பூமி சூரியனை சுற்றுகிறது என்றால் சூரியன் எதைச் சுற்றுகிறது?
சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர் களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் தொடங்குகிறது. படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார். பூமியை நிலவு பாத்திரத்தில் ஒருவர் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றுவார். ஆக, நிலவு மனிதர் ஒரே நேரத்தில் பூமியையும் சூரியனையும் சுற்றுவார். இந்த அறிவியல் விளக்கம் ஒரு அற்புதமான நடனம்போல் படத்தில் அமைக்கப் பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த என் நண்பர் கேட்டார், “சூரியன் பாத்திரத்தை ஏற்ற நபர் அப்படியே இருக்கிறாரே. உண்மையில் சூரியன் அசையாமல் இருக்கிறதா, அல்லது சுற்றுகிறதா?” கொஞ்சம் தலைசுற்றவைக்கும் கேள்விதான்! நாம் எல்லோரும் தோற்றத்தை நம்பி...