சென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு

சகோதரர்களே!
ஆதிதிராவிட சமூகத்தின் பேரால் சுயமரியாதை மகாநாடு கூட்டப் பட்டிருப்பதைக் கண்டு நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றேன். சிலர் சுயமரியாதை என்கின்ற பெயர் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், ஆனால் அதன் கொள்கைகள் எல்லாம் சரியென்றும் மிக்க அவசியமான தென்றும் சொல்லுகின்றார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் அந்த பெயரிலிருந்து தங்களுக்குச் சுயமரியாதை இல்லை என்று அர்த்தம் ஏற்படுகின்றதாம். இதற்கு நான் சொன்ன பதில் என்ன வென்றால் நமக்குச் சுயமரியாதை இருக்கின்றதா இல்லையா? என்பது வேறு விஷயம் என்றும் சுயமரியாதை சங்கம் என்று பெயரிடுவதாலேயே அதில் சேர்ந்தவர்கள் சுயமரியாதை அற்றவர்கள் என்கின்ற அருத்தமாகாதென்றும் அப்படியானால் இப்போது பலர் சன்மார்க்க சங்கம் என்பதாக பல சங்கங்கள் ஏற்படுத்து கின்றார்களே அச்சங்கங்களில் அங்கத்தினர்களாயிருப்பவர்களுக்குச் சன்மார்க்கமில்லை யென்பது பொருளா? என்றும், அச்சங்கம் ஏற்படுத்துபவர் கள் துன்மார்க்கர்களா? என்றும்தான் பதில் கேட்டேன். தவிர உண்மை யிலேயே நமக்குச் சுயமரியாதை உணர்ச்சி இருக்கின்றதா என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். முதலாவது உங்களைப் பற்றியே பேசுகின்றேன்.

நீங்கள் சமூகத்தில் மனிதர்களால் கீழ் மக்களாய் கருதப்பட்டு தீண்டத்தகாதவர்களாய் ஒதுக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்குக் கோயிலில் பிரவேசிக்க உரிமையில்லை.

அநேக தெருக்களில் நடக்கவும் உரிமை இல்லை. அநேக குளங்களில் குட்டைகளில் ஏரி, ஆறு, வாய்க்கால், படித்துறைகளில் தண்ணீர் மொள்ளவோ குடிக்கவோ உரிமை இல்லை. சில பள்ளியில் சேர்ந்து படிக்க உரிமை இல்லை. சிற்சில இடங்களில் நீங்கள் மனிதர்களின் கிட்ட வரவோ, அவர்களின் கண்களில் தென்படவோ கூடாதவர்களாயிருக்கின்றீர்கள். இவை முதலிய கொடுமைகளை மனிதர்களின் கைபலத்தால் என்று மாத்திரம் அல்லாமல், கடவுள், மதம், சட்டம், பழக்கம், வழக்கம் என்பவைகளின் பேரால் அனுபவித்து வருகின்றீர்கள். இந்நிலையில் உள்ள நீங்கள் சுயமரியாதையுடன் வாழும் சமூகம் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்களா என்று கேட்கின்றேன். உங்கள் நிலை இப்படி என்றால் எங்கள் நிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள்.

மனித சமூகத்தில் நாங்களும் இழிமக்களாக அதாவது பிறவி அடிமையாகவும் மற்றொருவனுக்குத் தாசி மகனாகவும் இருக்கத்தக்கதான “சூத்திரர்” என்னும் பெயரால் அழைக்கப்பட்டு உங்களைப் போலவே நாங்களும் மற்றொரு கூட்டத்தாருக்குத் தீண்டப்படாதவர்களாகவும், சில பொது இடங்களுக்குப் போகக் கூடாதவர்களாகவும், சிலப் படித்துறைகளில் தண்ணீர் மொள்ளக்கூடாதவர்களாகவும், சில பள்ளிக் கூடங்களில் படிக்கக் கூடாதவர்களாகவும், பொதுக் கோயிலிலும் சில இடங்களுக்கு போகக் கூடாதவர்களாகவும், பொது ஓட்டல் முதலியவைகளிலும் உள்ளே போய் சாப்பிட முடியாதவர்களாகவும், கருதப்பட்டும் அநுபவத்தில் அவ்விழிவு களையும், கொடுமைகளையும், அனுபவித்தும் வருகின்றோம். நீங்கள் தீண்டாதவர்கள், தாழ்ந்த ஜாதியார், கடைக்குலத்தார் என்று சொல்லப்பட் டாலும் உங்களுக்கு ஒரு தகப்பன் உண்டு என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டு. நாங்கள் உங்களைவிட சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற மதப் பிரகாரம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குல தர்மங்களுக்கு எங்களுக்குத் தகப்பன் இருக்க நியாயமில்லாமல் தான் இருக்கின்றது. ஆனால் சிற்சில இடங்களில் இது அமுலிலில்லை என்று சொல்லலாமேயொழிய கொள்கையிலும் மத சட்ட ஆதாரத்திலும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. மலையாளத்தில் உயர்ந்த சாதிக்காரர்கள் என்பவர்களுக்கு இன்னமும் மற்றொரு வகுப்பார் உயர்ந்தார் என்பவரின் தாசி மகனாய், வைப்பாட்டி மகனாய் இருப்பதுதான் அடையாளமாக இருந்து வருகின்றது. ஆகவே எங்கள் சமூகமானது சுயமரியாதை உள்ள சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியுமா என்று கேட்கின்றனர்.

தவிர, இன்றைய தினம் நாம் எல்லோரும் எப்படி சமூகத் துறையில் இழிவுபடுத்தப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோமோ, அதற்கு நேர் விரோதமாய் நமது நாட்டில் மற்றொரு வகுப்பு சமூகத் துறையில் தாங்கள் மிக்க உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு மேன்மையாகச் சந்தோஷத்துடன் நோகாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அன்றியும், நாம் எப்படி இம்மாதிரியான கூட்டங்கள் கூட்டி நம்மீது சுமத்தப்பட்ட இழிவையும் கொடுமையையும் நீக்கிக் கொள்ள இம்மாதிரி மகாநாடுகளால் முயற்சி செய்து வருகின்றோமோ அதற்கு நேர் விரோதமாய் மற்றொரு வகுப்பார் இந்த நிலைமையை எப்போதும் நிலைத்து இருக்கும்படி செய்ய வர்ணாசிரம மகாநாடு, பிராமண தர்ம மகாநாடு, ஆரிய தர்ம மகாநாடு முதலிய மகாநாடுகளின் பேரால் பலமான முயற்சிகள் செய்து வருகின்றார்கள்.

அதோடு மாத்திரமல்லாமல் நம்மீது மனதறிந்த பொய்க்கூற்றுகளை கற்பித்தும், அபாண்டமான பழிகளைச் சுமத்தியும், பாமரமக்களிடம் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். நம்மவர்களிலேயே சிலரைக் கூலியாக அமர்த்தி எதிர்ப்பிரசாரமுஞ் செய்து வருகின்றார்கள். இவைகளை யெல்லாம் நாம் சிறிதும் லட்சியம் செய்யாமல் தைரியமாகவும் விடா முயற்சியாகவும் இருந்து வேலை செய்தால்தான் நமக்குள்ள கொடுமைகளும் இழிவுகளும் நீங்குமே ஒழிய மற்றபடி சும்மா இருந்து கொண்டு நாம் எடுத்ததற்கு எல்லாம் கடவுள் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று சோம்பேறி ஞானம் பேசிக் கொண்டிருந்தால் ஒரு காரியமும் ஆகாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். உதாரணமாக “எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்ளுவார். நாமாக ஏதாவது செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார் பாபம் வந்துவிடும். நரகம் சம்பவிக்கும்” என்று பேசிக் கொண்டிருக்கும் எந்த சாதுவும், தன்னை ஒரு சிறு எறும்பு கடித்தாலும் உடனே அந்த எறும்பை நசுக்கி விட்டுத்தான் வலிக்காக கஷ்டப்படுகின்றான். அது போலவே ஒரு தேள் கடித்து விட்டால் உடனே அதைக் கொன்று விட்டுத்தான் பிறகு அழ ஆரம்பிக்கின்றான். கடித்த தேள் கொல்லப்படவில்லையானால் கடிபட்டவனுக்கு வலி அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே அவைகளுக்குக் கஷ்டம் ஏற்படும்போது எவனும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு சும்மா இருப்பதாக நாம் கண்டதே இல்லை. மற்றொருவன் கஷ்டத்திற்கும் தன்னால் முடியாத காரியத் திற்கும் மற்றவர்களை ஏமாற்றுவதற்கும் தான் ஒருவன் கடவுளை இழுக் கின்றானே தவிர காரியத்தில் கடவுளுக்காக எவனும் விட்டுக் கொடுப்பதே இல்லை. நமது சுயமரியாதை இயக்க மேற்பட்டு 2, 3 வருடங்களேயானாலும் அது நமது நாட்டில் ஒருவித உணர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றது. அநேக விஷயங்களில் கடுமையான எதிர்ப்புகள் மறைந்துவிட்டன. சாமியையும் சாத்திரத்தையும் தொட்டதற் கெல்லாம் முட்டுக்கட்டையாகக் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அதை ஒருவிதத்தில் மறைத்துக் கொண்டு பழக்கம் வழக்கம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சாமி, மதம், சாத்திரம் என்கின்ற முட்டுக்கட்டைகளை இன்னமும் தைரியமாக உடைத்தெறியத் துணிந்து விட்டோமேயானால் பழக்க வழக்க முட்டுக் கட்டைகளை பஞ்சாய் பறக்கச் செய்துவிடலாம்.

இம்மாதிரி பழக்க வழக்கம் ஏற்படுவதற்கு ஆதாரமாய் இருந்தவைகள் சாமியும் மதமுமேயாகும். ஆகையால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை என்ன வென்றால் உங்கள் முன்னேற்ற விஷயத்தில் சற்றாவது சாமி, மதம், சமயம், பட்டம், சாத்திரம் ஆகிய பூச்சாண்டிகளுக்குச் சற்றும் பயப்படக் கூடாது. சாமியும் மதமும் பொய் என்று சொன்னால்தான் சமத்துவம் கிடைக்கும் என்பதாகத் தோன்றினால் தைரியமாக சாமியும் மதமும் பொய், நாங்கள் அதை ஒப்புக் கொண்டு கீழ்ஜாதியாக இருக்கச் சம்மதிக்கமாட்டோம் என்று சொல்லுங்கள். உண்மையான சாமியும் மதமுமாயிருந்தால் நீங்களும் நானும் சொல்வதற்குப் பயந்து கொண்டு ஓடிவிடாது. ஒரு சமயம் அப்படி ஓடிப்போகும் சாமியாலும் சமயத்தாலும் நமக்கு ஒரு காரியமுமே ஆகிவிடாது. நமக்குக் கடவுள் பேரிலும் சமயத்தின் பேரிலும் விரோதமோ போட்டியோ சிறிதும் கிடையாது. ஆனால் எந்தக் கடவுள் பேராலும் எந்த சமயத்தின் பேராலும் நீங்களும் நானும் தீண்டாதவர்களாகவும், காணப் படாதவர்களாகவும், தாசி மக்களாகவும் சொல்லப்படுகின்றோமோ, அந்தச் சமயத்தையும் கடவுளையும் ஒழித்தாக வேண்டும் என்கின்றோம். அதனால் நரகமே கிடைப்பதானாலும் இப்போதே சாவதானாலும் அக்கரையில்லை என்று சொல்லுகின்றேனே அல்லாமல் மற்றபடி கோயில்களிலுள்ள கடவுள்களை எடுத்தெறிந்து விட்டு அந்த ஸ்தானத்தில் நான் இருந்து கொள்ளலாம் என்கின்ற எண்ணமல்ல.

கோவிலில் உள்ள சாமிகளுக்கு கடுகளவு சுயமரியாதை கூட கிடை யாது என்பது எனக்குத் தெரியும். அது இரவும் பகலும் பூட்டிக் கிடக்கின்றது. பூசாரி சோறுபோட்டால் தான் உண்டு. இல்லாவிட்டால் பட்டினிதான்.
ஈரோடு சாமிகள் 2 மாதம் பட்டினிகிடந்ததுகள். யார் என்ன செய்தாலும் ஏன் என்று கூட கேட்காமல் வாயை மூடிக் கொண்டு தான் இருக்க வேண்டும். இந்த நிலையில் உள்ள சாமிப்பட்டம் எனக்கும் வேண்டாம் இன்னும் நம்முடைய எதிரிகளுக்கும் வேண்டாம் என்றுதான் சொல்லுவேன். ஆகையால் இம்மாதிரி கடவுள் பூச்சாண்டிகளுக்கு பயப்படாதீர்கள்.

தவிர, இந்த மகாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டுவரப் போவதாகக் குறிப்பிட்டு என்னிடம் கொடுத்து அதன் மீது பேசும்படி தலைவர் கட்டளையிட்டு இருக்கின்றார் அதாவது :-

“ஆறரைக் கோடி மக்களடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் நிமித்தம் தீண்டப்படாதவர்களா யிருப்பதாலும் அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும் இனி, அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை ‘இந்துக்கள்’ என்று பதியாமலிருக்கும்படிக்கும் சர்க்காரிலும் எங்களை இந்துக்கள் என்கின்ற பதவியிலிருந்து நீக்கிவிடும்படிக்கும் செய்யும்படி சர்க்காரையும் சபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது” என்ற தீர்மானமாகும். இத் தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன். நான் அநேக தடவைகளில் இதைப் பற்றி எழுதியும் பேசியும் இருக்கின்றேன். சமீபத்தில் கூட எந்த சமயத்தில் எந்தக் கூட்டத்தில் மக்களுக்கு சமத்துவம் அளிக்கப் படுகின்றதோ, அந்தக் கூட்டத்தில் சமத்துவமளிக்கக் கூடாத மக்களை கொண்டு போய் சேர்க்க முயற்சி செய்யப் போகின்றேன் என்று எழுதியிருந் தேன். சமத்துவம் வேண்டுமென்கின்ற மனிதனுக்குச் சமத்துவம் உள்ள மதம் எல்லாம் சம்மதமாகும். சமத்துவமில்லாத மதம் எல்லாம் ஆணவ மதமாகும். ஆதலால் இந்தக் கொடுமையான இந்து மதத்திலிருந்து பிரிந்து கொள்ளுகிறவர்களை நான் மிகுதியும் பாராட்டுகின்றேன். முதலாவது, இந்து மதம் என்பதாகவே ஒரு தனி மதம் இல்லவே இல்லை. சிலரின் சுயநலத் திற்கும் வயிற்றுப் பிழைப்புக்குமான ஆதாரமில்லாமல் போலியாய் வாயளவில் சொல்லிக் கொள்ளப்படுவதே தவிர மதம், சமயம் என்கின்ற முறைப்படி இந்துமதம் என்பதாக ஒரு மதம் இல்லை. இதை வெளியில் எடுத்துச் சொன்னால் நம்மை மதத்துவேஷி தேசத்துரோகி நாஸ்திகன் என்று கூப்பிடச் செய்ய கூலி கொடுத்து பிரசாரம் செய்விக்கின்றார்கள். நம்மைக் கொன்றுவிடுவதாய்ப் பயமுறுத்திக் கடிதம் எழுதுகின்றார்கள். அப்படி அவர்கள் செய்வதிலோ, கொன்றுவிடுவதிலோ அதிசயம் ஒன்றும் இல்லை. இது ஒரு கூட்டத்தாரின் பரம்பரைத் தொழிலேயாகும். இம்மாதிரி வெகுபேரைக் கொன்றும் இருக்கின்றார்கள். இதனால் நமக்கு ஒன்றும் முழுகிப் போய்விடாது. நான் செத்துப்போவதால் அவர்களுடைய ஆதி சேஷனுக்கு கூடப் பாரம் குறையப் போவதில்லை. நாம் மனப்பூர்வமாக தேசத்தினுடையவும் எல்லா சமூகத்தினுடையவும் நன்மையை உத்தேசித்தே இவ்வியக்கம் தோற்றியுள்ளோமாகையால் அதற்காக – உயிர் விட நேரு வதை மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். இன்னும் என்னைப் போல அநேகர் இவ்வியக்கத்திற்கு உயிர்விடக் காத்திருக்கின்றார்கள் என்றே நம்புகிறேன். அந் நம்பிக்கை இல்லாவிட்டால் நான் இவ்வளவு தீவிரமாக இருக்க மாட்டேன்.

சுயமரியாதை இயக்கம் ஜனங்களுக்குச் செய்த கெடுதி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? மனிதனை மனிதன் இழிவுபடுத்துவதும் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் ஒழிய வேண்டுமென்பது நாஸ்திகமும் தேசத் துரோகமுமானால், அந்த ஆஸ்தீகமும் தேசமும் எதற்காக உலகத்தில் இருக்க வேண்டும். சாதி வித்தியாசம் இல்லாத அந்நிய ஆட்சியில் நாம் இருக்கும் போதே நமது சமத்துவத்திற்கு விரோதமாய் நம்மில் ஒரு கூட்டம் வருணா சிரம பிரசாரம் செய்து நமது சமத்துவத்தைக் கெடுக்கும் போது சாதி வித்தியாசம் உள்ளவர்களின் ஆட்சி வந்துவிட்டால் நம் கதி என்னாவது? “பசுவை வண்டியில் கட்டினால் பாவம்; சூத்திரனையும் பஞ்சமனையும் வண்டியில் கட்டி ஓட்டு” என்று அல்லவா உத்தரவு போடுவார்கள். இவ்வித உத்தரவு இப்போது பன்றி, நாய், கழுதை, மலவண்டி போகும் வீதியில் நடக்கக்கூடாது என்பதற்கும், பள்ளிக்கூடத்தில் படிக்கக் கூடாது என்பதற்கும், கிணற்றில் தண்ணீர் மொள்ளக்கூடாது என்பதற்கும், சாமியைக் கண்டு கும்பிடக் கூடாது என்பதற்கும் காலில் விழுந்து கும்பிட்டால்தான், காலைக் கழுவி தண்ணீரைக் குடித்தால்தான் மோட்சம் என்பதற்கும் மற்றும் இதுபோன்று இப்போது இருப்பவைகளுக்கும் சற்றும் கடினமானதென்று நான் நினைக்கவில்லை. மற்றபடி தேசாபிமானிகள் என்பவர்களுக்கு வெள்ளைக்காரர்கள் ஆட்சி நம் நாட்டைவிட்டு நாளைக்குப் போய்விடட்டும் என்றாலும் எனக்கு இன்றே போய்விடுவது சம்மதம்தான். ஆனால் அதற்குப் பிறகு எங்கள் கதி என்ன எங்களை என்ன செய்யப்போகின்றீர்கள்! எப்படி நடத்துவீர்கள் என்பதில்தான் நமக்கும் தேச பக்தர்களுக்கும் இருக்கும் அபிப்பிராய பேதமேயொழிய வேறில்லை. “முதலில் அவர்கள் வெளியில் போகட்டும் பிறகு பார்த்துக் கொள்ளுவோம்” என்றால் அந்தக் காரியம் இனி நம்மிடம் பலிக்காது என்று சொல்லுகின்றோம். இதனால் நாங்கள் தேசத்துரோகியாவதானால் குஷாலாகச் சம்மதிக்கின்றோம்.

இப்போது நமது நாட்டில் எங்கு பார்த்தாலும் ஜனங்கள் வரவர இந்து மதம் என்பதையும், இந்து சமூகம் என்பதையும் விட்டுப் பிரிந்து போகவே துணிவு கொண்டுவருகின்றார்கள்.
சமீபத்தில் திருவாங்கூரில் கூடிய ஈழவ சமுதாய மகாநாட்டில் திரு மாளவியா இந்து மதப் பெருமையைப் பற்றி பேசும்போது அச்சமுதாயத்தார் இந்து மதம் வேண்டாம் அது தொலையட்டும் என்று ஒரே அபிப்பிராயமாகச் சொல்லிவிட்டார்கள். அம்மகா சங்கக் காரியதரிசி திரு.கோவிந்தன் பி.ஏ. பி.எல்., மாஜி ஜில்லா ஜட்ஜ் இதோ இங்கே உட்காந்திருக்கிறார் பாருங்கள் அவரை நான் கண்டவுடன் ஆச்சரியப்பட்டு, தாங்கள் எங்கு வந்தீர்கள் என்று கேட்டதும் அவர் நானும் தீண்டப்படாதவன் தானே ஆதலால் இந்தக் கூட்டத்திற்கு வந்தேன். என்னையும் ஆதிதிராவிடரில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். எனக்கு அதுக்கேட்டதும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அவர் முனிசீப்பாக இருந்து ஜில்லா ஜட்ஜாகி நாணயமும் பரிசுத்தமும் உள்ள ஜில்லா ஜட்ஜு என்று பேர் பெற்று பென்ஷன் வாங்கினவர். இப்போது அவரும் அநேக தெருக்களில் நடக்க முடியாது. பிறகு கோயிலைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. எனவே இவ்வளவு கொடுமையுள்ள ஒரு கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொள்ள நீங்கள் ஆசைப்படுவது மிகவும் நியாயமும் அவசியமுமாகும். ஆனால் விடாமுயற்சியாய் வேலை செய்ய வேண்டும். இடைவிட்டால் மோசம் போய்விடும்.

குறிப்பு : 13.07.1929 ஆம் நாள் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லை வனத்தில்) நடைபெற்ற சென்னை ஆதி திராவிட மகா ஜனங்களின் சுயமரியாதை மாநாட்டில் சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 21.07.1929

You may also like...

Leave a Reply