எது வேண்டும்?
இந்திய நாடு பார்ப்பனர் என்னும் ஆரியர்களால் சமூகத்துறையில் அடிமைப்படுத்தப்பட்ட காலம் முதல் இன்றைய வரை அரசியலிலும் சமூகத்துறையிலும் நாம் அடிமைப்பட்டிருக்கும் அளவுக்கு அடிமைப்பட்டி ருக்காவிட்டாலும் அதனால் செல்வத்துறையில் மிகுதியும் அடிமைப் பட்டிருக்கின்றோம் என்பதை எவரும் ஒப்புக் கொண்டுதானாகவேண்டும். இதற்குக் காரணம் என்னவென்றால் சமூகத் துறையில் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் அவ்வடிமைத் தன்மையை என்றென் றைக்கும் தங்களுக்கு அனுகூலமாய் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது இந்திய உள்நாட்டு மக்கள் ஆட்சி செய்வதை அழியச் செய்து அவைகளுக்கு பதிலாக வெளிநாடுகளிலிருந்தே ஆட்சிகளைக் கொண்டுவந்து அவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்ட முறையில் நாட்டைப் பழாக்கி வந்திருக்கின்றார்கள். உதாரணமாக இன்றைக்கு ஆயிர வருஷகாலமாக இந்தியாவை ஏகபோகமாய் அரசாட்சி புரிந்த அரசர்கள் வருணாச்சிரமத் திலும் சாதி வித்தியாசத்திலும் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர்களாயிருந்தும், தங்கள் தங்கள் நாட்டில் உள்ளதையும் ஒழித்து வந்தும் கூட தாங்கள் இந் நாட்டிலிருந்து அடித்துக் கொண்டு போகும் கொள்ளை பார்ப்பனர்களுக்கு லஞ்சம் கொடுப்பதுபோல் வருணாச்சிரமத்தையும் ஜாதி வித்தியாசத்தையும் அழிப்பதற்கு சிறிதும் இடம் கொடுக்காமல் பார்ப்பனர்களுக்கு அனு கூலமாகவே இருந்து வந்திருக்கின்றார்கள். அரேபியா, ஆப்கானிஸ்தானம், துருக்கி முதலிய இடங்களில் இருந்து இங்கு வந்த மகமதிய அரசர்களைப் போலவும் ஐரோப்பாவில் இருந்து வந்த கிறிஸ்தவ அரசர்களைப் போலவும் பார்ப்பனர்கள் என்கின்ற ஆரியர்களும் இந்த நாட்டிற்கு வந்தவர் களே. ஆனதால் நாட்டின் நலத்தைப் பற்றியும் மக்களின் nக்ஷமத்தைப் பற்றியும் சிறிதும் கவலை இல்லாது தங்கள் ஆதிக்கத்தையும், nக்ஷமத்தையும் மாத்திரம் கவனித்துக் கொண்டு நாட்டை முழுதும் காட்டிக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள். உதாரணமாக மகமதிய அரசாங்கம் பாழ்பட்ட தற்குக் கூட இப்பார்ப்பனர்களே பலவிதத்தில் பொறுப்பாளிகள் என்பதாக இப்போதும் பெரும்பாலான மகமதிய அறிவாளிகளால் சொல்லப்படுவதை நாம் தினமும் கேள்விப்படுகின்றோம். ஏனெனில் மகமதியர்கள் மத சமூகத்துறையில் மக்கள் எல்லோரையும் ஒன்று படுத்தவும் எல்லோரையும் சமமாக பாரபட்சமில்லாமல் கவனித்து நடத்தவும் முயற்சித்ததனாலேயே பார்ப்பனர்கள் மகம்மதிய அரசாங்கத்தை வெள்ளைக்காரர்களுக்குக் காட்டிக் கொடுக்க நேர்ந்தது என்றும் சொல்லுகின்றார்கள். இது எப்படி இருந்தாலும் இப்பொழுதும் பார்ப்பனர்கள் வெள்ளைக்கார அரசாங்கத்திற்கு உதவி செய்வதும் விரோதம் செய்வதும் வெள்ளைக்கார அரசாங்கம் பார்ப்பனர் களின் தனி ஆதிக்கத்திற்கு எவ்வளவு தூரம் உதவி செய்கின்றதோ அதைப் பொறுத்துத்தான் இருக்கின்றதே ஒழிய சிறிதும் நாட்டைப் பொறுத்தல்ல. இதற்கு உதாரணம் வேண்டுமானால், திரு.சாஸ்திரி கொஞ்ச நாளைக்குமுன் பிரிட்டிஷாருக்குக் கொடுத்த எச்சரிக்கையைப் பார்த்தாலே தெரியவரும். அதாவது “பார்ப்பனர்களாகிய நாங்கள் இல்லாவிட்டால் பிரிட்டிஷ் அரசாங் கம் இந்தியாவில் இவ்வளவு பலமாய் நிலைகொண்டிருக்க முடியுமா” என்பதாக எழுதியிருந்தார். அதே மாதிரி சென்னைச் சட்டசபையில் ஒரு ஆச்சாரியார் “பார்ப்பனர்களைப் பகைத்தால் அவர்கள் மறுபடியும் ஒத்துழை யாமையில் சேர்ந்து கொள்ளுவார்கள்” என்றார். வெள்ளைக்கார அரசாங்க மும் இந்த சூழ்ச்சியை அறிந்தே சமூக சம்பந்தமான பிரச்சினைகளில் இந்நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டுமென்றால் எல்லாப் பொறுப்பையும் பார்ப்பனர்கள் மீதே போட்டுவிட்டு தாங்கள் ஏதோ நமக்கும் பார்ப்பனர் களுக்கும் மத்தியஸ்தக்காரர்கள் போல் வேஷம் போட்டு ஒவ்வொரு சமயத்திலும் நம்மை ஏமாற்றி விடுகின்றார்கள். இதற்கு ஆகவேண்டிய வெள்ளைக்காரர்கள் பார்ப்பனர்களுக்கு ஆதியிலேயே சமூகமத விஷயத் தில் தாங்கள் பிரவேசிப்பதில்லை என்று ஒரு வாக்குக் கொடுத்திருப்பதாய் அடிக்கடி பல்லவி பாடுவதற்கும், பார்ப்பனர்களும் அதை அடிக்கடி எடுத்துக் காட்டி நோகாமல் அடிப்பதுபோல் வெள்ளைக்காரர்களை வைவதற்கும் இடம் செய்து வைத்து கொண்டிருக்கின்றார்கள். இந்த பார்ப்பனர்களும் வெள்ளைக்கார அரசாங்கத்தினிடம் அரசாங்கம் “மத சமூக விஷயத்தில் பிரவேசிக்கக்கூடாது” என்று வாக்கு வாங்கினார்களே ஒழிய, இந்நாட்டு செல்வத்தைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகக்கூடாது என்று ஒரு சிறு வாக்காவது வாங்கினவர்கள் அல்லர். எவ்வளவு கொள்ளை போவதா யிருந்தாலும் பக்கத்தில் இருந்து, அனுப்பிக் கொடுத்து வருகின்றார்கள். இதுவரை பல பார்ப்பனர்களே அரசியல்வாதிகள் என்கின்ற பேர்வைத்துக் கொண்டு வேறு யாரையும் அத்துறையில் பிரவேசிப்பதற்கு இடமில்லாமல் செய்து கொண்டு இருந்ததாலும், பாமர ஜனங்களும் இவர்களையே நம்பி விட்டுவிட்டதாலும், ஒரு சிறிதாவது இந்திய செல்வப் பொருளாதார விஷயத் தில் அதாவது வெளிநாட்டு வியாபாரம் நாணயபரிவர்த்தனம், வரி விதித்தல் ஆகிய விஷயங்களில் சிறிதும் கவலை கொள்ளாமல் வெள்ளைக்காரர்களை அவர்கள் இஷ்டப்படியெல்லாம் செய்து கொள்ள பொது ஜனங்கள் பேரால் இடங்கொடுத்துவிட்டு தங்கள் ஆதிக்கத்தை – அதாவது தாங்கள் மாத்திரம் படித்தவர்கள் என்கின்றவர்களாகவும் தங்களுக்கே எல்லா உத்தியோகங் களும் கிடைக்கவும் அவ்வுத்தியோகங்களுக்கும் வெள்ளைக்காரர்கள் பெறும் சம்பளத்திற்குச் சமமான சம்பளங்கள் மாதம் 1000, 2000, 3000 ரூபாய்கள் வீதம் கிடைக்கவும், அவைகள் அவ்வளவையும் தாங்களே வம்சபாரம்பரியமாக அனுபவிக்கவும் ஏற்பாடு செய்து கொண்டார்கள்; செய்து கொண்டும் வருகின்றார்கள். எனவே இவர்கள் இருவரின் கூட்டுக் கொள்ளையாலும் கஷ்டமும் நஷ்டமும் அடைந்து பட்டினியால் வாடி வதங்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சாகும் மக்கள் மேற்கண்ட வெள்ளைக்காரர்களும் பார்ப்பனர்களுமல்லாத இந்திய மக்களாகவே இருக் கிறார்கள். வெள்ளைக்காரர்களும் பார்ப்பனருமல்லாத மக்களிலும் ஏதோ மிகச் சிலரின் ஈன வயிற்றுப்பிழைப்பும் இழிந்த பேராசையும் வெள்ளைக் காரரையும் பார்ப்பனர்களையும் பின்பற்ற ஏற்பட்டுவிடுவதை நாம் மறைக்க வில்லை. ஆனாலும் அது ஆங்கிலத்தில் “எந்த கூட்டத்திலும் கறுப்பு ஆடுகள் உண்டு” என்கின்ற பழமொழிக்கு இலக்காக்கிவிட்டு விட்டு அதற் காக சமூகத்தையே குற்றஞ்சொல்லிவிட முடியாதென்றே சொல்லுவோம்.
சமூகத் துறையில் பார்ப்பனரல்லாத இந்திய மக்களுக்கிருக்கும் இழிவுக்குப் பார்ப்பனர்கள் எவ்வளவு பொறுப்பாளிகளோ அதைவிட வெள்ளைக்கார ஆட்சி பொருளாதாரத் துறையிலிருக்கும் தரித்திரத்திற்குச் சிறிதும் குறைந்ததல்லவென்றே சொல்ல வேண்டும். பார்ப்பனன் தன் சமூக சுயநலத்திற்குத் தானாகவே செய்கின்றான் என்று சொல்லலாம். ஆனால், வெள்ளைக்கார ஆட்சியோ தன்தேச சுயநலத்திற்குப் பார்ப்பனனுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணத்தில் ஒரு பங்கும், ஆதிக்கத்திற்கு இடமும் கொடுப் பதில் பார்ப்பனனின் சூழ்ச்சிக்கும் கொடுமைக்கும் இளைத்ததல்லவென்று சொல்ல வேண்டும். இந்த உண்மையையறிந்து நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து வெள்ளைக்காரர்களை நிர்ப்பந்தப்படுத்தி நமது சமூக அடிமைத் தனத்தை விலக்கிக் கொள்ள முயற்சி செய்யும்போது அவன் நம்மீது பார்ப்பனர்களை ஸ்கேபடுத்திவிட்டு கவலையற்று இருந்துவிடுகின்றான். அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வெள்ளைக்காரன் மீது இருக்கும் ஆத்திரத்தைப் பார்ப்பான் மீது விட ஆரம்பித்தால் பார்ப்பனன் நம்மவர்களிலேயே சிலரை நம்மீது உசுப்படுத்தி விட்டு விட்டு வெள்ளைக்காரனிடம் போய்க் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருவருமாய்ச்சேர்ந்து நம்மைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். உண்மையை ஒளிக்காமல் பேசுவதென்றால் இந்நிலையில் இருவரும் நமக்கு விரோதிகளென்றே சொல்ல வேண்டும், இருவருடைய தொல்லையிலிருந்து நாம் விலகினாலொழிய இந்திய நாடும் சமூகமும் அடிமைத்தனத்திலிருந்தும் தரித்திரத்தில் இருந்தும் மீளுவது முடியாத காரியமென்றே சொல்லுவோம். ஆனால் இருவருடைய கொடுமை களிலிருந்தும் ஏக காலத்தில் விடுபட முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். அது கண்டிப்பாய் முடியாத காரியமேயாகும். பார்ப்பனர்களும் வெள்ளைக்காரர்களும் ஒன்று சேர்ந்து கொண்டார்களேயாகில் நம்மால், ஒன்றுமே செய்ய முடியாதென்றே உறுதி கூறுவோம். ஒரு சமயம் பார்ப்பனர்களிடம் சேர்ந்து வெள்ளைக்காரர்கள் கொடுமையிலிருந்து தப்ப முயற்சித்தோமானால் முடியவே முடியாது. ஒரு சமயம் முடிவதானாலும் பார்ப்பனன் முன்னிலும் அதிகமான லஞ்சத்தை வாங்கிக் கொண்டு கண்டிப்பாய் நம்மைக் காட்டிக் கொடுத்து முன்னிலும் அதிகமான ஆபத்தில் கொண்டு வந்து வைத்து விடுவான். ஆதலால் இந்தச் சமயத்தில் நாம் செய்ய வேண்டியதென்ன? நமக்கு அவசரமாயும் முக்கியமாயும் வேண்டியது என்ன? என்பதை இப்போது ஜாக்கிரதையுடன் நன்றாய் யோசித்துப் பார்க்க வேண்டும். எவ்வளவு யோசனை செய்து பார்த்தாலும் பார்ப்பனனிடமிருந்து விடுபட வேண்டியது தான் முக்கியமானதாகத் தோன்றும். ஏனெனில், அவன் நமது சுயமரியாதைக்கு அதாவது மனிதத் தன்மைக்கு விரோதமாகவும், மற்ற நாட்டு மக்கள் நம்மைக் காட்டு மிராண்டிகள் என்று நினைக்கும் படியாகவும், மிருகத்திலும் கேவலமாய் அடிமைப்படுத்தியிருப்பதோடு வெள்ளைக்காரக் கொள்ளைக்கும் பெரிதும் காரணமாயிருக்கின்றான். ஆதலால் இவன் வேலையைத் தான் முதலில் பார்க்க வேண்டியது அறிவாளிக்கும் தன் மதிப்பில் கவலையுள்ளவர்களுக்கும் முதலாவது காரியமாகத்தோன்றும், ஆனால் இது சுலபமான காரியமென்று யாரும் கருதி விடமுடியாது. ஏனெனில், பார்ப்பனன் நம்மை அடிமை கொண்டு நம்மீது ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்ச்சி என்னும் கட்டிடமானது மதம் என்னும் சிமெண்ட் சுண்ணாம்பினால் கடவுள் கற்களைக் கொண்டு என்றும் அழியாத மாதிரியில் பலமாகக் கட்டி வேதசாஸ்திரபுராணம், மறுபிறவி, சொர்க்கம், மோட்சம் என்னும் அழகான சித்திர வேலைகளுடன் பூச்சு பூசப்பட்டிருக்கின்றது. சுலபத்தில் நம்மால் தனியாய்நின்று இடிக்க முடியாத தாகவும் இருக்கின்றது. இதில் ஒரு சிறிது பாகம் இடிபடாமல் நின்றாலும் மறுபடியும் அச்சூழ்ச்சிகள், அச்சிறிதுபாகம் மீதி ஆதாரத்தைக் கொண்டே மலையாய் வளர்ந்து விடும். ஆதலால் நாம் என்ன செய்வது? இங்குதான் சற்று ஆழ்ந்து பொறுமையுடன் யோசனை செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம். வெளியிலிருந்து வேடிக்கையாய் பேசுபவர்களும் எழுது பவர்களும் அதன் தத்துவத்தையும் பொறுப்பையும் உணராமல் இரண்டு காரியத்தையும் ஏக காலத்தில் செய்ய வேண்டுமென்கிறார்கள். இது அவர் களின் கவலையற்ற தன்மையையோ உணர முடியாத தன்மையையோதான் காட்டுகின்றது என்றே சொல்லியாகவேண்டும். எப்படி எனில், ஒரு மனிதன் ஏககாலத்தில் இரண்டு எதிரிகளுடன் சண்டைபோடுவானேயானால் எதிரிகள் இருவரும் செய்யவேண்டிய முதல் வேலை என்னவென்று பார்ப்போமானால் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து அந்த ஒரு மனிதனை எதிர்ப்பதுதான். ஆகையால் இந்த எதிரிகள் ஏற்கனவே ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் அந்நியோன்ய மாய் இருப்பவர்கள். ஆதலால், எவ்வளவுக்கெவ்வளவு இவர்களுடன் தனித்து எதிர்த்து, வெற்றி பெறச் சந்தர்ப்பம் செய்து கொள்ள முடியுமோ அதைத் தாராளமாகச் செய்ய முன்வரவேண்டும். அப்படிப் பார்ப் போமானால் பார்ப்பனன் கொடுமையிலிருந்து விடுதலை பெறும் வேலை யைத் தான் நாம் இப்போது செய்ய யோக்கியதை உடையவர்களாகவும், அவசியம் உடையவர் களாகவும் இருக்கின்றோம். இதில் வெள்ளைக்கார ஆட்சியினுடைய உதவி யை எதிர்பார்க்க முடியாது. ஆனால் எவ்வளவு உப யோகித்துக் கொள்ளலாமோ அவ்வளவையும் உபயோகித்துக் கொள்ளப் பார்க்க வேண்டும். குறைந்த அளவு உதவி கிடைக்காவிட்டாலும் அவனு டைய விரோதத்தையாவது வலுவில் சம்பாதித்துக் கொள்ளாமலாவதிருக்க வேண்டும். இந்த மார்க்கத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் பிறகு வெள்ளைக்காரனிடம் நமக்குத் தகராறு செய்து கொள்ள இடமேயிருக்காது. ஏனெனில் வெள்ளைக் காரன் மிக புத்திசாலி, ஆனதால் தானாகவே ராஜிக்கு வருவதுடன் நம்மிஷ் டம் போல் ராஜி நிபந்தனையை அவனே பிரேரேபித்து விடுவான். நாம் இங்கு வந்திருக்கும் வெள்ளைக்கார தனிமனிதன் நிலை மையை உத்தேசித்துப் பேசவில்லை: பொதுவாக வெள்ளைக்கார தேச மக்களின் யோக்கியதையைப் பார்த்துப் பேசுகின்றோம்.
தேசீயமும் அரசியலும் வேண்டுமென்பவர்கள்
இவ்வளவு தூரம் நாம் ஏன் எழுதினோமென்றால், தேசீயவாதிகள், தேசபக்தர்கள் என்கின்றவர்கள் இப்போது எங்கு பார்த்தாலும் பாமர மக்களிடம் “சமூக சமத்துவமும் வேண்டும், அரசியல் முன்னேற்றமும் வேண்டும் . ஆதலால் இரண்டு காரியமும் ஏக காலத்தில் செய்ய வேண்டும்” என்று சொல்லி மக்களின் ஊக்கத்தையும், லட்சியத்தையும் இரண்டாகப் பிரித்து அர்த்தமற்றதான தேசீய முன்னேற்றமென்பதற்கே கொண்டு போய் விடுகின்றார்கள். இதிலும் நமக்கு சிறிது வெற்றி ஏற்பட்டிருக்கின்றதென்றே சொல்லலாம். இதற்கு முன் “இத்தேசீயவாதிகளும் தேச பக்தர்களும்” முதலில் அரசியல் சுதந்தரம் கிடைத்துவிட்டால் பிறகு 100க்கு 3 பேர் களாயுள்ள இப்பார்ப்பனர்களிடம் சமூக சுதந்தரம் பெறுவது வெகு சுலப மானதால் சமூக விஷயத்தைப் பற்றி பேசி, அரசியல் சுதந்திரத்தை – சுய ராஜ்யத்தை கெடுத்துவிடக் கூடாதென்றும், அப்படி செய்பவர்கள் தேசத் துரோகிகளென்றும் பேசியும் எழுதியும் வந்தார்கள். ஆனால் இப்போது இரண்டும் ஏககாலத்தில் செய்ய வேண்டும் என்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றார்கள். அன்றியும் ஆப்கானிஸ்தான் அமீர் அமானுல்லாக் கான் நிகழ்ச்சியைப் பார்த்த பின்பும் அந்நாட்டு முல்லாக்களாகிய புரோகிதர் களின் யோக்கியதையைப் பார்த்த பின்பும் சில தேசீயவாதிகள் என்பவர் களுக்கு புத்திவந்திருப்பதாகக் காணப்படுகின்றது. 24.6.1929 ² ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் திரு.வரதராஜுலுவே “சுயராஜ்யம் கிடைத்த பிறகு சீர்த்திருத் தங்கள் செய்து கொள்ளலாம் என்று சில தேசியவாதிகள் நினைப்பது தவறு” என்றும், இதற்கு “அமானுல்லாவின் கதையே தக்க எடுத்துக்காட்டு” என்றும் எழுதி இருக்கின்றார். ஆனால் எந்த அபிப்பிராயம் அவருக்கு 24 மணி நேரம் கூட நிலைக்காது என்று நாம் எண்ணினதுண்டு. அது போலவே அடுத்த நாள் பழையபடியே “ஜஸ்டிஸ் கட்சி”யார் சமய சமூகவேற்றுமைகளைப் போக்க முற்பட்டிருந்தாலும் அரசியல் விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சியினர் மிகவும் பிற்போக்கான கொள்கையுடையவர்களாகயிருக்கின்றார்கள்” என்று எழுதி இருக்கின்றார். அதோடு “சமய, சமூக அரசியல் விஷயத்தில் சம உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும் என்றும் தெளிவான நோக்கத்தோடு தேசீயக்கட்சி ஒன்று அமைக்க வேண்டியது அவசியம்” என்றும் எழுதி விட்டு “அதில் காங்கிரசும், ஜஸ்டிஸ் கட்சியாரும் வந்து சேர வேண்டும்” என்றும் கேட்டுக் கொள்வதாக எழுதி இருக்கின்றார். காங்கிரசிடமும் ஜஸ்டிஸ் கட்சியாரிடமும் இல்லாத தேசீயக் கொள்கை இன்னது என்று இவர் தெளிவு படுத்துவாரா? காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் இன்னது என்பதையாவது தெரியப்படுத்துவாரா? எனவே ‘தொம்பன் 60 அடி கம்பம் ஏறி விளையாடினாலும் கீழிறங்கி வந்து தான் காசு கேட்டாக வேண்டும்’ என்பது போல் திரு வரதராஜுலு எவ்வளவு பெரிய “தேசீய வாதம்” பேசினாலும், சமய சமூக சீர்திருத்தத்தைத் தவிர இனிமேல் அவருக்கு வேறு சொல்லுவதற்கோ எழுதுவதற்கோ வார்த்தைகளும், காரியத்தில் செய்வதாயிருந்தால் அதைத் தவிர வேறு காரியமும் கண்டிப்பாய் இல்லை என்றே சொல்லுவோம், பார்ப்பனர்கள் திருப்திக்காக தேசீய பல்லவியோ ஜஸ்டிஸ் கட்சி பிற்போக்கான கட்சி என்கின்ற பல்லவியோ பாடுவதாயிருந்தாலும் இனி அதை உபாதனப் பார்ப்பனரும் தட்சணைப் பார்ப்பனரும் தான் இவரிடம் வந்து நம்பினதுபோல் வேஷம் காட்டி காசு வாங்கி போவாரே தவிர உண்மையில் நம்புவதற்கு இனி தென்னாட்டில் பார்ப்பனரில்லையென்றே சொல்லுவோம். ஆதலால், இனியாவது இந்த “புண்ணிய கைங்கரியத்தை”விட்டு விட்டு உண்மையைத் தாராளமாக எடுத்து சொல்லி கட்சி சேர்ப்பதோ, அல்லது வேலை செய்வதோ என்கின்ற கொள்கைக்கு வந்து சேரும்படி வேண்டுகின்றோம்.
பொது ஜனங்களுக்கு
நிற்க, பொது ஜனங்களும் இம்மாதிரி தேசீயக்காரர்களையும் சீர் திருத் தக்காரர்களையும் நம்பிக்கொண்டே இருந்தால் கடைசியாக மனம் குழப்பத் தில் தான் போய் சேருமே ஒழிய உண்மையைக் கண்டுபிடித்து நடந்து கொள்ளவோ ஏதாவது ஒரு தக்க பலனடையவோ ஒருக்காலமும் முடியா மலே போய்விடுமாதலால் சமய சமூக சீர்திருத்தம் என்பது என்ன? தேசீய முன்னேற்றம் – அரசியல் சுதந்திரம் – சுயராஜ்யம் என்பவைகள் என்ன? என்கின்றவைகளைத் தாங்களாகவே கவனித்துப் பார்ப்பதுடன் இதுவரையில் எந்த தலைவர்களாவது இவைகளை விளக்கியோ, தெளிவாயோ சொல்லி யிருக்கின்றார்களாவென்றும், இம்மாதிரி கூச்சல் போட ஆரம்பித்த காலமுதலாய் இதுவரை ஏற்பட்ட பலன் என்னவென்றும் ஒவ் வொருவரும் தங்களுக்குள்ளாகவே யோசனை செய்து பார்க்க வேண்டும். அப்படிக் கில்லாமல் கூடவே கோவிந்தம் போடுவதனால் யாரோ சில சுயநலக் காரர்கள் பிழைக்க முடியுமே தவிர வேறு ஒரு பிரயோஜனமும் கண்டிப்பாய் உண்டா காதென்றே எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 30.06.1929