காங்கிரசின் யோக்கியதை
இந்திய தேசீய காங்கிரசின் யோக்கியதைக்கும் கட்டுப்பாட்டிற்கும் தேசத்தில் எவ்வளவு மதிப்பும் செல்வாக்கும் பின்பற்றுபவர்களும் இருக்கின்றார்கள் என்பதற்குக் காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டியினுடையவும், திரு.காந்தியவர்களுடையவும் தீர்மானங்களின் கதியும் பின்பற்றுபவர்களின் யோக்கியதையும் பார்த்தால் விளங்காமற் போகாது. முதலாவது சர்வ கட்சி மகாநாட்டு தீர்மானம் என்பதை முஸ்லீம்களில் நூற்றுக்கு 97 பேர் மறுத்தும், தாழ்த்தப்பட்ட மக்களில் 100-க்கு 99 முக்காலே மூன்று வீசம் பேர் மறுத்தும், பார்ப்பனர்களில் 100-க்கு 95 பேருக்கு மேலாகவே வைதீகர்கள் என்பவர்களும் மறுத்ததோடு மற்றும் பார்ப்பனரல்லாதவர்களிலும் இந்து மகாசபையின் மூலமும் பார்ப்பனரல்லாதார் சபையின் மூலமும் அது மறுக்கப்பட்டு விட்டது. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் 33 கோடி இந்தியர்களில் அரசியல் பேரால் பிழைக்க இருக்கும் சிலராகிய விரல் விட்டெண்ணத் தக்கவர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆட்சேபித்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுவும் எந்தக் காரணத்தால் மறுத்தார்கள் என்று பார்ப்போமானால் அது எல்லாவற்றையும் விட வேடிக்கையான சங்கதியாகவே தோன்றும். உண்மையில் அரசியல் திட்டம் என்பதாகிய குடியேற்ற நாட்டு சுதந்திரத்திட்டம் என்பதை யாவருமே மறுத்ததாகக் காணப்படவில்லை. மற்றென்னவென்றாலோ வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வகட்சி மகாநாட்டுத் திட்டத்திற்கே இவ்வளவு எதிர்ப்பும் மறுப்பும் ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் நமது நாட்டுப் பெரிய பெரிய தேசீயவாதியும், காங்கிரசுவாதியும், பார்ப்பனரல்லாதார்கள் பிரதிநிதிகளாகக் காங்கிரசில் இருப்பதாகத் தங்களாலேயே சொல்லிக் கொள்ளப்படும் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்தர முதலியார், பஷீர் அகமது சையது சாயபு, குழந்தை, ஜயவேலு ஆகிய கனவான்கள் மாத்திரம் வகுப்பு வாதம் கூடாது என்றும், வகுப்பு வாதத்திற்கு நாட்டில் செல்வாக்கில்லை யென்றும் வகுப்புவாதிகள் தேசத் துரோகிகள் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும் இப்படிப்பட்ட தேசீயவாதிகள் கூட இப்போது காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டித் தீர்மானத்தையும், திரு.காந்தி தீர்மானத்தையும் ஒப்புக் கொள்ள முடியாது என்று சொல்லி காங்கிரசில் ராஜீனாமா கொடுத்துவிட்டு வேறுவேறு கட்சி ஏற்படுத்த தீர்மானித்துவிட்டார்கள்.
மற்றும் இப்போது உண்மையான ஜனப் பிரதிநிதிகள் என்று சொல்லப்படும் மாகாண சட்டசபை, இந்திய சட்டசபை, ராஜாங்க சபை அங்கத்தினர்களும் 100 -க்கு 90 பேர்களுக்கு மேலாக காங்கிரஸ் காரியக் கமிட்டித் தீர்மானம் ஒப்புக் கொள்ள முடியாதென்றும், காங்கிர° தீர்மானித் தாலும் ஒப்புக்கொள்ள முடியாது என்றும், அப்படித் தீர்மானித்தாலும் காங்கிரசுக் கட்டுப்பாட்டை மீறி கலகம் செய்வோமென்றும் சொல்லி விட்டார்கள். இனி காங்கிரசுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் யார் என்று பார்ப்போமானால் காங்கிரசினிடம் பணம்பெற்று பிரசாரம் செய்பவர்கள் என்று சொல்லலாமானாலும், அவர்களும் அதிகக் கூலி கொடுத்தால் எதையும் மீறிக் கலகம் செய்யத் தயாராயிருக்கின்றார்கள்.
“காங்கிரசுதான் தேச மகாஜனங்கள் சபையாகும். அதன் தீர்மானத் திற்கு விரோதமாயிருப்பது தேசீயத்திற்கு துரோகம் செய்ததாகும்” என்று “ஸ்ரீமுகம் அனுப்பிய பெரியோர்கள்” இனி என்ன சொல்லுவார்கள்?
குடி அரசு – கட்டுரை – 14.07.1929