினர்கள் கூட்டுறவுடன் சரியான பிரசாரகர்களை நியமித்து ஒழுங்கான முறையில் பிரசாரம் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்களென்பது மிகையாகாது. பிரசாரகர்களை முதலில் தக்கபடி கமிட்டியார் தர்ப்பீத் செய்யவேண்டும். பிரசாரத்தின் போது வார்த்தைகளை அளந்து பேசும்படியும், குடிப்பவர்களையோ கடைக்காரர் களையோ மதுபான வியாபாரிகளையோ, மரம் வைத்திருப்பவர்களையோ அதிக்கிரம வார்த்தைகளால் பேசாமலிருக்கும்படியும் திட்டம் செய்ய வேண்டும். மறியல் செய்ய வேண்டிய விஷயம் சில சமயங்களில் அவசியமானாலும் முதலிலேயே அதாவது எடுத்த எடுப்பிலேயே அதை ஆரம்பித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் கள் சாராயக்கடைகள் சர்க்கார் சட்டப்படி நடைபெறுகின்றதா? காலா காலங்களில் திறக்கப்பட்டும் மூடப்பட்டும் இருக் கின்றதா? என்பதைக் கவனித்துப் பார்த்து அப்போதைக்கப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மாகாண பிரசார காரியாலயத்திற்கும் அறிக்கை செய்ய வேண்டும் மற்றும் உரிமை இல்லாத இடங்களில் விற்கப்படுகின்றதா? என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். உரிமை இல்லாமல் உற்பத்தி செய்யப்படு கின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும். இவைகளினால் மதுவிலக்கு லட்சியத்திற்கு அதிக நன்மையுண்டு என்பது நமது அபிப்பிராயம். இவை சரிவர கவனித்துப் பிரசாரம் செய்த பிறகே மறியல் செய்யவேண்டும். தவிர வும் மது விலக்குக்காக முழுதும் சம்பளப் பிரசாரகர்களாகவே இல்லாமல் கௌரவ பிரசாரகர்களையும் நியமித்து அவர்களுக்குச் செலவு மாத்திரம் கொடுப்பதாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
இப்பிரசாரத்தில் பெண்களை அதிகமாகக் கௌரவப் பிரசாரகர்களாக நியமிக்க வேண்டும். முனிசிபாலிடி, தாலூகா போர்டு ஆகியவைகளிலுள்ள பெண் உபாத்தியாயர்களை சனி, ஞாயிற்று கிழமைகள் தோறும் பிரசாரம் செய்ய கேட்டுக் கொண்டு கிராமங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு வழிச் செலவு கொடுத்துப் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். மது இலாகா அதிகாரிகளால் ஏதாவது இடையூறு நேரிடுமானால் பிரசாரகர்கள் அவர் களிடம் நேரில் எவ்வித வர்த்தமானங்களும் வைத்துக் கொள்ளாமல் சாட்சி களுடன் ஜில்லா கமிட்டி மூலம் மாகாண சபை காரியாலயத்திற்கு அனுப்பி விட வேண்டும்.
ஜில்லா கமிட்டியார்களும் தங்கள் பிரசாரகர்கள் பெயர்களைச் சம்பந் தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் மது இலாகா அதிகாரிகளுக்கும் அனுப்பிவிட வேண்டும். ஆகவே, இவை முதலாகிய அநேக விஷயங்கள் பிரசாரக் கமிட்டியார் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இந்த முறையில் ஒரு ஐந்து வருஷங்களுக்குக் கட்டுப்பாடாகவும், கட்சிப் பிரதி கட்சி இல்லாமலும் மதுவிலக்குப் பிரசாரம் நடைபெறுமானால் சென்னை மாகாணத்தில் மதுபானத்தில் ஒரு பகுதி பாகத்தையாவது ஒழித்து விடலா மென்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆகவே, ஜில்லா கமிட்டி யார்களும், பொதுஜனங்களும் நமது மந்திரி கனம் முத்தையா முதலியாரவர்களின் இவ்வரிய முயற்சிக்குத் தக்க உதவி செய்வார்களாக.
குடி அரசு – தலையங்கம் – 18.08.1929