திரு. சொ.முருகப்பர்
உயர்திரு. சொ.முருகப்பர் அவர்களுக்கும் திரு.மரகதவல்லிக்கும் மணம் நடந்த செய்தி மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
திரு.முருகப்பர் அவர்கள் இம்மணம் செய்து கொண்டதன் மூலம் பெண்கள் உலகத்திற்கு ஓர் பெரிய உபகாரம் செய்தவராவார். நாட்டில் உள்ள கஷ்டங்களை எல்லாம்விட பெண்களின் விதவைத் தன்மையின் கொடுமையை பெரிய கஷ்டம் என்று சொல்லுவோம்.
நமது நாட்டு நாகரிகம், ஒழுக்கம், சமயப் பற்று, கடவுள் பற்று என்பவைகள் எல்லாம் நன்மையான காரியங்களைப் பற்றி சற்றும் கவலை செய்யாமல் அடியோடு அலட்சியமாய் விடப்பட்டிருப்பதோடு கெடுதலா னதும் நியாயத்திற்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதுமான காரியங்களைக் கெட்டியாய்க் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக் கின்றன. இந்நிலையில் இவைகளைத் திருத்துவது என்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமல்ல. அன்றியும் அதில் பிரவேசிப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டம், நஷ்டம், பழிச்சொல் ஆகியவைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தில் திரு.முருகப்பர் அவர்கள் பிரவேசித்து திருத்த முற்பட்டது பெருத்த தியாக புத்தியும் வீரமுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கல்யாண ஏற்பாட்டுச் சங்கதியை நாம் முதன் முதல் கேள்விப்பட்டவுடன் சிறிதும் நம்பவே இல்லை. உதாரணமாக எந்த முருகப்பர் என்று தெரிவதற்கு மாத்திரம் நாம் மூன்று நான்கு தந்திகள் திருச்சிக்கும், மதுரைக்கும், காரைக்குடிக்கும், சென்னைக்குமாக கொடுத்து பிறகு நம் முருகப்பர் என்று பதில் தந்தி கிடைத்த பின்புதான் நம்பினோம் என்றால் மற்றபடி அதில் உள்ள கஷ்டங்கள் எவ்வளவு என்பதை நாம் பிறருக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவ்விஷயத்தில் திரு.பிச்சப்பா சுப்பரமணியம் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி மிகுதியும் போற்றத்தக்கதாகும். திரு.முருகப்பர் அவர்கள் திரு.மரகதவல்லியைப் பெண்கள் விடுதலைக்கான வழியில் உழைக்க பெரிதும் துணை புரிவாராக.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 07.07.1929