வாசகர்களிடமிருந்து…

‘தலித் வீரர்களைப் புறக்கணிக்கும் கிரிக்கெட் பார்ப்பனியம்’ கட்டுரை மிகவும் சிறப்பு. “பூனா கிரிக்கெட் சங்கத்தில் 100 மணி நேரம் பந்து வீசியும், ஒரு முறைகூட மட்டை வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தண்ணீர் அருந்துவதற்கும் தனிக் குவளை தந்தார்கள்” என்று தலித் கிரிக்கெட் வீரர் பல்வன்கர் பாலூ, தன் மகனிடம் கூறியிருந்த செய்தியைப் படித்தபோது கண்ணீர் வந்தது. தென்னாப்பிரிக்காவில் கறுப்பின வீரர்களுக்கு கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது போல் ஏன் இந்தியாவிலும் ‘தலித்’ வீரர்களுக்கு வழங்கக் கூடாது? இதே கருத்தை வலியுறுத்தி ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் ஞாயிறு மலரில் (ஆகஸ்ட் 12, 2018) ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார்.

“கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரைக்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இந்தியாவில் 27 சதவீத மக்கள் இப்போதும் தீண்டாமையைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘மனித வளமேம்பாட்டுத்’ துறை நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு ஆண் தலித் கூட இதுவரை விளையாடவில்லை. பழங்குடியினப் பிரிவினரும் விளையாடிய தில்லை. அதே நேரத்தில் நிறவெறிக் கொள்கையில் ஊறிப் போய் நிற்கும் அமெரிக்காவில் விளையாட்டுத் துறையில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களே பெருமளவு பங்கேற்று, உலகச் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். இந்திய கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு கொள்கைக் காரணமாக பிற்படுத்தப்பட்டவர்கள் விளையாட வந்து விட்டார்கள். ஆனால், ‘தலித்’ மக்கள்தான் நுழைய முடியவில்லை. இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அதிக இடம் பெற்றுள்ளனர். பார்ப்பன உயர்ஜாதிப் பெண்கள் விளையாட வருவதில்லை” என்று அக்கட்டுரை சுட்டிக்காட்டியிருக்கிறது.

சங்கர்,  நெல்லை

ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் பேசியது நூலாக வெளி வந்திருப்பதை ‘நிமிர்வோம்’ வழியாக அறிந்து மகிழ்ந்தேன். ஆதி திராவிடர் மாநாட்டில் பேசிய பெரியார், அரசாங்கத்துக்கும் எனக்கும் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயம் இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்துடன் பிணக்குச் செய்யாமல், அதை (அரசாங்கத்தை) எதிர்க்காமல் இருந்து, உங்கள் சமூக நன்மையைப் பெறவேண்டும்” என்று பேசியிருப்பது ஆதி திராவிடர் உரிமையில் எவ்வளவு உள்ளார்ந்த உணர்வு காட்டியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட கருத்துகளை பெரியார் ஒருவரால் மட்டுமே பேச முடியும். பெரியார் இடைநிலைச் சாதியினரின் ஜாதிப் பெருமையை அவர்கள் மாநாட்டிலேயே கண்டித்திருப்பதைப் படிக்கும்போது அவரை இடைநிலை ஜாதி ஆதரவாளராக இப்போதும் சிலர் கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வினோத், தஞ்சை

‘அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்’ கட்டுரை ஏராளமான தகவல்களைத் தந்துள்ளது. ‘நிமிர்வோம்’ இதழுக்கு பாராட்டுகள்!

தமிழ் வேந்தன், விழுப்புரம்

கலைஞர் குறித்த தலையங்கம், தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள்; வேட்டி இந்து பண்பாடா? என அனைத்துக் கட்டுரைகளும் ஆழமாகவும், சிந்தனைக்கு விருந்தாகவும் இருந்தது.

உமா, சேலம்

நிமிர்வோம் ஆகஸ்ட் 2018 இதழ்

You may also like...