ஈரோடு ஆலயப் பிரவேசம்
ஈரோடு சர்க்கிள் தேவ°தானக் கமிட்டியார் 30-3-29 ல் செய்த தீர்மான மானது இதுவரையில் மாற்றப்படவில்லை. ஆனால் “தமிழ்நாடு” பத்திரி கையாலும், அதன் நிருபர்களாலும் திரு. வரதராஜுலுவாலும் இவ்விஷயத் தில் தங்களுக்கு ஏற்பட்ட பொறாமையால் எவ்வளவு தூரம் கேவலமான முறைகளில் மேற்படி தீர்மானத்திற்கு எதிரிடையாக விஷமம் செய்யப்பட முடியுமோ அவ்வளவும் விடாமல் செய்யப்பட்டு வருகின்றது. முதலாவதாக இத்தீர்மானம் செய்யப்பட்டபொழுதே இதைத் திரித்துக்கூறி தலையங்கம் எழுதிற்று. பிறகு சென்ற மாதத்தில் திருப்பூரில் கூடின தேவ°தான கூட்டத் தில் இத்தீர்மானம் நீக்கப்பட்டு விட்டதென்றும், சுயமரியாதைக்காரர்கள் குட்டிக்கரணம் போட்டுவிட்டார்கள் என்றும் மனதறிந்த பொய்யை வேண்டு மென்றே திரு. ராமசாமி மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்க பிரசாரம் செய்தது. இதை நாம் மறுத்து எழுதிய பிறகும், அது மனிதத் தன்மை முறையில் நடைபெறும் பத்திரிகையாயிருக்குமானால் அது தனது தவறு தலுக்கு வருந்தியிருக்கும். அப்படிக்கில்லாமல் மேலும் அதே காரியத்தை செய்யும் துறையில் முனைந்து நிற்கின்றது. அதாவது 8-7-29 ல் “தமிழ்நாடு” பத்திரிகையில் “ஆலயப்பிரவேச தீர்மானத்தின் கதி” என்ற தலைப்பிட்டு “பழைய தீர்மானம் ரத்தாகலாம் என்று தெரியவருகின்றது” என்பதாக எழுதி யிருக்கின்றது.
இதிலிருந்து “தமிழ்நாடு” பத்திரிகையும் அதன் ஆசிரியர் திரு. வரதராஜலுவும் ஆங்காங்கு நியமிக்கப்பட்டுள்ள அதன் நிருபர்கள் என்பவர் களும் எவ்வளவு தூரம் சமதர்மத்திற்கும், சமூக விடுதலைக்கும், தீண்டாத வர்கள் என்பவர்களின் நன்மைக்கும் உழைக்கின்றார்கள் என்பதை பொது ஜனங்கள் நன்றாய் அறிந்து கொள்ளலாம் என்றே நினைக்கின்றோம்.
அரசியல் பிழைப்புக்காரர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்குக் கொள்கையோ, நாணயமோ, யோக்கியப்பொறுப்போ ஒன்றும் இருக்க முடி யாது என்பதாக நாம் சுமார் ஆயிரந்தடவை பேசியும், எழுதியும் வந்திருக் கின்றோம். அதற்கிலக்காக திரு. வரதராஜுலுவும் திரு. கல்யாணசுந்தர முதலியாரும் தமிழ்நாட்டில் விளங்குவது கண்கண்ட காட்சியாகும். .இவர் களது விஷமப்பிரசாரத்தால் இவ்வித முயற்சிகளுக்கு ஒரு சிறு இடையூறுகூட விளைவித்துவிட முடியாதானாலும், சமூகத்துறையில் தங்களுக்கு ஏதோ மிக்க கவலையிருப்பதுபோல் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டத்தை வெளிப் படுத்தவே இவைகளை எழுதுகிறோம்.
நிற்க, உண்மையில் ஈரோடு தேவ°தான கமிட்டியின் தீர்மானத்தின் தன்மை என்ன என்பதை அறிய பலர் ஆவலாயிருப்பார்கள். ஆதலால் அதைப்பற்றி சிறிது விளக்குகின்றோம்.
ஈரோடு தேவ°தானக் கமிட்டியில் திரு.ஈ.வெ.ராமசாமி 25 வருட காலமாய் அங்கத்தினராகவும் ‘காரியதரிசியாகவும்’,சிலகாலம் தலைவராகவும் இருந்து வருபவர். அவர் கமிட்டி மெம்பராக வரும்போது அக்கமிட்டிக்கு யாதொரு மூலதனமும் கிடையாது. ஒழுங்கான நிர்வாகமும் கிடையாது. சர்க்காரிடமிருந்து டிர°டிகள், த°திக (மோகினி) தொகையை வாங்குவதும் தங்களின் இஷ்டப்படி செலவு செய்து கொள்ளுவதும் சிப்பந்திகளுக்கு சௌகரியப்பட்டபோது ஏதாவது கொடுத்து சம்பளம் தீர்ந்ததாக கையெழுத்து வாங்கிக் கொள்வதும் வழக்கம். (இன்னும் அநேக தேவ°தானங்களில் இப்படியே நடைபெறுகிறது). எப்படியெனில் சிப்பந்திகளும் சரியாக வர மாட்டார்கள். பூசைகளும் சரிவர நடக்காது. நடந்ததா இல்லையா என்கின்ற கவலையும் டிர°டிக்கு இருக்காது. டிர°டி என்பவர்கள் அநேகமாக அந்தந்த கிராம பெரியதனக்காரர் அல்லது செல்வாக்குள்ள கலகக்காரர் ஆகியவர் களாகவே பெரிதும் இருப்பார்கள். ஆதலால் இவர்களை யாரும் கணக்கு வழக்கும் கேட்கமுடியாது. கமிட்டி மெம்பர்களுக்கும் இவர்களைக் கண்டிக்க அதிகாரம் கிடையாது. வேண்டுமானால் ஏதாவது டிர°டிகளிடம் பங்கு வாங்கிக் கொள்ள மாத்திரம் இடமுண்டு. இந்நிலையில் திரு.ஈ.வெ.ராமசாமி ஈரோடு தேவ°தானக் கமிட்டிக்கு மெம்பரானவுடன் தேவ°தானத்திற்கு பழைய டிர°டிகள் இருக்க மற்றும் ஒவ்வொரு தேவ°தானத்திற்கு ஒவ் வொரு டிர°டியாக தங்களுக்கு நம்பிக்கை உள்ளவர்களை நியமித்து மோகினி தொகைகளைச் சர்க்காரில் வாங்கி பாங்கியில் வட்டிக்குப் போட்டு விட்டு கௌரவமாயும் சம்பளமாயும் செக்கிங் ஆபீசர்களை வைத்து பூஜை நடக்காத நாள்களையும் சிப்பந்திகள் கோவிலுக்கு வராத நாள்களையும் குறிக்கச் செய்து அவர்களின் சம்பளங்களை பிடிப்பதன் மூலமும் வருஷத் திற்கு இரண்டு தடவை பட்டுவாடா செய்வதன் மூலமும் பணப்பிடித்தமும் வட்டிவரவும் ஏற்பட்டு ஒவ்வொரு வருஷத்தில் ஒன்று இரண்டு கோயில்களை 2000, 3000 ருபாய் வீதம் செலவு செய்து பிரித்துக் காட்டியதன் மூலமும் மற்றும் பல செலவுகளும் செய்ததில் சுமார் லட்ச ரூபாய்கள் வரை செலவும் செய்து விட்டு மீதி ரொக்கமாகவும், பாங்கியில் சுமார் 35 ஆயிரம் ரூபாய் வரை இருப்பும் சேர்த்து வைத்து இருந்தார். இவற்றிற்கெல்லாம் தம் கூட இருந்த கமிட்டி கனவான்கள் மிக்க நாணயமுள்ளவர்களும் கௌரவமுள்ளவர் களுமாக இருந்ததும் அவ்வப்போது வந்த கலெக்டர்களும் ரிவினியூபோர்டு மெம்பர்களும் அநுகூலமாக இருந்ததுமே காரணமாகும். இந்த அனுபவங் களைக் கொண்டுதான் திரு.ஈ.வெ.ராமசாமியும் தேவ°தான மசோதாவை ஆதரித்ததுமாகும்.
பிறகு புதிய சட்டப்படி கமிட்டி நியமிக்கப்பட்டபோது பழைய மெம்பர் களில் திரு. ஈ.வெ.ராமசாமியையும், மற்றும் இரண்டொருவர்களையும் மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவர்களைப் புதிதாக நியமித்தார்கள். அதுசமயம் திரு. ராமசாமி தான் கமிட்டியில் இருக்க இஷ்டமில்லாதிருந்தும் போர்டு கமிஷனர் ஒருவரின் இஷ்டத்தின் பேரில் இருக்க வேண்டியதாயிற்று. இதன் மேல் பல பார்ப்பனர்கள் ஒன்று கூடி திரு.ராமசாமி பூஜை உற்சவம் முதலியவைகளுக்கு விரோதி என்றும் பார்ப்பனத் துவேஷி என்றும் இரண்டு முறை சிறைக்குப் போனவரென்றும் எழுதி ஆயிரக்கணக்கான கையெழுத்து வாங்கி போர்டுக்கு அனுப்பினார்கள். அது கமிட்டிக்கு வந்த போது திரு.ராம சாமியே தலைவராயிருந்ததால் அம்மகஜரின் மீது அதில் கண்ட விஷயங் களை ஒப்புக் கொண்டதோடு மேல் கொண்டும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் துவேஷி அல்ல மற்றும் பார்ப்பனீயத்தை ஆதரிக்கின்றவர்களுக்கும் துவேஷி என்றும் இருமுறைமாத்திரம் சிறைக்குப் போகவில்லை. அதற்கு மேலாகவும் போயிருக்கிறார் என்றும் எழுதி இனியும் அந்த கொள்கையைத் தான் அனுசரிக்க முடியும் என்றும் குறிப்பிட்டு மகஜர் திருப்பி அனுப்பப் பட்டது. பிறகும் அவர் நியமிக்கப்பட்டதால் அவர் கமிட்டிக்கு வேறு தக்க கன வானைத் தலைவராக வைத்து கோயில்கள் சம்பந்தமாக தனது எண்ணங் களை ஈடேற்றிக் கொள்ள எண்ணி திரு பழைய கோட்டை பட்டக்காரர் அவர் களை அவரது இஷ்டத்திற்கு விரோதமாய்க் கட்டாயப்படுத்தி தலைவராக்கி இதுவரை ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு காரியங்கள் செய்யக்கூடுமோ அவ்வளவு தூரம் கொஞ்சங் கொஞ்சமாய் செய்யப்பட்டு வருகிறதென்றே சொல்லலாம். மற்ற கமிட்டி கனவான்களும் கூடியவரை ஒத்துழைத்து வரு கின்றார்கள் என்றே சொல்லலாம்.
கடைசியாக கோயில் பிரவேசத்தீர்மானம் கொண்டுபோன காலத்தில் இத்தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே கொண்டு போகப்பட்டதாகச் சொல்லிவிட முடியாது. நிறைவேற்றினாலும் சரி நிறைவேறாவிட்டாலும் சரி, நிறைவேறினால் கமிட்டியில் இருக்கலாம், நிறைவேறாவிட்டால் ராஜிநாமா செய்துவிடலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே கொண்டுவரப்பட்டதாகும். கமிட்டியில் இப்போதும் தலைவர் உள்பட மெஜாரிட்டி மெம்பர்களுக்கு இத்தீர்மானத்தின் கொள்கையைப் பற்றி ஆட்சேபணை இல்லை என்றே சொல்லுவோம். இதற்கு ஆதாரம் இத் தீர்மாணம் வாதத்திற்கு வந்த போது ஒருவர் தவிர வேறு யாரும் வந்து எதிர்க்காததும் எந்த விதத்திலும் தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவிக் காததுமே போதுமானதாகும். ஆனால் அத்தீர்மானத்தை அமுலுக்கு கொண்டு வரும் விஷயத்தில் சிலர் பொறுப்பற்ற தன்மையால் அவசரப்பட்டு விட்டதும், அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு சில பார்ப்பனர் சூழ்ச்சி செய்ததும் அதற்கேற்றார்போல் சர்க்காருக்கும் பார்ப்பனர்களுக்கு ஆக்கம் கொடுக்கும் முறையில் ஒழுங்கற்ற தன்மையில் நடந்து கொண்டதும், தேவ°தான போர்டிலிருந்தும் அத்தீர்மானத்தை மாற்றி விடவேண்டும் என்பதாக ஒரு குறிப்பு வந்திருப்பதும் ஆகிய காரியங்கள் இத்தீர்மானத்தை புனராலோசனை செய்ய இடம் கொடுத்து விட்டது. சர்க்கார் நியாமற்ற நடவடிக்கைகளுக்கும், அமலுக்கு கொண்டுவந்தவர்களின் பொறுப்பற்ற தன்மைக்கும், இரண்டொரு கமிட்டி மெம்பர்களின் அதிருப்திக்கும் நாம் ஏதாவது சமாதானம் செய்யலா மானாலும் தேவ°தான போர்டிலிருந்து வந்திருக்கும் அதாவது “கோயில் பிரவேசத்தில் வழக்கத்திற்கு விரோதமில்லாமல் இருக்கும்படி தீர்மானத்தை மாற்றவேண்டும்” என்கின்ற உத்தரவுக்கு என்ன சமாதானம் சொல்லமுடியும்? என்றுதான் கமிட்டி கனவான்களில் சிலர் இன்னமும் யோசித்துக் கொண்டிருக் கின்றார்கள்.
என்றாலும், திரு.ஈ.வெ.ராமசாமியார் கமிட்டி மெம்பர் பதவியையும், உபதலைவர் பதவியையும் இராஜிநாமா கொடுத்தாய்விட்டது. சில கமிட்டி மெம்பர்கள் தேவ°தான போர்டுக்கு மறுபடியும் எழுதிக் கேட்கலாம் என்ப தாகவும் கருதியிருக்கிறார்கள். எனவே “தமிழ்நாடு” பத்திரிகை இந்த நிலையில் மேற்கண்ட தீர்மானம் இன்ன விதமாய்த் தான் முடியும் என்று ஜோசியம் சொல்ல முன்வந்தது அதனின் யோக்கியதையை ஊரார் அறிய போதுமானதாக ஆயிற்றே அல்லாமல் அது உண்மை நிலைமையை உணர்ந்த தாக ஏற்பட்டுவிடவில்லை.
ஒரு சமயம் மேற்படி தீர்மானம் நீக்கப்பட்டு விடுமேயானால் ஒன்றும் முழுகிப்போய்விட்டதாகவோ அல்லது பரிகாசம் செய்யும்படியாகவோ ஒன்றும் ஏற்பட்டுவிடாதென்றும் உறுதி சொல்லுவோம். ஏனெனில் ஆலயப் பிரவேச விஷயம் மிக்க சாமான்யமான காரியமானாலும் அவ்வளவு சுலபத்தில் நிறைவேற்றக்கூடிய காரியம் என்று நாம் நினைக்கவில்லை. அது அநேக பெரிய தியாகங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. அதாவது ஒன்றா சட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். அல்லது வகுப்பு துவேஷங்கள் ஏற்பட்டு பலாத்காரத்தால் மண்டை உடைவதன் மூலம் ஏற்பட வேண்டும். அல்லது ஆயிரக்கணக்கான பேர் சத்தியாக்கிரகத்தின் பேரால் சிறை செல்லுவதன் மூலம் ஏற்பட வேண்டும். இவற்றுள் பலாத்காரத்தைத் தவிர்த்து மற்ற இரண்டு விதிகளையும் நாம் பின்பற்றித்தானாக வேண்டும். இதில் திரு. வரதராஜுலுவோ, திரு.கல்யாணசுந்தர முதலியாரோ மற்றும் யார் குறுக்கே விழுந்தபோதிலும் ஒரு சிறு தூசியையாவது தடுத்துவிடமுடி யாதென்றே தைரியமாய்க் கூறுவோம்.
இப்போது வங்காளத்திலும் காளிகோயிலுக்குள் தீண்டாதவர்கள் எனப்பட்டவர்கள் பிரவேசிப்பதற்காக சத்தியாக்கிரகம் துவக்கப்பட்டிருப் பதாய்த் தெரியவருகின்றது. இதுவரை ஆறுபேர்கள் கைது செய்யப்பட்டி ருப்பதாய்த் தெரிகின்றது. எனவே நாட்டின் பல பாகங்களிலும் இவ் வுணர்ச்சிதோன்றி இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வீண் விஷமப் பிரசாரத் தில் இதை அடக்கிவிடலாம் என்பது பைத்தியக்காரத்தனமாகுமென்றே சொல்லுவோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 14.07.1929