நமதியக்க ஸ்தாபனம்
சுயமரியாதை இயக்க ஸ்தாபனமானது சென்னையில் பொது ஸ்தாபன பதிவுச் சட்டபடி சென்னையில் பதிவு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வரப்படுகின்றன. அது முடிந்தவுடன் ‘குடி அரசு’ ‘ரிவோல்ட்’ ஆகிய வாரப் பத்திரிகைகளும் ‘பகுத்தறிவு’ என்னும் மாதப் பத்திரிகையும் சுயமரியாதை சங்கச் சார்பாகவே பிரசுரிக்கப்படும். ‘திராவிடன்’ தினசரிப் பத்திரிகையும் அதன் நிர்வாகப் பொறுப்பும் நம்மிடம் இருக்கும்வரை இச்சங்கச் சார்பாகவே பதிப்பித்து வரப்படும்.
சுமார் இரண்டு வருஷ காலமாகவே பத்திரிகைகள் நடத்தும் பொறுப்பை யார் வசமாவது ஒப்புவித்து விடுவதற்கு நாம் மிகுதியும் முயற்சி செய்து வந்தது நாம் பல நண்பர்களிடம் நேரில் தெரிவித்து கொண்டதாலும் பத்திரிகையின் ஒவ்வொரு ஆண்டுத் தொடக்கத்தில் எழுதிவரும் தலையங்கத்தாலும் நன்றாய்த் தெரிந்திருக்கலாம். பத்திரிகை நடத்துவதில் உள்ள கஷ்டம், அதுவும், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தின் பிரசாரத்திற்காக நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு இருக்கும் கஷ்டம் அதை அனுபவித் தவர்களுக்குத்தான் தெரியவரும். உதாரணமாக “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் தென்னிந்திய நலஉரிமை சங்கச் சார்பாக சுமார் 12 வருஷத் திற்கு மேலாகவே நடந்து வருகின்றன. அதற்கு இந்த மாகாணத்திலுள்ள பெரிய பெரிய பிரபுக்களும் ராஜாக்களும் ஜமீன்தாரர்களும் மற்றும் 100-க்கு 97வீதம் உள்ள பொது ஜனங்களும் ஆதரித்தும் பதினாயிரக்கணக்காக பணம் கொடுத்தும் வந்திருக்கின்றார்கள். அச்சங்கத்தார் அதிகார ஆதிக்கம் பெற்றக் காலத்திலும் அதாவது மந்திரிகள் இருந்த காலத்திலும் மாதம் 1-க்கு 3000 ரூபாய் வீதம் உதவி வந்தார்கள். இந்த மாதிரி உதவி செய்ததின் மூலம் சுமார் 2 லக்ஷ ரூபாய்கள் வரை இப்பத்திரிகைகளுக்கு பணவுதவி கிடைத்தும், இன்றைக்கும் தன் காலில் நிற்க முடியாமல் மாதம் 2000 ரூபா போல் நஷ்டத்தில் நடைபெற வேண்டியிருக்கின்றது. இவ்வளவு ஜனக்கட்டும் பணக்கட்டும் செல்வாக்கும் இருக்கும் பத்திரிகைகளின் கதியே இப்படியா னால் நம்போன்றவர்கள் அதிலும் செல்வாக்குள்ள கொள்கைகளுக்கு எதிரா கவும் ஆதிக்கமும் அதிகாரமும் சூழ்ச்சியுமுள்ள சமூகங்களுக்கு விரோத மாகவும் ஒரு பத்திரிகையைத் துவக்கினால் அதில் எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதை யோசித்தால் தெரியும். அதோடு மாத்திர மல்லாமல் சந்தாவும் வெகு சுருக்கமான தொகை, அதாவது வருஷத்திற்கு மூன்றே ரூபாய். 20 பக்கமுள்ள பத்திரிகையின் காகித கிரயம், அச்சுக்கூலி, ஸ்டாம்பு ஆகியவைகளுக்கே சந்தா தொகை போதும் போதாத நிலையில் இருக் கின்றது. இதில் நிலுவை பாக்கி வீண் செலவு ஆகியவைகளும், ஆசிரியக் கூட்டத்திற்கும், கணக்கு நிர்வாகத்திற்கும் கைப்பொறுப்பு என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் பத்திரிகை ஆரம்பித்த 4 வருஷ காலத்தில் ஒரே ஒரு தலையங்கம் மாத்திரம் அதுவும் காயலாவாய் படுத்த படுக்கையில் இருந்த சமயம் தவிர பாக்கி எல்லா தலையங்கமும் நம்மாலேயே எழுதப் பட்டு வந்திருக்கின்றது. ஆரம்பத்தில் ஒவ்வொரு வாரமும் 12 பக்கமும் நாமாகவே எழுதி வந்திருக்கின்றோம். இந்த நிர்ப்பந்தத்தில் வாரம் 2, 3 நாள்களுக்கு குறையாமல் வெளிப் பிரயாணமும் செய்து வந்திருக்கின்றோம். இதனன்றி பிரசாரகர்களையும் பல இடங்களுக்கு அனுப்பியும் வந்திருக் கின்றோம்.
இம்மாதிரி எவ்வளவோ கஷ்டமும் நஷ்டமும் அடைந்து கொண்டு இப்பத்திரிகையை நடத்தி வந்திருக்கின்றோமென்றாலும், சாதாரணமாக இந்தத் தொண்டில் எனக்குப் பெருத்தலாபம் இருப்பதாகவும் மாதம் 1000, 2000 வரும்படி வருகின்றதென்றும் உண்மையாகவே பலர் நம்பி இருக்கின்றார்கள். சமீபத்தில் எமது குடும்பத்தில் கட்டப்பட்ட வீட்டைப் பார்த்து பெண்கள் குழந்தைகள் எல்லாம், பத்திரிகை லாபத்தாலும் பிரசாரத்திற்குப் போகிற இடத்தில் கிடைக்கும் லாபத்தாலும் கட்டப்பட்டதென்றே நமது காதுக்கு எட்டும் படியாகப் பேசிக் கொண்டு போகின்றார்கள். இதை எதற்காக எழுதுகின்றோம் என்றால், பொதுநல சேவையில் உண்மையாக கஷ்டமும் நஷ்டமும் கெட்ட பேரும் பழியும் அடைகின்ற மக்களை பார்த்தால் பெருத்த லாபமடையும் சுயநலக்காரர்களைப்போலத் தோன்றுவதும், பொது வாழ்க்கை யின் பேரால் பணலாபமும் சுகமும் கீர்த்தியும் பெறுகின்றவர்களைப் பார்த்தால் பெரிய தியாகிகள் போலவும் கஷ்ட நஷ்டம் அனுபவிப்பவர்கள் போலவும் காணப்படுவதும் உலக இயற்கைகளில் ஒன்றாயிருக்கின்றது என்பதைக் காட்டவே எழுதினோம். எது எப்படி இருந்தபோதிலும் எவ்வளவு கஷ்டமும் நஷ்டமும் பழியும் ஏற்பட்டிருந்த போதிலும் மொத்தத்தில் நமது தொண்டினால் நாம் நமது யோக்கியதைக்கு மேலான லாபத்தை அடைந்திருக் கின்றோம் என்பதை மனதார ஒப்புக்கொள்ளுகின்றோம். அதாவது நமது இயக்கம் பரவி இருக்கின்ற அளவுக்கு நாம் கொடுத்த விலை மிகமிகக் கொஞ்சமென்றுதான் சொல்லுவோம். நிற்க, இதுவரை அதாவது நஷ்டமும் கஷ்டமும் உள்ளவரை நாம் நமது சொந்த பொறுப்பில் நடத்தி வந்து இப்போது இனிமேல் எந்த விதத்திலும் இதற்கு நட்டம் வராது என்பதோடு கவனித்து நடத்தினால் சகல லாபமும் கிடைக்கும் என்கின்ற நிலையில் அதுவும் 9000 பிரதிகளுக்கு மேல் வெளியாகத் தக்க நிலைமையில் அதை ஒரு பொது ஸ்தாபனத்தின் பொறுப்பில் விடுவதைப் பற்றி யாரும் எவ்வித தப்பபிப்ராயத்தையோ பலக் குறைவையோ கற்பிக்க முடியாதென்றே சொல்லுவோம். மற்றபடி இப்படி நாம் ஒப்பி விட்டதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், சுயமரியாதை இயக்கம் ஒரு தனிப்பட்ட மனிதனுடைய இயக்கமாக இருக்கக்கூடாது என்கின்ற ஒரே எண்ணமே தவிர வேறில்லை. ஏனெனில், ஒத்துழையாமை இயக்கம், திரு.காந்தியின் தனி இயக்கமாக இருந்ததாலும் ஒத்துழையாமைக்கும் சத்தியாக்கிரகத்திற்கும் திரு.காந்தி ஒருவரே பாஷியக்காரராயிருந்ததினாலும் அது அவர் காலத்திலேயே ஏதோ ஒரு காலத்தில் நடந்தது என்று சொல்லும்படி ஆகிவிட்டது. எந்த இயக்க மானாலும் இயக்கத்தைத் தொடங்கினவர் பலக் குறைவுடையவராக ஆகி விட்டாலும் அல்லது செத்தே போய்விட்டாலும் அவருக்குப் பிறகும் நடக்கும்படியான நிலைமையில் அதை வைத்துவிட்டு போனால்தான் அது ஏதாவது பலனைக் கொடுக்க முடியும். அப்படிக்கில்லாமல் தன் கையிலேயே வைத்துக் கொண்டு தன்னிஷ்டப்படி தன்னைச் சுற்றிக் கொண்டே திரியும் சிஷ்யர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு வாழ்நாளைக் கடத்தி வந்தால் அவ்வியக்கத் தலைவன் இறந்தவுடன் அத்தலைவனது பிணத்தைச் சுட்ட இடத்தை மடமாகவோ கோயிலாகவோ கட்டி அதில் ஒரு படத்தையும் உருவத்தையும் வைத்து பூஜை செய்கின்ற வேலையோடு அவ்வியக்கத்தின் பலன் முடிவெய்திவிடும்.
ஆதலால் தான் அதை இப்போதே சர்வ சுதந்திரமாய் பொது ஜனங்கள் வசம்விட்டுவிட்டோம். ஆனால் இப்பத்திரிகைகளை நடத்தும் கொள்கை களை மாத்திரம் நாம் வைத்துக் கொண்டு இருக்கின்றோம். தவிர நமது இயக்கத்தைப் பற்றி நமது எதிரிகளும் அவர்களது கூலிகளும் பலவாறான கெட்ட எண்ணத்தோடு பொது ஜனங்களுக்குத் திரித்துக் கூறி இதுவரை எவ்வளவோ விஷமப் பிரசாரம் செய்து வந்தும், ராமாயணக் கதையில் வாலிக்கு அவனை எதிர்ப்பவர்களுடைய பலத்தில் பகுதி அவனுக்கு போய் சேருகின்றது என்றதுபோல் இவ்வியக்கத்தின் எதிரிகளுடைய பிரசாரத்தால் நமதியக்கம் பாமர மக்களிடை பரவவும், அவர்களுக்கு இருக்கும் சந்தேகங் கள் விளங்கித் தெளிவடையவும் பெரிதும் உபயோகப்பட்டு வந்திருக்கின்றது. அன்றியும் வெளியிடங்களிலும் பரவத்தலைப்பட்டு விட்டது.
தவிர, நமது இயக்கத்தை அழிக்க எதிரிகள் கைக்கொண்ட சூழ்ச்சி ஆயுதம் இரண்டே இரண்டுதான். அதாவது நாம் மதத்திற்கு விரோதி என்பதும் மக்களுக்கு கடவுள் உணர்ச்சியைக் கெடுக்கின்றோம் என்பவை களே. இவ்விரண்டு காரியங்களையும் நாம் செய்கின்றோமோ இல்லையோ என்பது ஒரு பக்கமிருந்தாலும் அவர்கள் சொல்லும் மேற்படி இரண்டு காரியங்களும் இப்போது உலகத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது. இன்றைய மலரில் வேறு ஒரு பக்கம் வெளியிட்டிருக்கும் வெளிநாட்டு செய்தி *ஒன்று ஐரோப்பா நாட்டிலுள்ள மாஸ்கோ என்கின்ற நகரில் கடவுள் மறுப்பு மகாநாடு ஒன்று கூடி உலகத்தில் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான பிரதிநிதிகளும் காட்சியாளர்களும் வந்து கடவுளையே மறுத்து தீர்மானங்கள் செய்திருக்கின்றார்கள். கடவுள் மறுப்புக்கு ஆதாரமாய் அனேக கண்காட்சி களையும் வைத்துக் காட்டி அதை உலகமெல்லாம் பிரசாரம் செய்ய கமிட்டிகள் ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.
அது மாத்திரமல்லாமல் அந்த தேசத்தில் உற்சவங்கள்கூட நடத்தக் கூடாது என்று அரசாங்கத்தின் மூலம் உத்திரவுகள் போடச் செய்ததோடு அதைப் பிரசாரமும் செய்து வருகின்றார்கள். இவை நிற்க, நமது நாட்டிலேயே பம்பாய் மாகாணத்தில் சென்ற வாரத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு கூட்டி ஐயாயிரக்கணக்கான மக்கள் கூடி கடவுள் பூசைக்காக சர்க்கார் கொடுத்து வரும் மோகினித் தொகையை (தஸ்தி தொகை) நிறுத்திவிட வேண்டுமென்று தீர்மானம் செய்திருப்பதுடன் ராமாயணம், பாரதம், மனுஸ்மிருதி முதலிய மத ஆதாரங்கள் என்பவைகளை பறிமுதல் செய்ய வேண்டுமென்றும் தீர்மானித்திருக்கின்றார்கள். இவ்வளவும் ஒரு புறமிருந்தாலும், மீரத் சதி வழக்கில் எதிரிகளின் பேரில் சர்க்கார் வக்கீல் குற்றம் சாட்டுகின்ற முறையில் எதிரிகள் கடவுளை நம்பாதவர்கள் என்றும், கடவுள் நம்பிக்கையை ஒழிக்கப் பிரசாரம் செய்கின்றவர்கள் என்றும் சொல்லியிருக்கின்றார். எதிரிகளுடைய வக்கீலும் கடவுளை மறுப்பதும் கடவுள் நம்பிக்கையை ஒழிக்கப் பிரசாரம் செய்வதும் குற்றமாகாதென்றும் அதற்கும் இக்குற்றத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் வாதாடினாரே ஒழிய அது உண்மை அல்லவென்று சொல்லவே இல்லை, இதுவும் தவிர, ஆப்கன் அரசர் அமானுல்லா அவர்கள், அவர் நாட்டு முல்லாக்கள் சூழ்ச்சியால், நாத்திகர் என்றும் இஸ்லாம் மத விரோதி என்றும் மதத் துரோகி என்றும் பழி சுமத்தப்பட்டு அரசைத் துறக்கச் செய்திருந்தாலும், நமது மாகாணத்தில் ஹைகோர்ட் ஜட்ஜாகவும் வங்காள மாகாண மந்திரியாகவும் இருந்த சர்.அப்துர் ரஹீம் அவர்கள் மேற்படி அமீரைப் பற்றி வெகு பரிதாபப்பட்டு என்ன சொல்லுகின்றார் என்றால் “அமீரின் தத்துவங்களை ஆப்கானியர்கள் ஒப்புக் கொள்ளாததிலிருந்து அத்தேசத்தில் தேசிய உணர்ச்சி சிறிதும் இல்லை என்பதாகத் தெரிகிறது. அமீருக்கு விரோதமாயிருந்தவர்கள் தேசத் துரோகியும் ராஜத் துரோகி யுமாவார்கள். அமானுல்லாவைப் போன்ற தேச பக்தர் வேறு எந்த தேசத்தி லும் பிறக்கவில்லை. பண்டைய மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டியது அவசியம். அவ்வெண்ணம் கொண்டவர்கள் மிகவும் ஊக்கமாகவே இருப்பார்கள். அமீரின் கொள்கைகள் வெற்றி பெற்றால் முஸ்லீம் நாடு உலகத்தில் ஒரு சிறந்த நாடாய் இருக்கும்” என்று பேசியிருக்கின்றார்.
எனவே, இந்த மாதிரியாக அநேக இடங்களிலிருந்து நமது இயக்கத் திற்கு ஆதரவுகள் தாராளமாய்க் கிடைத்து வருவதைப் பார்க்க நாம் எய்தும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஆதலால், நமது வாலிப நண்பர்கள் நமது வேலையை ஒப்புக் கொண்டு நமக்கு வேண்டிய உதவி புரிய கேட்டுக் கொள்வதற்காகவே இந்த நீண்ட கட்டுரை எழுதினோம். அதாவது ‘குடி அரசு’ இந்த இதழிலிருந்தே, சுயமரியாதைச் சங்கத்திற்கு அங்கத்தினர்களைச் சேர்க்கும் உத்தேசத்துடன் அங்கத்தினராய்ச் சேருவதற்கு ஒரு விண்ணப்ப ரூபமாக ஒரு துண்டு விளம்பரம் * * பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. அதைக் கண்ணுறும் வாலிபர்கள் தயவு செய்து கத்தரித்து அங்கத்தினர்களாகச் சேர்வதோடு, மற்றவர்களின் கையொப்பத்தையும் சந்தா அணா இரண்டையும் பெற்று நமக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுகின்றோம். இந்த வருஷ முடிவிற்குள் தமிழ் நாட்டில் ஏராளமான அங்கத்தினர்களைச் சேர்க்க வேண்டிய பொறுப்பை நமது வாலிபர்களுக்கே விட்டிருக்கின்றோம். அங்கத்தினர்கள் சேர்க்கும் ரசீது புத்தகங்களும் அச்சாகின்றன. சீக்கிரத்தில் வேண்டியவர்களுக்கு அனுப்பிக் கொடுக்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 16.06.1929