வரதராஜுலுக்கும் ஒரு கட்சி
திரு.பி.வரதராஜுலுக்கு தனக்கு ஒரு கட்சி இருக்கவேண்டுமென்று அவர் பொது வாழ்வில் இறங்கினது முதல் வெகுகாலமாய் பிரயத்தனப் பட்டுக் கொண்டுவரும் விஷயம் யாவரும் அறிந்ததேயாகும். இதற்கு ஏற்ப அவரால் அது முதல் இதுவரை பெற்றெடுக்கப்பட்டு சாகக் கொடுத்த கட்சிகள் இவ்வளவென்று அவருக்கே ஞாபகமில்லாமல் இருக்கலாம். திருப்பூரிலும், சேலத்திலும், சென்னையிலும் மற்றும் வெளியிடங்களிலும் எத்தனையோ கட்சிகள் அவரால் உற்பத்தி செய்யப்பட்டு அழுவாரற்று அழிந்துபோனது கணக்கு வழக்கிலடங்கக் கூடியதல்ல. கட்சி ஏற்படுத்துவதற்காக திரு.வரத ராஜுலுவால் கூட்டப்படும் கூட்டங்களுக்கே ஜில்லாவுக்கு இத்தனை பேர்தான் வரவேண்டும் என்று பொதுவாக பத்திரிகையில் விளம்பரப் படுத்துவதும், ‘தமிழ் நாடு’ ஆபீசில், ஆபீஸ் சிப்பந்திகளையும், சில பிரசாரக் காரரையும் வைத்து கூட்டம் நடத்தினதாக ஏற்பாடு செய்து தான் தலைவ ராகவும், மற்றும் சிலர் தனது சகா நிர்வாகக் கூட்டத்தார்களாகவும் பத்திரிகை களுக்குச் செய்தி அனுப்பி பிரசுரிக்கச் செய்வதும் தவிர, இதுவரை ஒரு கட்சியாவது ஏற்பட்டதற்கு மறுநாள் உயிருடனிருந்து எந்த வேலை யாவது செய்ததாக அவராலேயே சொல்ல முடியாது. திரு.வரதராஜுலு கட்சி ஏற்பாடு செய்வதும் விளம்பரப்படுத்துவதும் முக்கியமாய் வேறு ஒருவர் செய்யும் காரியத்தை தடைப்படுத்தவும் அல்லது தன்னை லட்சியம் செய்து எந்தக் கட்சியாராவது வந்து கூப்பிடவும் கருத்துக் கொண்டே செய்வதல் லாமல், இன்ன காரியம் செய்வதற்கென்றோ அல்லது இன்ன கொள்கைக் கென்றோ ஒருநாளும் கட்சி ஏற்படுத்த அவர் நினைத்ததுமில்லை; அந்தப்படி ஏற்பட்டதும் இல்லை.
சென்ற வருடமும் அதே தமிழ்நாடு ஆபீசில் ஏற்பாடு செய்த கட்சியில் சில பார்ப்பனர்களையும் சேர்த்துக் கட்சி யமைத்தார் என்றாலும் அது பிறக்கும்போதே பிரசவ வேதனையால் செத்து பிறந்ததாதலால் பிறந்த உடனேயே புதைக்கப்பட்டாய் விட்டது. இப்போதைய கட்சியோ கர்ப்பத்தில் இருக்கும்போதே செத்துவிட்டதால் உள்ளுக்குள் அழுகி தாய்க்கே ஆபத்து வரும்படியான நிலையில் நிர்ப்பந்தத்தில் ஆபரேஷன் செய்து வெளியாக்கப்பட்டிருக்கின்றது. இந்த பிரசவத்தில் தாய் பிழைத்தாலே போதும் என்கின்ற நிலைமையில் கட்சி செத்து அழுகி வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது. ஆதலால் புதுக்கட்சியின் பிறப்பு நிலைமையைப் பற்றி நாம் அதிகம் எழுத வேண்டியதில்லை. திரு.வரதராஜுலு இவ்வளவு கஷ்டப்பட்டு உண்டாக்கிய கட்சியின் யோக்கியதையை ஒரு வார்த்தையில் பொது ஜனங் களுக்கு தெரிவிக்க வேண்டுமானால் அக்கட்சியின் நிர்வாகசபை அங்கத்தி னர்கள் காரியதரிசிகள் ஆகியவர்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும். திரு.வரதராஜுலு தலைவர் அதைப்பற்றிக் குற்றமில்லை. ஏனெனில் அவர் தலைவராக இருக்கவே இக்கட்சி உண்டாக்கப்பட்டது. ஆனால், உப தலைவர் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் அது மிக்க கௌரவமானதாகும். மற்றபடி காரியதரிசியோ திரு. குழந்தை. இவர் அய்யங்கார் சிஷ்யராயிருந்து இப்போது அவரோடு கோபித்துக் கொண்டிருக்கும் சமயம் தெரிந்து திரு.வரதராஜுலுவால் அழைக்கப்பட்டிருப்பதாய் தெரிகின்றது. எந்த புதுக் கக்ஷியிலும் அவரைக் கூப்பிட்டால் போதும், என்றாலும் அய்யங்காரின் காங்கிரசு கட்சிக்கு திரு.பஷீர் அகமதும், திரு.சத்தியமூர்த்தியும் காரியதரிசி களாக இருக்கும்போது திரு.வரதராஜுலு கட்சிக்கு திரு.குழந்தை காரிய தரிசியாய் இருப்பதில் அதிக மோசம் ஒன்றுமில்லை. மற்ற மெம்பர்களோ நமக்கு இன்னார் என்றே தெரியவில்லை. அது மத்திரமல்லாமல் வாசகர்களில் அநேகருக்கும் தெரிந்திருக்காதென்றே நினைக்கின்றோம். அய்யோ பாவம்! இம்மாதிரி நிலைமையில் திரு.வரதராஜுலு, திரு.அய்யங்காருக்குப் போட்டியாய் ஒரு கட்சியை நியமித்ததாக பேர் செய்து தலைவர் பட்டம் தாங்க வேண்டிய அவசியம் வந்துவிட்டதுதான் மிக்க பரிதபிக்கத்தக்க தானாலும் வெளியிடங்களில் இதை விளம்பரம் செய்ய பிரசாரத்திற்கு திரு.அய்யங்காரைப் போல் பணம் செலவு செய்ய வேண்டி இருப்பதற்கு என்ன மார்க்கம் செய்வாரோ தெரியவில்லை. திரு.அய்யங்கார் எவ்வளவு பெரிய தேசீயவாதியானாலும், காங்கிரசுவாதியானாலும், பூரண சுயேச்சைவாதியானாலும் வக்கீல் வேலையில் மாதம் 10,000 (பத்து ஆயிரம்) ரூபாய் வரும்படிக்குக் குறைவில்லை. வேறு வகையிலும் சொந்த சொத்தினாலும் தக்க வரும்படி வருகின்றது. எப்படி திரு.காந்தி அவர்களுக்கு அவர் வசம் பணமும், சஞ்சாரத்தில் வரும்படியும் இருக்கும்வரை எந்த கொள்கையைக் கொண்டானாலும் ஒரு மடமும் சிஷ்யர்களும் இருந்துதான் தீருமோ அதுபோல் திரு.அய்யங்காருக்கும் வக்கீலில் சம்பாதித்த பணமும் வரும்படியும் உள்ளவரை எந்தக் கொள்கையானாலும் ஒரு கட்சியும், பின்பற்றுவதற்கும், பிரசாரத்திற்கும் நான்கு ஆள்களும் இருந்துதான் தீரும். அதுபோல திரு.வரதராஜுலுக்கும் ஒரு கட்சி இருக்க வேண்டுமானால் பணத்திற்கு முதலில் வழி செய்து கொள்ள வேண்டும். அஃதில்லையானால் கட்சி ஏற்பட்ட தினத்திலேயே அது இறந்து போனதற்காக அவர் அழுது இருக்க வேண்டும்.
நிற்க, அக்கட்சிக்குக் கொள்கைகள் என்ன என்பதை அவ்விளம்பரத்தில் நிர்ணயிக்க முடியவில்லை. ஒரு சமயம் இனியும் அதில் சேர்க்கப்படும் ஆசாமிகளைப் பொறுத்துக் கொள்கை ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று கருதி இருக்கலாம் என்று நினைக்கின்றோம். தவிரவும் பார்ப்பனர்களைச் சேர்க்கலாமா இல்லையா என்னும் விஷயம் இன்னமும் தீர்மானம் செய்து கொள்ளவில்லை என்பதாகவும் தெரிய வருகின்றது. திரு.வரதராஜுலு நிலைக்கு அவர் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்தாலும் கஷ்டம். ஏனெனில் சேர்க்க ஒப்புக் கொண்டால் 3-வது 4-வது வகுப்புப் பார்ப்பனர்கள் தான் இவருடன் வந்துசேரக்கூடும். சேர்க்காவிட்டாலும் கஷ்டம். ஏனெனில் பார்ப்பனர்கள் வெகு சுலபத்தில் இவரை பூ பூ செய்து விடுவார்கள். ஆதலால் அதை ரகசியமாய் வைத்திருக்கின்றார் என்றாலும் எப்படியாவது ஒரு 5-வது வகுப்பு பார்ப்பனரையாவது சேர்த்துத் தான் தீரவேண்டிவரும்.
இந்த லட்சணத்தில் திரு.வரதராஜுலு இந்த மாதிரி கட்சி பேரைச் சொல்லிக் கொண்டு சென்னைக் கார்ப்பொரேஷன் தேர்தலுக்கு ஆள்களை நிறுத்தப்போவதாய் வெளியிட்டு இருப்பதுதான் மிகவும் வேடிக்கையான விஷயம். “அரைக்காசில் கல்யாணம் அதிலொரு வாண வேடிக்கை” என்பது போல் கட்சிக்கே இன்னும் சரியானபடி ஆள்கள் சேரக் காணோம். அதற்குள்ளாக தேர்தல்களுக்கு ஆள்கள் நிறுத்துவதென்றால் இது கட்சிக்கு ஆள்களைச் சேர்க்க உபாயமே ஒழிய தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற எண்ணமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கார்ப்பொரேஷனில் 10 ஸ்தானம் காலியாகப் போகின்றது. இவரது கட்சியில் இப்போது தலைவர் உள்பட ஐந்து கனவான்கள்தான் இருக்கின்றார்கள். இவ்வைந்து பேரும் தேர்தலுக்கு நிற்பதானாலும் ஐந்து ஸ்தானங்களுக்குத் தான் நிறுத்தலாம். மற்ற ஐந்தை என்ன செய்வார் என்பது விளங்கவில்லை. சுயராஜ்யம் கட்சியாரும் காங்கிரஸ்காரரும் சென்னைக் கார்ப்பொரேஷன் தேர்தல்களில் போட்டி போட்டுப் பார்த்து சளைத்துப்போன சமயத்தில் திரு.வரதராஜுலு ஜஸ்டிஸ் கட்சியுடன் போட்டி போடப் புறப்பட்டிருப்பது மெச்சத்தக்கதேயாகும்.
குடி அரசு – கட்டுரை – 07.07.1929