தென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு கள்ளக்குறிச்சி தாலூகா ஆ:தி: மகாநாடு
சகோதர சகோதரிகளே!
இந்த ஜில்லா ஆதிதிராவிடர்கள் மகாநாட்டுக்கு நான் இதற்கு முன் நான்கைந்து தடவை அழைக்கப்பட்டிருந்தாலும், அப்போது பல காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய் விட்டதால், இந்தத் தடவை கட்டாயமாய் எப்படியாவது வரவேண்டுமென்று கருதியே வந்து சேர்ந்தேன். வரவேற்பு கழகத் தலைவர் என்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து கூறினார். அவ்வளவு புகழ்ச்சி எனக்கு வெட்கத்தை கொடுத்ததேயல்லாமல் மற்றபடி அதில் உண்மை இல்லை என்று சொல்லுவேன்.
தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால், அது எங்கள் நலத்திற்கு செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கு என்று செய்ததாக மாட்டாது. ஏனெனில் உங்களுக்கும் எங்களுக்கும் சமூக வாழ்வின் பொதுத் தத்துவத்தில் சிறிதும் பேதமில்லை. அநுபோகத்தில் மாத்திரம் ஏதாவது அளவு வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக நீங்கள் எப்படி தீண்டப்படா தவர்களோ, அப்படியே தான் உங்களை விட சிறிது மேல் வகுப்பார் என்கின்ற நாங்களும் ஒரு வகுப்பாருக்கு – அதாவது கடவுள் முகத்திலிருந்து பிறந்ததாகவும் பூலோக தேவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் களுக்கு நாங்கள் தீண்டாதவர்களாகவே இருக்கின்றோம். கோயில் பிரவே ஷம் என்பதிலும் உங்களைவிட சற்று முன்னால் போக மாத்திரம் அனுமதிக் கப்படுகிறோமே தவிர மற்றபடி பார்ப்பனர் நிற்கும் இடத்திற்குப் பின்னால் தான் நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நீங்கள் கோயிலுக்குள் வந்தால் எப்படிக் கோயிலும் சாமியும் தீட்டுப்பட்டு விடுகின்றதோ, உங்கள் எதிரில் சாப்பிட்டால் உங்களுடன் சாப்பிட்டால் உங்கள் வீட்டில் சாப்பிட்டால் எப்படித் தோஷமும் பாவமுமான காரியமாகி விடுகின்றதோ அப்படியே எங்கள் வீட்டிலே எங்கள் முன்னாலே எங்கள் பக்கத்திலே சாப்பிட்டாலும் தோஷம், மோசம் பாவமென்று தான் சொல்லப்படுகின்றது.
நமது சமூகத்திற்கு பெயர் சொல்லி அழைப்பதிலும் உங்களைவிட மிக இழிவாகவேதான் அழைக்கப்படுகின்றோம். உங்களைப் பறையர் என்றும், பள்ளர் என்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் பறையர், பள்ளர் என்கின்ற வார்த்தை தொழிலையும், வசிப்பு இடத்தையும் பொறுத்து ஏற்படுத்தப்பட்டது. பறையனும் பள்ளனும் அந்த பெயரால் சுதந்திரமான வராகவும் இழிவுபடுத்தத்தகாதவராகவும் இருக்கிறார்கள். ஆனால் எங்களை அழைக்கும் பெயராகிய சூத்திரன் என்று சொல்லப்படும் பேரானது பிறவி யிலேயே இழிவை உண்டாக்கத்தக்கதும், ஒருவனுக்குப் பிறவி அடிமை யாகவும், பிறவி தாசி மகனாகவும் மற்றும் மிக்க இழிவான கருத்துக் கொண்டதாகவுமே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தங்களும் சகிக்க முடியாத இழிவை கொடுக்கக்கூடியதாகவே இருக்கின்றது. பறையன் என்றால் சொந்தத்தாய் தந்தைக்கே பிறந்தவன் என்கின்ற கருத்து உண்டு. ஆனால் சூத்திரன் என்றால் – தாசிமகன், வேசிமகன், வைப்பாட்டி மகன், பிறவி அடிமை, விலைக்கு வாங்கப்பட்ட அடிமை என்பது போன்ற பல இழிவுப் பொருள்கள் நிறைந்திருக்கின்றது.
தவிர, உங்களைப் போன்ற ஒருவகுப்பு, அதாவது பஞ்சமர்கள் என்று சொல்லப்படுவதற்கும், அப்படி ஒன்று இருப்பதற்கும் பார்ப்பன மதத்தில் அதாவது இந்து மதத்தில் இடமே இல்லை. இந்து மதத்தில் சூத்திரன் என்பதற்கும் கீழாக ஒரு ஜாதியே பிறவியில் கிடையாது. ஆனால் வாழ்க்கையில் நான்கு வருணக்காரர்களும் நடந்து கொள்ளுகின்ற முறையில் சண்டாளர்கள் என்று ஒரு வகுப்பு உண்டாகின்றது. அதாவது, பார்ப்பன ஆணுக்கும் பார்ப்பனரல்லாத பெண்களுக்கும் பிறக்கும் பிள்ளைகள், பார்ப்ப னிக்கும் பார்ப்பனரல்லாதவனுக்கும் பிறக்கும் பிள்ளைகள், பார்ப்பனர்களில் வேதம் படிக்காதவன், நெருப்பு வளர்க்காதவன், சந்தியா வந்தனம் செய்யா தவன் மற்றும் இதுபோல் பார்ப்பனீய கருமங்கள் என்பதுகளைச் செய்யாத வன் முதலானவர்கள் சண்டாளர்களாகின்றார்கள்.
இது தர்க்க பார்ப்பனப் பண்டிதர்களும், வேதசாத்திர நிபுணர்கள் என்பவர்களுமே சொல்லி உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். ஆதலால் உங்களை யாராவது சண்டாளர்கள் என்று சொல்வார்களானால் அவர்கள் உங்களை பார்ப்பனிக்கும் பார்ப்பனரல்லாதவருக்கும், அல்லது பார்ப்பனருக் கும் அல்லாத பெண்ணுக்கும் பிறந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படியில்லையானால் ஒழுக்கந் தவறிய பார்ப்பனர்கள்தான் நீங்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படியானால் இன்றைய தினம் பார்ப்பனச் சமூகத்தில் உள்ள 100க்கு 99 3/4 பெயர்வழிகள் சண்டாளர்களாகத்தான் இருக்கவேண்டும். எனவே, இந்த முறையில் உங்களுக்காவது தர்க்க ரீதியில், ஒரு வழியில் குற்றம் சொல்லாமலிருக்க ஆதாரங்களும் இடமுமிருக்கின்றன. ஆனால் எங்கள் நிலை நினைக்கவே முடியாதபடி பெரிய இழிவாயிருக்கின்றது. ஆதலால் தான் சமூக வாழ்வில் உங்களை விட நாங்கள் தாழ்ந்த – இழிவான – தன்மையில் இருக்கின்றவர்கள் என்று சொல்லுகின்றதுடன் இவ்விழிவு நீங்க முயற்சிக்கும் வேலை முக்கியமாக எங்கள் வகுப்புக்காகச் செய்யப்படும் வேலையென்றும் சொல்லு கின்றேன். தவிர, உங்களுக்கோ எங்களுக்கோ இப்போதிருக்கும் இழிவுகள் ஒழிய வேண்டும் என்கின்ற கவலை சிறிதளவாவது யாருக்காவது இருக்கு மானால், அவர்கள் இவ்விழிவு நிலைக்கு ஆதாரமாயுள்ளதை அழிக்கத் தைரியங்கொண்டு தயாராயிருந்தாலொழிய கண்டிப்பாய் முடியவே முடியாது. ஏனெனில், இவ்விழிவுகளை ஏற்படுத்தியது மனிதனுடைய அயோக்கியத் தனமாய் இருந்தாலும், அதை நிலை நிறுத்தக்கருதி அதையே ஒரு மதத் தத்துவமாகவும், அத்தத்துவம் எல்லாம் வல்ல கடவுள் என்பவரால் ஏற்படுத்தப்பட்டதென்றும் கற்பிக்கப்பட்டு நிலைநிறுத்தி அமுலில் நடத்தி வரப்படுகின்றது.
இந்நிலை சிறிது மாற்றப்பட வேண்டுமென்றாலும் மேற்கண்ட மதமும் கடவுளும் வந்து குறுக்கிடுகின்றது. ஆதலால் இந்நிலைக்கு ஆதாரமான தென்று சொல்லப்படும் மதத்தையும், அம்மதத்தை உண்டாக்கினதாகச் சொல்லப்படும் கடவுளையும் எதிர்த்து நின்று அவற்றை அழித்தாலொழிய வேறு மார்க்கமில்லை என்று பதில் அளிக்கவும் ஒழிக்கவும் தைரியமாகவும் தயாராகவுமிருந்தாலொழிய, வேறு மார்க்கத்தில் முடியவே முடியாது. அன்றியும் உங்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வேண்டும். நாம் ஏன் தாழ்ந்தவர்கள்? நாம் ஏன் ஒருவரைச் சாமி என்று கூப்பிடவேண்டும்? நாம் ஏன் ஒருவனுக்குப் பாடுபட வேண்டும்? என்கின்ற உணர்ச்சி வரவேண்டும். நீங்களும் மற்றவர்களைப் போல் மனிதர்கள்தான் என்று கருத வேண்டும்.
உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால் இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்கவேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்க ளுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லா விட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்கு போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால். உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன். கஷ்டப்படவும், கட்டுப்பாட்டை உடைத்தெரியவும், உயிரைவிடவும் தயாராயில்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது. அன்றியும், வேறு ஒருவன் வந்து உங்களுக்கு உதவி செய்வானென்று எதிர்பார்ப்பதும் பெரிய முட்டாள்தனமாகும். உங்களையே நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளத் துணிவு கொள்ள வேண்டும். படிப்பினாலும், பணஞ் சம்பாதிப் பதாலும் குளிப்பதனாலும், குடிக்காமலிருப்பதாலும், மாமிசம் சாப்பிடா திருப்பதனாலும் இவ்விழிவு போய்விடுமென்று சிலர் உங்களுக்கு உபதேசம் சொல்லுகின்றார்கள். நான் அவைகளை ஒப்புக் கொள்ளமாட்டேன். உங்களு டைய இழிவுக்கு இவைகள் தான் காரணம் என்றால், இந்தத் தன்மைகள் உள்ளமற்றவர்கள் இவ்வழியை அடையாமல் “பிராமணர்”களாகவே எப்படி இருக்கின்றார்கள். உங்களுடைய இழிவுக்குக் காரணம் உங்களுக்கு மானம், சுயமரியாதை உணர்ச்சி ஏற்படாதது தானேயொழிய வேறில்லை. ஆகையால் நீங்கள் உங்களைத் தாழ்ந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளாமல் நீங்களும் மற்றவர்களைப் போல் மனிதர்கள் தான் என்று எண்ணிக் கொண்டு அதற்கு ஏற்றவிதமாக நடந்து கொள்ளத் துணிவு கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் கஷ்டங்களைச் சகிக்க தைரியங் கொள்ளுங்கள்! சீக்கிரத்தில் விடுபடுவீர்கள்.
குறிப்பு : 12.06.1929 இல் சின்ன சேலம் சிறுவத்தூரில் நடைபெற்ற தென்னார்க்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மாநாட்டைத் திறந்து வைத்து உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 16.06.1929